விலக்கப்பட்டவர்கள்

கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை.

1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் முறைதவறியதாகத் தெரிந்தால் ஸ்மார்த்த விசாரம் என்ற பேருள்ள ஒரு விசாரணைக்கு ஆளாக்கப்படுவாள். ஸ்மார்த்த சபை குந்நங்குளம் மனையில் அந்த நம்பூதிரிப்பெண்ணிடம் அவளது கருவுக்குக் காரணமானவர்களைப்பற்றிக் கேட்டது. அப்பெண் பத்துப்பதினைந்து பெயர்களைச் சொன்னாள். அதில் ஒன்று மேலங்கத்து கோபாலமேனன்.

ஸ்மார்த்த சபையின் சிபாரிசின்படி கோழிக்கோடு சாமூதிரி மன்னர்  அந்த நம்பூதிரிப்பெண்ணை சாதிவிலக்கு செய்தார். அவளால் பெயர் சுட்டப்பட்ட நம்பூதிரிகளுக்கும் சாதிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்ற சாதியினருக்கு பலவகையான தண்டனைகள் கிடைத்தன. நாயரான மேலங்கத்துக் கோபால மேனன் நாடுகடத்தப்பட்டார். [மேனன் என்பது வரிவசூல் மற்றும் நிதிப்பொறுப்புகளை குடும்ப மரபாக வகிக்கும் நாயர்களுக்கு உரிய குலப்பட்டம்] அக்காலத்து வழக்கப்படி வட்டபறம்பில் மீனாட்சியம்மா கணவனை விவாகரத்து செய்தாள்.

அந்த நம்பூதிரிப்பெண் என்ன ஆனாள்? அத்தனை பேருடன் அவள் ஏன் உறவு வைத்திருந்தாள்? அதை அறிவதற்கு நாம் ஸ்மார்த்தவிசாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். கேரள சரித்திரத்தில் பலவகையான ஆய்வுகளுக்குரிய ஆர்வமூட்டும் சமூக வழக்கமாக இருந்தது அது. அது ஒரு சாதிச்சடங்கு.

கேரளத்தில் உள்ள மலையாளப் பிராமணர்கள் ஒரே சிறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நம்பூதிரிகள் எனப்படுகிறார்கள். இவர்கள் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆந்திராவில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளத்துக்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்பது பிரபலமான ஊகம். இக்காலகட்டத்தில் பெரும் இஸ்லாமியப்படையெடுப்புகளால் ஆந்திர மையநிலப்பகுதி சின்னபின்னமாகிக்கிடந்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்ந்த காலகட்டம் இது.

கேரளத்து நிலத்தில் பெரும்பகுதி முழுக்க முழுக்க கொடும்காடாகக் கிடந்த காலம் அது. புராதன சேர மன்னர்குலம் சோழர்களின் படையெடுப்பு மூலம் அழிக்கப்பட்டது. கி.பி பதினொன்றாம்நூற்றாண்டுவரை முந்நூறு வருடம் கேரளத்தில் சோழர்களின் நேரடி ஆட்சி நிலவியது. சோழர்களின் ஆட்சி மறைந்தபோது சோழர்களுடைய தளபதிகளாக இருந்தவர்களும் சோழர்களுக்குக் கப்பம்கட்டிவாழ்ந்த உள்ளூர் குறுநிலப்பிரபுக்களும் சுதந்திர அரசர்களாக தங்களை பிரகடனம்செய்துகொண்டார்கள். இவர்களில் சிலர் பழைய சேரமன்னர்களின் வாரிசுகள். ஐதீகத்தின்படி ஐம்பத்தியாறு சிறு அரசுகள் இக்காலகட்டத்தில் சின்னஞ்சிறு கேரள மண்ணில் இருந்தன.

இக்காலகட்டத்தில் கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி

அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய – வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

கேரளநிலத்தில் சிவன்,விஷ்ணு,ராமன்,கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வங்களை நம்பூதிரிகள் நிறுவினார்கள். சேரன்செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவந்த பத்தினித்தெய்வ வழிபாட்டை பகவதி வழிபாடாக உருமாற்றம்செய்தார்கள். கேரளத்தின் அதிகாரம் கோயில்களை மையமாக்கியதாக அமைந்தது. கோயில்கள் நம்பூதிரிகளின் உடைமைகளாக இருந்தார்கள். இவ்வாறு ஒருநூற்றாண்டுக்குள் கேரளத்தின் மொத்த அதிகாரமும் நம்பூதிரிகளின் கைகளுக்கு வந்தது. நம்பூதிரிகளைப் பேணிய கோழிக்கோடு சாமூதிரி, கொச்சி மன்னர் போன்றவர்கள் அவர்களின் ஆசிபெற்று பெரிய மன்னர்களாக ஆனார்கள். பிற சிறிய மன்னர்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்

