வன்முறை வளர்கிறதா?

viole

இனிய சகோதரனுக்கு

நேற்று அதிகாலையில் விழித்து மறுபடியும் தூக்கம் வராமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு செய்தி சானலில் வரிசையாக மூன்று நிகழ்வுகள். 1. ஏதோ கட்சி சண்டை. ஒரு குழு இன்னொரு குழுவை அடித்து நொறுக்குகிறது. ரத்த விளாறாய் ஆன பின்னும் அடிப்பது தொடர்கிறது. 2. ஒரு ஆட்டோவும் இன்னொரு வண்டியும் மோதிக்கொண்டது. யார் மேல் தவறு என்று தெரியவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் எதையோ எடுத்து ஓங்கி ஒரே அடி. ஆட்டோக்கார வாலிபன் இறந்து விட்டான். 3. ஒரு கணவன், மனைவியை கொடுமைப்படுத்தினான் என்று மனைவியின் சொந்தங்கள் கணவனை நடுரோட்டில் பிளந்து கட்டுகிறார்கள்.

மூன்றிலுமே ஈடுபட்டவர்கள் நன்றாக படித்தவர்கள் போன்ற தோற்றத்தில் இருந்தவர்கள். அதிலும் மூன்றாவது சம்பவத்தில் அடிவாங்கியவர், கொடுத்தவர்கள் எல்லோரும் ஆஃபீசர் தோற்றத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு அடியும் பெரிய மூங்கில் கம்புகளையும் இரும்பு கம்பிகளையும் தலைக்குப் பின்னால் ஓங்கி அடிக்கும்போது நமக்கு உடல் நடுங்குகிறது. படிப்பறிவு இல்லாத காலக்கட்டத்தைவிட இப்பொழுது ஏன் இந்த வன்முறை? கண்டிப்பாக ஒவ்வொரு அடிக்கும் ஒரு எலும்பு முறிவு இருக்கும்.

நம்முடைய படிப்பு பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தம். உங்கள் எழுத்துக்களில் ஒரு இடத்தில், ஒரு சமூகத்தின் நாகரிகம் என்பது தனக்கும் பிறனுக்கும் உள்ள இடைவெளி என்று உங்கள் குரு நித்யா சொல்லியதாக எழுதியிருப்பீர்கள். தன்னைப் போல் பிறனை நேசிக்க சொன்ன மிகப்பெரிய நாகரீகத்தைக் கொண்ட கிறிஸ்தவ சமூகம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறது. நம் எல்லோருக்குள்ளும் ஒரு கொடூர மிருகம் இருக்கிறதா? பயமாக இருக்கிறது. ஏதும் தேவை வரும்பொழுது நாமும் இதேபோல்தான் நடந்து கொள்வோமா?

பயத்துடன்
டெய்சி பிரிஸ்பேன்.

***

அன்புள்ள டெய்சி,

உங்கள் கடிதம் என்னை ஒருகணம் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. ஏனென்றால் நீங்கள் குறிப்பிடும் இதே போன்ற நிகழ்வுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். கட்டுமீறிய கோபம் அடிதடி என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருந்திருக்கிறது. இலக்கியத்துக்கு உள்ளேயே கூட ஒருசில அடிதடிகள் பதிவாகியிருக்கின்றன. அதற்காக எப்போதும் வெட்கப்படுவேன், அவர்களிடம் பலமுறை மன்னிப்பும் கோரியிருக்கிறேன். ஆனாலும் அதை கடக்க இன்னும் இயலவில்லை. இப்போது குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் உடல்வலு குறைந்துவிட்டதே

