‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69

69. எண்ணுவதன் எல்லை

யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து “அனைவரும் செல்லவில்லை… இங்கே ஏதோ நடந்திருக்கிறது. ஓடியிருக்கிறார்கள், கைகலப்புகூட நடந்திருக்கலாம்…” என்றான். பின்னர் ஒரு புரவியை பார்த்துவிட்டான். அருகே சென்றதும் இன்னொரு புரவியும் தெரிந்தது. அவன் அவற்றின் சேணங்களைப் பார்த்துவிட்டு “இரு புரவிகளுமே பெண்களுக்குரியவை… அப்படியென்றால் அவர்கள் இங்கே எங்கோ இருக்கிறார்கள்” என்றான்.

யயாதி உரக்க “யாரங்கே?” என்றான். “யார் இருக்கிறீர்கள் இங்கே?” மெல்லிய எதிர்க்குரல் ஒன்று எழுந்தது. அல்லது அது உளமயக்கா என்றும் தோன்றியது. பார்க்கவன் குனிந்து நோக்கி ஓர் ஆடைப்பகுதியை எடுத்து “பெண்களின் ஆடை… கிழிந்து விழுந்திருக்கிறது. எவரோ அவர்களை கடத்திச்செல்ல முயன்றிருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் எங்கேனும் ஒளிந்திருக்கலாம்” என்றான். யயாதி மேலும் உரக்க “நாங்கள் ஷத்ரியர்… காவல்நெறி கொண்டவர்கள்… எவரேனும் இருந்தால் வெளிப்படுங்கள்” என்றான். மெல்லிய பெண்குரல் கேட்டது.

பார்க்கவன் உடனே அதை உய்த்தறிந்துவிட்டான். “இங்கே எங்கோ கிணறு இருக்கிறது… ஆழமான கிணறு. அதற்குள் இருக்கிறார்கள்” என்றான். மீண்டும் அக்குரல் கேட்டது. “மிக அருகே…” என்றபின் அவன் கைசுட்டி “அங்கே மலர்ச்சருகுப் பரப்பு கலைந்திருக்கிறது” என்றான். மெல்ல காலெடுத்துவைத்து அருகே சென்றபின் “ஆம், அங்கே ஒரு கிணறு இருக்கிறது. அதற்குள்தான்” என்றான். சுற்றிலும் நோக்கியபின் ஓடிச்சென்று கொடிகளை வெட்டி எடுத்துவந்தான். அவற்றை சேர்த்துக்கட்டி முறுக்கி வடமாக்கி அதை அங்கிருந்த மரத்தின் அடியில் கட்டினான்.

வடத்தைப் பற்றியபடி பதியும் கால்வைத்து சரிவிலிறங்கி அக்கிணற்றின் விளிம்பை அடைந்து உள்ளே எட்டிப்பார்த்தான். “இருவர்” என்று யயாதியிடம் சொன்னான். “உள்ளே விழுந்திருக்கிறார்கள், அரசே.” அவன் வாய்தவறிவிட்டதை உணர்ந்து யயாதி சினம்கொண்டு நோக்க அவன் குரல் தாழ்த்தி “இரு பெண்கள்” என்றான். “மேலே கொண்டுவா…” என்றான் யயாதி. “மகளிரே, நாங்கள் அயலூர் ஷத்ரியர். உங்களுக்கு உதவ சித்தமாக உள்ளோம்” என்றான் பார்க்கவன்.

அவன் கைநீட்ட அதைப்பற்றியபடி மெல்ல சாயை மேலெழுந்து வந்தாள். அவள் ஆடை நெகிழ்ந்திருக்க  உடலெங்கும் சேறும் மலர்ச்சருகும் ஒட்டியிருந்தது. கரையில் கால்வைத்து ஏறி தன் ஆடையைச் சீரமைத்து சருகுகளைத் தட்டியபடி “நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள். “நாங்கள் ஷத்ரியகுலத்தார். அயல்நாட்டார். இவ்வழி சென்றோம்” என்றான் யயாதி. “நன்று, உள்ளிருப்பவர் என் அரசி. நாங்கள் உள்ளே விழும்படியாயிற்று” என்றாள் சாயை. “அவரை மேலெடுங்கள்.”