உச்ச அதிகாரத்தில் இருந்த நம்பூதிரிகள் தங்கள் சாதியின் தனித்துவத்தைப் பேணுவதில் கவனமாக இருந்தார்கள். பிற பிராமணர்கள் எவரிடமும் இல்லாத பல சடங்குகளும் நம்பிக்கைகளும் குலவழக்கங்களும் அவர்களுக்கு உண்டு. அவற்றைப்பேணும்பொருட்டு சாதிச்சபைகளையும், சாதி நீதிமன்றங்களையும், அதற்கான விசாரணை முறைகளையும் உருவாக்கி மிகக்கறாராக கடைப்பிடித்தார்கள். தங்கள் சாதித் தனித்துவத்தைப் பேண விரும்பும் எல்லா சிறிய சாதிகளையும்போல தங்கள் பெண்களுக்கு பிற சாதியிடம் தொடர்பே ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ஆகவே பெண்கள் மீது உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூர்க்கமாகப் பெண்களை ஒடுக்கும் இந்த வழக்கம் பெரும்பாலும் எல்லா பழங்குடிகளிடமும் இருப்பதுதான். நம்பூதிரிகளின் பல பழக்கவழக்கங்கள் முற்றிலும் பழங்குடித்தன்மை கொண்டவை.

நம்பூதிரிப்பெண் அந்தர்ஜனம் [உள்ளே இருப்பவள்] என்று அழைக்கப்பட்டாள். அதன் மொழியாக்கம் சாதாரணர்களால் அழைக்கப்பட்டது, அகத்தம்மா. அந்தர்ஜனங்கள் வெள்ளை ஆடை மட்டுமே அணியவேண்டும். உடலையும் முகத்தையும் முழுமையாக மறைத்துக்கொண்டுதான் வெளியே கிளம்ப வேண்டும். குளிப்பதற்குக் கூட தனியாக வீட்டை விட்டு செல்லவே கூடாது. எப்போதும் கையில் ஒரு ஓலைக்குடையை வைத்திருக்க வேண்டும். இதற்கு மறைக்குடை என்று பெயர். ஆண்கள் யாரைக் கண்டாலும் அந்தக்குடையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். விதவை மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில் இருண்ட நம்பூதிரி இல்லங்களில் பிறந்து இருளில் வாழ்ந்து இருளில் மடியும் வாழ்க்கை அவர்களுடையது.

நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்களுடன் உதிர உறவை நிறுவினார்கள். நாயர்கள் நேரடியாக ஆயுதங்க¨ளைக் கையாண்ட சாதி. நிலங்களை கையில் வைத்திருந்தவர்கள். இந்த உறவு நம்பூதிரிகளுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது.நாயர்களுக்கு மத அதிகாரத்தை அளித்தது.

இந்த வழக்கம் நின்றுவிடாமலிருக்க நம்பூதிரிகள் ஒரு மரபை சட்டமாக்கினார்கள். நம்பூதிரிச் சாதியில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப்பெண்ணை மணம் புரிந்துகொள்ள முடியும். பிற மகன்கள் மன்னர்குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ மட்டுமே மணம்புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பூதிரிப்பெண் விலக்கு. நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர்கள் பெண்வழிச்சொத்துரிமை கொண்டவர்கள். ஆனால் நம்பூதிரிச்சொத்துக்களுக்கு குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே வாரிசு. பிறருக்கு எந்த உரிமையும் இல்லை

இதன் விளைவாக நம்பூதிரிச் சொத்துக்கள் நூற்றாண்டுகளாக பிளவுபடவே இல்லை. நம்பூதிரிச்சாதியின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆகவே அவர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் நம்பூதிரிப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கன்னியராகவோ விதவைகளாகவோ நின்றுவிட நேர்ந்தது. ஆகவே அவர்களிடம் பாலியல் மீறல்களுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம். இதனால் நம்பூதிரிகள் தங்கள் பெண்களின் கற்பை கண்காணிக்கவும் தண்டிக்கவும் ஸ்மார்த்த சபை என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். பாலுறவைக் கண்காணிப்பத¦ற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான்.

