எழுதலின் விதிகள்

lazy

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,

சோம்பலை களைவதை பற்றிய உங்கள் கேள்விக்கான பதில் மிக மிக மகிழ்ச்சி ஊட்டியது.

உங்கள் இளம் வயதில், நீங்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியை நாவலாக எழுதிய ஒரு மலையாள எழுத்தாளரைச் சந்தித்து உரையாடுகையில், அவர் உங்களிடம் ஏதோ கேட்க, நீங்கள் அவரிடம் முழு பாரதத்தையும் மீள எழுதப்போகிறேன் என கூறியபோது, உங்கள் இளம் மனதில் ஒரு கர்வம், நம்பிக்கை, உற்சாகம் நிரம்பியிருக்குமே. அந்த நம்பிக்கையோடு கேட்கிறேன்.

நான் என் துறையில் நீங்கள் சாதித்தை விட பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற பெருங்கனவு கொண்டவன், ஒரு மூன்று மாதமாக இந்தச் சோம்பல் என்னை செயலிழக்க வைத்துவிடுகிறது. உங்கள் பதில் எனக்கு கொம்பு சீவியிருந்தாலும், இன்னும் நுணுகி அணுக, உங்கள் ஒரு நாளை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள் எனக் கூறினால் பெரும் உதவியாக இருக்கும்.

கவனம் சிதறடிக்கும் விஷயங்களை எப்படி தவிர்ப்பீர்கள்.

உதாரணத்துக்கு, ஒரு 30 நிமிடம் தொடர்ச்சியாக எழுதிய பிறகு, மனம் போதும் என்று ஒரு தடை போடுமே, அந்தத் தடையை எப்படி முறியடிப்பது, அந்த தருணத்தை எப்படிக் கையா ள்வீர்கள்? நான் கணினியில் வேளை பார்ப்பவன், சற்றேற்குறைய ஒரு எழுத்தாளனைப் போலவே சதா கணினி முன் அமர்ந்திருக்கும் வாழ்க்கை. ஆனால் ஒரு 30 நிமிடத்திற்கு மேல் தானாக மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.

கடிவாளம் மீறி இயங்கி, கவனம் சிதறி, வேறு திசைகளுக்கு இட்டுக் கொண்டு போய், நேரத்தையும் சமயங்களில் ஒரு நாளையேக் கூட வீணடித்துவிடுகிறேன். இது ஒரு 3 மாதமாக எனக்கு நானே வைத்துக் கொள்ளும் சூன்யம் போல ஒரு குற்றவுணர்வு நெருடுகிறது.

அன்புடன்,

கார்த்திக்

***

அன்புள்ள கார்த்திக்,

முந்தைய கடிதத்திலேயே மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருந்தேன். தன்னைச் செயலூக்கம் உள்ளவராக தீவிரமானவராக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு ஒருவர் கண்டடைந்த வழிமுறைகள் பிறருக்கு எவ்வகையிலும் உதவாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் இயல்பை ஒட்டி அந்த வழியை தாங்களே தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே பொதுவான சிலவற்றைத் தான் சொல்ல முடியுமே தவிர குறிப்பான திட்டவட்டமான வழிகளை எவரும் காட்டிவிட முடியாது.

நான் செயலின்மையில் நீந்திக்கிடந்த காலங்கள் உண்டு. ஏனெனில் இளமைப்பருவத்தில் எதையுமே செய்யாமல் வெற்றுக் கனவில் மிதந்து நெடுங்காலத்தை செலவிட்டிருக்கிறேன். கனவில் வாழ்ந்தவனாக அலைந்து திரிந்திருக்கிறேன். என் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டபின்னர் உருவான சோர்வு ஒரு வருடத்திற்கு மேலாக என்னை வெறும் நடைபிணமாக வைத்திருக்கிறது. மனக்கொந்தளிப்புகளும் ஆழ்ந்த தனிமையும் சோர்வும் அடைந்த அந்தக் காலகட்டத்தை கடப்பதற்கு பிறருடைய அனுபவங்களோ பிறர் அளித்த சொற்களோ எனக்கு உதவவில்லை.

