அன்புள்ள ஜெ.,
எலியட்டின் கட்டுரைத்தொகுப்பு நூலை வாசிக்கத்தொடங்கியுள்ளேன். ஒரு கட்டுரையில், எழுத்தாளருக்கு கட்டாயமாக இருக்கவேண்டிய இலக்கியம் சார்ந்த வரலாற்று நோக்கை பற்றி பேசுகிறார். எந்த ஆக்கமும் தனித்து நிற்பதில்லை; அந்தச்சூழலின், அந்த மொழியின், அந்தக்கலாசாரத்தின் மொத்த எழுத்துப் பாரம்பரியத்தின் முன்னால் ஒவ்வொரு புது ஆக்கமும் நிற்கிறது என்கிறார்.
ஒரு விதத்தில் ஒரு புது ஆக்கத்தின் வருகை பழையவை அதுவரை உருவாக்கி வைத்த சமனை குலைக்கிறது. பழைய ஒழுங்கை கெடுக்கிறது. புதியது சேறும் போது புதிய ஒழுங்கை உருவாகிறது என்கிறார். கடந்தகாலம் நிகழ்காலத்தை மாற்றியமைப்பதுபோல் நிகழ்காலமும் கடந்தகாலத்தை மாற்றியமைக்கலாம் என்கிறார். (அதாவது பழைய நூல்களை நாம் இன்று வாசிப்பது என்பது, இன்றைய தேடல்கள், தேவைகளை வைத்துச் செய்யப்படும் மறுவாசிப்பு என்பதாக இதை நான் புரிந்து கொள்கிறேன்.)
இந்த கட்டுரையை படித்த உத்வேகத்தில் சிறிது நேரம் என் புத்தக அலமாரிக்கு முன்னால் நின்று நிகழ்காலத்துக்கு முதுகை காட்டிக்கொண்டு கடந்தகாலத்தை திரும்பி நோக்கும் பாவனையோடு நூல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதன் கதைசொல்ல கற்றுக்கொண்ட காலம் தொடங்கி இன்று வரை எனக்குத்தெரிந்த புத்தகங்களும் நான் படித்த ஆசிரியர்களும் கண்முன்னால் அணிவகுத்தனர். மிக இயல்பாகவே, மனம் நூல்களையும் ஆசிரியர்களையும் பட்டியல் போடத் தொடங்கியது. வரலாற்றில் யார் எங்கே நிற்கிறார்கள், இதில் நாம் எழுதினால் அது எங்கே நிற்க வேண்டும், எங்கே நிற்கும் என்ற நப்பாசை கணக்குகள் தான் இது என்று தெரிந்தாலும், நான் இதுவரை வாசித்ததை பட்டியல் போட்டுப் பார்த்ததில் சில திறப்புகள் கிடைத்தன. கேள்விகளும் எழுந்தன. அவை வருமாறு.
இயல்பாகவே நான் போட்ட பட்டியல், பட்டியல் என்று அல்லாமல் வட்டங்களாக அமைந்தன. வட்டங்களின் அளவுகோலாக நின்றது, ஒர் எளிய கேள்வி மட்டுமே. என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் தங்கள் எழுத்துகளில் ஆராயும் எழுத்தாளர்கள் யார் யார்? அப்படி ஆராயும் போது அவர்கள் அளிக்கும் புனைவுச்சித்திரம் என்னுடைய அகத்தின் மொழியை பேசுகிறதா?
முதல் திறப்பு, என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் முழுவதுமாக ஆராயும் எழுத்தாளரை இன்று வரை நான் வாசித்ததில்லை என்பது. அப்படி ஒரு புத்தகம் இருந்தால் நான் அதை வந்து படிப்பதற்காக அது காத்துக்கொண்டிருக்கலாம். அல்லது நானே அதை எழுத வேண்டும் என்றும் இருக்கலாம். இப்படித்தான் வாசகர்கள் எழுத்தாளர் ஆகிறார்களா என்ற வியப்பு ஏற்பட்டது.
இரண்டாம் திறப்பு, “என்னுடைய” எழுத்தாளர்கள் என்ற வட்டம் மிகமிகக்குறுகியது. நான் விரும்பி வாசிக்கும் பல எழுத்தாளர்கள் அதில் இல்லை. ஹெர்மன் ஹெஸ்ஸி போல. அவரை உள்ளே வைப்பதா வெளியே வைப்பதா என்று வெகுநேரம் ஊசலாடினேன். அவருடைய சித்தார்தாவையும் ஸ்டெப்பெனவுல்பூம் நார்சிசஸ்-கோல்ட்மேனும் ஆர்வத்துடன், கவனத்துடன் படித்திருக்கிறேன். அவை முன்வைத்த கேள்விகள் என்னுடைய தேடலை கொண்டவை. அவரை நிராகரித்தது ஏனென்றால் அவர் முன்வைக்கும் பாதைகளோ தீர்வுகளோ எனக்கானவை இல்லை என்பதை கண்டுகொண்டதால்.
