66. கிளையமர்தல்
சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில் எழும் தன்னுணர்வில் பிற எவரையுமே உள்ளூர தான் பொருட்படுத்தவில்லை என்றுணர்ந்து எரிச்சல் கொண்டாள். அதை வெல்ல மேலும் ஏளனத்தையும் பரிவையும் கலந்து அவளிடம் காட்டினாள். அதை சாயையும் அறிந்திருந்தாள். அவளும் அதையே சர்மிஷ்டையிடம் காட்டினாள்.
ஒவ்வொரு நாளும் சர்மிஷ்டையைப் பற்றி சாயை ஏதேனும் ஒரு பகடியை தேவயானியிடம் சொன்னாள். சிறு வேடிக்கைக்கும் தேவயானி வாய்விட்டு உரக்க நகைத்தாள். ஒன்றாகவே பறக்கும் இரு கருவண்டுகள், இரு செந்தாமரை மொட்டுகளில் எதில் அமர்வதென்று இணைந்தே தடுமாறுகின்றன என்ற பாடல்வரியைக் கேட்டு தேவயானி தலையசைத்துப் பாராட்ட அவை எழுந்ததும் சாயையிடம் “ஏன் அந்த கருவண்டுகள் இணையாக பறக்கின்றன, அவை உடன்பிறந்தவையா?” என்று சர்மிஷ்டை கேட்டாள். “ஆம், அந்த மொட்டுகள்தான் இரட்டைப்பிறவிகள்” என்று சாயை சொன்னாள். சர்மிஷ்டை “மெய்யாகவா?” என வியந்தாள். அதை சாயை தேவயானியிடம் சொன்னபோது அவள் சிரித்ததில் புரைக்கேறியது.
சாயையும் தேவயானியும் சோழியாடிக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த அவள் “எங்கள் அரண்மனையில் சேடியர்தான் இதை ஆடுவார்கள்” என்றாள். “அரசியர் நாற்களமே ஆடவேண்டும் என்றார் அன்னை.” சாயை சிரிப்பை ஒதுக்கியபடி “உங்களுக்கு நாற்களமாடத் தெரியுமா, இளவரசி?” என்றாள். “தெரியாதே…” என்றபடி சர்மிஷ்டை அமர்ந்தாள். “சோழியாவது ஆடுவீர்களா?” சர்மிஷ்டை “இல்லை, நான் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒரே தருணத்தில் அவ்வளவு செயல்களைச் செய்ய என்னால் இயல்வதில்லை” என்றாள். “அரசியர் சோழியாடுவதில்லை இளவரசி, சோழியாடுவது கந்தர்வர்களின் விளையாட்டு” என்றாள் சாயை. “மெய்யாகவா?” என சர்மிஷ்டை வியந்து முகவாயில் கைவைத்தாள். “போதுமடி” என்றாள் தேவயானி.
“ஆடுகிறீர்களா, இளவரசி?” என்று சாயை எழுந்துகொண்டாள். “இல்லை… அய்யோ!” என சர்மிஷ்டை பின்னடைந்தாள். “பிடித்து அமர வை” என்றாள் தேவயானி சிரித்தபடி. சாயை பின்னால் நகர்ந்து சுவரில் முட்டிக்கொண்ட சர்மிஷ்டையைப் பிடித்து தோள்களை அழுத்தி அமரச் செய்தாள். “எனக்கு உண்மையிலேயே ஆடத்தெரியாது” என்றாள் சர்மிஷ்டை குரல் தளர. “அதை நான் கற்றுத்தருகிறேன்” என்றபடி தேவயானி சோழிகளை பரப்பி அதில் ஒன்றை எடுத்து மேலே வீசி அது கீழே வருவதற்குள் கீழிருந்து சோழிகளை அள்ளி அள்ளியவற்றை இரண்டாகப் பகுத்து மீண்டும் பரப்பினாள். “என்னால் மேலெழும் சோழியைப் பார்த்தால் கீழே அள்ள முடியவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “மிக எளிது… இரண்டையுமே பார்க்கவேண்டியதில்லை. கைகளின் ஒத்திசைவை மட்டும் கண்கள் கண்காணித்தால் போதும்” என்றாள் தேவயானி.