உண்மையில் அச்சோர்வில் சுழன்று சுழன்று அதன் உச்சத்தை அடைந்தேன். அந்த உச்சியிலிருந்து திரும்பி வந்துதான் செயலூக்கம்மிக்கவனாக ஆனேன்- அதை விரிவாகவே எழுதியிருக்கிறேன். நான் பங்களிப்பதற்கு ஒன்றுள்ளது, சென்று சேர்வதற்கு ஒரு இடமுள்ளது என்னும் தன்னுணர்வு அது. அந்தத் தன்னுணர்வே என்னை செயலூக்கம் மிக்கவனாக ஆக்கியது. அந்தத் தன்னுணர்வை ஒவ்வொருவரும் தாங்களே கண்டு கொள்வதையே நான் வலியுறுத்துகிறேன். அதையே கீதா முகூர்த்தம் என்று சொல்கிறேன். கீதை சார்ந்த எனது உரைகள் அனைத்திலுமே இத்தருணத்தையே வெவ்வேறு வகையில் சொல்லியிருக்கிறேன்.

இங்கு பல்வேறு வகையில் மதநூல்கள் மனிதனின் ஆழம் நோக்கிப் பேசுகின்றன. மனிதனைச் செயலூக்கம் மிக்கவனாக ஆக்குவதற்கு உதவும் முதன்மையான நூல் என்று பகவத்கீதையை சொல்லவேண்டும். ‘ஆகவே செயல்புரிக’ என்று அறைகூவும் அந்த நூல் ஏன் செயல்புரியவேண்டும் என்பதை வெவ்வேறு வகையில் விளக்குகிறது. சாங்கிய யோகம் இவ்வுலகில் புகழும் வெற்றியும் பெற்று நிறைவடைவதற்கு செயல்புரிய வேண்டும் என்கிறது. கர்ம யோகம் செயலின் மூலமாகவே உவகையையும் நிறைவையும் அடைவதற்கு ஏன் செயல்புரியவேண்டும் என்று விளக்குகிறது. ஞான யோகம் செயல் என்பது எப்படி தன்னைத் தானே அறிவதற்கும் கடந்து செல்வதற்கும் உதவுகிறது என்று சொல்கிறது. அவ்வாறு பதினெட்டு அத்தியாயங்களில் ஏன் செயல்புரிய வேண்டுமென்பதை அது விளக்குகிறது. செயலைக் கடந்து செயலின்மையை அடைந்து முற்றும் விடுதலை பெறுவதற்கான வழி என்றும் கீதை காட்டுகிறது. அதற்கப்பால் ஒரு கொள்கையை நான் சொல்லிவிட முடியாது.

நீங்கள் ஆற்றவேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்கள் என்றால் அதில் முற்றாக ஈடுபடுவது ஒன்றே வழி .அவ்வாறு கண்டு கொள்ளாத போதுதான் ஆழ்ந்த சோர்வும், செயலின் பயனென்ன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சரி, என்ன சொன்னாலும் ஒருவர் அந்தச்சோர்வுதான் எஞ்சுகிறது என்பாரென்றால் அது அவரது வாழ்க்கை, அவ்வளவுதான். நாம் செயலாற்றியாகவேண்டும் என இயற்கையோ ஊழோ அடம்பிடிக்கவில்லை. செயலாற்றுவது நமக்கே ஒழிய வேறெதற்காகவும் அல்ல. இங்கு எவரும் எச்செயலும் ஆற்றவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று கீதை அதைத்தான் சொல்கிறது.

பலசமயம் செயலின்மை, சோம்பல் ஆகியவற்றை தங்கள் பிரச்சினையாகச் சொல்பவர்கள் அதை உள்ளூர ரசித்துமகிழ்ந்துகொண்டே முன்வைக்கிறார்கள். அதைக் கடக்க அவர்கள் மட்டுமே முயலமுடியும், பிறர் காட்டும் எந்த வழியையும் அவர்கள் மட்டுமே தேர்வுசெய்யமுடியும் என்பதை பொருட்படுத்துவதில்லை. சோம்பலாலும் செயலின்மையாலும் தேங்கியிருக்கும் ஒருவர் கவனிக்கவேண்டியது உண்மையிலேயே அவருக்கு அதிலிருந்து விடுபடும் எண்ணம் உண்டா என்பதுதான்.

ஏனென்றால் மானுட உள்ளம் சோம்பலைத்தான் மிகவிரும்புகிறது. செயலூக்கம் என்பது மானுட இயல்புக்கு எதிரானது. பசி, காமம், உயிரச்சம் தவிர வேறு எவையும் உயிர்களை செயலூக்கம்கொள்ளச் செய்வதில்லை. இமையமலைப்பகுதியில் மனிதர்கள் மிகமிக இன்பமாக சோம்பலில் சொக்கி அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது மிக இனிய போதை. அதில் மூழ்கியிருக்கையில் எழும் குற்றவுணர்ச்சியை மறைக்கவே அவ்வப்போது சோம்பலில், சோர்வில் இருந்து விடுபடமுடியவில்லை, என்ன செய்யலாம் என கொஞ்சம் பேசிப்பார்க்கிறோம்.

