‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72

72. விதைத்துயில்

வெளியே காலடியோசை எழுந்தது.  கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை ஆட்டின் காதுகள்போல மென்மையும் வெம்மையும் கொண்டு துடிப்பவை என்னும் எண்ணம் அவளுக்கு எழுந்தது. உள்ளடங்கி இரு சிவந்த கோடுகளெனத் தெரிந்த வாய்க்கு சுற்றும் மெல்லிய சுருக்கங்கள் அசைந்தன.

“இளவரசி, உங்கள் அன்னையின் வயிற்றிலிருந்து எடுத்த உங்களை வயற்றாட்டி வெளியே கொண்டுவந்து நீட்டியபோது உங்கள் தந்தையின் அருகே நின்று காத்திருந்தேன். உங்கள் தந்தை உங்களை வாங்கி கால்களை சென்னி சூடி முத்தமிட்டு என்னிடம் தந்தார். அன்றுமுதல் உங்களை பார்த்து வருகிறேன்… உங்கள் எளிமையே உங்கள் ஆற்றல். எதையும் எரிப்பது அனல். பேராற்றல் மிக்கது அது. அதை பிரம்மத்தின் மண்ணுருவம் என்று முனிவர்கள் வணங்குகிறார்கள். ஆனால் அனலால் எதையும் ஆக்க முடியாது. நீரோ கருணை மிக்கது. செல்லுமிடத்திலெல்லாம் அவ்விடத்தின் வடிவங்களை தான் ஏற்று அவ்வாறே உருக்கொள்வது. அவ்விடத்தின் வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் தன்னுடையதாக்குவது” என்றார் சம்விரதர்.

“நீருக்கென்று வண்ணமும் வடிவும் மணமும் இல்லை. ஆனால் இங்கிருக்கும் அத்தனை வண்ணங்களும் வடிவங்களும் மணங்களும் நீராலானவை. பேரன்னையரை நீர் வடிவானவர்கள் என்பது அசுர மரபு. இங்கிருக்கும் அத்தனை உயிர்களும் நீரை நோக்கியே வேரும் நாவும் நீட்டுகின்றன. அவ்வனைத்தும் நீருக்கென விடாய் கொண்டிருப்பதுவரை நீர் அழிவதே இல்லை. எரிபடுவது அழிந்ததும் எரி விண்புகுகிறது. நீர் அனைத்தையும் தாங்கி ஊற்றென்றும் மழையென்றுமாகி என்றும் இங்கிருக்கும்” என்றார். இரு கைகளைக் கூப்பி அவள் தலை வணங்கினாள்.

“தங்களுக்கான மணத்தூதுடனும் கணையாழியுடனும் இந்நகர் புகுந்தேன். நேற்று நிகழ்ந்ததை அரசர் என்னை அழைத்து சொன்னார். நானே சென்று குருநகரியின் அரசர் யயாதியிடம் பேசினேன். அவர் கிணற்றிலிருந்து கைதொட்டு தூக்கி எடுத்த அப்பெண் நீங்கள் என்று எண்ணியிருந்தார். அது என் பிழையே. அவரிடம் உங்கள் ஓவியத்திரைச்சீலையை நான்  காட்டவில்லை. உங்கள் உருவைக் கண்டால் அவர் விரும்பமாட்டார் என எண்ணிவிட்டேன். உங்கள் அழகு மாசற்ற அவ்விழிகளில் உள்ளது, அதை ஓவியம் காட்டாது. நேர்நின்று அவற்றை நோக்குபவர் உங்களை அன்னைவடிவான கன்னி என்று எண்ணாமலிருக்கமாட்டார்…” என்றார் சம்விரதர்.

“உங்கள் ஆடையை சுக்ரரின் மகள் அணிந்து திருப்பி அளித்தபோது சிற்றாடை ஒன்று மட்டும் அவர்களிடமே தங்கிவிட்டது.  அதைப் பார்த்து அவரை ஹிரண்யபுரியின் இளவரசி என்று எண்ணிவிட்டார். அவர் கைபற்றி சொல்லளித்தது சுக்ரரின் மகளுக்கு என்று நான் சொன்ன பின்னரே மெய்யுணர்ந்து யயாதி திடுக்கிட்டார். நிகழ்ந்ததைச் சொன்னபோது துயர்கொண்டு தளர்ந்து அமர்ந்துவிட்டார்.” சர்மிஷ்டை புன்னகைத்தாள். சம்விரதர்  “அது தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அது தேவயானியின் விழைவு. அல்லது ஊழ். அல்லது நாமறியா ஒன்று.  எப்போதும் ஒரு துளி எஞ்சிவிடுகிறது. விதை என்பது ஒரு துளி மரம்தான்” என்றார். சர்மிஷ்டை அச்சொற்களை புரிந்துகொள்ளாமல் அவரை விழிமலர்ந்து நோக்கினாள்.