சோழியாடுதல் ஒவ்வொரு நாளும் பலநூறு இடங்களில் அரண்மனை அகத்தளத்தில் நடந்துகொண்டிருந்த போதிலும்கூட சர்மிஷ்டை அவ்வாட்டத்தை கூர்ந்ததே இல்லை. சேடிகளும் செவிலியரும் ஆடும்போது அவளும் அருகே அமர்ந்து நோக்கியதுண்டு. சோழி ஆடல் கைத்திறனும் கண்திறனும் கணக்குத்திறனும் இணைந்து ஊழுடன் முயங்கி ஆடும் ஒரு நடனம் என்று அவளுக்குத் தோன்றியது. கைகள் மேலும் கீழும் பறக்க ஊடே விழிகள் அலைய அவர்கள் ஆடுவது ஓர் இசைக்கருவியை வாசிப்பது போலிருக்கும். கைகள் மட்டுமே எனக் கண்டால் ஒரு நடனம். அல்லது வானில் சுழன்றுகொண்டிருக்கும் இரு பறவைகள்.
சோழிகளை மட்டும் நோக்கினால் மேலெழுந்து கீழே வரும் சோழியும் கீழிருந்து கைகளுக்குள் புகும் சோழிகளும் தங்களுக்குள் பிறிதொரு ஆடலை எவருமறியாமல் நிகழ்த்திக்கொண்டிருப்பதாகத் தோன்றும். சிரிப்புகள், பகடிகள். ஊழென்று கொண்டால் ஒவ்வொரு முறையும் மிகச் சிலரே அதில் வெல்வதெப்படி? திறன் என்று கொண்டால் பெருந்திறன் கொண்டவர்களை எளியவர்கள் வெல்வதெப்படி? “அமர்க, இளவரசி” என்று சேடியர் சொல்கையில் “இல்லை, அரசியர் இதை ஆடலாகாது” என பின் நகர்ந்துகொள்வாள்.
“மிக எளிய விளையாட்டு. ஆடத்தொடங்கினால் பித்தாக்கி விடும்” என்றாள் அவள் அணுக்கத்தோழி சியாமளை. “இதோ, மேலே துள்ளி எழுவது இவ்வரண்மனைக்கு வெளியே உள்ள உலகு. கைகளால் நாம் அள்ளிப்பற்றி எடுப்பது அகத்தளத்தில் உள்ளது. எழுவது ஆண், பரவுவது பெண். ஆண் தெய்வம், பெண் இயற்கை” என்றாள் இளம்விறலி. வெற்றிலை மென்ற பற்கள் தெரிய சிரித்தபடி முதுவிறலி “எங்கு கற்றாய் இதை?” என்று கேட்டாள். “இவ்வளவு சொற்களைச் சேர்த்து அள்ளுவதால்தான் இவள் ஒருபோதும் ஆட்டத்தில் வெல்வதில்லை போலும்” என்றாள் பிறிதொருத்தி.
சாயையும் தேவயானியும் ஆடும் ஆட்டம் முற்றிலும் நிகர்நிலை கொண்டது. தேவயானி தன் ஆடிப்பாவையுடன் ஆடுவதாகவே தோன்றும். விழிகள் கூர்கொள்ள சாயை மிக மெல்ல தன் கையை நீட்டும்போது புலிபோலிருப்பாள். நிகர் எடை கொண்ட இரு துலாக்கள் நடுவே முள் என ஊழ் நின்று ஆடுவதையே அவள் கண்டாள். ஒவ்வொரு கணமும் வெற்றி இதோ என்றும் இல்லை மறுபக்கம் என்றும் ஆடியது. காலை முதல் தொடங்கிய ஆடல் உச்சி உணவு வரை நீடித்தது. எப்போதும் அடுத்த ஆடலுக்கான வஞ்சினத்துளியை எஞ்சவிட்டு முடிந்தது.