யயாதி வடத்தைப்பற்றியபடி இறங்கிச்சென்று கைநீட்ட தேவயானி அதைப்பற்றிக்கொண்டு மேலெழுந்து வந்தாள். உள்ளேயே அவள் ஆடையை சீரமைத்து சருகுகளையும் தட்டிவிட்டிருந்தாள். மண்பிளந்து தெய்வம் தோன்றுவதுபோல என்று யயாதி எண்ணிக்கொண்டான். அவள் கரைக்கு வந்து உடலை தட்டிக்கொள்ள சாயை அருகே நின்றிருந்த மரக்கிளை ஒன்றைப் பறித்து அதன் இலைக்குச்சத்தால் அவள் உடலில் இருந்த சருகுப்பொடியை அகற்றி தூய்மை செய்தாள். “போதும்” என தேவயானி கையசைத்து அவளை தவிர்த்தாள்.

“நாங்கள் இங்கே மலர்விளையாடிக் கொண்டிருந்தோம்… கால்தவறி இந்தக் குழிக்குள் விழும்படி ஆகியது” என்றாள் தேவயானி. “எவரோ பூசலிடுவதுபோல கேட்டதே?” என்றான் யயாதி. தேவயானி “அது களிப்பூசல். எங்கள் தோழியர் இருவர் எங்களை முந்தும்பொருட்டு முன்னால் சென்றுவிட்டனர். அவர்களுக்கு நான் இங்கே உள்ளே விழுந்தது தெரியாது… நன்று வந்தீர்கள். இல்லையேல் இங்கே ஆழத்தில் நாங்கள் அடைபட்டுக்கிடக்க நேரிட்டிருக்கும்” என்றாள். யயாதி “நாங்கள் எழுப்பிய குரலால்தான் நீங்கள் அஞ்ச நேர்ந்தது. அதன்பொருட்டு பொறுத்தருளும்படி கோருகிறோம்” என்றான். “முறைமைச்சொல் வேண்டாமே” என தேவயானி புன்னகைத்தாள்.

அவளைக் கண்ட கணம் முதல் பிற சொல்லில்லாது சித்தம் அவளில் படிந்துகிடப்பதை அப்போதுதான் யயாதி உணர்ந்தான். அவள் புன்னகையைக் கண்டு ஆழம் நலுங்கியபோதே மேலுள்ளம் அவ்வாறு கிடப்பது தெரியவந்தது. இழிமகன்போல விழிநாட்டி நின்றுவிட்டேனா என உள்வியந்து விழிதிருப்பிக்கொண்டான். முணுமுணுப்பாக “நன்று, நீங்கள் கிளம்பிச்செல்லலாம். புரவிகள் சித்தமாகவே உள்ளன. உங்களுக்கு நாங்கள் துணைவர வேண்டுமென்றால் செய்கிறோம். பிறிது ஏதேனும் நாங்கள் ஆற்றவேண்டுமென்றால் அறிவிக்கக் கோருகிறோம்” என்றான்.

சாயை “ஏதுமில்லை, நாங்கள் கிளம்புகிறோம். உங்கள் உதவியை நினைவுகூர்வோம்” என்றாள். பார்க்கவனும் யயாதியும் தலைவணங்கினர். யயாதி “நாங்கள் விடைகொள்கிறோம், தேவி” என்றான். அவர்கள் தங்கள் புரவி நோக்கி திரும்ப தேவயானி மெல்லிய குரலில் “நில்லுங்கள்” என்றாள். யயாதி “சொல்லுங்கள், தேவி” என்றான். “இப்போதுதான் இந்த நாளையும் தருணத்தையும் கணித்துப்பார்த்தேன். என் மீன் மகம் எழும் நாள் இது.” யயாதி புரியாமல் தலையசைத்தான். “நீங்கள் என் கையைப் பற்றிய தருணத்தில் கோள்கள் உச்சத்திலிருந்தன” என்றாள் தேவயானி. யயாதி அப்போதும் புரியாமல் நோக்க பார்க்கவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

“நீங்கள் என்னை மணம்செய்துகொண்டதாகவே அச்செயலுக்குப் பொருள்” என்று தேவயானி சொன்னாள். “உரிய நற்தருணத்தில் கை பற்றியவன் கணவனாகவே இருக்கமுடியும் என்கின்றன நூல்கள்… இது ஊழ். அன்றேல் இவ்வண்ணம் நிகழாது.” சாயையும் திகைத்துப்போய் அவள் முழங்கையை மெல்லப்பற்றி ஏதோ சொல்ல முயல உடலசைவாலேயே அவளை விலக்கி தேவயானி “நீங்கள் எவரென்று நான் அறியேன். எக்குடி எக்குலம் என்றெல்லாம்கூட ஆராயத் தலைப்படேன். ஆனால் நீங்கள் என் கணவர், பிறிதொருவரை இனி நான் ஏற்கமாட்டேன்” என்றாள்.