“ஊழ் மிகுந்த நகையுணர்வு கொண்டது. சுக்ரரின் மகள் வாயிலாக தன் நெறியை தான் சொல்ல வைத்துவிட்டது. உங்கள் வயிற்றில் பேரரசர்கள் எழுவார்கள். விருஷபர்வனின் கொடிவழியே இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளும். இங்கிருந்து நீங்கள் செல்கையில் ஓர் அமுதகலசத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள். தங்கள் மூதன்னையர் முலைகளாக ஏந்தியிருந்தது அது. உங்கள் குல அடையாளம். பிறிதெதுவும் எஞ்சவேண்டியதில்லை. நாளை ஒரு காலம் வரும், அன்று நம் அமுதகலம் இக்குலத்தின் விதைத்துளி என உங்கள் குலவழிகளின் கொடிகளில் பறக்கட்டும். உங்கள் தந்தையின் பொருட்டு உங்களிடம் நான் சொல்வது இது ஒன்றே” என்றார் சம்விரதர்.

சர்மிஷ்டை பெருமூச்சுவிட்டாள். சம்விரதர் அவள் தலைமேல் தன் நடுங்கும் கைகளை வைத்தபின் திரும்ப சர்மிஷ்டை மெல்லிய குரலில்  “அமைச்சரே…” என்றாள். “சொல்லுங்கள், இளவரசி” என்றார்.  “அவர் என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டாள். அவர் கண்கள் சற்று மலர “ஆம், அதை நான் முழுக்க சொல்லவில்லை” என்றார். “அவர் திகைத்தார். பதறிப்போய்  ‘என்ன இது?’ என்றார்.  ‘தாங்கள் சுக்ரரின் மகளுக்கு சொல்லளித்துவிட்டீர்கள், அது உங்கள் பிழை’ என்று நான் சொன்னேன்.  ‘இல்லை, நான் அதை அறிந்து செய்யவில்லை’ என்றார்.  ‘எப்படிச் செய்திருந்தாலும் அவர்கள் யார் என்று நீங்கள் கேட்டிருக்கவேண்டும். கேட்காதது உங்கள் பிழையே’ என்றேன். தளர்ந்து பீடத்தில் அமர்ந்து  ‘ஆம்’ என்றார். என் பிழையை நான் உணர்ந்திருந்தமையால் அவர் பிழையை அறியாது மிகைப்படுத்தி சொன்னேன் போலும்.”

“மேலும் இரக்கமின்மையுடன் அவரிடம் நான் அடுத்த சொற்களை சொன்னேன். ‘சுக்ரர் மகளின் கோரிக்கை பிறிதொன்றுமுண்டு, அதை அரசரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.   நீங்கள் அவளை  மணம்கொண்டு பட்டத்தரசியாக இடம் அமர்த்தும்போது அசுரகுலப்பேரரசரின் மகள் சர்மிஷ்டையே அவளுக்கு அணுக்கச்சேடியாக அங்கு வரவேண்டும்’ என்றேன். திகைப்புடன் உரக்க ‘அணுக்கச்சேடியாகவா? விருஷபர்வரின் மகளா?’ என்று  கேட்டபடி எழுந்து என்னருகே வந்தார்.  ‘இதை யார் கூறியது? சுக்ரரா?’ என்றார். என் உள்ளத்தில் தேவயானிமேல் இருந்த அனைத்து வஞ்சத்தையும் நிகழ்த்தும் தருணம் அது என அப்போது உணர்ந்தேன். ‘இல்லை, அவர்கூட அவ்வண்ணம் எண்ணமாட்டார். அவர் மகள் ஒருத்தியால் மட்டுமே அது இயலும்’ என்றேன். தான் மணக்கவிருக்கும் பெண்ணைப்பற்றி முதல்முதலாகக் கேட்கும் மதிப்பீட்டில் இருந்து ஆணுள்ளம் ஒருபோதும் அகல இயலாது. அது ஒரு நச்சு விதை.”