சர்மிஷ்டை தேவயானியின் கைகளை நோக்கியபடி விளையாடத் தொடங்கினாள். அவளால் சோழிகளை அள்ள முடியவில்லை. எழுந்ததை நோக்கிய விழி தாழுமுன் கீழிருந்த கை அனைத்து சோழிகளையும் தவறவிட்டது. மீண்டும் மீண்டும் கை நழுவ கண்ணீர் மல்கி “என்னை விட்டுவிடுங்கள்… என்னால் இயலாது” என்றாள். “நீ ஆடியே ஆகவேண்டும். ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும்” என்றாள் தேவயானி. “வேண்டாம்” என்று அவள் கண்ணீரை ஒற்றியபடி தலையசைத்தாள். “ஆடியே ஆகவேண்டும்” என்று உரத்த குரலில் தேவயானி சொல்ல அவள் தலை நிமிராமலேயே கண்திறந்து பார்த்து சரியென்று தலையசைத்தாள். “அத்தனை ஆடல்களும் திறனுக்கும் ஊழுக்குமான போர்கள். ஆடலறியாமல் எவரும் ஆளமுடியாது” என்றாள் தேவயானி.
ஒவ்வொரு நாளும் கேலிக்குரிய வகையில் சர்மிஷ்டை தோற்றுக்கொண்டிருந்தாள். தன் ஆட்டம் சுவை கொள்வதற்காகவே அவளுக்கு சற்று விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானாள் தேவயானி. மேலெழும் சோழிக்கும் கீழிருக்கும் சோழிகளுக்கும் நடுவே விழி அலையவும், இரு கைகளும் தங்களை அறியாமலேயே இலக்குகளை நோக்கி செல்லவும் பயிற்றுவித்தாள். “எண்ணாதே! எண்ணிக் கணக்கிட்டால் இச்சிறு காலத்துளிக்குள் இரு கைகளும் அவற்றை நிகழ்த்த முடியாது. எண்ணத்தைவிட விரைவுகொண்டது சித்தம். அதற்கு விழிகளையும் கைகளையும் ஒப்படை” என்றாள் தேவயானி.
“சோழியாடலின் நுட்பமென்பது எண்ணத்தை முற்றழியச் செய்வதே. எண்ணமென்பது நிலையழிவு. உடலுறுப்புகளும் உள்ளமும் முழுமையான ஒத்திசைவு கொள்கையில் எண்ணம் அழிகிறது. எண்ணமே காலம். காலம் அழிகையில் காலமில்லாப் பெருவெளியில் வாழும் ஆழ்சித்தம் எழுந்து நின்று விளையாடத் தொடங்குகிறது. அதற்கு கண்கள் ஆயிரம், கைகள் பல்லாயிரம்” என்றாள் தேவயானி. அவள் சொன்னவை அப்போது புரியவில்லை, ஆனால் அவள் குரலென்பதனால் சித்தத்தில் செதுக்கப்பட்டன. சொல்சொல்லென உடன்வந்தன. நினைவொழிந்து கனவெழுகையில் முளைத்துக்கொண்டன. ஆயிரம் கைகளில் ஒளிரும் விண்மீன் சோழிகளுடன் அவள் இருளும் ஒளியுமிலா வெளியொன்றில் அமர்ந்திருந்தாள்.
மெல்ல மெல்ல அவள் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். ஒருமுறை அக்காலத் தெறிப்புக்குள் கை நிகழ்ந்து முடிந்தபோது அவளே வியந்து கூச்சலிட்டாள். மறுமுறை கையே அதை அறிந்திருப்பதை உணர்ந்தாள். மிகச் சரியாக சோழிகளைப் பறித்துப் பரப்பியபோது தேவயானி உரக்க நகைத்து கை நீட்டி அவள் தொடையில் தட்டி “நன்று! நன்று!” என்று பாராட்டினாள். ஒவ்வொரு பாராட்டும் அவளுக்கு உவகையை பெருக்கியது. “உடல் எவ்வளவு தெரிந்திருக்கிறது!” என அவள் வியந்தாள். “அப்படியென்றால் உளம் எவ்வளவு அறிந்திருக்கும்” என்று தொடர்ந்தாள். “வெல்வதை உள்ளமும் உடலும் விரும்புகின்றன” என்றாள் தேவயானி. “வெற்றியின்போது அவை கொள்ளும் மதர்ப்பு வியப்பூட்டுகிறது. தங்களை கட்டிவைத்திருக்கும் காலத்தையும் வெளியையும் அவை கடந்து செல்கின்றன அப்போது.”