பார்க்கவன் யயாதியின் தோளை மெல்லப் பற்றி ஏதோ சொல்ல முயல அவன் கைமேல் கைவைத்து சொல்விலக்கிவிட்டு “தேவி, நற்தருணத்தில் நிகழ்ந்துள்ளது என்பதனால் நானும் அதற்கு கட்டுப்படவேண்டியவனே” என்றான். “நீங்கள் மண்பிளந்து தெய்வம் எழுவதுபோல் என் முன் தோன்றியதும் என் குடியின் நல்லூழே. உங்கள் பேரழகுக்கு நான் தகுதிகொண்டவனா என்பதே என்னை தயங்கச் செய்தது. தாங்கள் முடிவெடுத்துவிட்டமையால் அதற்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆனேன். நீங்கள் எவரென்று நானும் உசாவவில்லை. இது தெய்வங்கள் அமைத்த கடிமணம் என்றே ஆகுக!” என்றான்.

தன் கச்சையிலிருந்து கணையாழியை எடுத்து அவளிடம் நீட்டி “இது என் சான்றாழியாக உங்களிடமிருக்கட்டும். உரிய தருணத்தில் குடிமுறைமையுடன் வந்து உங்களை அணிமணம்கொள்கிறேன். இத்தருணத்தை நிகழ்த்திய தெய்வங்களே அதையும் அமைக்கட்டும்”  என்று யயாதி சொன்னான். அவள் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள். “நன்று, தேவி. மீண்டும் உடனே சந்திப்போம்” என்றான் யயாதி. “நான் காத்திருப்பேன்” என்றாள் தேவயானி. அவர்கள் முறைப்படி தலைவணங்கி விடைகொண்டனர்.

புரவிகளை நோக்கி செல்கையில் பார்க்கவன் “அரசே, என்ன இது? அவர் எவரென்றுகூடத் தெரியாமல்…?” என்றான். “அவள் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை” என்றான் யயாதி. “அவளை அவள் சேடி வாய்தவறி அரசி என அழைத்ததுமே நான் விழித்துக்கொண்டேன். அவள் அணிந்திருந்த ஆடையும் அணிகளும் எல்லாம் எளியவை. ஆனால் இடையிலணிந்திருந்த சிற்றாடை மட்டும் இளவரசியருக்குரியது. அதில் விருஷபர்வனின் குடியடையாளம் பின்னப்பட்டிருந்தது. அரசகுடியினர் மட்டுமே அணியும் தனியாடை அது” என்றான்.

பார்க்கவன் திரும்பி நோக்கியபின் “ஆம், அவர் எளிய பெண் அல்ல என நானும் உணர்ந்தேன். பேரரசியருக்குரிய அழகும் நிமிர்வும் கொண்டவர்கள்” என்றான். “குருநாட்டின் பேரரசியாக அமரவிருப்பவள் அவள். பாரதவர்ஷத்தின் முதன்மை சக்ரவர்த்தினி… இது தெய்வங்கள் அமைத்த தருணம். இதை இனி நூறாயிரம் தலைமுறைக்காலம் சூதர்கள் பாடுவர்” என்று யயாதி சொன்னான். “ஆனால் அவர்களை உங்களுக்கு மணம்பேசி முடித்திருக்கிறார்கள். உங்கள் ஒப்புதலோலை சென்றுவிட்டது. அதன்பின்னர் இப்படி அறியாத ஒருவரான உங்களை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?”

யயாதி புன்னகைத்து “ஆம், அதுவே அரசியருக்குரிய அரும்பண்பு. அவர்களுக்கு நெறிதான் முதன்மையானது. குடியோ குலமோ முடியோ அரியணையோ அல்ல. அத்தருணத்தின் தெய்வவிளையாட்டை உணர்ந்து பிற அனைத்தையும் உதறி எழும் அவளுடைய உளஆற்றல்தான் அவளை சக்ரவர்த்தினியாக்குகிறது. பெருநிலைகள் அவற்றை தேடிச்செல்பவர்களுக்கு அமைவதில்லை. அவற்றுக்குத் தகுதியானவர்களாகி அவற்றை பொருட்படுத்தாமல் கடந்துசெல்பவர்களைத் தேடி அவை தொடர்ந்து செல்லும்” என்றான்.