*
உதாரணம், “ஸ்டெப்பெனவுல்ப்” நாவல் வாழ்க்கையின் அபத்தத்தை பெரும் சுமையாக சித்தரித்து, பின் சிரிக்கப்பழகுவதால் அதை கடக்கலாம் என்ற தீர்வை முடிவில் முன்வைக்கிறது. வாழ்க்கையின் அபத்தத்தை நினைத்து பொருமுவதே ஒரு பதின்பருவ மனநிலையாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அப்படிப் பொருமிய பதின்பருவத்தில் ஸ்டெப்பெனவுல்ப் முக்கியமான எழுத்தாக எனக்குப்பட்டது. இப்போது “வாழ்க்கையில் அபத்தத்தன்மை உண்டு, அதனாலென்ன? வாழ்க்கையே அபத்தம் என்பது ஒரு கண்ணோட்டம், அவ்வளவுதான்,” என்ற மனநிலையில் இருக்கிறேன். இலகுவாக இருப்பது அபத்தத்தை கடக்க கடைபிடிக்க வேண்டிய பயிற்சி மட்டுமே அல்ல, அது வாழ்வை காணும், ரசிக்கும், ஒரு வாழ்க்கைமுறை என்றும் நம்புகிறேன். ஆகவே ஹெஸ்ஸியின் கேள்விகளுடன் என் மனம் ஒத்துப்போனாலும், அவருடைய எழுத்துக்களை நான் மிகவும் விரும்பி படித்திருந்தாலும், அவருடைய புனைவுலகம் என் அகத்தின் மொழியில் படைக்கப்பட்டது அல்ல என்று தோன்றுகிறது.
ஆனால் ஒன்றிரண்டு ஆக்கங்கள் மட்டுமே நான் படித்துள்ள பஷீர் அனாயாசமாக உள்வட்டத்திற்குள் வந்து அமர்கிறார். “கொஞ்சம் பெரிய ஒண்ணு” போன்ற ஒற்றைவரிப் படங்கள் போதும் அதற்கு. தாகூரும் பாரதியும் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு ரசித்தாலும் சங்கக் கவிஞர்களும் ஆண்டாளும் ஆங்கில கற்பனாவாத கவிஞர்களும் இல்லை. இப்படி ஒரு உள்வட்டம்.
மற்றோரு திறப்பு, மிகவும் விரும்பி, பலமுறை படித்த நூல்கள் பல என்னுடைய எந்த மனத்தேடலுக்கோ தேவைக்கோ எதுவுமே செய்ததில்லை என்ற புரிதல். நான் சிறுவயதில் அதிகம் வாசித்த ஜேன் ஆஸ்டினும் சார்லட் ப்ராண்டும் இப்போது ஒதுக்கி வைக்கிறேன். ஜார்ஜ் எலியட்டும் எமிலி ப்ராண்டும் இன்னும் எனக்கு முக்கியமான எழுத்தாளர்கள் தான், ஆனால் முதல் வட்டத்தில் இல்லை. இப்படி என் பட்டியல் வட்டங்களாக விரிந்து செல்கிறது. காலத்தில், மொழிச்சூழலில், கலாச்சாரத்தில் வெவ்வேறு இடங்களில் நிற்கும் படைப்பாளிகள் என் வட்டங்களுக்குள் ஒன்று கூடுகிறார்கள். அர்சலா ல குயினும் ஆஷாபூர்ணா தேவியும் பேசிக்கொள்கிறார்கள்.
இறுதியாக, நான் போட்ட பட்டியலின் மூலம், என்னுடைய ஆழ்மனத் தேடல்களையும் தேவைகளையும் பற்றி நானே அதிகம் அறிந்துகொண்டேன். அதுவே ஒரு விதத்தில் பெரிய திறப்பு. இலக்கியத்தில் எனக்கு எது முக்கியம் என்று வார்த்தைகளில், தெளிவாக, வரையறுக்க முடிந்தது.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. என்னுடைய தேவைகளையும் தேடல்களையும் அளவுகோலாகக் கொண்டு, மனதளவில் பகுத்துப் பார்த்து விமர்சனம் செய்து, என்னுடைய பட்டியலை நான் போடுகிறேன். அதன் அடிப்படையில் முதல் வட்டம், இரண்டாம் வட்டம் என்று பிரிக்கிறேன். அதன் அடிப்படையிலேயே “இது நல்ல நூல்,” என்று வரையறுக்கிறேன். அவ்வாறுதான் ஒவ்வொருவரும் அவரவர்களின் அளவுகோல்களின் அடிப்படையில் விமர்சனம் செய்கிறார்கள் என்று நம்புகிறேன். அப்படி இருக்கும் போது, இலக்கிய விமர்சனத்தில் புறவயத்தன்மை எப்படி சாத்தியம் ஆகும்?
இன்னும் கூர்மையாக கேட்கவேண்டும் என்றால், ஒருவருடைய தேடல் என்பது சமூக மனநிலையை சார்ந்து இருக்கலாம். சமூக நிதரிசனங்களை உடைத்து எழுதும் எழுத்தே நல்ல எழுத்தாக அவருக்கு இருக்கலாம். அவருக்கு மகாஸ்வேதாதேவி அதிமுக்கியமான எழுத்தாளராக இருக்கலாம். இன்னொருவருக்கு எழுத்தில் கனவுத்தன்மை பிரதானமாக இருக்கலாம். மற்றோருவருக்கு வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளை எழுதுவதே எழுத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்று தோன்றலாம். இவர்களுடைய அளவுகோல்கள் வெவ்வேறு என்ற போது, இந்த அளவுகோல்களில் எது சிறந்தது, எது உயர்ந்தது என்று புறவயமாக ஒப்பீடு செய்ய முடியுமா? அது அர்த்தமுள்ள செயல்பாடா? அவ்வாறு செய்ய முடிந்தால் தானே அந்த அளவுகோலின் அடிப்படையில் பொதுவான விமர்சனம் சாத்தியம்?
இல்லையென்றால் ஒவ்வொருவரும் அவரவர் அளவுகோலின் அடிப்படையில், அந்த அளவுகோலை தெளிவாக வரையறுத்து, தங்கள் சொந்தப்பட்டியல்களை போடலாம். ஆனால் அப்படி போடப்பட்ட பட்டியல்களை ஒப்பிட முடியுமா? முடியுமென்றால் எப்படி? தவிர, அகவயமான அளவீடுகளால் போடப்படும் “விமரிசன” பட்டியல்களுக்கும், “எனக்கு பிடித்த நூல்கள்” என்பது போன்ற பொதுப்பட்டியல்களுக்குமான வித்தியாசம் என்ன?
