அன்பின் ஜெ,
வணக்கம்.உங்கள் தளத்தில் பழைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.யாதெனின் யாதெனின்‘ குறளுக்கு தங்கள் விளக்கமும் அதிலுள்ள உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றியது.
என் சொந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணி வருந்திய நிலையில் இப்பதிவு நல்ல திறப்பாக எனக்கு அமைந்தது.நான் பல வேளைகளில் அப்படித்தான் நடக்க எண்ணுகிறேன்.உலகியல் வாழ்க்கைத் தேவைகளில் இப்படி தேவைக்கு மேலானவற்றை உதறிவிடவே எண்ணி செயல்படுகிறேன்.ஆனால் அப்படி நான் விட்டுக் கொடுப்பதும்,வேண்டாம் என்று உதறுவதும் சில வேளைகளில் என்னை எளிதாக ஏமாளி என்று மற்றவர்களை எண்ண வைக்கிறது.உன் எளிய தன்மையால் உன்னை எளிதாக ஏமாற்றி விடுவோம் என்ற நோக்கத்துடன் நிறைய பேர் அணுகும் போதே நான் அதை உணர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது பற்றியெல்லாம் அவர்களுக்கு விளக்கம் கூறவும் நான் முயன்றதில்லை.என்னளவில் சிரித்துக் கொண்டே கடந்து விடுவதே நான் செய்வது.
ஆனால் அப்படியெல்லாம் நம்மை எளிதாக விட்டு விடுகிறார்களா? எனக்கு அறிவுரைகள் கூற ஆரம்பிப்பவரும் உண்டு.”எதற்காக புத்தகமெல்லாம் வாசிக்கிறாய்?அதனால் என்ன பயன்? பணம் மட்டும் தான் இந்த உலகத்தில் பேசும்.பொருளைச் சேர்த்து வைப்பதற்காக ஏதாவது செய்யலாமே.இப்படி இலக்கியம் வாசிப்பு என்றெல்லாம் நேரத்தை செலவழிப்பதை விட்டு.இப்படித் தொடரும் பேச்சுகளை தவிர்க்கவே முடிவதில்லை. அல்லது அவர்களுக்கு எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லையா?எப்படியாயினும் சில வேளைகளில் இத்தகைய பேச்சுகள் என்னை சோர்வுறவே செய்கின்றன.
என் வாசிப்பும் அதன் மூலம் நான் அடையும் உணர்வுகளும்,என் அக உலகும் எத்தனை இனியது என்று எனக்கு மட்டுமே தெரியும்.இதையெல்லாம் இவர்களின் குறுகிய உலகியல் நோக்கான வாழ்வு முறையினால் புரிந்து கொள்ளவே முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது.சில வேளைகளில் கடினமாக பதில் கூறி விடுவேனோ என்று எனக்கே அச்சமாகத்தான் இருக்கிறது.
யாதெனின் என்ற கட்டுரை என் வழியைச் சரியாக அமைத்துக் கொள்ள அடிப்படையாக இருக்கிறது.
நன்றி
மோனிகா மாறன்.
அன்புள்ள மோனிகா
தமிழ் ஹிந்துவில் பெண்கள் பகுதியில் உங்கள் கட்டுரை கண்டேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய தளத்தில் William Stanley Merwin எழுதிய ஒரு கதையை குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் கேள்விகள் ஐயங்களுக்கெல்லாம் அதில் பதில் உள்ளது
பொதுவாக இரு சாராரிடம் விவாதிக்கவோ புரியவைக்கவோ முடியாது. முழுமையாக மூடப்பட்ட சுவர்கள் அவர்களின் உள்ளங்கள். ஒன்று, ஓர் அனுபவதளத்தின் துளியைக்க்கூட முற்றிலும் உணராத ஒருவரிடம் அந்த அனுபவதளம் சார்ந்து பேசமுடியாது. இசையே கேட்டிராத ஒருவரிடம் இசை கேட்பதன் இன்பம் பற்றி பேசமுடியாது. நம் மக்களில் பெரும்பாலானவர்கள் லௌகீகமான உலகை மட்டுமே அறிந்து அதில் திளைப்பவர்கள். அவர்களிடம் அதற்கப்பால் உள்ள எதையும் பேசிப்புரியவைக்க முடியாது. இலக்கியத்தை விடுங்கள், பயணங்களைக்கூட சொல்லமுடியாது. இது நம் நண்பர்கள் அனைவரும் அடையும் அனுபவம்
இரண்டு, கருத்தியலாலோ மதத்தாலோ ஆழ்ந்த நம்பிக்கையை , நிலைப்பாட்டை கொண்டுவிட்ட ஒருவரிடம் விவாதிக்க முடியாது. அவருக்குள் தன் நம்பிக்கை, நிலைப்பாடு குறித்து ஒரு சிறு அவநம்பிக்கை ஓடிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் மானுட உள்ளம் எதையும் முழுக்க நம்பாது. ஆகவே அவரைப்போன்றவர்கள் தன் தரப்பை சாத்தியமான அனைத்து இடங்களிலும் சொல்லி, பரப்புரை செய்து அதை தாங்களே நம்ப முயன்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மாறாகச் சொல்லப்படும் எதையும் அவர்கள் அந்நம்பிக்கைக்கு எதிரான தாக்குதலாகவே கொள்வார்கள். மூர்க்கமாக அதை எதிர்ப்பார்கள்.
நாம் நம்புவதை நாம் வாழ்வதன் விடுதலைதான் உண்மையான இன்பம். தனித்திருக்க திராணிகொண்டவர்களுக்கு மட்டுமே உரிய கொண்டாட்டம் அது
ஜெ