ஸ்மார்த்த சபை என்பது ஆசார விதிகளின்படி ஒழுக்க மீறல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பு. இதன் தலைவர் ஸ்மார்த்தர் என்று அழைக்கப்படுவார். இவருக்கு உதவிசெய்ய பிற நம்பூதிரிகள் உண்டு. ஒழுக்க மீறலுக்குக் குற்றம்சாட்டப்பட்ட நம்பூதிரிப்பெண் உடனடியாக தனி அறையில் கடுமையான காவலுடன் அடைக்கப்படுவாள். நாவிதர் அல்லது வண்ணார் சாதியைச் சேர்ந்த முதியபெண் ஒருத்தி அவளிடம் பேசுவதற்காக அமர்த்தப்படுவாள். குற்றம் சாட்டப்பட்ட பெண் இருக்கும் அறைக்கு வெளியே மூடிய கதவுக்கு இப்பால் நின்றபடி ஸ்மார்த்தர் அவளிடம் கேள்விகள் கேட்பார். அதை அந்த முதியபெண் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கேட்டு பதில் பெற்று சொல்லவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக உணவும் நீரும் இல்லாமல் பட்டினி போடப்படுவாள்.பிற வேலைக்காரிகளை வைத்து அடிப்பதும் சூட்டுகோல் காய்ச்சி சூடுபோட்டு வதைக்கப்படுவதும் உண்டு. அறைக்குள் மிளகாய்தூள்போட்ட புகையை நிறைப்பது, பலநாட்கள் ஈரத்திலேயே போட்டிருப்பது, தொடர்ச்சியாக தூங்கவிடாமல் செய்வது போன்று வதைகளின் பட்டியல் நீள்கிறது. ஒருசமயம் அந்த அறைக்குள் பாம்பு விடப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், குற்றம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும்! அக்குற்றத்தில் தன்னுடன் ஈடுபட்டவர்களின் பெயர்களை அவள் சொல்லியாகவேண்டும். பொதுவாக சபை அவளை விபச்சாரி என முத்திரை குத்த விரும்புவதனால் அவள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களைச் சொல்லும் வரை சித்திரவதை நீளும்.

அவள் பெயர்களைச் சொன்னதும் அவளை இழுத்துவந்து தாழ்ந்த சாதியினருக்கு விற்கிறார்கள். அந்த தொகை அரசாங்க கஜானாவில் கட்டப்படும். அத்துடன் அவளுடைய சாதி அடையாளம் அழிந்துவிடும். வீட்டைவிட்டு வெளியேற்றியதும் அவளை இறந்தவளாக தீர்மானித்து உரிய இறுதிச்சடங்குகள் குடும்பத்தாரால்செய்யப்படும். இதற்கு ‘படியடைச்சு பிண்டம் வைத்தல்’ என்று பெயர். அவளை வாங்கியவன் அவளைக் கொண்டுசெல்வான்.

ஸ்மார்த்தவிசாரத்தில் பெயர்சுட்டப்பட்டவர்களைப்பற்றி மன்னருக்கு சொல்லப்படும். மன்னர் அவர்களுக்கு தண்டனை விதிப்பார். நாயர் சாதியைவிட தாழ்ந்தவர்கள் அதில் இருந்தால் உடனடியாக சிரச்சேதம் செய்யப்படுவார்கள். தலித்துக்கள் என்றால் கழுவேற்றப்படுவார்கள். நாயர்கள் பொதுவாக சாதிவிலக்குக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளாவார்கள். நம்பூதிரிகளுக்கு சாதிவிலக்குத் தண்டனை.

