பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்

 

bharathi

தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி

பிரிய ஜெ,

சுகமா?

தற்போது கவிமணியின் கவிதைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். எளிமையும் ஒசைநயமும் கொண்டவையாக அவருடைய பல கவிதைகள் உள்ளன. எனினும், பாரதியார் அடைந்த உயரத்தை அவர் ஏன் எட்ட இயலவில்லை எனும் கேள்வி எழுகிறது.

தன் காலத்தின் உணர்வுகளை பாரதி அதிகம் பிரதிபலித்ததாலா? கற்பனையின் சிறகுகள் கவிமணியை நெடுந்தூரம் இட்டுச்சென்று விட்டதாலா? இருவரையும்  ஒப்பீடு செய்வதாக இல்லாமல், பொதுரசனையில் அவர்களின் படைப்புகள் எழுப்பிய வித்தியாசத்தை உணரவேண்டி உங்களிடம் கேட்கிறேன் .

சகோதரி அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பு.

மோகன்ஜி

***

kavimani

அன்புள்ள மோகன்ஜி,

இந்த ஒப்பீடே பிழையானது என்பது என் எண்ணம். பாரதி கவிஞர். கவிமணி, பாரதிதாசன் போன்றவர்கள் வெறும் செய்யுள்காரர்கள். சில நல்ல வரிகள் அமைந்திருக்கலாம். ஆனால் கவிநிலையில் அவர்கள் இருந்ததில்லை, வெளிப்பட்டதில்லை.

வேண்டுமென்றால் இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். கவிதையை ஆக்குவது இரண்டு அடிப்படைகள். ஒன்று, சொல்புதிது பொருள்புதிது என எழும் புதுமைக்கான நாட்டம். [புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஒப்பிப்பதைச் சொல்லவில்லை] தன்னளவிலேயே மொழியில் புதிதாக பூப்பது அது. அதுவே பாரதியை உருவாக்கிய முதன்மை எழுச்சி. அந்த புதுமைநாட்டமே இலக்கியப் படைப்புக்கு இன்றியமையாததான ‘பிறிதொன்றிலாத தன்மையை’ அளிக்கிறது.

இரண்டாவது பித்து. தர்க்க மனத்தைக் கடக்கும் கனவுநிலை, புறவுலக ஒழுங்கை கலைத்து அடுக்கும் ஆழ்மனநிலை. அது வெளிப்படும்போதே அது கவிஞனின் சொல் ஆகிறது. ‘பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’ என்பது அந்த வெறும் பித்தினாலேயே கவிதை.

கவிமணியின் கவிதையின் குறைபாடுகள் அல்லது எல்லைகள் எவை? சுருக்கமாக:

அ. அவை மாறாத செய்யுள் தன்மை கொண்டவை. எளியவை, நேரடியானவை. அவருடைய மொழி புறவயமானது. ஒரேவகையானது.

ஆ. அவை அவருடைய தனிப்பட்ட அக எழுச்சியை ஆன்மிகத் தேடலை வெளிப்படுத்துவன அல்ல. அவற்றின் கருத்துக்களும் உணர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் பொதுவாகப் புழங்கியவை.

இ. அவருடைய படிமங்கள் மிகச்சம்பிரதாயமானவை. அவருடைய கனவிலிருந்து எழுந்தவை அல்ல.

கவிமணியின் கொடை அவருடைய கல்வெட்டு ஆராய்ச்சிகள்தான். அதில் ஒரு முறைமையை அவர்தான் இங்கே அறிமுகம் செய்தார். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஒப்புநோக்க மேலும் படைப்பூக்கம் கொண்ட ஆக்கம்.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
அடுத்த கட்டுரைதற்செயல்பெருக்கின் நெறி