tigerகணையாழியை கையில் வைத்து நோக்கிக்கொண்டிருந்த தேவயானியிடம் “அரசி, என்ன  செய்துவிட்டீர்கள்? அவர்…” என்று சாயை சொல்லெடுக்க “அவர் யயாதி, குருநகரியின் அரசர்” என்றாள். “எப்படி தெரியும்?” என சாயை வியந்து நின்றுவிட்டாள். “அவர் பெயரைக் கேட்டதுமே அவரைப் பற்றிய காவியமான சந்திரபுத்ரவிலாசத்தை கற்றேன். அதில் அவரது உடலடையாளங்கள் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளன. அரசர்கள் எளிதில் மறைந்துகொள்ளமுடியாது” என்றாள் தேவயானி. சாயை சொல்லில்லாமல் கைகளை கோத்தபடி நின்று பின் மீண்டு ஓடிவந்து அவள் தோளைப்பற்றியபடி “ஆனால் அவருக்கும் இளவரசிக்கும் மணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது…” என்றாள்.

“இன்னும் சொல்லுறுதி நிகழவில்லை” என்றாள் தேவயானி. “நீ உடனே கிளம்பு. தந்தையிடம் சென்று நடந்ததை சொல். தந்தையிடம் என் கோரிக்கைகள் இரண்டு உள்ளன, அவற்றைச் சொல்லி இன்றே விருஷபர்வனிடம் ஒப்புதல்பெற்று மீளும்படி உரை” என்றாள். சாயை “நீங்கள்?” என்றாள். “நான் இங்குதான் இருப்பேன்… என் கோரிக்கைகள் முற்றிலும் நிறைவேற எந்தைக்கு நான் ஏழு நாட்கள் அளிக்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறுமென்றால் இங்கிருந்து வெளிவருவேன். இல்லையென்றால் ஏழாவது நாள் இங்கேயே சிதைமூட்டி எரியேறுவேன்…”

“அரசி, என்ன இது…? நீங்கள்…” என சொல்லெடுத்த சாயை தேவயானியிடம் எதையும் சொல்லமுடியாதென்று உணர்ந்தவளாக முகம் தவிக்க நின்றாள். அவளை நேர்விழிகளால் நோக்கி “என் கோரிக்கைகள் இவை. நான் குருநகரியின் அரசன் யயாதியின் பட்டத்தரசியாக அமர்ந்து பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாகவேண்டும். விருஷபர்வனின் மகளாகிய சர்மிஷ்டை என் பணிப்பெண்ணாக என்னுடன் குருநகரிக்கே வரவேண்டும்” என்றாள்.

சாயை என்ன சொல்வதென்றறியாமல் பலமுறை வாயசைத்தாள். கைகளில் சொற்கள் தோன்றி அழிந்தன. பின்னர் “இரண்டாவது கோரிக்கை எதற்காக, அரசி? அது…” என்று தொடங்கினாள். “விருஷபர்வன் பாரதவர்ஷத்தில் குருநகரிக்கு நிகரான பேரரசன். சர்மிஷ்டையை அவர் வேறு அரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தால் அவன் குருநகரியைவிட ஆற்றலுள்ள அரசன் என எழுந்து வருவான். அவள் எனக்கு நிகரென முடிசூடி அமர்வாள்…” என்றாள் தேவயானி. “பாரதவர்ஷத்தில் நான் ஆள்வதன்றி பிறிதொரு பேரரசே அமையக்கூடாது.”

சாயை மெல்ல உடல்தளர்ந்து நீள்மூச்சுவிட்டாள். “அவள் வயிற்றில் பேரரசர்கள் பிறப்பார்கள் என்பது என் சொல். அவளுக்கு மைந்தர்களே பிறக்கலாகாது என இன்று எண்ணுகிறேன். ஆண்களின் கண்களே படாமல்  அவளை என் கண்முன் வைத்திருக்கிறேன்” என்றாள் தேவயானி. சாயை மெல்ல சொல்பெற்று “அரசி, நான் இத்தருணத்தில் பிறிதொன்றை சொல்லியாகவேண்டும். இப்புவியின் விந்தையான நெறிகளில் ஒன்று உண்டு. ஆற்றல்மிக்கவர்களுக்கே பெருந்தோல்விகள் அமைகின்றன, பேராற்றல்கொண்டவர்களே முழுத்தோல்வியை சென்றடைகிறார்கள். எளியோர் எவரும் முற்றிலும் தோற்பதில்லை” என்றாள்.