சென்ற பல்லாண்டுகளில் எனக்கு எப்போதும் நீடித்த செயலின்மையோ சோம்பலோ ஏற்பட்டதில்லை. ஆனால் புனைகதை எழுதுபவனாகிய நான் புனைகதைகளில் இருந்து அடையும் உணர்வுகளைக் கடக்க முடிவதில்லை. பெரும்பாலான தருணங்களில் நான் எழுதிய கதைகளின் உணர்வுகள் வந்து ஆக்ரமித்துக் கொள்கின்றன. கதாபாத்திரங்களின் துயரங்கள். அவமதிப்புகள் இழப்புகள் என்னையும் ஆட்டிப்படைக்கின்றன. சோர்வை ரசிக்கும் ஆழம் அதை பல்வேறுவகைகளில் பெருக்கிக்கொள்வதும் உண்டு.

ஆனால் அதிலிருந்து மீண்டும் எழுதுவதன் வழியாகவே வெளி வருகிறேன். எழுத்து என்பது ஒரு நிகர்வாழ்க்கையாகவே எனக்கு இருக்கிறது. அந்த வாழ்க்கை இந்த அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அனைத்துக் குறைகளையும் ஈடுகட்டுகிறது. ஒருவனின் தன்னறம் அப்படி அவனை முழுதாக நிறைப்பதாகவே இருக்கும். அவன் அதில் எங்கிருந்தும் சென்று மூழ்கிவிடமுடியும். அத்தகைய உலகை கண்டுகொண்ட ஒருவன் இவ்வாழ்க்கை ஒரு தீவிரமான செயல்பயணமாகவே கருதுவான் என்று நினைக்கிறேன். நம் காலகட்டத்தின் மாபெரும் கர்மயோகியான காந்திக்கும் இச்சோர்வுகள் இருந்தது. காந்தி பல தருணங்களில் தான் செய்வது சரிதானா இதில் பயனுண்டா என்ற எண்ணங்களை அடைந்திருக்கிறார். ஆனால் செயல் மூலமாகவே மீண்டும் அதிலிருந்துதிரும்பி வந்திருக்கிறார். இது செயலாற்றும் அனைவருக்குமான வழிமுறை என்று சொல்லலாம்.

இதற்கப்பால் அன்றாட வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்றால் சில சாதாரணமான குறிப்புகளை சொல்ல முடியும், இது பிறருக்கு உதவுமா என்று எனக்கு தெரியாது.

என்னைப் பொறுத்தவரை காலை என்பது மிக முக்கியமானது. துயில் எழுந்து அமரும்போது உள்ள மனநிலை ஒருபோதும் சோர்வும் தனிமையும் சலிப்பும் கொண்டதாக அமையக்கூடாது. ஒருகாலையை புதிய ஒரு கொடையாக ஒர் இனிய தருணமாக உணரும் மனநிலை இருந்தால் , அந்தக்கொண்டாட்டத்துடன் அந்த நாள் தொடங்கினால் அது நன்கு துலங்குமென்பது என் அனுபவம். அது இயல்பிலேயே இருக்குமா என்றால் அப்படி அல்ல என்பதே உண்மை. அவ்வாறு சொல்லி நம்மை நாமே ஏற்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு காலையில் எழுந்து இனிய காலை என்று நீங்க்ள் நினைக்கிறீர்கள் என்றால் அது இனிய காலையாக மாறுவதைப்பார்க்கலாம். இனிய வெயில், இனிய காற்று, இனிய ஓசைகள், காட்சிகள் என்று எண்ணிக் கொண்டீர்கள் என்றால் அதையேதான் உள்ளம் விரிவாக்கிக்கொள்ளும்.

ஆகவே காலையில் அவ்வினிமையைப்போக்கும் எதையும் செய்யாமலிருப்பது நன்று என்று நான் நினைக்கிறேன். அந்த நாளில் நாம் இயற்ற போகும் பணி எதுவோ அதிலிருந்து நம்மை திசைதிருப்பும் எதையும் அன்று காலையில் நாம் எதிர்கொள்ளக்கூடாது. ஆகவே காலையில் ஒரு போதும் செய்தித் தாள்களை படிக்கக்கூடாது என்பது எனக்கு நானே விட்டுக்கொண்ட அறிவிப்பு. மின்னஞ்சல்களைக் கூட காலையில் மிகப்பிந்தியேபார்ப்பேன்.