அந்த ஆடலில் அவள் ஒருமுறை தேவயானியை வென்றாள். நான்குமுறை வென்று தேவயானி வெறுங்களம் கண்டபோது “ஒருநாள் உங்களை மெய்யாகவே வெல்லப்போகிறேன்” என்று அவள் சொன்னாள். “வெல்! வென்று காட்டு! அன்று உனக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்றாள் தேவயானி. “நான் விரும்பும் பரிசாக அது இருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீயே சொல்” என்றாள் தேவயானி. “சுமக்க முடியாத பரிசு, அழியவே அழியாதது… சரியா?” என்றாள் சர்மிஷ்டை.
தன் இல்லத்துக்கு மீண்டதும் இரவில் தோழியரை அழைத்து அமரச்செய்து வெறியுடன் பயின்றாள். தன்னந்தனிமையில் இருக்கையில் கண்ணுக்குத் தெரியாத சோழிகளை ஆடிக்கொண்டிருந்தன அவள் கைகள். ஆழ்கனவில் மீண்டும் மீண்டும் அவள் தேவயானியுடன் விளையாடினாள். தேவயானிக்கு நிகராக சாயையென அவள் அமர்ந்து ஆடினாள். பின்னர் தேவயானியென அமர்ந்து சாயையுடன் ஆடினாள். சாயையும் தேவயானியுமாக ஆடும் அவளை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவள் திறன் பெருகிவருவதை தேவயானி உணர்ந்தாள். சாயையிடம் “மிக அருகே வந்துவிட்டாள். இத்தனை விரைவில் இவள் இதை கற்றுக்கொள்வாள் என்று எண்ணவே இல்லை” என்றாள். “அவர்களின் கைகள் மெலிந்தவை, அரசி. மிக விரைவாக அவை சுழலமுடியும்” என்றாள் சாயை. “ஆம், அதைவிட பிறிதொன்றுண்டு. வெல்வதன் இன்பம் நம்மைவிட அவளுக்கு மிகுதி. அது அவளை வெறிகொண்டு எழச்செய்கிறது. உடல்வலுக் குறைந்தவர் வில்லவரும் வேலவரும் ஆவதன் நுட்பம் அது என்பார்கள்” என்றாள் தேவயானி.
அவள் தூணில் சாய்ந்து நோக்கி நிற்கையில் தேவயானியும் சாயையும் விளையாடிக்கொண்டிருந்தனர். தேவயானி சோழியை அள்ளிப்பரப்பி களம்வென்று “இனி உனக்கு” என்றாள். சோழியை கைகளால் அள்ளிப் பரப்பி மூன்று சோழிகளை மேலெழுப்பி அவை வருவதற்குள் மும்முறை அள்ளிப்பரப்பி மீண்டும் பரப்பி கணக்கிட்டு விழிதூக்கினாள் சர்மிஷ்டை. ஒருகணம் தேவயானியின் விழிகளில் திகைப்பு வந்து மறைந்தது. சாயை உரக்க நகைத்து “வெற்றி! எளிய வெற்றியல்ல, மத்தகத்தால் மோதி உடைத்து உட்புகும் வெற்றி” என்றாள். தேவயானியும் நகைத்து “ஆம், வென்று விட்டாள்… தன்னை கடந்துவிட்டாள்” என்றாள்.
சர்மிஷ்டை “உங்கள் அடி தொடர்ந்தேன்” என்றாள். “நீந்துகையில் பறந்தேன். இப்போது கிளைநுனியில் இறகசையாது அமர்ந்திருக்கிறேன்.” தேவயானி அவள் கைகளைத் தொட்டு “சொல், நான் நீ கோரும் பரிசை அளிக்கிறேன்” என்றாள். “என்னையும் என் கொடிவழியையும் வாழ்த்தி ஒரு பாடல் புனைந்து எனக்களியுங்கள், அந்தணர் செம்மொழியில்” என்றாள் சர்மிஷ்டை. “இவ்வளவுதானா?” என்று சாயை சிரித்தாள். தேவயானி “சரி, ஆனால் ஒருமுறைதான் சொல்வேன். அதற்குள் அது உன் உளம் நின்றால் அப்பாடலுக்கு நீ தகுதியுடையவள் என்று பொருள்” என்றாள். “ஆம்” என்றாள் சர்மிஷ்டை.