என்னுடைய அளவுகோலின் அடிப்படையில் நான் ஒரு படைப்பாளரை நிராகரிக்கலாம். மற்றொருவர், அவருடைய அளவுகோலின் அடிப்படையில், அதே படைப்பாளரை மிகச்சிறந்த எழுத்தாளராக முன்வைக்கலாம். ஆனால் இவ்விரு விமர்சனங்களும் அந்த படைப்பாளியை பற்றி சொல்வதைவிட, அவரை விமர்சிக்கும் அந்நபர்களை பற்றியும் அவர்களுக்கு எது முக்கியம் என்பதையுமே பிரதானமாக சொல்கிறது என்றும் தோன்றுகிறது. இது உண்மையா? படைப்பை பொறுத்த வரை, இவ்வகை முரண்பட்ட வாசிப்புகளின் முக்கியத்துவம் என்ன?
ஒரு பக்கம் வரலாறை பார்க்கும் போது, அதில் ஒரு எழுத்தாளரின் இடத்தையும் பட்டியலிட்டு இயல்பாக பார்க்க வைக்கிறது மனம். அது வாசிப்பின், வாழ்க்கையின் போக்கில் உண்டான என் தனிப்பட்ட ரசனையின் பலன் என்று உணர்கிறேன். இந்த இயல்பால், ரசனையால், விமர்சனத்தின் தேவையை உணர்கிறேன்.
மற்றோரு பக்கம், இதை புறவயமான கருத்தாக எவ்வாறு முன்வைப்பது என்று யோசிக்கையிலேயே இந்தக்கேள்விகள் எழுகின்றன.
அடிப்படையான கேள்வி தான். முன்னமே பதில் அளித்திருந்தால் (தேடியவரை கிடைக்கவில்லை) தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
நன்றி,
சுசித்ரா
***
அன்புள்ள சுசித்ரா
இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ளும் தொடக்க காலத்தில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்கள் பல. இதற்கான பதில்கள் முன்னரே பலமுறை சொல்லப்பட்டாலும் கூட ஒவ்வொருவரும் தனக்கான பதிலை சற்றேறக்குறைய தன் அனுபவத்திலிருந்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன்.
உங்கள் வினாவை ஒற்றை வரியில் இப்படி சுருக்கிக் கொள்ளலாம். இலக்கிய மதிப்பீடுகள் என்பவை அகவயமானவை. ஏனென்றால் அவை வாசகனும் படைப்பும் கொள்ளும் அந்தரங்க உறவிலிருந்து உருவாகக்கூடியவை. ஆனால் ஒரு சூழலில் இலக்கிய மதிப்பீடுகள் புறவயமான அளவுகோல்களுடன் இருந்தாகவும் வேண்டும். இல்லையேல் எழுத்தாளர்களை மதிப்பிடவே முடியாது.இந்த முரணியக்கம் எப்படி நிகழ்கிறது என்பது தான் உங்களுடைய கேள்வி.
மிக இளம் வயதில் நாம் படிக்கத் தொடங்கும்போது நம்முடைய வாசிப்பு சார்ந்து ஒரு பட்டியலை உருவாக்கிக் கொள்கிறோம். இந்தப்பட்டியல் நாம் படிக்கும் ஒவ்வொரு நூலாலும் தொடர்ந்து உருமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருவர் எத்தனை நூல்களை படித்திருந்தாலும் டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ படிக்கும்போது அதுவரைக்குமான பட்டியல் உடனடியாக உருமாற்றமாவதைப் பார்க்கலாம். அதற்குமுன் அழகென்றும் நுட்பமென்றும் ஆழமென்றும் எதையெல்லாம் நினைத்திருக்கிறாரோ அவையனைத்துமே இப்பேராசான்களால் மாற்றியமைக்கப்படுகிறது அவருடைய அளவுகோல்கள் வளர்கின்றன. புதிய தேடல்கள் உருவாகின்றன. புதிய படைப்பாளிகள் உள்ளே வருகிறார்கள். இதைத்தான் டி.எஸ்.எலியட் தன் கட்டுரையில் சொல்கிறார்.
பொதுவாக தொடக்க வாசிப்புநிலைகளை இப்படிப் பட்டியலிடலாம். ஆண்பெண் உறவு சார்ந்த, இன்னும் பொதுவாகப்பார்த்தால் மானுட உறவுகள் சார்ந்த ஆர்வம் காரணமாக இலக்கியத்திற்குள் வந்து அதைப்பற்றிப் புரிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே பெரும்பாலான தொடக்க வாசிப்புகள் அமையும். பலருடைய பட்டியலில் இருக்கும் ஆரம்பகால எழுத்தாளர்கள் அனைவருமே ஆண்பெண் உறவுகளையும் மனித உறவுச்சிக்கல்களையும் எழுதும் எழுத்தாளர்கள்தான் .அது பிழையென்று சொல்ல முடியாது ஏனெனில் ஒர் இளைஞனின் வாழ்க்கையின் முதல் சவால் என்பதே உறவுகளைக் கையாள்வது தான். உறவுகள் குறித்து அதுவரைக்கும் அவனுக்கு அவனுடைய சூழலில் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த எதுவுமே நடைமுறையில் உதவுவதில்லை என்று அவன் காண்கிறான். அதற்கு சொந்தஅனுபவங்களும் சுயமாக தேடிய சிந்தனைகளும் மட்டுமே உதவும் என்று புரிந்து கொள்கிறான். அந்த அனுபவ உலகத்தை புரிந்து கொள்ளவும் இன்னும் சற்று விரிவாக்கிக்கொள்ளவும் அவன் இலக்கியத்தை தேடிவருகிறான்.