நான் காலையில் எழுந்து எதை உணரவேண்டும், அன்று எதைச் சிந்திக்கவேண்டுமென்பதை நானே முடிவெடுக்க வேண்டும். அன்று என் வாசலில் வந்து விழும் புறவுலகு அதை முடிவு செய்யக்கூடாது. அன்று செய்தித்தாளில் இருக்கும் செய்தி என்னை நிலை குலைய வைக்கலாம். அன்று இணையதளத்தில் வாசிக்கும் ஒரு வரி அல்லது அன்று மின்னஞ்சலில் வரும் ஒரு உணர்வு என்னை திசைதிருப்பலாம். ஆகவே எழுந்த உடனேயே அன்றைய காலை ஒளியை எதிர்கொள்கிறேன். பின் நேரடியாகவே அன்றைய வேலைக்குள் செல்கிறேன். பெரும்பாலும் வெண்முரசுக்குள்.பத்து மணிக்கு மேல் எனது மனநிலை ஊக்கம் கொண்டதாக அமைந்தபிறகுதான் மின்னஞ்சல்களையோ செய்தித் தாள்களையோ பார்ப்பது வழக்கம்.

இரண்டாவதாக, எந்த மனநிலையில் எங்கு சென்றாலும் அடித்தளத்தில் நாம் அன்று செய்ய வேண்டிய பணியை நினைவில் வைத்திருப்பது என் வழக்கம். மிகத்தீவிரமான இலக்கிய விவாதத்தின் நடுவே ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து வெண்முரசை எழுத முடியும் என்ற நிலையிலே என்னை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் முதன்மைக் கடமையை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.

மனம் ஒருபோதும் தன்னிச்சையாக நம் பணிகளை எண்ணிக் கொள்ளாது. கவலைகளை விரிவாக்கிக் கொள்வது அதன் முதல் இயல்பு. கவலைகள் இல்லையேல் அது உதிரி நினைவுகளில் அலையும். நம் முதன்மைப் பணியை முனைந்து எண்ணத் தொடங்கினால் அதுவே எண்ணமாக ஓடுவதையும் காணலாம். அப்படி நம் முதன்மைப் பணியில் ஆழம் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் எந்த இடைவெளியிலும் அதைச் செய்யமுடியும். நான் வெண்முரசை விமான நிலையங்களில் ரயில்களில் காத்திருப்பறைகளில் எல்லாம் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் எப்போதும் அதில்தான் இருக்கிறேன்.

மூன்றாவதாக, நான் பல தருணங்களில் சொல்லியிருக்கும் மிக எளிமையான விஷயம். புறச்சூழல்களே நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன. நமது ஆளுமையில் புறச்சூழலில் உள்ள இடத்தை நாம் ஒருபோதும் மறுக்கக்கூடாது. நம்மை நாம் ஒருவகையான சுயம்பு, தூய மனம் என்றெல்லாம் கற்பனைசெய்யவேண்டியதில்லை. அது வெற்று ஆணவமேயாகும்.நாம் ஒரு கண்ணாடிபோல ஒருவகையான பிரதிபலிப்ப்ய்தான். மனதிற்கு உகந்த இடத்தில் உகந்த முறையில் உங்கள் இருப்பை அமைத்துக் கொள்வதென்பதே உங்களைச் செயலாற்ற வைக்கும்.

அதாவது ஆழ்மனதுக்கு உகந்த முறையில் உங்கள் இடம் அமைய வேண்டும். அந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாது. எனது இருக்கையிலோ நாற்காலியில் கணிப்பொறி முன் அமர்ந்தாலே என்னால் எழுத முடியும். இடத்தை தொடர்ந்து மாற்றுவது, அந்த இடத்தில் பிறவகையான தொந்தரவுகளை அனுமதிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த அம்சத்தை இளையராஜா முதலிய பலரிடம் கவனித்திருக்கிறேன்.