சினத்துடன் தேவயானி திரும்பி நோக்கினாள். “ஆற்றலுள்ளவர்கள் தங்களுக்கு நிகரான ஆற்றல்கொண்டவர்களை எதிரிகளென தேடுகிறார்கள். பேராற்றல்கொண்டவர்களோ ஊழை அறைகூவுகிறார்கள்.” தேவயானி “நான் ஊழை துணைக்கழைக்கிறேன். நான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாவேன் என்பது என் பிறப்பின்போதே சொல்லப்பட்டுவிட்டது” என்றாள். சாயை “நன்று, அவ்வண்ணமெனில் அதுவே நிகழட்டும். நான் எளியவள், ஊழுடன் பொருத முற்படமாட்டேன்” என்றாள். “ஆம், உனக்கு ஆணையிடப்பட்டதை செய். கிளம்பு” என்றாள் தேவயானி.

“இங்கு நீங்கள் தனித்திருப்பீர்களா?” என்று சாயை கேட்டாள். “இது என் சோலை. இங்குள்ள குகை ஒன்றில் இருப்பேன். இங்கிருந்து அகலமாட்டேன் என்று தந்தையிடம் சொல்.” சாயை சற்று தயங்கி “தங்கள் தந்தையின் சொல்லுக்கு விருஷபர்வன் ஏன் கட்டுப்படவேண்டும்? அதிலும் அவர் மகளை பணிப்பெண்ணாக்குவதென்றால்?” என்றாள். “அவர் ஒப்பவில்லை என்றால் தந்தை கிளம்பிச்சென்று பாரதவர்ஷத்தின் ஏதேனுமொரு அரசகுலத்தை அடையட்டும். அவர்களை இறப்பற்றவர்களாக ஆக்கட்டும். அசுரகுலத்தை முழுமையாகவே கொன்றழிக்க மானுடர் எழட்டும்” என்ற தேவயானி “அதை சொல்லவேண்டியதில்லை, விருஷபர்வனே அறிவார். இன்று அசுரரும் தேவரும் நிகர்நிலையில் உள்ளனர். ஒரு துரும்பின் எடைபோதும் துலா இப்பக்கம் சாய்ந்துவிடும். அசுரகுலமே எஞ்சாது” என்றாள்.

சாயை பெருமூச்சுவிட்டு “ஆணையை மேற்கொண்டு கிளம்புகிறேன், அரசி” என்றபின் தன் புரவியை அணுகி அதன்மேல் கால்சுழற்றி ஏறிக்கொண்டு திரும்பி நோக்காமல் கிளைகளை ஊடுருவிச் சென்றாள். தான் செல்வதை தானே நோக்கிக்கொண்டு நின்றிருப்பதாக ஓர் உளமயக்கு ஏற்பட அவள் திரும்பிப் பார்த்தாள். திரும்பி நடந்துசெல்லும் தேவயானியின் நீள்கூந்தலின் அலைகளையே கண்டாள்.

tiger சாயை குடில்தொகையை சென்றடைந்தபோது அங்கே சுக்ரர் அவளுக்காகக் காத்து நின்றிருந்தார். கிருதர் முன்னால் வந்து “நெடுநேரமாயிற்றே என ஆசிரியர் தேடினார். நாங்களே அங்கே வருவதாக இருந்தோம்” என்றபின் “இளவரசி எங்கே?” என்றார். “நான் ஆசிரியரிடமும் தங்களிடமும் மட்டும் தனியாக பேசவேண்டும்” என்றாள் சாயை. சுக்ரர் அவள் விழிகளைக் கண்டதும் உளம் கூர்மைகொள்ள “வா” என திரும்பிநடந்தார். கிருதர் உள்ளே வந்து கதவை மூடியதும் சுக்ரர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

முன்னால் நின்ற சாயை தணிந்த குரலில் நிகழ்ந்தவற்றை சொன்னாள். சுக்ரர் “அவன் யயாதி என உறுதியாகத் தெரியுமா?” என்றார். கிருதர் “அதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை, ஆசிரியரே. இளையவள் எப்போதுமே ஒரு படி முன்செல்லும் மதி கொண்டவர்” என்றார். சுக்ரர் பெருமூச்சுவிட்டபடி தன் சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சினம்கொள்வார் என்றும் உடனே தேவயானியைக் காணக் கிளம்புவார் என்றும் சாயை எண்ணியிருந்தாள். அவருடைய ஆழ்ந்த அமைதி அவளை ஏமாற்றம்கொள்ளச் செய்தது.