என்னுடைய குடும்பப் பின்னணியில் என்னுடைய மூத்த சகோதரர்கள். தந்தை, தாய்மாமன்கள், உறவினர்கள் அனைவரிடமும் இந்த அடிதடி இயல்பு இருந்தது. இதை ஒரு தனி இயல்பாகக் கொள்ள முடிவதில்லை. அதற்கு அப்பால் பலநூறு ஆண்டு பராம்பரியம் கொண்ட ஒரு குலவழக்கம் என்று தான் தோன்றுகிறது. இளமையிலேயே சூழலில் உள்ள பேச்சுக்கள், நம்பிக்கைகள், தெய்வங்கள், படிமங்கள் வழியாக உள்ளே பதிந்துவிடுகிறது இது. சாதிமேட்டிமையுணர்வு போல. மூடநம்பிக்கைகள் போல. ஆழ்ந்த மனசோர்வுகள் போல. வாழ்நாளெல்லாம் அதனுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தை போல உலகில் அமைதியும் ஒழுங்கும் நிலவிய பிறதொரு காலகட்டம் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை என்று அறிவீர்களா? இதை நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலகத்தில் எத்தனை நாடுகளில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன். உள்நாட்டுப் போர்களால் கலவரங்களால் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று ஒழிக்கப்படுவதை செய்திகள் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். நவீன அறிவியல் கொலை எந்திரங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றிருப்பதை நன்றாக அறிவோம். ஆயினும் கூட இந்தக் காலகட்டம் மனித குலத்தின் மிக அமைதியான காலகட்டம் என்பது தான் உண்மை.

நாமறிந்த வரலாறு எப்போது தொடங்குகிறதோ அன்று முதலே அது வன்முறையின் வரலாறாகத் தான் இருந்திருக்கிறது. சொல்லப்போனால் இன்றுவரை வளர்ந்து வந்துள்ள மானுட வாழ்க்கை என்பது ஒரு நெசவால் ஆனது என்றால் அதன் முதன்மைச்சரடே வன்முறைதான். நமது தொல்கதைகள் அனைத்துமே மாபெரும் கொலைகாரர்களைப் பற்றித்தான். நமது மகத்தான காவியங்கள் அனைத்தும் பேரழிவுகளை உருவாக்கிய போர்களைப் பற்றித்தான். நாம் வணங்கும் தெய்வங்களும் கூட நிகரற்ற போர் வீரர்கள் தான்.

போரினூடாகவே மானுடம் தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டது என்று சொல்பவர்கள் உண்டு. போரே புதிய சிந்தனைகளை, புதிய தொழில்நுட்பங்களை, புதிய நிலங்களைக் கண்டடைந்தது என்பார்கள். இன்றுகூட போருக்காகவே மானுட அறிவில் பெரும்பகுதி செலவிடப்படுகிறது எனச் சொல்வார்கள். போரில் வெல்பவை தங்கி வாழ்ந்தன. வீழ்ந்தவை முற்றாக அழிந்து பெயர்களும் எஞ்சாமல் மறைந்தன. ஆகவே போர் என்பது இயற்கையின் தேர்வு, மானுடத்தை மேம்படுத்தும் அடிப்படை என்பார்கள். வரலாற்றைப் பார்த்தால் இருக்கலாம் என்று சிலசமயம் தோன்றிவிடும்

போருக்கான ஆற்றலை உள்ளத்தில் உடலில் எழவைப்பதே பண்டைய சமூகங்களின் மிகப்பெரிய அறைகூவலாக இருந்தது. வீரம், மானம், தியாகம் என்று சொல்லப்படும் விழுமியங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டவை. பழைய கதைகள் அனைத்துமே இம்மூன்று பண்புகளை மையமாக்கி அமைந்துள்ளன. ஏனெனில் போர்ச்சமூகத்தின் அடிப்படையான உணர்வுகள் அவை. தமிழகம் எங்கும் பயணம் செய்தால் தன் கழுத்தைத் தானே வெட்டி களப்பலியாகும் வீரனுக்கு, போரில் களம்பட்ட வீரர்களுக்கு நடப்பட்ட வீரக் கற்கள் பல்லாயிரக்கணக்கில் நிற்பதைக் காணலாம். நாம் நின்றிருக்கும் ஒவ்வொரு அடிமண்ணும் பலநூறுமுறை குருதியால் நனைந்திருக்கும்.