நான்காவதாக, ஒரு நீண்ட வேலையை பல சிறு அலகுகளாக பிரித்துக் கொள்வது என்பது தொடர்ந்து பணியாற்றுவதற்கான வழி. தொடர்ந்து பத்து மணிநேரத்திற்குமேல் கூட நான் எழுதுவதுண்டு. வெண்முரசின் இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்கு சாதாரணமாகவே அவ்வளவு நேரமாகும். பத்து மணி நேரம் ஒருவர் தொடர்ந்து அமர்ந்திருப்பாரென்றால் இயல்பிலேயே அவருடைய மூளை சோர்வடைந்துவிடும். ஆனால் நான் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒருமுறை எழுவேன். கீழே சென்று டீ போட்டுக் குடிப்பதுண்டு. சிறிய நடை சென்று வருவதுண்டு.

ஆனால் இந்த இடைவெளிகளுக்குப்பிறகு மீண்டும் அதே இடத்தில் வந்து சேர்வேன். ஒரு வேலையின் முடிவில் ஒரு எச்சத்தை விட்டுச் செல்வதென்பது ஒரு நல்ல வழிமுறை.   ஓர் அத்தியாயத்தை அல்லது ஒரு பத்தியை முழுமையாக முடித்துவிட்டு எழமாட்டேன். ஒரு சொற்றொடர் பாதியில் நிற்கும்போதுதான் எழுந்து செல்வேன். திரும்பி வரும்போது விட்டதை முடிக்க முயன்றாலே அந்த மனநிலை அமைந்துவிடும். ஒர் அத்தியாயத்தை முடித்துவிட்டு போனால் புதிய ஒர் அத்தியாயம் தொடங்குவது மிகக்கடினமானது. முந்தைய வேலையை சரிபார்ப்பது, சீரமைப்பது என்பது மேலும் அதில் ஈடுபடுவதற்கான சிறந்த வழி .ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் என்றால் அதை பிழைதிருத்தும்போது தொடர்ந்து  எழுதுவதற்கான உளநிலை அமைகிறது.

கடைசியாக, எப்போதும் ஊக்க நிலையில் இருந்து கொண்டிருத்தல். தளர்ந்த அன்றாட மனநிலைக்கு திட்டமிட்டே இடம் கொடுக்காமலிருத்தல். அரட்டைகளை, அன்றாட எளிய செயல்களை முழுமையாகத் தவிர்த்துவிடுவது. தவிர்த்துவிடுகிறேன் என்பதை நானே அறிவிப்பதென்பதே தவிர்ப்பதற்குச் சரியான வழி. அனைவரிடமும் ’இல்லை இச்சிறுவிஷயங்களில் நான் ஈடுபடுவதில்லை, நான் தவிர்த்துவிடுகிறேன்’ என்று காட்ட ஆரம்பிக்கும்போதே உங்களை அவர்கள் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். அது பெரிய விடுதலை.

ஆனால் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருந்தாகவேண்டிய ஒரு குணம் உண்டு, அதை தன்முனைப்பு என்று சொல்லலாம். இன்னும் கூர்மையாக ஆணவம் என்றும் சொல்லலாம். இவ்வுலகம் மிகமிகப்பிரம்மாண்டமானது. இதன் அறிவுப்பெருக்கு நினைத்தற்கு அரிய பேருருக்கொண்டது. மாமேதைகளும் வரலாற்றுமானுடரும்கூட இதில் சிறுதுளிகளே. ஆகவே ஒருவன் செயலாற்றினாலும் ஆற்றாவிட்டாலும் அதில் குறிப்பாக ஒன்றும் நிகழப்போவதில்லை. அவன் தன் பங்களிப்பை ஆற்றவேண்டும், அதற்கு தான் முக்கியமானவன், தேவையானவன் என அவன் நம்பவேண்டும். காலத்தின் முன் நான் என எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை அவனுக்குத் தேவை. அறிவியக்கத்தில் செயல்படும் எவருக்கும் அந்த தணியா ஆணவமே கடைசிவரைக்கும் வரும் அருந்துணை

ஜெ

***

பழைய கட்டுரைகள்

செயலின்மையின் இனிய மது
ஒருமரம் மூன்று உயிர்கள்
செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?
தன்னறம் சாங்கிய யோகம்
கர்மயோகம்
தன்னறம்
யாதெனின் யாதெனின்…
செய்தொழில் பழித்தல்
விதிசமைப்பவனின் தினங்கள்

விதிசமைப்பவர்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்

நான்கு வேடங்கள்
தேடியவர்களிடம் எஞ்சுவது

***

முந்தைய கட்டுரைகுற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு
அடுத்த கட்டுரைசொல்வளர்காடு முன்பதிவு