சாதிவிலக்குத்தண்டனை அளிப்பதற்கு முன்னர் நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் ஒரு ‘உண்மை கண்டறியும் சோதனை’ உண்டு. இதற்கு ‘கைமுக்கு’ என்று பெயர். சுசீந்திரம் கோயில் புகழ்பெற்ற கைமுக்கு மையமாக இருந்தது. திருவிதாங்கூரில் எங்கே ஸ்மார்த்த விசாரம் நடந்தாலும் கைமுக்கு நடப்பது சுசீந்திரத்தில்தான். இங்குள்ள செண்பகராமன் மண்டபத்தில் இது நிகழும். இதைப்பற்றி முனைவர் அ.கா.பெருமாள் ‘சுசீந்திரம் ஆலயவரலாறு’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுச்சபை முன் நிறுத்தப்படுவார்கள். பெரிய உருளியில் கொதிக்கவைத்த நெய்யில் கைவிட்டு உள்ளே இருக்கும் சிறிய பொற்சிலை ஒன்றை எடுக்க வேண்டும். கையில் தீக்காயம்படாவிட்டால் நிரபாராதி என்று தீர்ப்பாகும். தீக்காயம் பட்டால் உடனடியாக சாதிவிலக்கு அறிவிக்கப்படும். சாதிவிலக்கு பெற்றவர் பின்னர் தேவதாசி சாதியில் இணைந்துகொள்வதுதான் வழக்கம். பின்னர் இச்சடங்கில் கையில் துணிசுற்றிக்கொண்டு கொதிக்கும்நெய்யில் கைவிட்டால்போதும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. மகாராஜா சுவாதித்திருநாள் இந்த வழக்கத்தை நிறுத்தினார்.

1893 ல் திரிச்சூர் அருகே உள்ள வெங்கிடங்கு என்ற ஊரில் உள்ள வடவர்கோட்டு மனை என்ற நம்பூதிரி இல்லத்தில் பதினைந்து வயதான பருவம் வந்த நம்பூதிரிச்சிறுமி குளத்தில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது அங்கே வேதமோதுதல் கற்பிக்க வந்திருந்த முதியவரான நம்பூதிரி [இவர்களுக்கு ஓதிக்கன் என்று பெயர்] அவள் கையைப்பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார். அவரைப் பிடித்துத் தள்ளியபின் ஓடிப்போன அந்தச்சிறுமி தன் அம்மாவிடம் தன்னை ஓதிக்கன் கைப்பிடித்து இழுத்துவிட்டதாகச் சொன்னாள்.

அக்குடும்பத்துப் பெண்களே அதை பெரிய ஒழுக்கமீறலாகக் கண்டு புகார்சொன்னார்கள். நம்பூதிரி நெறிகளின்படி அப்படி ஒருவரை கவர்ந்தது அப்பெண்ணின் பிழையாகும். ஆகவே ஸ்மார்த்த விசாரணை நடந்தது. அப்பெண் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு ‘குற்றங்களை’ ஒப்புக்கொண்டு பிரஷ்டம் செய்யப்பட்டாள். அவளை சாதியமைப்பில் மிகக்கீழ்நிலையில் இருந்த நாயாடிகள் என்ற பழங்குடியின் தலைவனனான கிழவன் பிடித்துச்சென்றான். நாயாடிகளை அன்று ஒரு உயர்சாதியினன் பார்த்தாலே அது தீட்டு என்று கருதப்பட்டது. எலிகளை வேட்டையாடி உண்பவர்கள் அவர்கள்.

அந்தப்பெண்ணின் அப்பா திருவிதாங்கூரில் அரசபதவியில் இருந்தார். அவளுடைய தாய்வீடுதான் வடவர்கோட்டு மனை. தன் மகளைக் காப்பாற்ற அவளுடைய தந்தை கடுமையாக முயற்சி எடுத்தார். திருவிதாங்கூரில் அதற்கு முன்னரே ஸ்மார்த்த விசாரம் தடைசெய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் மன்னர் அப்பெண்ணுக்காக  கொச்சி மன்னரிடமும் கோழிக்கோட்டு  சாமூதிரிமன்னரிமும் வாதிட்டார். ஆனால் உச்ச அதிகாரம் கொண்ட நம்பூதிரிசபையை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அந்தப்பெண்ணை ஒரு போர்ச்சுக்கல் வணிகன் நாயாடிகளிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அவளை மணம் புரிந்துகொண்டான். அவள் மதம் மாறி கிறித்தவப்பெண்ணாக ஆனாள்.  கெ.வி.வாசுதேவன் நம்பூதிரிப்பாடு என்பவர் பழைய ஆவணங்களில் இருந்து இவ்வரலாற்றை ஆராய்ந்து எழுதிய கட்டுரையில் இத்தகவல்கள் உள்ளன.