கணிசமான வாசகர்கள் இங்கேயே வாசிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இன்னும் பலர் இங்கேயே நின்று தன் வாழ்நாள் கடைசி வரைக்கும் ஆண்பெண் உறவுகளையும் மனித உறவுச்சிக்கல்களையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருப்பார்கள். இளவயதில் அவை மிக வெளிப்படையாக எழுதப்பட்டால் மகிழ்வார்கள். காலம் செல்லச் செல்ல எந்த அளவுக்கு அவை பூடகமாக சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்ல கதை என்பார்கள். ரொம்ப சூட்சுமமானது, என் நுண்ணுணர்வால் கண்டுபிடித்தேன் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னொரு வகையான ஆரம்பநிலை வாசிப்பு உண்டு. அது லட்சியவாதம் சார்ந்து, அதை ஒட்டி எழும் கொள்கைகள் சார்ந்து வாசிப்பது. இவ்வுலகில் தான் காணும் குறைகளையும் சிக்கல்களையும் கண்டு சினமும் செயல்வேகமும் கொள்கிறான் இளம்வாசகன். இவ்வுலகை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் மாற்றியமைக்க வேண்டுமென்றும் அவன் விழைகிறான். அத்தகைய எழுத்துக்கள் மேல் பெரும் ஈடுபாடு உருவாகிறது. தான் ‘பயனுள்ள’ எழுத்தை வாசிப்பதாகவும், உண்மையான செயல்களில் ஈடுபடுவதாகவும் நம்புகிறான். அது அவனுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. தான் அசாதாரணமானவன், மாறுபட்டவன் என்னும் எண்ணமும் மற்றவர்கள் மேல் விமர்சனமும் ஏளனமும் உருவாகிறது. இந்த மேட்டிமையுணர்வில் திளைத்து அதை வளர்க்கும்பொருட்டு மேலும் தீவிரமாக வாசிக்க ஆரம்பிக்கிறான்.
இவ்வியல்புதான் ஒருசாராரை கருத்தியல் நோக்கி செலுத்துகிறது. கருத்தியல் சார்புநிலை கொண்ட படைப்புகள் அவனை உள்ளிழுத்துக் கொள்கின்றன. கருத்தியலின் ஏதேனும் ஒரு தரப்புடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதனூடாக மனித குலம் அதுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்த ஒரு பெரிய சிந்தனைத்தொடர்ச்சியில் தன்னை அவன் உணரும்போது அவன் ஒரு தொகுப்பு ஆளுமையாக தன்னை உருவகித்துக்கொள்கிறான்.
ஒர் இளைஞன் தன்னை மார்க்ஸிஸ்ட் என்று உணரும்போது ஒரு மாபெரும் அறிவுத்தளத்தின் பகுதியாக கற்பனை செய்து கொள்கிறான். தனியனாகவும் ஆற்றலற்றவனாகவும் உணரும் அவனுடைய இயல்பு இக்கருத்தியலால் நிரப்பப்பட்டுவிடுகிறது. யானை மேல் ஏறிக்கொண்டவனைப்போல் உணர்கிறான். அந்த மிதப்பு அவனை மிகவும் ஆட்டி வைக்கிறது. உலகத்தையே விமர்சிக்கவும் கண்டிக்கவும் வழி நடத்தவும் கூட தனக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். அனைத்துக்கும் மேல் சினமும் ஏளனமும் நிறைந்த கருத்துக்களை உதிர்க்கிறான். இக்கருத்துக்களை எதிர்கொள்ளும் தரப்புகளை கற்பனை செய்து கொள்கிறான். அக்கருத்துகளை படிக்கிறான். அவற்றுக்கு பதில் சொல்லும்பொருட்டு தன் தரப்பை படிக்கிறான்.
இது ஒரு பெரும் சுழல். ஒருகட்டத்தில் தன் தனி வாழ்க்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று உணர்ந்து மெல்ல அவன் அதிலிருந்து வெளிவருகிறான். தனிவாழ்க்கையை யதார்த்தம் சார்ந்து உருவாக்கிக்கொள்கிறான். அதில் இருவகையினர் உண்டு. போலியானவர்கள் தனிவாழ்க்கையின் யதார்த்தத்தை திறமையாக மறைத்து போலியான ஒரு மேடைப்பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். நேர்மையானவர்கள் தங்கள் எல்லையை உணர்ந்து அதற்குள் செயல்படுவார்கள், பிம்பங்களை முன்வைக்கமாட்டார்கள். பலர் தனி வாழ்க்கையில் தன் கடமைகளை முடித்து ஓய்வுநிலையை அடையும்போது மீண்டும் அந்த இளமைக்கே கற்பனையால் திரும்பிச் சென்று அதே கருத்தியல் சார்புடன் அதே காழ்ப்புகளுடன் மீண்டும் செயல்பட ஆரம்பிப்பதை நாம் காணலாம்.