“நடுக்கம் தெரிந்த குரலுடன் ‘அவளே இதை கோரினாளா?’ என்றார்.  ‘ஆம்’ என்றேன். இரு கைகளையும் விரித்து ‘ஒரு சிறு களிப்பகையின் பொருட்டா இவையனைத்தையும் செய்கிறாள்?’ என்றார்.  ‘அவர் இலக்கு பாரதவர்ஷத்தின் முதன்மைப்பேரரசி என்று மணிமுடி சூடி அமர்வது மட்டுமே. பிற எவையும் அவருக்கு ஒரு பொருட்டல்ல’ என்று நான் சொன்னேன்.  ‘ஆம், அவள் அதை அடைந்துவிட்டாள். இரண்டே கோரிக்கைகள். மாற்றாருக்கான அனைத்து வழிகளையும் முழுமையாக மூடிவிட்டாள்’ என்றபடி மீண்டும் சென்று பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளில் ஏந்திக்கொண்டார். அந்நஞ்சை மேலும் வளர்க்க எண்ணி நான் அருகணைந்து ‘தாங்கள் எதையும் இழக்கவில்லை, குருநாட்டரசே’ என்று சொன்னேன். ‘தாங்கள் விழைந்தபடியே அசுரப்பேரரசின் முற்றுரிமையை  அடைகிறீர்கள். தேவயானியை அசுரப்பேரரசின் இளவரசியென்றே முறைமை செய்து தங்களுக்கு கையளிக்க விருஷபர்வன் எண்ணியிருக்கிறார். எங்கள் படையும் கருவூலமும் அசுரஐங்குலத்தின் கோல்களும் உங்கள் உரிமை’ என்றேன்.”

“ஆண்மையும் நேர்மையும் கொண்ட ஒருவர் அச்சொற்களால் அறச்சீற்றமே அடைவார் என நன்கறிந்திருந்தேன். மேலும் கூர்கொண்டு ‘அத்துடன் அசுர இளவரசி சர்மிஷ்டை அழகியல்ல. பிற அசுர குலப்பெண்களைப்போல எளிய தோற்றம் கொண்டவர். தாங்கள் மணக்கவிருப்பவரோ பேரழகி. கொல்வேல் கொற்றவைபோன்ற தோற்றம் கொண்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். சக்ரவர்த்தினி என உங்கள் இடம் அமர்ந்தால் அவர் காலடியில் பாரதவர்ஷத்தின் முடிமன்னர்கள் பணிவர். அதுவே கவிஞர்களுக்கும் சூதர்களுக்கும் சொல்கோக்க உகந்ததாக அமையும்’ என்றேன். விழிதூக்கி என்னை நோக்கியபோது அவர் கண்களில் வலியை கண்டேன். என்னுள் இருந்த நச்சுமுள்ளின் கூர் தினவு அடங்கியது.”

“பின்னர் சொல்லை மடைமாற்றி ‘நான் தங்களின் பொருட்டே இதை சொன்னேன், அரசே’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டு ‘நான் வாக்களிக்கையில் விருஷபர்வரின் மகளுக்கே என்னை அளித்தேன். என்னை மீறி இவை அனைத்தும் நடந்தால்கூட அவளுக்கு அளித்த சொல்லிலிருந்து தவறினால் அப்பழியிலிருந்து நான் மீள இயலாது’ என்றார். தலைவணங்கி பிறிதொரு சொல் சொல்லாமல் மீண்டு வந்தேன். இளவரசி, உழவன் விதைகளையும் அந்தணன் சொற்களையும் விதைக்கிறார்கள். பருவமறிந்து நான் விதைத்தவை முளைக்கும்” என்றார் சம்விரதர். “இன்று அவையில் யயாதி அளித்த கணையாழியை ஐங்குலக் குடிமூத்தார் சான்றாக சுக்ரரின் மகளுக்கு அளிக்கவிருக்கிறேன். அதற்கு முன் சுக்ரரின் மகளை தன் மகளாக விருஷபர்வன் ஏற்று அரியணை அமர்த்துவார். அவருக்கு அசுரகுலத்து முடியும் கொடியும் அளிக்கப்படும். யயாதியின் கணையாழி அவருக்கு அளிக்கப்பட்டபின் அசுர குலத்தின் ஒப்புதலுடன் அவர் கணையாழி யயாதிக்கு அளிக்கப்படும்.”