நமது அறங்கள் அனைத்தும் இதிலிருந்துதான் உருவாகி வந்தன. நாம் கொன்றால் சூறையாடினால் கொள்ளையடித்தால் எரித்தால் இடித்தால் அது அறம், பிறர் அவ்வாறு நமக்கு அதைச் செய்தால் அது அறமிலாத கொடுமை என்ற அளவிலேயே பல்லாண்டுகளாக நமது அறவுணர்வு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட அதிகம் முன்னகரவில்லை என்பதை ஒருநாள் முகநூலில் சென்று அரசியல் விவாதங்களை கவனித்தால் அறியலாம்

இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் அனைத்தும் மானுட அறங்களும் சென்ற பலநூற்றாண்டுகளாக பல்வேறு பேரறிஞர்களால் பேசப்பட்டு, விவாதங்களால் மேம்படுத்தப்பட்டு, மெல்ல மெல்ல பொதுவாக ஏற்கப்பட்டு உருவாகி வந்தவை. அவை முதலில் பேசப்பட்டபோது எத்தனை ஏளனத்துக்குரியதாக இருந்திருக்கும், எத்தனை அற்பமானதாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் என்று இப்போது கற்பனை செய்வது கடினம். ஆனால் தங்கி வாழவேண்டுமென்ற தேவை மானுடனை அக்கருத்துகளை நோக்கிக் கொண்டு வந்தது. அல்லது அக்கருத்துகள் தங்கி வாழவேண்டுமென்று ஒரு ஊழ்வினை இருந்திருக்கலாம். அல்லது அவற்றை சொன்னவர்களின் ஆன்ம வல்லமை காலப்போக்கில் வென்றிருக்கலாம்.

இவ்வாறு பார்த்தால் மானுட வரலாற்றை பல்லாயிரம் ஆண்டுகளினூடாக மெல்ல மெல்ல தனக்குரிய அறத்தை திரட்டி எடுத்து முன்னகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம் என்று வரையறை செய்யலாம். அதன் ஒவ்வொரு காலகட்டமும் முந்தையதை விட மேலானதே. வரலாற்றைப் பாருங்கள், இரண்டாம் உலகப்போரும் வதைமுகாம்களும் கொண்ட காலகட்டம் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட குறைவான கொடுமைகள் கொண்டது, மேலும் அமைதியானது.

இன்று நின்று கொண்டு நாம் மதங்களைத் திரும்பிப் பார்த்தாலே இந்த முரணியக்கத்தை பார்க்க முடியும். வன்முறையைத் தன் மையப் பெரும்போக்காக கொள்ளாத மதங்கள் உலகில் மிகச்சிலவே. இந்துமதம், கிறித்தவம், இஸ்லாம் அனைத்துமே வன்முறையை முதன்மையாக கொண்டிருந்தவை தான். சமணமும் பௌத்தமும் மட்டுமே மையமான வன்முறை நோக்கு இல்லாத மதங்கள். அவை உலக அளவிலேயே விதிவிலக்குகள். அவ்விரு மதங்களும் இந்தியாவில் தோன்றின என்பது உலகிற்கு நாம் அளிக்கும் பெருங்கொடை.

இந்துமதம் போர்த் தெய்வங்களை முதன்மையாக கொண்டது. எண்ணிப்பாருங்கள் சென்ற காலங்களில் கிறித்தவத்தின் செய்தியை உலகிற்கு கொண்டு சென்றவர்கள் உலகின் பல்வேறு நிலங்களில் ஆற்றிய மாபெரும் மானுட அழிவுகளைப் பற்றி. அந்நிலங்களை கைப்பற்றி கிறிஸ்துவுக்கு சமர்ப்பிக்க அவர்கள் நிகழ்த்திய கொடூரமான போர்களை பற்றி. இந்துமதமும் கிறித்தவமும் இன்று அந்தக் காலகட்டத்தின் அணுகுமுறைகளில் இருந்து வெகுவாகத் தள்ளி வந்துவிட்டன. இன்று அவற்றை வேறுவகையில் விளக்குவதற்கான முயற்சிகளில் கூட ஈடுபட ஆரம்பித்துவிட்டன. மிகச்சில இந்துக்களோ கிறித்தவர்களோ தான் இன்று அவற்றை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்த மதத்திற்குள்ளேயே மானுட அமைதிக்கும் ஒற்றுமைக்குமான குரல்கள் எழுந்தன என்பதுதான் நான் சொல்லும் முரணியக்கம். மாபெரும் ஞானிகளின் அறிஞர்களின் தரிசனங்கள் வழியாக, கர்மயோகிகளின் சேவை வழியாக வன்முறையற்ற, ஒத்து வாழ்தலுக்குரிய அறம் நோக்கி மானுடம் நகர்ந்தது. அவர்கள் மெல்ல அந்த மதங்களின் பார்வையை மாற்றினர். காலப்போக்கில் மானுடத்தின் பார்வையையும் அவர்களின் தரிசனங்களால் மாற்ற முடிந்தது. இந்து மதத்திற்குள் தான் காந்தி உருவாக முடிந்தது. கிறித்துவத்திற்குள் தான் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒரு அமைப்பு எழ முடிந்தது. மதங்களுக்குள் இருந்து மதச்சீர்திருத்தவாதிகள் எழுந்து கொண்டே இருந்தார்கள். மதங்களுக்குள் இருந்து எழுந்த சிந்தனைகளை மதங்களுக்கு வெளியே கொண்டு சென்று வளர்த்தனர் அடுத்தகட்ட சிந்தனையாளர்கள். மதத்தை எதிர்க்கும் சிந்தனைகள் கூட அந்த முரணியக்கத்தின் கனிகளே.