மூன்றாவதாக, இளவயது வாசிப்பில் மிக சிறிய பங்கினர் சென்று சிக்கும் ஒரு சுழல் உண்டு. அது தன்னை அசாதாரணமான வாசகன் என்றும், பிறருக்கில்லாத அறிவுக்கூர்மை தனக்குண்டு என்றும் எண்ணிக்கொள்ளும் மனநிலை. தான் இப்புவியில் ஒரு பெருநோக்குடன் பிறந்தவன், வரலாற்றில் தன் தடத்தை ஆழப்பதித்துவிட்டு செல்லப்போகிறவன் என்னும் தன்னுணர்வை அடைந்த இளைஞர்கள் இவர்கள். பெரும்பாலும் இவர்கள் உண்மையிலேயே கூரிய அறிவுத்திறன் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். பிறர் படித்துப் புரிந்து கொள்ள தடுமாறும் படைப்புகளை அவர்களால் எளிதாக படிக்க முடியும். அப்படி படிக்க முடியும் என்ற தன்னுணர்வாலேயே தங்களை மேலும் மேலும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். தங்கள் மூளையால் உடைத்து உட்புகுந்து படிக்க வேண்டிய படைப்புகளை மட்டுமே படிக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் மற்றவர்கள் பிரமிப்பு கொள்ளும் அளவுக்கு படித்துவிட்டிருப்பார்கள். விளைவாக இவர்களால் இவர்களின் அறிவுச்சிடுக்குடன் மோதும் படைப்புகள் அன்றி பிற படைப்புகளை உள்வாங்க முடியாது. ‘எளிய’ படைப்புகள் மீதான ஏளனமே அவர்களை எளிமையை முக அடையாளமாகக் கொண்ட பெரும்படைப்புகளில் இருந்து விலக்கும். ஒவ்வொன்றிலும் சிடுக்குகளையும் சிக்கல்களையும் எதிர்பார்க்கும் மனம் எளிமையாக வெளிப்படும் ஆழங்களை தவறவிடும். உதாரணமாக அவர்களுக்கு மௌனியைப்பிடிக்கும் பஷீரில் ஒன்றுமில்லை என்று தோன்றும்.
இவர்களின் மிகப்பெரிய இடர் என்னவென்றால் இந்தப் பயணத்தில் இவர்கள் இலக்கியவாசிப்பிற்கு இன்றியமையாததான இரண்டு அற்புதமான ஆற்றல்களை இழந்திருப்பார்கள் என்பதுதான். முதலாவதாக, தன் தனிவாழ்க்கையின் அனுபவங்களையும் சமூகம்சார்ந்த அனுபவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றைக்கொண்டு இலக்கியத்தை வாசிக்கும் நுண்ணுணர்வு. எதையும் கருத்தாக, கோட்பாடாக, புதிர்களாக மட்டுமே இவர்களால் வாசிக்கமுடியும். இலக்கிய அறிதல் ஒன்றை தன் வாழ்வனுபவங்களுடன் இணைத்துப் பார்க்கும் வாசிப்புத்திறனை ஒருவன் அடையாத பட்சத்தில் அவன் எதையும் வாசிக்கவில்லை என்றே பொருள்.
அடுத்தபடியாக இவர்கள் இழப்பது கற்பனையை. இலக்கியம் என்பதை வேறொருவகையான வாழ்க்கைப்புலம் என்று அறிந்து அங்கு கற்பனைமூலம் வாழ்ந்து, அவ்வாழ்வின் நுட்பங்களை கற்றுக் கொண்டால் ஒழிய அது வாசிப்பல்ல. கற்பனை இல்லாத கூர்ந்தவாசகன் படைப்பை ஒருவகை புதிர்விளையாட்டு என புரிந்துகொள்வான். ஆசிரியருடன் ஒருவகை சீட்டாட்டத்தையே ஆடுவான். இத்தகைய சிடுக்கவிழ்ப்பு வாசிப்பில் சிக்கிக் கொண்ட பலர் இலக்கிய படைப்புகளை பிற எவ்வகையிலும் அணுகமுடியாமல் காலப்போக்கில் தேங்கிவிடுவார்கள். அவர்கள் வாசித்தவற்றின் அளவு அவர்களை மூளைவீங்க வைக்கிறது. அவற்றின் பயனின்மை அவர்களை அபத்தமானவர்களாக மாற்றுகிறது. ஆகவே எளிய நக்கல்களையும் கிண்டல்களையுமே உதிர்க்கும் அசட்டு மேட்டிமைவாதிகளாக காலப்போக்கில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
இளம் வாசகனாக நான் மூன்றாவது வகையானவனாக இருந்தேன். நல்லவேளையாக நான் என் முதிரா இளமையின் உக்கிரமான அகந்தையை மகத்தான ஆக்கங்கள் சிலவற்றினூடாக, மகத்தான ஆசிரியர்களின் காலடியில் அமரநேர்ந்ததனூடாக வென்று கடந்தேன். என் அனுபவச்சார்பையும் கற்பனையையும் தக்கவைத்துக்கொண்டேன்.
இந்த ஆரம்ப நிலைகளிலிருந்து வாசிப்பில் பல படிநிலைகள் உள்ளன. தொடக்கத்தில் வாசகர்கள் தன்னை நோக்கி வரும் அனைத்தையும் படிப்பார்கள். அவற்றில் தெரிவுகளை அமைத்து தனக்குரிய படைப்புகளை மட்டுமே கண்டுபிடித்து படிக்க ஆரம்பிப்பதுதான் அடுத்த நிலை. உதாரணமாக இலக்கிய வாசகனாக நான் தொடங்கிய காலகட்டத்தில் அலெக்சாண்டர் டூமாவின் அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன். காஃப்கா காம்யூ போன்றோர்கள் அக்காலத்தில் மிகப்பெரிய ஆதர்சங்களாக இருந்தார்கள் அவர்களைப் படித்திருக்கிறேன். அன்று பெரிதும் பேசப்பட்ட அமெரிக்க எழுத்தாளர்கள் ஹெமிங்வே போன்றவர்களைப் படித்திருக்கிறேன். அவ்வாறாக டால்ஸ்டாய் தஸ்தாவெஸ்கி போன்றவர்களிடம் வந்து சேர்ந்தேன்.
