வாசகர்களின் நிலை -கடிதங்கள்

dog

அன்புள்ள ஜெ

சிலவாசகர்களின் கடிதங்களை புகைப்படத்துடன்

இணையத்தில் பிரசுரிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட காரணத்துடனா?

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்,

இணையத்தில் அவர்களின் புகைப்படம் இருக்கவேண்டும் என்பது முதல் விதி. புகைப்படத்தை பிரசுரிக்க முதன்மைக் காரணம் அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு. அவர்களின் கருத்துக்களுக்கு அந்த முகம் ஒரு தொடர்ச்சியை அளிக்கிறது. கருத்துக்களுக்குப் பின்னால் ஓர் ஆளுமை இருப்பதை உறுதிசெய்கிறது. முகமில்லாமல் கருத்துக்கள் நிலைகொள்வது கடினம். முகம் பிரசுரமாகவில்லை என்றால் வாசகன் காலப்போக்கில் ஒரு முகத்தை கற்பனைசெய்துகொள்வான். கம்பனுக்கும் வள்ளுவனுக்குமே நாம் முகம் அளிக்கிறோம் இல்லையா?

ஜெ

***

ஜெ,

இணையவெளியில் உங்கள் வாசகர்கள் அவமதிக்கப்படுவது பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் இது அனுபவம். இணையத்தின் என் மின்னஞ்சல் வெளியானதுமே வசைகள் வரத் தொடங்கின. என் நாட்களை அவை கண்டபடி சீரழிப்பதனால் நான் விலகிவிட்டேன். ஆனால் மின்னஞ்சல் இல்லாவிட்டால் உடனே டம்மி என ஆரம்பிப்பார்கள். இங்கே முகம் பிரசுரமாகும் அத்தனைபேரும் இணையத்தில் உலவும் அசட்டுக்குரல்களால் ஏளனம் செய்யப்படுவார்கள் என்பது உறுதி இங்கே எழுதும் பலர் மிக ஆக்கபூர்வமாக எழுதுகிறார்கள். மிக விரிவாக வாசித்து எழுதுகிறார்கள். இன்றைக்கு இணையத்தில் வேறு எங்கும் இலக்கியம் பற்றி இத்தனை விரிவான ஒரு சர்ச்சையை பார்க்கமுடியாது. ஆனால் தொடர்ச்சியாக இவர்களை அடிவருடிகள், அல்லக்கைகள் என்றெல்லாம் எழுதிக் கேவலப்படுத்துகிறார்கள். சொல்பவர்கள் எவர் என்று பார்த்தால் மொக்கை அல்லாமல் ஒரு நாலு வரி வாழ்க்கையில் எழுதியறியாத அற்பங்கள். நாம் இவர்களுக்குச் செவிகொடுத்து ‘இல்லை எனக்கு ஜெமோவை பிடிக்கும். ஆனால் மாற்றுக்கருத்து உண்டு. ஆனால்…” என்றெல்லாம் பேச ஆரம்பிக்கையில்தான் நாம் தோற்க ஆரம்பிக்கிறோம் என நினைக்கிறேன்.

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்,

எழுத்துக்குள் வரும் ஒருவனுக்கு முதல்தேவை தன்னம்பிக்கை, ஆணவம். அற்பத்தனங்களை புழுப்பூச்சிகளைப்போல தட்டிவிட்டுச்செல்ல முடியாவிட்டால் அவர்கள் எதையும் சிந்திக்கப்போவதில்லை

ஜெ

***

ஜெமோ,

‎   காற்றில் மிதப்பது போல் உள்ளது. என்னுடைய இரண்டு கடிதங்கள் தங்களின் இணையதளத்தில் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எனக்கு அறிவுஜீவி பட்டம் கிடைக்க ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது, என் நண்பர்கள் வட்டாரத்தில். எல்லாம் உங்களை படிக்க ஆரம்பித்த பிறகுதான். குறிப்பாக, \’இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்களையும்\’, \’விஷ்ணுபுரத்தையும் \’ படித்த பிறகு தான்.‎‎இப்போது என் கடிதங்களும் தங்களால் பதிவிடப்படுவதால் கேட்கவே வேண்டாம். ‎உங்களுடைய எழுத்தே, என் தமிழாசிரியர்களால் புதைக்கப்பட்ட தமிழில் எழுதும் ஆவலைத் தூண்டியுள்ளது. மேலும், என்னால் தமிழில் எழுதும்போது நான் அவதானித்த விஷயங்களை சிறப்பாக வெளிப்படுத்தமுடிகிறது என்று உணர்கிறேன்.‎

அலைக்கழிக்கப்பட்ட பால்யம் எனக்கிருந்தாலும், அது பொருளாதாரம் சார்ந்த இலட்சிய வேட்கையைத்தான் என்னுள் உருவாக்கியது. ஆனால், உங்களைப் படித்தபின் ஏதோ ஒரு உந்துதல் எழுத வேண்டும் என்று. ஏன் என்று தெரியவில்லை. எனக்குள் பெரிய தேடல் இருப்பதாகவும் தோணவில்லை. இதற்கு முன் சுஜாதா, இபா, கிரா, ஜெகி எனப் படித்திருந்தாலும் எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் உங்கள் எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னவென்று குறிப்பாகச் சொல்வதிற்கான மொழியாளுமையோ, சொல்லாளுமையோ இப்போதைக்கு என்னிடமில்லை. தங்களுடைய சொல்புதிது குழுமத்தில் இணைவதற்காக இன்று விண்ணப்பித்துள்ளேன், சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.

அன்புடன்

முத்துக்குமார்

***

அன்புள்ள முத்துக்குமார்,

எழுதுவதற்கான அடிப்படைகள் இரண்டு. ஒன்று எழுதிக்கொண்டே இருத்தல், இன்னொன்று வாசித்துக்கொண்டே இருத்தல் அதைவிட முக்கியமான ஒன்று உண்டு, ஒரு தடுப்பூசி அது. இணையம் உருவாக்கும் காழ்ப்புகள் சார்ந்த விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமலிருத்தல். அதன் முன்முடிவுகளுக்குள் சிக்கினால் அதன்பின் தேக்கநிலைதான்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைடாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்