சர்மிஷ்டை தலையசைத்தாள்.  “தாங்கள் தேவயானியின் அணுக்கச்சேடியாக தாலம் ஏந்தி இடம் நிற்கவேண்டும். அதைச் சொல்லிச்செல்லவே வந்தேன். பணிக, எழுவதற்கான காலம் வரும்” என்றார் சம்விரதர்.   “ஆம், அது என் கடமைதானே?” என்றாள் சர்மிஷ்டை.  “குடிப்பேரவையிலேயே இச்செய்தியும் அறிவிக்கப்படவேண்டும். அது வெறும் சொல்லாக அன்றி காட்சியாகவே இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் பதியவேண்டுமென்று சுக்ரரின் மகள் விரும்புகிறார். அதன் பொருட்டே இவ்வாணையை அவர் விடுத்திருக்கிறார்” என்ற சம்விரதர்  “இளவரசி, நான் ஐம்பதாண்டுகாலம் அமைச்சுப்பணி புரிந்தவன். சுக்ரரின் மகளைப்போன்ற அரசுத்திறனை எவரிடமும் கண்டதில்லை. பேரரசை மறுசொல்லின்றி ஆளும் ஆற்றல் கொண்டவர் அவர். அவர் காலடியில் குருநாட்டின் யயாதியே பணிந்தமரப் போகிறார். உங்கள் நெறியை நீங்களே கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.

சர்மிஷ்டை புன்னகைத்து  “தாங்கள் சொன்னீர்களே நீர் என்று, அமைச்சரே, நீரின் பாதை அனைத்தையும் தழுவிக்கொள்வது, வளைந்து தன் வழிதேர்வது, அணுகுவதனைத்தையும் ஈரமாக்கி நெகிழச்செய்வது, நிறைந்த இடமெங்கும் விதைகளனைத்தையும் முளைக்கச்செய்வது”  என்றாள். சம்விரதர் புன்னகைத்து “உண்மை. அவ்வாறே நிகழட்டும், இளவரசி” என்றார். மீண்டும் அவள் தலைமேல் கைவைத்து “கூரிய நற்சொல் உங்கள் நாவிலெழுகிறது. மூதன்னையர் உடனிருக்கிறார்கள்” என்றார்.

வெளியே மங்கல ஓசை கேட்டது. உள்ளே  சம்விரதர் “தேவயானி வருகிறார்” என்றார். “நான் சென்று அவர்களை எதிர்கொண்டு இங்கு அழைத்து வருகிறேன். நீங்களும் அவரும் சந்திக்கும் தருணம் இப்படி தனியறையில் நிகழட்டும் என்றே இதை ஒருங்கு செய்தேன். இவ்வொரு தருணத்தை நீங்கள் கடந்துவிட்டீரக்ள் என்றால் பிறகெதுவும் கடினமல்ல.” சர்மிஷ்டை “ஆம்” என புன்னகைத்தாள். “இத்தகைய உச்சதருணங்களில் நாம் யார் என்றும் எங்கு எவ்வண்ணம் இருக்கப்போகிறோம் என்றும் நம் அகத்திலிருக்கும் ஒன்று முடிவெடுத்து வெளிவந்து தன்னை நிகழ்த்திக்கொள்கிறது.    அதுவே எஞ்சிய நாளெல்லாம் நம்மை வழிநடத்தும். அது சூழ்ந்திருக்கும் விழிகளால் திசைதிருப்பப்படாமல் இருக்கட்டும் என்றே இவ்வறையை அமைத்தேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றார்.

tigerசர்மிஷ்டை திரும்பி அப்பால் அறைச்சாளரத்தருகே அச்சொல்லாடலைக் கேட்காதவள் என நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “நீயும் இவ்வறையில் இருக்க வேண்டியதில்லை” என்றாள். “இளவரசி…” என அவள் சொல் எடுக்க “அது முழுத்தனிமையில் நிகழட்டும்” என்றாள். “நான் உடனிருக்கவேண்டும் என்றீர்கள், இளவரசி…” என்றாள் சேடி. “ஆம், இன்றுவரை என்னில் ஒரு பகுதியை உன் வழியாக நிகழ்த்திக்கொண்டிருந்தேன். இளவரசியருக்கு அந்தத் தேவை உண்டு. இனி நான் இளவரசி அல்ல. அடுத்த கணம் முதல் சேடியாகப்போகிறேன். சேடிக்கு சேடியர்கள் இருக்க இயலாது” என்றாள் சர்மிஷ்டை. சேடி  கண்ணீரோடு  “இன்று நான் சொன்ன சொற்களுக்காக துயரடைகிறேன், இளவரசி. உங்கள் தோழியாக இருப்பதில் நான் அடைந்த நிறைவை பிறிதேதோ சொற்களால் மறைத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்” என்றாள்.