இந்தவாசிப்புவெளியில் இருத்தலியம் சார்ந்து எழுதிய காஃப்கா காம்யூ போன்றவர்களின் எழுத்துகள் எனக்கானவை அல்ல என்று எளிதில் என்னால் கடந்து செல்ல முடிந்தது. அவை உருவாக்கும் இருத்தலிய உளச்சிக்கல்களும் சரி தத்துவச்சிக்கல்களும் சரி மிகக்குறுகிய எல்லைக்குள் இருக்கின்றன என உணர்ந்தேன். அவை பெரும்பாலும் ஐரோப்பிய வாழ்க்கை சார்ந்து அமைந்தவை. இந்தியப் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு அவை எவ்வகையிலும் பொருள்படவில்லை. ஆனால் டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும் என்னைப் பெரிதும் ஆட்கொண்டார்கள். டால்ஸ்டாயிலும் தஸ்தாவெஸ்கியிலும் திளைக்க ஆரம்பித்து அவர்களை முழுது அறியத்தொடங்கிய பின்னரும் கூட ஒரு எளிய கனவுலகத்தில் பறக்க டூமா எனக்கு இன்றும் தேவைப்படுகிறார்.
இப்படித்தான் நாம் நமது பட்டியல்களை உருவாக்கிக் கொள்கிறோம். இப்பட்டியல்களைத் தொடர்ந்து மறுவரிசை செய்து பலவற்றை களைகிறோம். இவ்வாறு ஒவ்வொரு தேர்ந்த வாசகனிடமும் ஒவ்வொரு பட்டியல் இருக்கிறது. அந்தப்பட்டியலில் அவனுக்குரிய பெயர்கள் இருக்கின்றன. தேர்ந்த வாசகனின் பட்டியலில் பெரும்படைப்பாளிகளே இருப்பார்கள். கூடவே மிக அசாதாரணமான சில பெயர்களும் இருக்கும். உதாரணமாக என்னுடைய தனிப்பட்ட பட்டியலில் மேரி கெரெல்லி இருப்பார். பிறிதெவரும் அவர் பெயரைச் சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் டால்ஸ்டாய்க்கு நிகராக எனது பட்டியலில் இருக்கிறார். அமெரிக்காவிலேயே கூட அவருடைய மதச்சார்பு காரணமாக ஒருபடி கீழாக வைக்கப்படுபவர் அவர்.
பொதுவாக ஒழுக்கச் சிக்கல்களை, மானுட வேட்கைகளை அதிகம் முன்னிறுத்தும் படைப்பாளிகளை நான் பொருட்படுத்துவதில்லை. ஆகவே ஹென்றி மில்லர் போன்ற பாலியல் பிறழ்வுகள், மீறல்களைப்பற்றிய எழுத்துக்கள் எளிய சுவாரசியத்திற்கு அப்பால் பொருள்படுபவை அல்ல எனக்கு. பிறிதொருவருடைய பட்டியலில் அவை முக்கியமாக இருக்கக்கூடும்.
அப்படியென்றால் புறவயமான அளவுகோல் என்ன என்பது தான் உங்களுடைய கேள்வி. அதற்கு இதுதான் பதில். இப்படி நூறு தேர்ந்த வாசகர்கள் தங்களுடைய தனிப்பட்ட பட்டியலை வெளிப்படுத்துகிறார்கள் என்றுகொள்வோம். அந்த நூறு பேரின் பட்டியலிலும் இருந்து ஒரு பொதுப்பட்டியல் உருவாகி வருமென்றால் அது அந்த நூறு பேர் அடங்கிய சூழலில் புறவயமான ஒன்று தான். இலக்கியத்திற்கான பட்டியல்கள் இவ்வாறுதான் புறவயமாகின்றன.
அதை நிகழ்த்துவது இரண்டு அம்சங்கள். ஒன்று இலக்கியச்சூழலில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதம். இன்னொன்று காலப்போக்கில் பலகோணங்களில் படைப்புகள் வாசிக்கப்பட்டு இயல்பாக உருவாகிவரும் இயற்கைத்தெரிவு. இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவையும்கூட
உலகெங்குமுள்ள வாசிப்புச்சூழலில் இருந்து எழுந்து வரும் தேர்ந்த வாசகர்கள் தான் விமர்சகர்கள். பெரும்பாலான விமர்சகர்களின் பட்டியலில் பொதுவாக இடம் பெறுவதுதான் உலக இலக்கியத்தின் பொதுப்பட்டியல் என்று சொல்லலாம். தர்க்கபூர்வமாகச் சொல்லப்போனால் இந்த அகவயமான பட்டியல்கள் நடுவே பொதுவான அம்சங்கள் இருக்கக்கூடாதுதான். ஆனால் இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. அதற்குக் காரணம் மானுடவாழ்க்கை அகண்டது, முடிவிலா வேறுபாடுகள் கொண்டது என்றாலும் கூடவே உலகப்பொதுவான அம்சங்களால் ஆனது. மனித உடல்போலத்தான் மனித மனமும். எத்தனை இனங்கள் நிறங்கள் முகவேறுபாடுகள். ஆனால் அமைப்பு ஒன்றே.
உலகமெங்கும் தேர்ந்த விமர்சகர்களின் பெரும்பாலான பட்டியலில் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி போன்றவர்கள் இடம் பெறுகிறார்கள் என்றேன்.ஆனால் விளாடிமிர் நபகோவ் அவர்கள் இருவரையுமே பரிபூரணமாக நிராகரிக்கிறார். உலகெங்கும் உள்ள பொதுப்பட்டியலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் இடம் பெறும்போது கூட நான் எனது தனிப்பட்டியலில் ஒருபோதும் அவரை இடம் பெறச்செய்ய மாட்டேன். இவ்வாறு மீறல்கள் எப்போதும் உண்டு. ஆனால் கூடவே ஒரு பொது வட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுதான் இலக்கியத்தின் புறவயத்தன்மையைத் தீர்மானிக்கிறது.