தேவயானி “சிம்மத்துடன் விளையாடுபவன் அழகன், துலாமுள் என நெறிநிற்பவன் பேரழகன். அவனை ஈன்றவளோ தன் கனிவால் அழகுகொண்டாள். மலர்நாடும் வண்டே, கேள். மலர்களில் அழகென்பதே கனிகளில் சுவையென்றாகிறது” என்றாள். புரியாமல் விழித்து நோக்கிய சர்மிஷ்டை சட்டென்று கைகூப்பி “என் கொடிவழியில் எழுபவர்களா அவர்கள்?” என்றாள். தேவயானி “சொல் பார்க்கலாம்” என்றாள். ஒவ்வொரு சொல்லும் ஒரு தனி உயிரென வந்து தன் முன் அணிவகுத்து நிற்பதை சர்மிஷ்டை கண்டாள். ஒவ்வொன்றையும் தொட்டு அவற்றின் பேர் சொல்ல அவளுக்கு எந்த இடரும் இருக்கவில்லை.
தேவயானி “நன்று, உன் நாச்சுழிப்பும் கூர்மை கொண்டுள்ளது” என்றாள். “உங்களுடன் உரையாடுகிறேன் அல்லவா?” என்றாள் சர்மிஷ்டை. “அந்தணச் செம்மொழியில் அசுரருக்கு இயற்றப்பட்ட முதல் பாடல் இது” என்று சாயை சொன்னாள். தேவயானி “உண்மையாகவா? எவரும் பாடியதில்லையா?” என்றாள். “அது வேதமொழி அல்லவா?” என்றாள் சாயை. “மலர்கள் மண்ணில்தான் வேர்கொண்டுள்ளன” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இப்பாடலை எனது கொடிவழிகள் பாடும். எங்கள் அரண்மனையில் இது பொறிக்கப்பட்டிருக்கும்” என்றாள்.
சாயை குடிலுக்குப் பின்பக்கம் சென்று பிற சேடிகளை அழைத்து “இளவரசிமேல் அரசி ஒரு பாடல் புனைந்திருக்கிறார்கள். கேளுங்கள்” என்றாள். “பாடலா…?” என்று உள்ளே வந்த சேடியரிடம் சாயையே அப்பாடலை உரக்க சொன்னாள். “நன்று!” என்று அவர்கள் மெல்லிய திகைப்புடன் சொல்லி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். சர்மிஷ்டை “அழியாத சொல். ஒரு மூச்சென இயல்பாக வெளிப்படும் கவிதை என்றுமழியாது என்று முன்பு என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்” என்றாள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிநோக்கி இதழ்களுக்குள் புன்னகை செய்தார்கள்.
அன்று முழுக்க அக்கவிதையையே சொல் மாற்றிச் சொல்லி பொருள் மாற்றிக் கொண்டு விளையாடினார்கள். “என்னடி இது, ஒரு பாடலை பந்தென போட்டு விளையாடுகிறீர்களே?” என்று தேவயானி சினந்துகொண்டாள். “ஆம், இக்கவிதையை இனி பிறரெவரும் சொல்லக்கூடாதென்று தடை சொல்லப்போகிறேன்” என்றாள் சர்மிஷ்டை. “இது என் மூத்தவளிடம் இருந்து எனக்குக் கிடைத்த நற்பரிசு. பிறர் அதை தொடவேண்டியதில்லை” என்றாள். சேடி ஒருத்தி “ஆம், இனி எவருமே இதை பாடக்கூடாது என ஆணையிடவேண்டும்” என்றாள். சர்மிஷ்டை அந்தப் பகடியை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றாள். அவர்கள் சிரிப்புடன் திரும்பிச்சென்றனர்.
அந்தியில் சுக்ரரின் வகுப்பில் சாயை எழுந்து “இன்று தேவி பாடிய பாடல் இது, ஆசிரியரே” என்றாள். “சொல்க!” என்று சொல்லி சுக்ரர் முகமலர்வுடன் நோக்க சர்மிஷ்டை அப்பாடலை சொன்னாள். “அரிய பாடல்” என்றார் சுக்ரர். “ஒரு பெண்ணின் அழகு அவள் மைந்தரில்தான் முழுமையாக வெளிப்படுகிறது. எங்கோ இன்னும் எழாத காலக்களத்தில் இளவரசியின் முகம் எழுவதை உள்விழியால் நோக்கமுடிகிறது.”