பொதுவாக ஸ்மார்த்த விசாரத்துக்கு ஆளான பெண்களின் பெயர்கூட கிடைப்பதில்லை. காரணம், அவள் குற்றம்சாட்டப்படும்போதே பெயர் நீக்கம்செய்யப்படுவாள். அதன்பின் அவளை ‘சாதனம்’ [சாமான்] என்றே குறிப்பிடுவார்கள். ஆனால் ஒருபெயர் மட்டும் வரலாற்றில் தீக்கனல் போல எரிந்துகொண்டிருக்கிறது. 1905ல் பாலக்காடு அருகே உள்ள குறியேடத்து  மனையில் தாத்ரிக்குட்டி என்ற இளம்பெண் ஸ்மார்த்த விசாரணைக்கு ஆளாக்கப்பட்டாள். அவளை கேரள வரலாறு மறக்கவே முடியாது

மற்ற நம்பூதிரிப்பெண்க¨ளைப்போல அல்லாமல் குறியேடத்து தாத்ரிக்குட்டி கல்வி கற்றவள். சம்ஸ்கிருத காவியங்களில் அறிமுகம் உடையவள். இசைப்பயிற்சி உண்டு. கதகளி மீது அபாரமான பிரேமை இருந்தது. இளம்விதவையாக ஆன குறியேடத்து தாத்ரிக்குட்டி தன் இல்லத்தில் நடந்த கதகளிகளை ரகசியமாகக் கண்டுவந்தாள். அக்கலைஞர்களுடன் உறவு ஏற்பட்டது. கருவுற்றாள். ஆகவே அவள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டாள்.

பொதுவாக, ஸ்மார்த்தவிசாரணைக்கு உள்ளாகும் பெண்கள் ஒருகட்டத்தில் நிறைய பெயர்களை வரிசையாகச் சொல்வதை ஆவணங்கள் காட்டுகின்றன. ஏனென்றால் அவளிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அதிகாரம் அதுவே. அவள் எந்தப்பெயர்களையெல்லாம் சொல்கிறாளோ அவர்களெல்லாம் தண்டிக்கப்படுவார்கள். அவளுடைய வன்மம் அந்தக்கணத்தில் தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய அனைவர் மேலும் பாய்கிறது. நிரபராதிகளும் தண்டிக்கப்படுகிறார்கள்.

குறியேடத்து தாத்ரிக்குட்டி செய்ததும் அதுவே. ஒட்டுமொத்த நம்பூதிரி சபையையே அவள் தன்னுடன் விபச்சாரம்செய்தவர்களாக அடையாளப்படுத்தினாள். 63 பிரபல நம்பூதிரி இல்லங்களைச் சேர்ந்த தலைமை நம்பூதிரிகள் அவளால் தண்டனைக்கு ஆளானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதில் தொடர்பில்லை என்பது வெளிப்படை. ஆனால் வேறு வழியே இல்லை, ஆசாரத்தை எவரும் மீறமுடியாது. அவர்களில் பல நம்பூதிரிகள் கைமுக்கு சோதனைக்குப் பயந்து தற்கொலைசெய்துகொண்டார்கள். பிறரை சாமூதிரிமன்னர் சாதிபிரஷ்டம்செய்தார்.

குறியேடத்து தாத்ரிக்குட்டியின் கதை கேரள இலக்கியத்தில் உக்கிரமான பல படைப்புகளை உருவாக்கியது. ”அறுபத்துநாலாவது பெயரை தாத்ரிக்குட்டி சொல்லியிருந்தால் தீர்ப்பளிக்க ஆளிருந்திருக்காது” என்று ஒரு கவிஞர் பாடினார். தாத்ரிக்குட்டி ஒரு கதகளிக் கலைஞனை கதகளிக் கதாபாத்திர வேடத்திலேயே இரவில் தன்னிடம் வரச்சொன்னாளாம். ”அவளுடைய காமம் கலையுடன்தான், அவள் புணர்ந்தது பீமனையும் அர்ஜுனனையும்தான், மனிதர்களையல்ல” என்று அவளைப்பற்றி தான் எழுதிய ஒரு கதையில் எம்.கோவிந்தன் சொல்கிறார்.

மாடம்பு குஞ்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் குறியேடத்து தாத்ரிக்குட்டியைப் பற்றி  1974ல் ‘பிரஷ்டு’ என்ற பிரபலமான நாவலை எழுதினார். அந்நாவல் 1975ல் ஒரு திரைப்படமாக அதே பேரில் வெளிவந்தது. அதில் புதுமுகமாக அறிமுகமான சுஜாதா அக்காலகட்டத்தில் மிகத்துணிச்சலாக நடித்திருந்தார். பிற்பாடு அவர் கெ.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.