“நீ சரியாகவே சொன்னாய், என்னுள் ஏந்துவதற்கு நான் நாணுவனவற்றையும் வெளிப்படுவதற்கு அஞ்சுவனவற்றையும் உனக்கு அளித்தேன். அத்தனை மேலோரும் தங்கள் பணியாளர்களிடம் செய்வது அது. நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அடிமையாவதென்பது அவ்வண்ணம் அகம் அழிவதே” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றாள் சேடி. “அச்சொற்களைச் சொல்வதற்கு பிறிதொரு தருணம் எனக்கு வாய்க்கப்போவதில்லை என்று ஓர் உள்ளுணர்வு சொன்னது.” சர்மிஷ்டை “எந்தையிடம் இறுதியாக நான் கோரப்போவது ஒன்றே. எந்தை உன்னை தன் மகளாக முறைப்படி ஏற்கவேண்டும். என் எச்சமென உன்னை இங்கு விட்டுச்செல்கிறேன். நான் அளித்த அச்சங்களிலிருந்தும் ஐயங்களிலிருந்தும் நீ விடுதலைகொண்டாய் என்றால் எந்தை அவர் மகிழும் ஒரு மகளை பெறுவார்” என்றாள்.

சொல்திகைத்து, மெய்ப்புகொண்டு “இளவரசி” என்று அழைத்தபடி சேடி வந்து சர்மிஷ்டையின் கைகளை பற்றிக்கொண்டாள். அழுகையை அடக்க முயன்று அது கரைகடக்க தன் நெற்றியை அவள் தோளில் சாய்த்து குரல்குமுறி அழுதாள்.  “இத்தருணத்தை நான் கடக்க வேண்டுமென்றால் இவ்வுணர்வு நிலைகள் என்னை சூழக்கூடாது. இனி நீ என் தங்கை, இங்கிருந்து நான் செல்வது வரை. அதன் பிறகு விருஷபர்வரின் மகள், ஹிரண்யபுரியின் இளவரசி. மங்கலம் கொண்டு நிறைந்து வாழ்க! நன்மக்களை ஈன்று நிறைக!” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை இளவரசி, நான்…” என்று அவள் அழுதபடி சர்மிஷ்டையின் கைகளைப் பிடித்து உலுக்கினாள். அவளால் அத்தருணத்தை கடக்கமுடியவில்லை. பலநூறு சரடுகளால் கட்டப்பட்டு திமிறுபவள்போல துடித்தன அவள் உடலும் உள்ளமும்.

“வெளியே செல்! இது என் ஆணை!” என்றாள் சர்மிஷ்டை. அவள் முகத்தைப் பொத்தியபடி மெல்லிய காலடி வைத்து வெளியே சென்று கதவை சார்த்திக்கொண்டாள். சர்மிஷ்டை தன் ஆடையை சீர்படுத்தி குழலை சீரமைத்து நின்றாள். அப்போது தன் உடலில் இருந்து எழுந்த கல்லணிகளின் ஓசை மிக அணுக்கமாக இருப்பதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியாத மூதன்னையரால் சூழப்பட்டிருப்பதுபோல. மானுடச் சொல்லென பொருள் கொள்ளாத பிறிதொரு மொழிச்சொற்கள் ஒலிப்பதைப்போல. தன்னை அக்கல்லணிகளை அணியச்செய்தவள் தன்னை அறியாமலேயே பேருதவி ஒன்றை ஆற்றியிருக்கிறாள். தன்னை முழுமையாக வரையறுத்துக்கொள்ள உதவியிருக்கிறாள். இடர் என்பது தான் யார் என்று வரையறுக்க முடியாதிருப்பதே. தன் ஓவியத்தை தானே தீட்டி முடித்த பின்னர் துயரேதும் இல்லை. முதன்மைத் துயரென்பது தத்தளிப்புதான். விடுதலை என்பது நிலைபேறு. எச்சங்களேதும் இல்லாமல் தன்னை முடிவுசெய்து கொள்ளல். நிறைநிலைகொண்டவர்களின் பயணமே மெய்ச்செலவு. ஆம், எத்தனை தெளிவாக எண்ணுகிறேன்! கற்பன அறிவென்றாவதற்கு அதற்குரிய தருணங்கள் வாழ்வென வந்தமையவேண்டும் போலும்!