“வேறு வழியில்லை, இவை இவ்வண்ணமே நிகழும். அவள் எண்ணியவை ஈடேறும், எண்ணியிராதவையும் நிகழும்” என்றார் சுக்ரர். திரும்பி கிருதரிடம் “இவளையும் உடனழைத்துக்கொண்டு விருஷபர்வனிடம் செல்க! நான் ஓர் ஓலை அளிக்கிறேன்” என்றார். “நாம் அசுரரை இதன்பொருட்டு கைவிடுவோம் என்றால் நம் மீது பழிசேரும்” என்றார் கிருதர். “ஆம், ஆனால் என் குடியில் எழுந்தவள் மகாகுரோதையான இந்திராணி. பெருஞ்சினவடிவான ஜெயந்தி. அவள் சொல் அனலுக்கு நிகர். நான் அதை மீறமுடியாது” என்றார் சுக்ரர். “அங்கே மலர்க்காட்டில் அமர்ந்து ஆணையிடுவது என் மகள் அல்ல, அவள் அன்னை” என தனக்குள் என சொல்லிக்கொண்டார்.

“தங்கள் ஆணை அதுவென்றால் நான் இயற்றுகிறேன். ஆனால் அதனால் நன்றென ஏதும் நிகழாதென்று உறுதியாக சொல்வேன்” என்றார் கிருதர். சுக்ரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். செல்வோம் என கைகாட்டிவிட்டு கிருதர் வெளியே நடந்தார். சாயை அவருடன் சென்று முற்றத்தில் நின்றாள். கிருதர் “இப்போது எவரிடமும் இதை நாம் சொல்லவேண்டியதில்லை. அரசனின் ஆணை வந்தபின் அவர்களே அறிந்துகொள்ளட்டும்” என்றார். “அரசர் ஒப்புவார் என நினைக்கிறீர்களா?” என்றாள் சாயை. “ஆம், அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் நாம் இதை செய்யலாகாது. இத்தருணத்தில் தந்தையெனும் நிலையிலிருந்து எழுந்து அரசகுருவெனும் இடத்தை அடைந்தாகவேண்டும் நம் ஆசிரியர்” என்றார்.

பின்னர் அவரே “ஆனால் அவர் ஒருபோதும் எளிய மானுடஉணர்வுகளை கடந்துசென்றதில்லை. இவையனைத்துமே அவர் தன் ஆசிரியர்மீது கொண்ட மிகச் சிறிய காழ்ப்பின் விளைவுகள்… நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “அவர் அரசியிடம் வந்து பேசுவார் என நான் எண்ணினேன்” என்றாள் சாயை. “அவர் என்றுமே பிறிதொருவகையில் நடந்துகொண்டதில்லை” என்றார் கிருதர்.

 tigerசிறிய விரைவுத்தேரில் அரண்மனையை நோக்கி செல்லும்போது சாயை நகரெங்குமிருந்த கொண்டாட்டத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களிவெறிகொண்டு கட்டுகளை மீறுவதற்காக அத்தனை நகரங்களும் காத்திருக்கின்றன. ஆடைகளைக் களையும்போது சிரிப்பில் மலராத மானுட முகம் இல்லை. பெண்கள் சிலர் சிரித்தபடி சாலைக்குக் குறுக்காக ஓட அவர்களைத் துரத்திவந்த இளையோர் அப்பால் தயங்கி நின்று தேர் செல்ல வழிவிட்டனர். குடிகாரர்கள் சாலையோரமாகவே அமர்ந்திருந்தனர். கூச்சலிட்டு எம்பி எம்பிக் குதித்தபடி புரவியில் அமர்ந்த வீரன் ஒருவன் கடந்துசென்றான்.

அத்தனை மாளிகைகளும் தோரணங்களாலும் கொடிகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன. சாலையில் ஒன்றின் நிழல் இன்னொன்றின்மேல் விழும்படியாக அணித்தோரணவாயில்கள் நின்றிருந்தன. ஏழு யானைகள் மணிகளும் சங்கிலிகளும் ஒலிக்க  அலைநாவாய்கள் என உடலை ஊசலாட்டியபடி எதிரே வந்தன. அவற்றின் மேலிருந்த பாகர் கள்ளருந்தியிருந்தனர். கைகளை வீசி உரக்க கூவிக்கொண்டே வந்து சுக்ரரின் கொடிபறந்த தேரைக் கண்டதும் அமைதியானார்கள். ஆனால் சூழ நின்றிருந்த குடிகாரர்கள் அதை உணராமல் கூச்சலிட்டு தங்கள் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் எடுத்து அவர்கள்மேல் வீசி துள்ளிக்குதித்தனர்.