கிருதர் “பரிசு என்று இப்பாடலை ஏன் கேட்டீர்கள், இளவரசி?” என்றார். இயல்பாக “பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது? அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை. கிருதரின் விழிகள் ஒருகணம் மாற அவர் தேவயானியை நோக்கி திரும்பினார். தேவயானியின் முகம் மாறிவிட்டதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். சர்மிஷ்டை மட்டும் அதை காணவில்லை. “பொன்னும் பொருளும் எங்களிடம் உள்ளன. இல்லாதது கல்வி அல்லவா? அதைத்தான் நான் தேவியிடம் கேட்டேன்” என்றாள். “நன்று” என்று சுக்ரர் தலையசைத்தார்.
சர்மிஷ்டை கிளம்பிச்சென்ற பின்னரும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “அரசகுடியினரின் சொல் என்பது ஆயிரம்முறை மடக்கப்பட்ட கூரிய கத்தி என்பார்கள். சொல்லெண்ணிப் பேசும்பொருட்டே அவர்களுக்கு அனைத்துக் கல்வியும் அளிக்கப்படுகிறது” என்றார் சத்வர். “அவள் சொன்னதில் பிழையேதுமில்லை, தேவியிடம் அவள் பிறிதெதை கேட்கமுடியும்?” என்றார் சுக்ரர். “அவர் கொடிவழியில் பேரரசர் எழவிருப்பதை சொல்லிவிட்டீர்கள், தேவி. நெறிநின்றாளும் அரசனும், சிம்மத்துடன் விளையாடும் வீரனும்” என்றார் கிருதர்.
“அவர்களுக்கும் நம் தேவிக்கும் அகவை ஒன்றே. ஆனால் பல ஆண்டுகள் இளையவள் போலிருக்கிறார். உடலும் உள்ளமும் முதிராதவள்போல்” என்றார் சுஷமர். “ஆம், அரண்மனையில் இளவரசியென அவர் மட்டுமே இருக்கிறார். அவரை மணம்கொள்பவர் அசுர நாடனைத்தையும் தானும் கொண்டவராவார். அதனாலேயே செம்பட்டில் பொதிந்து சந்தனப்பேழையில் வைத்திருக்கும் அருமணிபோல் இத்தனை நாள் அவரை பேணிவிட்டார்கள். அவரும் புறவுலகு காணாதவராகவே இருந்துவிட்டார்” என்றார் கிருதர்.
“பாரதவர்ஷத்தை ஆளும் விருஷபர்வனின் அரண்மனைக்கு புறவுலகு கை சொடுக்கினால் வந்து சேருமே?” என்றார் சத்வர். “வந்து சேரும், அங்கு காற்று எப்படி வருகிறதோ அதைப்போல. அனைத்துச் சாளரங்களிலும் வெட்டிவேர்த் தட்டிகள் தொங்குகின்றன. மலர்கள் நிறைந்த மரங்கள் அனைத்துச் சாளரங்களுக்கு அப்பாலும் நிறைந்துள்ளன. நறுமணக் காற்று மட்டுமே சென்ற பல தலைமுறைகளாக அவ்வரண்மனையை அடைந்திருக்கிறது. நல்லிசையை மட்டுமே அது சுமந்து வந்திருக்கிறது” என்றார் கிருதர்.
“அதற்காக பேரரசனின் மகளை இழிமணமும் கொடு ஓசையும் கொண்டு பழக்க முடியுமா?” என்றார் சுஷமர். “ஊற்றில் கொப்பளிப்பது ஒருபோதும் ஆறல்ல. மாசுகள் அடைந்தாலும் கரை பிறழாது கடல் நோக்கி ஒழுகுவதே ஆறு. இளவரசி இன்னும் எதையும் அளிக்கக் கற்கவில்லை. அனைத்தையும் பெற்றுக்கொண்டு குழந்தையென வளர்ந்திருக்கிறார்” என்றார் கிருதர். “அன்னையென்றாகி முதிரும்போது அளிக்கும் பயிற்சி பெற்றுவிடுவாள்” என்று சுக்ரர் நகைத்தார்.
