குறளுரை -கடிதங்கள்

maxresdefault

அன்புள்ள ஜெ

திருக்குறள் உரையை பலமுறை கேட்டுவிட்டேன். நீங்கள் உரையாற்றுவதில் தங்குதடையில்லாத பொழிவு இல்லை. ஏனென்றால் அப்போதுதான் யோசிக்கிறீர்கள். புதியவற்றைச் சொல்கிறீர்கள். ஏனென்றால் அவை அப்போதுதான் சொல்வடிவமாகின்றன. ஆகவே அவற்றைக் கேட்பது உங்களுடன் சேர்ந்தே சிந்திக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

குறள் உரை என்னில் ஏற்படுத்திய அதிர்வு என்னவென்றால் அதேபோல அதே தொனியில் நான் சிந்திப்பதுதான். சிலநாட்களுக்கு முன்பு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு பெண் குழ்ந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தாள். அப்போது இந்தக்குறள் ஞாபகம் வந்தது

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

முதலில் வந்த எண்ணம் அன்னைக்கு உணவூட்டுவது ஒரு சமூகக் கடமை அல்ல, கடனை திருப்பி அளிப்பது என்று. அவள்தான் முதல் உணவை ஊட்டுகிறாள். அவள் ரத்தத்தை குடிக்கிறோம். ஆகவே அவளுக்கு கொடுக்கும் உணவு மட்டும்தான் நமக்கு தெய்வம் அளித்த கடமை. மற்றதெல்லாம் சமூகக்கடமை.

அதையும் செய்யமுடியாமல் ஆவது என்பதுதான் மனிதன் செய்வதிலேயே கீழானது. தெய்வங்களும் பொறுக்காதது. அதைச்செய்தாலும் சான்றோர் பழிப்பதைச் செய்யவேண்டாம் என்கிறார் வள்ளுவர்

அன்றைக்கு மெய்சிலிர்த்துவிட்டது அடாடா நாமும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம் என நினைக்க நினைக்க பரவசமாக இருந்தது. அதை உடனே எழுதவேண்டும் என நினைத்து இதை எழுதுகிறேன்

சிவராஜ் சண்முகம்

***

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

திருக்குறளை “அறநெறி நூலாக “மட்டும் காணாமல் “ஞான நூலாக” கண்டடைவது பற்றி தெளிவாக விவாத்தமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். நேற்று தங்களது குறளினிது உரை (இரண்டாம் நாள்) கேட்கும் வாய்ப்பு அமைந்தது. கவிதையை போன்று குறளுக்கும் வாசிப்பவருக்குமான உரையாடலே சரியான புரிதலை ஏற்படுத்தும், கற்பனையின் மூலம் கண்டடையும், விரிவடையும் உண்மைகள் பல எனப்புரிந்தது.

திருக்குறளில், நிறைய இடங்களில் பல்லாயிரம்பேர் அம்ர்ந்துச்சென்ற வழவழப்பு தொடர்கின்றது என்றுரைத்த கணத்தில் இதனைவிட சிறந்த உவமை இருக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால், அதனையொத்த பல உவமைகள் நாயகாரா அருவிப்போல் கொட்டிக் கொண்டேயிருந்தன. காலை, ஏழுமணியளவில் கேட்டதிலிருந்து மாலை வரை இதனை சுற்றியே சிந்தனை சுழல்கின்றது (சில நேரம் சூறாவளியைப்போல், சில நேரம் தென்றலைப்போல்).

தங்களது, “இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்” படைப்பில் வந்த இந்திய சிந்தனை மரபில் குறள் எனும் கட்டுரை எனது சிந்தனையை மேலும் விரித்துக்கொள்ள உதவியது.

குறளினிது உரை மூழுவதும் எனது எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் “ஆழ்வார்” என்னுடன் பயணித்துக்கொண்டிருத்தார் என்றால் மிகையில்லை. அவர் குறள் குறித்து கூறிய பல சொற்கள் கருத்துக்கள் வார்த்தை மாறாமல் தாங்களும் உச்சரித்த பொழுது மனம் நெகிழ்ந்தது. பல படித்துறைகளை கடந்துச்சென்றாலும் நதியின் பெயர் ஒன்று தான் என படித்தது நினைவுக்கு வருகின்றது. உனது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு திருக்குறளை மனதில் வைத்து அதன் பொருள்படி எல்லா தருணத்திலும் நடந்தால் உனது வாழ்வில் உன்னத நிலையையடைவாய் என்று கூறினார். அந்த ஒரு குறளின் மூழமாகவே மிகச்சிறந்த மனிதனாக வளாந்துகொண்டேயிருப்பாய் என்றும் அறிவுறித்தினார்.

இன்று தங்களது உரையில் ” செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்” குறளுடன் தொடர்ப்புடைய விசயங்களை கேட்டவுடன் மனம் கலங்கி கண்ணிர் வடிந்தது. நான் தேர்ந்தேடுத்திருந்த எனது வாழ்நாள் குறளும் இதுவே. அவரின் அறிவுரைப்படியே, இன்று வரை (20 வருடமாக) என்னால் முடிந்தவரை கடைப்பிடித்து வருகின்றேன் (மூன்று முறை தவறியுள்ளேன்).

சில மாதங்களுக்கு முன்பு, எனது தாயார் சாலை ஒரம் நடந்து வரும் பொழுது ஒரு விபத்துக்குள்ளானார். அதற்கு காரணமான நபரை சந்தித்தபொழுது எனது மனதில் தானாக உதித்த குறள்கள் ” செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காப்பின் என் காவாக்கால் என்”, ” இணரெரி தோ ய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. “. அதனால், அவரிடம் சண்டையிடவில்லை, கடுஞ்சொற்களும் பயன்படுத்தவில்லை. இரு நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து செல்லும் பொழுது, நீங்கள் மிக நல்ல மனிதர் என்று கைப்பிடித்துப் பாராட்டினார். மீண்டும் ஒருமுறை விபத்திற்காக வருத்தம் தெரிவித்தார். அந்த கணத்தில், எனது ஆசிரியர் “ஆழ்வார்” சிரித்த முகமாக மனக்கண்ணில் தோன்றினார். இதன் பொருள் இன்றளவும் எனக்கு புரியவில்லை. உணர்ச்சிமிகுதியில் ஏற்ப்பட்ட கற்பனையா அல்லது மீண்டும் ஒரு முறை நினைவூட்டவா என்று தெரியவில்லை. ஆனால், இந்த பாராட்டுக்கு எனது தமிழ் ஆசிரியரே காரணம் என்பதே உண்மை.

“சிந்திக்கும் தமிழரின் வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுக்க திருக்குறளை திரும்ப திரும்ப கண்டடைவது” என்றுரைத்தப்பொழுது சித்தம் கலங்கியது. இனி எனது வாழ்நாள் மூழுவதும் இந்த வார்த்தைகளிலிருக்கும் உண்மைக்கு புறம்பாக நான் பயணிக்க யத்தனிக்க கூடாது என்று நினைத்துள்ளேன். தங்களது உரையின் மூலம் நான் உணர்ந்தவை வாசிப்பில் அல்ல வாழ்வதன் வழியாகவும், வாழ்கையின் வழியாக மட்டுமே திருக்குறளின் படிமங்கள் வெளிப்படும் என்பதே. இதனையொட்டிய விளிம்புநிலைக் கருத்துக்களையே எனது ஆசிரியர் இளவயதில் விதைக்க நினைத்துள்ளார் என்றே தோன்றுகின்றது.

இவண்

கல்யாணராமன்

மதுரை.

***

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
அடுத்த கட்டுரைநிறம் கடிதங்கள்