சுசித்ராவின் பட்டியல் சுசித்ராவுக்கு உரியதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சுசித்ராவும் ஜெயமோகனும் பிரியம்வதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் கடலூர் சீனுவும் என ஒரு முன்னூறு பேர் போடும்பட்டியல்களைச் சேர்த்து ஒரு சராசரியான பொதுவான பட்டியலை போடும்போது அதில் ஒரு ஐம்பது பொதுவான பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அவர்கள் ஒரு புறயவமான பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்று தான் பொருள்.
தமிழிலக்கியத்திற்கு வருவோம். தமிழிலக்கியத்தில் வெவ்வேறு பட்டியல்கள் எப்போதும் போடப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனோ மௌனியோ கு.ப.ராஜகோபாலனோ சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ இடம் பெறாத இலக்கியப்பட்டியல்கள் இங்கு பல காலம் புழங்கியிருக்கின்றன, அவை கல்வித்துறையில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்குள்ள தேர்ந்த இலக்கிய விமர்சகர்கள் தொடர்ந்து ஒரு பட்டியலை முன்வைக்கிறார்கள். குறிப்பாக க.நா.சு. அவருடைய பட்டியலில் உள்ளவர்கள்தான் காலப்போக்கில் அனைவருடைய பட்டியலிலும் இடம்பெறுபவர்களாக ஆனார்கள். அந்தப்பட்டியல் க.நா.சு முதலியவர்களின் அந்தரங்கமான பட்டியல்தான். ஆனால் அது புறவயமான பட்டியலாக ஆகியது.
க.நா.சுவின் பட்டியலில் இருக்கும் சண்முக சுப்பையாவோ ஆர்.சண்முக சுந்தரமோ எனது பட்டியலில் இருக்கமாட்டார்கள். எனது பட்டியலில் உள்ள ப.சிங்காரம் அவரது பட்டியலில் இருக்கவில்லை. ஆனால் இதற்கு அப்பால் க.நா.சு உருவாக்கிய அந்தப்பட்டியல் பெரும்பாலும் இலக்கியம் பேசும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மெல்ல நிறுவப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழிலக்கிய வரலாறு இன்று.
அந்தப்பட்டியல் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டும் இருக்கிறது. க.நா.சுவின் அளவுகோலில் மௌனிக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் இடத்தைவிட மிகக் குறைவாகத்தான் நான் மதிப்பிடுவேன். க.நா.சு அளித்ததைவிட மிக முக்கியமான இடத்தை புதுமைப்பித்தனுக்கும் கு. அழகிரிசாமிக்கும் நான் அளிப்பேன்.
க.நா.சுவின் அந்தப்பட்டியலே கூட அவருக்கு முன்னால் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்துப்பேசிய ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய ஐயர் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்ததுதான். இதே போன்று ஆங்கில இலக்கியம் பற்றியோ அமெரிக்க இலக்கியம் பற்றியோ பிரெஞ்சு இலக்கியம் பற்றியோ ஒரு பொதுப்பட்டியல் நீண்ட தொடர் விவாதம் மூலம் உருவாகிவந்ததை பார்க்கலாம். அந்த விவாதம் வழியாகத்தான் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படைப்பாளிகளும் பட்டியலில் இடம் பெற தகுதி உள்ளவர்களா அல்லவா என முடிவு செய்யப்படுகிறது.
பட்டியல்கள் ஒருவகையான் தொகுப்பு முயற்சிகள் அவை வெறும் தனிப்பட்ட சிபாரிசுகள் அல்ல. அவற்றின் பின்னால் ஒரு விமர்சனக்கருத்து உள்ளது ஒரு பார்வைக்கோணம் உள்ளது. உதாரணமாக க.நா.சு எந்த அடிப்படையில் தன்னுடைய பட்டியலைப்போட்டார்?.
அ.இலக்கியத்தில் நேரடியான பிரச்சார கருத்துகள் இருக்ககூடாதென்று அவர் நினைத்தார்.
ஆ.வாசகனை கற்பனைசெய்ய வைக்க வேண்டும் சிந்திக்க வைக்க வேண்டுமே ஒழிய ஆசிரியன் தன்னை முன்வைக்கக்கூடாது என்று அவர் நினைத்தார்.
இ.நுட்பமாக சொல்லப்பட்டவற்றுக்குத்தான் இலக்கியத்தில் இடமே யொழிய பெருவெட்டானவற்றுக்கு அல்ல என்று அவர் நினைத்தார்.
ஈ. மென்மையாகவும் சாதாரணமாகவும் சொல்லப்படும் விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்.
இக்காரணத்தால் அவர் மௌனி புதுமைப்பித்தன் கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களை முன்வைத்தார் .ஆனால் கட்டற்ற மொழிப்பாய்ச்சலாக அமையும் பசிங்காரத்தின் நாவல் அவருக்கு உவப்பாக இல்லாமல் போயிற்று. இன்று நோக்குகையில் க.நா.சுவின் அளவுகோல் தொன்மங்களைக் கையாளும்போதும், மீயதார்த்தம், மிகைபுனைவுகளை எழுதும்போதும், உன்னதமாக்கல் நிகழும்போதும் செல்லுபடியாகாது என்று எவரும் சொல்லமுடியும். அதையும் கணக்கில்கொண்டுதான் அடுத்த பட்டியல் உருவாகிறது.