அரண்மனைக்கோட்டைக்குள் அவர்கள் நுழைந்ததுமே அறிவிப்பு முரசு ஒலித்தது. அரண்மனைப் பெருமுற்றத்தில் அவர்களை சம்விரதரின் துணையமைச்சரான பிரகாசர் வரவேற்றார். “நான் உடனே அரசரை பார்க்கவேண்டும்” என்றார் கிருதர். “அரசர் இப்போது தேவியருடன் இருக்கிறார். கலிங்கத்திலிருந்தும் திருவிடத்திலிருந்தும் அணிவணிகர்கள் வந்துள்ளனர். மணச்சடங்குக்காக அணிகள் தேர்கையில் அரசரும் உடனிருந்தாகவேண்டும் என்று அரசியர் விழைந்தனர். அதன்பின் மூதன்னையரை வழிபடும் அகத்தளப் பூசெய்கை உள்ளது. அரசமுறைத் தூதர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இருந்தது. அதை நாளை காலைக்கு ஒத்திவைத்துவிட்டு அகத்தளத்திற்குச் சென்றிருக்கிறார்.”

“நான் ஆசிரியரிடமிருந்து செய்தியுடன் வந்துள்ளேன்” என்றார் கிருதர். பிரகாசர் திரும்பி அரைக்கணம் சாயையை நோக்கிவிட்டு “நன்று! நான் ஆவன செய்கிறேன், தாங்கள் இன்னீர் அருந்தி சற்று இளைப்பாறுகையில்…” என்றார். “தேவையில்லை, நாங்கள் கூடத்தில் காத்திருக்கிறோம்” என்றார் கிருதர். “நன்று” என தலைவணங்கி பிரகாசர் திரும்ப “சம்விரதர் வந்துவிட்டாரா?” என்றார் கிருதர். “ஆம், வந்து சற்றுநேரமே ஆகிறது. இன்று மாலை அவை கூடுகிறது.” கிருதர் தலையசைத்தார். பிரகாசர் பதற்றம்கொள்வது நன்றாகவே தெரிந்தது. ஓசையின்றி தலைவணங்கி அவர் உள்ளே சென்றார்.

கிருதர் அமராமல் அரசக்கூடத்தில் கைகட்டி நின்றுகொண்டே இருந்தார்.  சுவரில் சாய்ந்து நின்று சாளரம் வழியாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள் சாயை. மலர்க்கிளைகள் மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. மானுடரின் துயரும் அல்லலும் சற்றும் தனக்கு பொருட்டல்ல என இயற்கை காட்டிக்கொண்டே இருப்பதில் உள்ள இரக்கமின்மையை அவள் எண்ணிக்கொண்டாள். முன்பு அவள் அன்னை இறந்த அன்று அப்படித்தான் அவை காற்றில் களியாடுவதை வெறித்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

பிரகாசர் வந்து அரசர் அவர்களை அகத்தளத்தின் அறையிலேயே சந்திக்கவிருப்பதாக சொன்னார். அவருடன் நடக்கையில் அவர் அனைத்தையும் உணர்ந்துகொண்டுவிட்டதாக தோன்றியது. செய்தியை அல்ல, செய்தியால் விளையப்போவதை அவருடைய ஆழம் உணர்ந்துகொண்டுவிட்டிருக்கக் கூடும். அவர்களின் பாவைகள் மெழுகிட்ட தூண்களின் வளைவில் மரத்தரையில் தோன்றி உருகி நெளிந்து நீண்டு மறைந்து மீண்டும் ஓர் இடத்தில் எழுந்தன. கட்டிப்போடப்பட்ட பறவைகள்போல காற்றில் திரைச்சீலைகள் படபடத்தன.

அகத்தறைக் கதவைத் திறந்து உள்ளே செல்லும்படி கைகாட்டிவிட்டு பிரகாசர் தலைவணங்கினார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கதவு மெல்ல மூடிக்கொண்டது. விருஷபர்வன் முகத்தில் கவலை தெரிவதை சாயை உணர்ந்தாள். அவன் முறைப்படி முகமன் சொல்லி கிருதரை வரவேற்றான். சாயை அவனை வணங்கி ஓரமாக நின்றாள். கிருதர் அவன் அளித்த பீடத்தில் அமர்ந்து அவன் அமர்வதற்கு காத்திருந்தார். அவன் அமர்ந்து ஆடையை சீரமைத்ததைக் கண்டபின் உரத்த குரலில் “அரசே, மூவுலகிலும் நிகரற்ற தவவல்லமை கொண்டவரும் மும்மூர்த்திகளுக்கு நிகரானவருமான  என் ஆசிரியர் சுக்ரரின் ஆணையுடன் வந்துள்ளேன். அவ்வாணைகள் இதோ, இந்த ஓலையில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஓலையை பெறும்போது விருஷபர்வனின் கைகள் நடுங்குகின்றனவா என சாயை நோக்கினாள். அவை உறுதியாகவே இருந்தன. ஓலையை வாசிக்கையில் அவன் முகம் கல்லென இறுகியிருந்தது. கண்களில் மட்டும் மெல்லிய சுருக்கம் ஒன்று வந்து உடனே மறைந்தது. மீண்டும் ஒருமுறை அதை வாசித்துவிட்டு மூங்கில் குழலில் இட்டு அருகிருந்த பீடத்தில் போட்டான். “நிகழ்ந்ததை இவள் சொல்வாள்” என்றார் கிருதர். சாயை கைகளைக் கூப்பியபடி நிகழ்ந்தவற்றை சொன்னாள். சொல்லும்போதே தான் தேவயானியின் தரப்பை சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பிறிதொன்றைச் சொல்ல தன்னால் இயலாதென்று அறிந்தாள்.