கிருதர் “அவருக்கு இவ்வாண்டே மணம்முடிக்கும் எண்ணம் விருஷபர்வனுக்கு உள்ளதென்று எண்ணுகின்றேன்” என்றார். “மணத்தன்னேற்பு வைக்கப்போகிறானா?” என்றார் சுக்ரர். “அவ்வெண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் முதன்மை அமைச்சர் அதை உடனடியாக மறுத்துவிட்டார். பாரதவர்ஷத்தின் மணிமுடிக்கான மணத்தன்னேற்பல்லவா அது? அது இந்நிலத்தில் அரசர்களுக்கிடையே போட்டிகளையும் கசப்புகளையும் உருவாக்கி மணம்நிகழ்ந்த பின்னரும் நீடிக்கும். பெரும்போராகவே மாறக்கூடும்” என்றார் கிருதர். “மேலும் உகந்த மணமகனை தெரிவுசெய்யும் திறன் இளவரசிக்கு உண்டு என்றும் அரசர் எண்ணவில்லை.”
“பிறகு என்ன செய்யவிருக்கிறார்?” என்றார் சத்வர். “சந்திரகுலத்து அரசன் யயாதிக்கு அவரை மணமுடித்துக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார் விருஷபர்வன்” என்றார் கிருதர். தேவயானி நிமிர்ந்து நோக்காமல் சுவடிகளை அடுக்கி நூல்கண்டால் கட்டினாள். “நகுஷனின் மைந்தனுக்கா?” என்று சத்வர் வியப்புடன் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். “அவன் முன்னரே மூன்றுமுறை மணமுடித்து விட்டானே? இளவரசியைவிட பன்னிரண்டாண்டு அகவை முதிர்ந்தவன்” என்றார் சத்வர்.
“அரசனுக்கேது அகவை? பாரதவர்ஷத்தில் இரண்டு மணிமுடிகளே இன்று நிகரானவை. ஹிரண்யபுரியின் மணிமுடியும் குருநகரியின் சந்திரகுலத்து மணிமுடியும். ஒருநாள் இரு படைகளும் களம்நின்று மோதப்போகின்றன என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கிறார்கள் அரசுசூழ்வோர். அசுரரும் ஷத்ரியரும் போரிடுவார்களென்றால் இரு இணைமதயானைகள் மத்தகம் முட்டுவதற்கு நிகர் அது. இரண்டுமே இறந்து வீழும். அது கழுதைப்புலிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொண்டாட்டமாக ஆகிவிடும். அமைச்சர் அதை எண்ணியே இம்முடிவை எடுத்திருப்பார்” என்றார் கிருதர்.
“யயாதி சர்மிஷ்டையை மணந்தால் பாரதவர்ஷத்தில் பல தலைமுறைகளுக்கு போர் முழுமையாக நிறுத்தம் செய்யப்படும். அவர்கள் குருதியில் பிறக்கும் மைந்தனோ இங்கு பகைவர்களென எவருமே அற்றவனாக இருப்பான்” என கிருதர் தொடர்ந்தார். சத்வர் மெல்ல தனக்குள் என “யயாதி அழகன் அல்ல. வீரனும் அல்ல. நெறிநூல்கற்றவன், மொழி தேர்ச்சி கொண்டவன் என்கிறார்கள்” என்றார். கிருதர் “இளவரசி அழகியல்ல, எனவே அவனுக்கும் அழகு தேவையில்லை. இரு நாடுகள் இணையுமென்றால் எதிரிகளில்லை, ஆகவே வீரமும் தேவையில்லை. ஆனால் இப்பெருநிலத்தை ஒரு குடைக்கீழ் ஆள்பவன் துலாக்கோல் முள்ளசையாது காக்கும் நெறியறிந்தவனாக இருக்கவேண்டும். அத்தகுதி அவனுக்கு உண்டு என்கிறார்கள். பிறகென்ன?” என்றார்.