தலைமுறை தலைமுறையாக இவ்வாறு ஒரு பட்டியல் மீண்டும் மீண்டும் போடப்படும்போதுதான் ஒருவகையான மாறாமதிப்பீடு உருவாகி நிலைகொள்கிறது. அதில் தேறி வந்து நிலைப்பவையே செவ்வியல் ஆக்கங்கள் எனப்படுகின்றன. பாரதி ஒரு பட்டியல் போடுகிறார். ‘யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்’ என்று. எல்லாக்காலகட்டங்களிலும் அத்தகைய பட்டியல்கள் இருந்து கொண்டுதான் இருந்தன. [இதைப்பற்றி விரிவாக முன்னரே எழுதியிருக்கிறேன்] திருமுறைகள் என்றும், நாலாயிரம் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு என்றும், ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் தொகுக்கப்பட்டவை எல்லாமே விமர்சனரீதியான பட்டியல்கள்தான். அவையே செவ்வியல்லியத்தை உருவாக்கி நிலைநிறுத்தின.
இலக்கிய அளவுகோல்கள் உருவாகி அதைக்கொண்டு பட்டியல்கள் இடப்பட்டு அதன்வழியாகச் செவ்வியல் ஆக்கங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. பின்னர் அச்செவ்வியல் ஆக்கங்கள் அடுத்தகட்ட படைப்புகளைத் தீர்மானிக்கும் அடிப்படைகளாக நிலைகொள்கின்றன. இன்றைய நவீன இலக்கியம் புதுமைப்பித்தனை ஒரு முதன்மை அளவீடாகக் கொண்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தனை நாம் மதிப்பிடுவதில்லை, நம்மை அவர் மதிப்பிடுகிறார்.
ஆனால் இலக்கியத்தை பொறுத்தவரை ஒரு முக்கியமான வரியுண்டு. அது டி.எஸ்.எலியட் சொன்னது. கலை வளர்வதில்லை, அதன் மூலப்பொருட்கள் தான் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. கலை வளருமென்றால் கம்பராமாயணத்துக்குப்பிறகு எழுதுகிற நான் அதைவிட மேலான செவ்வியல் காவியத்தை எழுதியிருக்கவேண்டுமல்லவா? ஆகவே கலைப்படைப்பு சார்ந்த மதிப்பீடுகள் ஓரளவுக்கு உருவாகிவிட்டவை என்றால் பெருமாற்றங்களுக்கு அவை ஆளாவதில்லை. ஹோமருக்கும் விர்ஜிலுக்கும் தாந்தேக்கும் இருக்கும் இடம் இலக்கியத்தில் எத்தகைய விமர்சன அலையாலும் முற்றிலுமாக மாற்றக்கூடியதல்ல.
ஒருவருடைய தனிப்பட்டியலில் அவர் தாந்தேயையோ விர்ஜிலையோ விட்டுவிடலாம். ஆனால் உலகளாவிய வாசகஏற்பு எனும் பட்டியலில் அது இருந்து கொண்டே இருக்கும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பட்டியலிட்டவன் ஒரு தொல்விமர்சகன். அப்பட்டியலில் இன்னொன்றை புதிதாக சேர்க்க முடியாது. ஒன்றை வெளியே எடுத்துவிடுவதும் இயலாது. ஏனெனில் டி.எஸ்.எலியட் சொல்வது போல பேசுபொருளும் காலமும் மாறலாம், கலை வளர்வதில்லை.
இவை அனைத்தையும் தனிநபருக்கும் போட்டுப்பார்க்கலாம். உங்கள் அளவுகோல்கள் மாறுவது உங்களுக்குள் நிகழும் விவாதம் வழியாகவே. ஒரு கட்டத்தில் அவ்விவாதம் மூலம் ஒரு செவ்வியல்பட்டியல் உருவாகி நிலைபெறுகிறது. பின்னர் அது மாறுவதில்லை.ஒரு குழந்தை விளையாடுவதைப்போலத்தான் இது. அதன் உள்ளத்தில் ஒரு கற்பனை எழுகிறது. வெவ்வேறு பொருட்களை உள்ளிருக்கும் உருவகங்களின் குறியீடுகளாக அது வெளியே பரப்பி வைக்கிறது. சோப்புடப்பாவை பஸ் என்கிறது. ஸ்பூனை மரம் என்கிறது. அவற்றை இணைக்கிறது, அடுக்குகிறது. மெல்ல அதன் உள்ளிருக்கும் உருவகத்திற்கு சமானமான ஒன்று உருவாகிவிடுகிறது. அதன் பின் அந்த வெளியமைப்பையே நுட்பமாக மாற்றி மாற்றி புதிய சாத்தியங்களை வெளியே கண்டுபிடிக்கிறது. அது அதன் உள்ளிருக்கும் சாத்தியங்கள்தான்.
சுசித்ராவின் இலக்கியப்பட்டியல் விரைவிலேயே முழுமையடையும். எவருக்கும் அது வாழ்நாள் முழுக்க மாறிக்கொண்டிருப்பதில்லை. அப்படி மாறிக்கொண்டிருந்தால் அவருக்கு சுயமான தேடலோ ரசனையோ இல்லை. விரைவில் உங்கள் சொந்த செவ்வியல் அடுக்கு உருவாக வாழ்த்துக்கள். அதன் பின் மானுடத்தின் செவ்வியல் அடுக்குக்கும் அதற்கும் பெரிய வேறுபாடில்லை என்பதை அறிவீர்கள். சிறிய வேறுபாடு ஒன்று இருக்கும். அதையே உங்கள் தனித்தன்மை என்று சொல்கிறோம்
ஜெ
***