காடு– ஒரு கடிதம்

kadu2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை.

கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு மனதுருகி வாசித்து, சுவரை வெறித்து கொண்டிருந்தது வேறெப்போதும் இல்லை.

பொதுவாக கதைகளில், கதா பாத்திரங்கள் மனதை கவரும். ஆனால் முதல் முறையாக, அயினி மரத்தடியும், சந்தன மரக்காடும், நீலியும் கிரிதரனும் அமரும் பாறை, கொன்றை மலர்களும், தங்கம் போன்ற வேங்கை இலைகளும், மனதில் நிற்க முடியுமா? உங்கள் எழுத்து ஏன் வாசகனை இந்தளவு அலைக்கழிக்கிறது அல்லது நிம்மதி இல்லாமல் ஆக்குகிறது. காரணம், உங்கள் எழுத்தில் அவன் ஒவ்வொரு இடங்களிலும் தன்னை அடையாளம் காண்கிறான்.

போத்தியின் அக்காவின் பாலியல் வசவுகளை கேட்கும் கிரி, போற்றியிடம் ‘ எல்லார் மனதிலும் இது தான் இருக்கிறதா என்று கேட்க, போற்றி திரும்ப கேட்கிறார் ‘ உன் மனதில் என்ன இருக்கிறது என்று முதலில் சொல்’.

கிரிதரன் எவ்வளவு நல்லவனோ, அவ்வளவு நல்லவர் மாமா. தன் இளமை பருவத்தில் ஓவர்சீயரின் மனைவியிடம் தப்பித்து, நாடாரின் மாட்டு வண்டியில் இருந்து அழுகிறான். இங்கு யாரும் கெட்டவர்கள் இல்லை. கடவுள் மனிதர்களை வைத்து விளையாடுகிறார்.

ரெசாலம் தேவாங்கிடம், மக்களே! மக்களே! என்று உருகுகிறார். வாசகனுக்கு கடைசியில் தான் அறிமுகப்படுத்துகிறீர்கள், ரெசாலத்திற்கு மண்டை வீங்கிய மூளை வளர்ச்சி இல்லாத பெண் குழந்தை உள்ளது என்று. பிறகு நிம்மதி இழக்காமல் இருப்பது எப்படி?

நாட்டில் கவிஞர்கள் உரைநடையை மடக்கி கவிதை என்று விற்கும் போது, நீங்கள் கவிதையை உரைநடையாக எழுதுகிறீர்கள். (உ.ம்) நீலியுடன்நடக்கும் போது கிரிக்கு விரல்கள் எல்லாம் இதயம் படபடக்கிறது.

தெய்வீகக் காதல் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஒரு முறை கிரிதரன் மூலம் நானும் வாழ்ந்து விட்டேன். முதன்முறை அந்தி நேரத்தில் சந்தன காட்டில் மரத்தின் மேல் உள்ள நீலியின் குடிலில் இருந்து நீலியின் மயில் அகவல் போன்ற பாட்டை கிரிதரன் நிலை மறந்து கேட்கும் பொழுது, பக்கத்தில் நானும் நின்று அழுகிறேன்.

அய்யரைப் போல் ஒரு ரசிகனை உலகில் காண முடியுமா? நீங்கள் மறுத்தாலும் அதில் முக்காலும் நீங்கள் தான். தயவு செய்து ‘குறுந்தொகை’ படிக்க நல்ல உரையை சிபாரிசு செய்யவும்.

கீரைக்காதன் யானை சந்தன மரக்காட்டின் மணத்தில் மதம் கொண்டு தன் இனத்தை பிரிந்து அழிகின்றான். கிரிதரன் நீலியின் மணத்தால்……

சந்தனக் காட்டில் நீலியின் குடிலில் இருந்து வரும் மணத்தை விவரித்து கொண்டே வந்து, ஓரிடத்தில் நிறுத்தி அடுத்த பாராவில் கிரிதரன் முதன் முறையாக சுருட்டு புகைக்கும் இடத்தை அறிமுக படுத்துகிறீர்கள். சொர்க்கமும் நரகமும்.

காமத்தின் எல்லா நிலைகளையும் தொட்டு செல்கிறது நாவல். கிரியின் காமம், மாமியின் காமம், இரட்டையர்களின் காமம், குட்டப்பனின் காமம், அய்யரின் காமம், ரெஜினாவின் காமம், கிரியின் அம்மாவின் காமம்.

குட்டப்பன் போல் மனசாட்சியுடன் மிக இயல்பாக வாழ முடிவது எப்பேர்ப்பட்ட அதிஷ்டம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு பெண்களுடன் உறவு கொள்கிறான். அறியாப் பருவமுள்ள காட்டுவாசி பெண்களை கூட்டி கொடுத்த கிரியின் மாமாவை அடித்து நொறுக்குகிறான். கதை முழுவதும் அவன் யாரையும் பசியோடு விடுவதில்லை.

கிரியின் மாமாவிடம் இருந்து பணம் பெற மறுக்கும் நாடாரின் அறம் எத்தகையது?

தயவு செய்து இதைக் கடிதம் என்று நினைக்க வேண்டாம். காடு நாவலை வாசித்து விட்டு எனக்கு நானே பேசி கொண்டவையாக எண்ணி மன்னிக்கவும்.

அன்புடன்

பா. சரவணகுமார்

போடிநாயக்கனூர்

அன்புள்ள சரவணக்குமார்,

ஒரு படைப்பை வாசிக்கையில் நம்முள் எழும் கேள்விகள் எல்லாம் அப்படைப்பால் உருவாக்கப்படுபவை. ஆனால் அவை நமக்குச் சொந்தமானவை. அது நம்மை சீண்டி யோசிக்கவைக்கும் விதம் அது. அந்த வினாக்களுக்கெல்லாம் நாமே விடைகாணும்போதே நாம் அப்படைப்பை உண்மையில் வாசிக்கிறோம். காடு நாவலை உங்கள் அளவில் தொகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதன் அலகுகளை மறுதொகுப்பு செய்து மறுபடியும் பரிசீலித்து உங்களுக்கான நாவலை நீங்கள் உங்களுக்குள் அமைத்துக்கொள்கையில்தான் வாசிப்பு முடிவடைகிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
அடுத்த கட்டுரைஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்