நிறம் கடிதங்கள்

colour

அன்புள்ள திரு ஜெயமோகன்,

 நிறம் வாசித்தேன்

பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ஸுநந்தா தத்தா ராய் (என நினைவு) ,நியூயார்க் நகரில் ஒரு கறுப்பின எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருக்கிறார். ஹார்லம் கறுப்பின வட்டாரத்திற்கு செல்லவேண்டும். அமெரிக்கர் சொல்கிறார் “கவலை வேண்டாம். நம்மவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.”

நம்மவருக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது. இவர் பால் நிறம்.

இவ்வளவு தான் நம் சிவப்பும், வெளுப்பும். உழக்கில் கிழக்கு மேற்கு போல. ஏமாற இசைபவர்கள் இருக்கும் வரை ஏய்க்கலாம்.

ராமாயணத்தில் ஒரு காட்சி. இலங்கையிலிருந்து மீண்ட சீதையைப்பார்த்து வானரங்கள் வியப்பு. வால் இல்லாத இந்த பெண்ணுக்காகவா இவ்வளவு ஏக்கம், பிரயாசை?

அன்புடன்,

கிருஷ்ணன்.

***

அன்புள்ள கிருஷ்ணன்

நான் அமெரிக்காவில் இதை பலமுறை கண்டிருக்கிறேன். ஓரிரு சொற்களுக்குள் நாம் கருப்பர்களுடன் உரையாட முடிகிறது. மூன்று வெவ்வேறு அனுபவங்கள். அவற்றை எப்போதாவது எழுதவேண்டும்

ஜெ

***

அன்புள்ள ஜெ.,

தற்சமயம் அமெரிக்காவில்தான் பணிபுரிகிறேன். 100 வெள்ளையர்கள் மத்தியில் வாழ்கிறாயா, 100 கருப்பினத்தவர் மத்தியில் வாழ்கிறாயா என்று கேட்டால், இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். பொது இடங்களில் மிகப்பரந்த
மனப்பான்மையுடன் இருக்கும் வெள்ளையர்கள், அவர்களின் தனிப்பட்டவாழ்விடங்களில் நேரெதிர். சகிப்புத்தன்மை கிட்டத்தட்ட பூஜ்ஜியம்.இந்தியர் வீட்டில் குழந்தை அழுதால்கூடத் தூக்கம் கெடுகிறது என்றுபோலீஸுக்கு ஃபோன் செய்து விடும் ரகம்.

கருப்பர் இனத்தவர் அவர்களின் வறுமையாலும் வாழ்நிலையாலும் திருடர்களாகவும்முரடர்களாகவும் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆப்பிரிக்காவும் அடுத்தநூற்றாண்டில் சரிசமமாக முன்னேறும்போது உலகின் பார்வை மாறும் என்று
நம்புகிறேன்.

நம்மூரில் மகாபாரத சீரியல்களில் கர்ணனும் அர்ஜூனனும் கிருஷ்ணனும்திரௌபதியும் கருப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு ரூல் போட்டால்என்ன. சிவனுடைய மீசைக்கெல்லாம் சண்டைக்கு வரும் இந்துத்துவர்கள் இதையும்கவனித்தால் என்ன.
நன்றி
ரத்தன்

***

அன்புள்ள ரத்தன்

ஆப்ரிக்கர்கள் மீதான வன்முறை என நான் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை இது

அன்று தாக்கப்பட்டவர்களுக்காக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை இன்று ஆராயவேண்டும். முறையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?

இந்திய மனநிலை என்பது கருமைக்கு எதிரானது. எங்கும் எப்போதும். ஏதோ தமிழர்கள் கருப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் மாயை. பெங்களூரில் கறுப்பர்கள் அவமதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைகுறளுரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?