2002 ல் எம்டி.வாசுதேவன்நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய ‘பரிணயம்’ என்ற முக்கியமான திரைப்படம் வெளிவந்தது. இது தாத்ரிக்குட்டியின் கதையை ஒட்டி இன்னும் விரிவாகவும் தீவிரமாகவும் ஸ்மார்த்த விசாரச் சடங்கைச் சித்தரிக்கிறது. மோகினி தாத்ரிக்குட்டியாக நடித்திருந்தார். ஸ்மார்த்தனாக திலகனும் தாத்ரிக்குட்டியின் குடும்ப மூத்தாராக நெடுமுடிவேணுவும் நடித்திருந்தார்கள். இதில் கதை இன்னும் இருபதாண்டுக்காலம் பின்னுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. தாத்ரிக்குட்டிக்கும் ஒரு கதகளி நடிகனுக்கும் இடையேயான உறவை மட்டுமே இது பேசுகிறது.

தாத்ரிக்குட்டி என்ன ஆனார்? திரிச்சூரைச்சேர்ந்த ஒரு ஆங்கிலோ இந்தியக் கிறித்தவர் அவளை ஏலத்தில் விலைகொடுத்து வாங்கி மணம்புரிந்துகொண்டார். கேரளத்தில் அவளுடன் வாழமுடியாமல் தமிழகத்துக்கு வந்தார். திருச்சி அருகே பொன்மனை ரயில்தொழிற்சாலையிலும் பின்னர் சென்னையிலும் அவர் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரது வாரிசுகள் பலவாறாகச் சிதறிப்பரந்தாலும் சில தகவல்கள் அங்கிங்காகக் கிடைக்கின்றன. அவர்களில் ஒரு பெண் இன்றுமிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தாத்ரிக்குட்டியின் பிரஷ்டு அதிர்ச்சியலைகளை உருவாக்கி ஸ்மார்த்த விசாரணை என்ற அமைப்பின் அடித்தளத்தை உலுக்கியது. என்றாலும் ஸ்மார்த்த விசாரம் தொடர்ந்து நடந்தது. 1918 ல் நடந்த ஒரு ஸ்மார்த்த விசாரணையைப்பற்றி கேரள பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய ஏ.எம்.என் சாக்கியார் தன் சுயசரிதையில் சொல்கிறார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணன் நம்பூதிரி தற்கொலைசெய்துகொண்டார். அவர் ஏ.எம்.என் சாக்கியாரின் தந்தை. ஒருவேளை அதிகாரபூர்வமாக அதுதான் கடைசி ஸ்மார்த்த விசாரணையாக இருக்கலாம். அந்தப்பெண்ணின் பெயரும் தாத்ரிக்குட்டிதான். வாடானப்பள்ளி ஊரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் வணிகர் அவளை விலைகொடுத்து வாங்கினார்.

ஏ.எம்.என் சாக்கியார் தான் தன் சுயசரிதையில் 1903ல்  மேலங்கத்துக் கோபால மேனன் சாதிப்பிரஷ்டத்துக்கும் நாடுகடத்தலுக்கும் ஆளான ஸ்மார்த்த விசாரத்தைப்பற்றி விவரிக்கிறார். கோபாலமேனன் கொழும்புவுக்குச் சென்றார். அக்காலத்தில் தோட்டத்தொழில் உருவாகிக்கொண்டிருந்த இலங்கைக்கு ஏராளமான மலையாளி நாயர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் காலப்போக்கில் அங்குள்ள வேளாளர்களுடன் கலந்து மறைந்தார்கள். கொழும்புசென்ற கோபாலமேனன் அங்கிருந்து கண்டிக்குச் சென்றார்.

நிரபராதியான கோபால மேனன் தன் மீது வந்த பழியினால் மனம் உடைந்து இருந்ததாகவும் அதனால் நோயுற்றதாகவும் சொல்லப்படுகிறது. அங்கே அவர் சத்யவதி என்ற இன்னொருபெண்ணை மணந்துகொண்டார். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. நோய் முற்றி மேலங்கத்து கோபாலமேனன் இறந்தார்.

மேலங்கத்து கோபாலமேனனின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் இந்தியா வந்தார். பிழைக்க வழியில்லாமல் பரிதவித்து தன் பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். அக்குழந்தைகள் நாடகநடிகர்களாகவும் பின்னர் திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தன. இளையவர் நட்சத்திர நடிகராக ஆகி பின்னர் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆனார். மேலங்கத்துக் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர்.

சரி,தாத்ரிக்குட்டியின் வாரிசாக கருதப்படும் பெண்? அவரும் சினிமா நடிகைதான். இருநூறுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்த ஷீலா. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2008 ]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71