tigerவெளியே மங்கல ஓசை முழங்கியது. கதவு திறந்து நிமித்தக்கூவி கையில் வெள்ளிக்கோலுடன் வந்து உரத்த குரலில்  “பிரஹஸ்பதியின் குருமரபின் முதன்மையறிஞர் சுக்ரரின் மகள் தேவயானி வருகை” என்று அறிவித்தான். தொடர்ந்து இரு அணிச்சேடியர் வலமும் இடமும் ஆடை பற்றி உதவ இளவரசியருக்குரிய முழுதணிக்கோலத்தில் தேவயானி அறைக்குள் வந்தாள். உடலெங்கும் எரிசெம்மையும் மலர்ச்செம்மையும் கூடிய அருமணிகள் பதித்த நகைகளை அணிந்திருந்தாள். இளந்தழல் வண்ணம்கொண்ட செம்பட்டாடை மெல்ல நெளிய நெய்பற்றிநின்று எரியும் தழல் ஒன்று அறைக்குள் புகுந்ததுபோல் தெரிந்தாள்.

பெருகுந்தோறும் பொருளிழப்பவை நகைகள் என அவள் எண்ணியிருந்தாள். அவை ஒவ்வொன்றும் பொருளாழம் கொண்டிருப்பதை அவள் உடலில் கண்டாள். நகைகளுக்குப் பொருள் அளிப்பவை உடல்கள், காவியத்தில் அணிகளுக்கு உணர்வுகள் பொருள் அளிப்பதைப்போல என எங்கோ கற்ற இலக்கண வரி நினைவில் எழ அவளுக்குள் மெல்லிய புன்னகை கூடியது. அது முகத்திலும் எழுந்தது. அதைக் கண்டு ஒருகணம் குழம்பி ஒளிமங்கி மீண்ட தேவயானியின் கண்களைக் கண்டதும் அவள் மேலும் உள்ளுவகை கொண்டவளாக ஆனாள்.

தேவயானியின் அருகே சென்று இடைவரை உடல் வளைத்து தலைவணங்கி   “நான் தங்கள் அடியவள் சர்மிஷ்டை, உங்கள் ஏவல்பணிக்கு சித்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கிய தேவயானி தன் கால்களைக் காட்டி  “என் ஆடை மடிப்புகளை சீர் செய்” என்றாள். “ஆணை” என்று முழந்தாளிட்டு அருமணிகள் பொன்னூல்களால் கோத்துப்பின்னிச் சேர்க்கப்பட்ட அவள் ஆடையின் மடிப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக பற்றி அமைத்து சீராக்கி மும்முறை நீவிவிட்டு எழுந்து தலைவணங்கினாள்.  “நன்று!” என்றபின் மீண்டும் தேவயானியின் விழிகள் சர்மிஷ்டையின் விழிகளை சந்தித்தன. சர்மிஷ்டை பணிவுடன் நோக்கி நிற்க மெல்லிய பதற்றத்துடன் தேவயானியின் விழிகள் விலகிக்கொண்டன. சர்மிஷ்டையின் முகம் எதையும் காட்டவில்லை. ஆனால் அவளுக்குள் ஒரு புன்னகை ஒளிகொண்டது.

tiger“தேவயானியை விருஷபர்வன் அவையறிவித்தபோது அசுரர்கள் எதிர்க்கவில்லை” என்றான் முண்டன். “ஏனென்றால் அவர்கள் அனைவருமே சர்மிஷ்டையைவிட தேவயானியை ஒரு படி மேல் என்று எண்ணியிருந்தனர். முறைமை மீறப்படுவதை அவர்களில் மூத்தோர் சிலர் சற்றே எதிர்த்தனர். பூசகர் சிலர் கசந்தனர். அவர்களுக்கு உரிய சொல்லளிக்கப்பட்டதும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.” பீமன் “ஆம், அருந்திறல் கொண்டவர்களை வழிபட்டு ஏற்றுக்கொள்வது குடிகளின் உளப்போக்கு. அங்கே நெறியும் பற்றும் நிலைகொள்வதில்லை” என்றான்.