[மதங்களை நோக்கிய நம் பார்வை எப்போதும் ஒற்றைப்படையானது. மதங்களின் வன்முறையம்சத்தை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றை முற்ற நிராகரிப்பவர்கள் அவை மானுடம் இன்று கொண்டுள்ள அத்தனை சிந்தனைகளுக்கும் விளைநிலங்கள் என்பதை அறியாத மூடர்கள். அவை அமைதியின் குரல்கள் மட்டுமே என வாதிடுபவர்கள் வரலாறு அறியாத வேறுவகை மூடர்கள்]

இன்றைய உலகம் இவ்வாறு உருவாகி வந்த மாபெரும் மனிதாபிமானிகள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆக்கம். இடைவிடாத போர் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த பூமிப்பரப்பு மெல்ல அடங்கி பெரும்பாலும் போரற்ற வாழ்க்கை ஒன்றை நோக்கி வந்துள்ளது. அந்த அமைதியை ஓரிரு தலைமுறைக் காலமாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வரலாற்றை அறியாமல் இங்கு நின்று பார்க்கும்போது நீங்கள் சுட்டிய அந்த வன்முறைகள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் அளிக்கின்றன. ஆனால் சென்றகால வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இவை மிகச்சிறியவை.

இவை சென்ற காலத்தின் எச்சங்கள். மழை நின்ற தூறல்கள். வீரமென்றும் தியாகமென்றும் மானமென்றும் உருவாக்கப்பட்டுள்ள விழுமியங்கள் இன்னும் நம் எண்ணங்களில் பெரும்பாலும் அப்படியேத்தான் உள்ளன. அந்தக் காலகட்டம் மறைந்துவிட்டதை நமது மூளை அறிந்தாலும் நமது உள்ளம் அறிவதில்லை. இன்றுகூட ஒரு அரசியல் மேடைப்பேச்சை கேளுங்கள், சென்றகால படைத்தலைவன் ஒருவன் தன் தற்கொலைப்படையிடம் பேசிய அதே அறைகூவல்கள்தான் அதில் நிறைந்திருக்கும். நம் மொழியெங்கும் வன்முறைக் கூச்சல்கள். நம் படிமங்கள் எல்லாமே வன்முறை கொண்டவைதான். ஒருநாளில் நம் சினிமா சுவரொட்டிகளைப் பாருங்கள், அத்தனை நாயகர்களும் உச்சகட்ட வன்முறை நிலையில் கையில் ஆயுதங்களுடன் நம்மை வெறிக்கிறார்கள்.

சூழல் மாறிவிட்டது, நம் அகம் மெல்ல மெல்லத்தான் மாறும். பல தலைமுறைகளாகப் போரையே வாழ்க்கையாகக் கொண்ட சாதியினரைப் பொறுத்தவரை இந்த இயல்புகள் அவர்களின் குருதியிலே கலந்துவிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. மிகச்சிறு குழந்தையாக இருக்கையிலேயே இவை எப்படியோ புகட்டப்பட்டுவிடுகின்றன. என்னுடைய குடும்பப் பின்னணியை வைத்து அதைத்தான் நான் சொல்வேன். என்னுடைய மைந்தனுக்கு அந்த வன்முறை கடத்தப்படவில்லை. என்னுடைய தனிப்பட்ட சாதனையாக நான் சொல்வது அதை மட்டும்தான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதனித்திருப்பவர்களின் கொண்டாட்டம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72