விருஷபர்வன் முகவாயைத் தடவியபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தான். “உமக்கு பிறிதொரு வழி இல்லை, அசுரப்பேரரசே. ஒன்று அசுரகுலம் முற்றழியவேண்டும், இல்லையேல் ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றவேண்டும். ஆசிரியரும் சரி அவர் மகளும் சரி கொண்ட நிலைபாட்டை எவ்வகையிலும் மாற்றுபவர்கள் அல்ல என அறிந்திருப்பீர்” என்றார் கிருதர். “நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் சொல்வீர்கள், முனிவரே?” என்றான் விருஷபர்வன். “நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும். வாழ்க்கையில் அத்தகைய அரியதெரிவுகளை ஒருமுறையேனும் நாம் சந்தித்தாகவேண்டும்” என்றார் கிருதர்.

“நான் ஒப்புகிறேன், ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்றான் விருஷபர்வன். கிருதர் அவனை வெறுமனே நோக்கினார். அவன் விழிகளில் தெரிந்த துயருக்கு நிகரான ஒன்றை அதற்குமுன் கண்டதே இல்லை என்று சாயை எண்ணிக்கொண்டாள். “இப்படி ஏதேனும் நிகழுமென்றே எதிர்பார்த்திருந்தேன். பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன், திரும்ப அளிக்கவேண்டியிருக்கும். திரும்ப அளிக்கவேண்டாத எதையும் நாம் பெறுவதில்லை.” ஆனால் அவன் முகத்தில் துயர் இருக்கவில்லை, ஆழ்ந்த அமைதிதான் தெரிந்தது. அவள் மீண்டும் அவன் விழிகளை நோக்கினாள். அங்கே தெரிந்த துயர் அவளை நடுக்குறச் செய்தது.

“இவ்வகையில் இது முடியாது என்று என் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. நான் எளியவன், என்னைவிட பேராற்றலும் தவவல்லமையும் கொண்ட அசுரமூதாதையர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடையாத முழுவெற்றி எப்படி எனக்கு கைகூடும்? ஏதோ ஒன்று எழுந்து வரவிருக்கிறது என்று எண்ணிக் காத்திருந்தேன். ஆசிரியரிடமிருந்து வருமென எதிர்பார்க்கவில்லை.” அவன் சற்று புன்னகைத்து “ஆனால்  அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவது. தன் அன்புக்காக, நெறிநிலைக்காக, பெருந்தன்மைக்காக, கொடைக்காக, அருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறது. நம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறது. இம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்.  இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும், வேறொரு வகையில் நிகழமுடியாது. அதற்கு வரலாறே இல்லை” என்றான். எழுந்துகொண்டு “நான் ஆசிரியரின் கால்களை என் நெற்றிதொடும்படி பணிந்தேன் என்று மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றான்.

கிருதர் எழுந்து “உமது சொற்களின் அனைத்து உட்பொருட்களையும் உணர்ந்தேன். ஆனால் ஆசிரியர் இன்று ஒரு சொல் சொன்னார், எண்ணியிராதன நிகழும் என்று. அவர் உம்மேல் கொண்ட அன்பு அச்சொற்களுக்கு அடியில் உறைகிறது என இப்போது உணர்கிறேன். தாங்கள் எண்ணியே இராத நன்னயம் உங்கள் கொடிவழிகளுக்கு நிகழும். தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார். விருஷபர்வன் தலைவணங்கி கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

முந்தைய கட்டுரைதற்செயல்பெருக்கின் நெறி
அடுத்த கட்டுரைவி.எஸ்.ராமச்சந்திரன்