“தேவயானியின் அருந்திறலை அம்மக்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அதை அறியுமளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை” என்றான் முண்டன். “விழி மட்டுமே கொண்டவர்கள் அனைவரும் அறியும்படி ஒன்று உண்டு. இளவரசே, அத்தனை அரசாடல்களிலும் மறுக்கமுடியாத விசையாகத் திகழ்வது அது, உடலழகு. தேவயானியின் முன் சர்மிஷ்டை வெறும் பெண். இருவரும் வந்து அவைநின்ற அக்கணத்திலேயே உள்ளத்தை அறியாமல் விழிகள் அனைத்தையும் முடிவெடுத்துவிட்டன” என்றான்.

“அத்துடன் சர்மிஷ்டை அசுரமூதன்னையரின் ஆடையும் அணியும் பூண்டிருந்தாள். அவளைக் கண்ட ஒவ்வொரு அசுரகுடியினரும் தங்கள் இல்லத்துப்பெண் என்றே உணர்ந்தனர். அவளை அணுக்கமாக நெஞ்சிருத்தினர். அவளுக்காக இரங்கினர். பலர் விழிநீர் கசிந்தனர். ஆனால் அரசர்களை மக்கள் தங்களில் ஒருவர் என எண்ணுவதில்லை, தங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றலும் தகுதியும் கொண்டவர்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆற்றலையும் தகுதியையும் அழகிலிருந்து பிரித்து நோக்க அவர்களால் இயல்வதுமில்லை. இளவரசே, தங்களால் இரங்கி நோக்கப்படுபவர்களை அல்ல தாங்கள் அஞ்சி அகல்பவர்களையே அவர்கள் தலைவர்களென ஏற்கிறார்கள். வெறுக்கப்படுபவர்கள்கூட அரசாளலாம், கனிவுக்குள்ளாகிறவர்கள் கோல் கைக்கொள்ள  இயலாது.”

“சர்மிஷ்டைக்காக குடிப்பெண்கள் விழிநீர் சிந்தினர். அவளைப்பற்றி நாவழிப் பாடல்கள் எழுந்து இல்லங்களின் கொல்லைப்புறங்களில் புழங்கின. அவளை  கைவிட்ட குற்றவுணர்வை வெல்ல அவளை தெய்வமாக்கினர். பலிவிலங்கை தெய்வமாக்கும் வழக்கம் இல்லாத இடம் ஏது? சர்மிஷ்டை அனைத்து நற்குணங்களும் கொண்டவளாக ஆனாள். அணைக்கும் நதி, தாங்கும் நிலம், கவிந்த வானம். பின்னர் பாடல்களில் அசுரகுலம் வாழும்பொருட்டு குருநகரிக்கு அரசியாக தேவயானியை தெரிவுசெய்ததே அவள்தான் என்று கதை எழுந்தது. அழுது மறுத்த தேவயானியிடம் அசுரகுலத்தின்பொருட்டு அத்திருமணத்தை ஏற்கும்படி அவள் மன்றாடும் பதினெட்டு தனிப்பாடல்கள் கொண்ட குறுங்காவியமான காவ்யாசுரம் பெரும்புகழ்பெற்ற நூல்” என்று முண்டன் சொன்னான்.

பீமன் புன்னகைத்து “ஆம், ஒவ்வாதனவற்றை நம் புழக்கத்திலிருந்து அகற்றிவிடவேண்டும், மேலே தூக்கியோ கீழே அழுத்தியோ. என்றும்  இதுவே நிகழ்கிறது” என்றான். முண்டன் உரக்க நகைத்து “அவ்வாறு அகற்றப்பட்டவற்றால் ஆனது புராணம். அன்றாடப் புழக்கத்திலிருந்து எஞ்சுவது வரலாறு. அவை ஒன்றை ஒன்று நிரப்புபவை, ஒன்றை ஒன்று தழுவிச் சுழல்பவை” என்றான். “தேவயானி வரலாற்றுக்குள்ளும் சர்மிஷ்டை புராணங்களுக்குள்ளும் சென்ற முறை இது.”

முந்தைய கட்டுரைவன்முறை வளர்கிறதா?
அடுத்த கட்டுரைகுறளுரை -கடிதங்கள்