“தூது அனுப்பப்பட்டுள்ளதா?” என்றார் சுக்ரர். கிருதர் “ஆம், விருஷபர்வன் தன் தலைமை அமைச்சரையே நேரில் சென்றுவர ஆணையிட்டிருக்கிறார். சம்விரதர் சிறிய அணிப்படையுடன் கிளம்பிச்சென்று மூன்று நாட்கள் ஆகின்றன என்று இன்றுதான் அறிந்தேன். இளவரசியின் சிறப்புகளை எடுத்து இயம்ப ஏழு விறலியரும் இசைப்பாணர் நால்வரும் உடன் சென்றிருக்கிறார்கள். யயாதிக்கு ஒப்புதல் என்றால் அச்செய்தியுடன் அவர்கள் திரும்பி வருவார்கள். அதன் பின்னரே தங்களிடம் வந்து முறைப்படி அறிவிக்கவேண்டுமென்று விருஷபர்வன் எண்ணியிருக்கிறார்” என்றார். “அவன் ஒப்பிவிட்டான் என்றே தோன்றுகிறது. ஆகவேதான் செய்திகள் வெளிவருகின்றன.”
சுக்ரர் “நன்று! என்னிடம் முன்னால் கேட்டிருந்தால்கூட முதலில் யயாதியின் ஒப்புதலைப் பெற்று வருக என்றே சொல்லியிருப்பேன்” என்றார். தயங்கிய குரலில் “எவ்வண்ணம் இருப்பினும் அவர்கள் ஷத்ரியர்” என்று கிருதர் சொன்னார். “அசுரரைவிட தாங்கள் ஒரு படி மேலென்று எண்ணுபவர்கள் அவர்கள். விண்ணில் திகழும் சந்திரனின் கொடிவழியினர் என்று பாடப்பட்டவர்கள் அக்குடியினர். அவைகூடி கருத்தறிய முற்பட்டான் என்றால் விருஷபர்வனின் மணத்தூது வீணாகவும் வாய்ப்புள்ளது” என்றார். சுஷமர் “அதற்கு வழி இல்லை” என்றார். கிருதர் “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், ஆசிரியரே?” என்றார்.
சுக்ரர் “அவன் வீரனல்ல என்றீர்கள். விருஷபர்வன் வீரனென்று அவன் அறிவான். இத்தூதை ஒரு நல்வாய்ப்பென்றே அவன் கருதுவான்” என்றபின் மெல்ல நகைத்து “நெறியறிந்தவன் வீரனல்ல என்றால் கோழையாகவே இருப்பான். நெறிகளனைத்தும் வீரத்தால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை என்று அவன் அறிந்திருப்பான். எனவே நெறியை எண்ணி ஒவ்வொரு கணமும் அஞ்சிக்கொண்டிருப்பான்” என்றார்.
அன்று திரும்பி வருகையில் தேவயானி சாயையிடம் “யயாதியைப்பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?” என்றாள். “கோழை” என்று சாயை சொன்னாள். மெல்லிய சீற்றத்துடன் “முழுமையாக சொல்லடி” என்றாள். “முன்னரே நான் அறிந்திருக்கிறேன். நான் அங்கு அகத்தளத்தில் இருக்கையிலேயே அவரைப்பற்றிய செய்திகளை அரசியர் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அறிவுள்ள கோழை நெறிநூல்களை துணைபற்றுகிறான். கோழைகளுக்குக் காவலாக நெறிநூல் நின்றிருக்குமென்று அவன் அறிகிறான். இளமையிலேயே நெறிகளை தன்னைச் சுற்றி அமைத்து கோட்டை கட்டிக்கொள்ளும் ஒருவன் அறியாது அதற்குள் சிறைப்படுகிறான். சிறைப்பட்டவனின் காமம் அணைக்குள் செறிந்த நீரின் பேரெடை கொண்டது.”
“ஒழுகாத நீர் ஒவ்வொரு அணுவையும் அழுத்திக்கொண்டிருக்கிறதென்பார்கள். யயாதியை பெருங்காமம் கொண்டவனென்று சூதர்கள் பாடுகிறார்கள். தன் அரசின் மூன்று பெருங்குடிகளிலிருந்தும் மணம் புரிந்திருக்கிறான். அதற்கப்பால் என்று அவ்வுள்ளம் தாவிக்கொண்டிருக்கும்” என சாயை தொடர்ந்தாள். “சர்மிஷ்டையை பெண்ணென்று அல்ல பெருங்கொடை என்று எண்ணுவான்.” தேவயானி ஒன்றும் சொல்லாமல் உடன்வந்தாள். “ஏன் வினவினீர்கள், அரசி?” என்றாள் சாயை. “அவள் அவனை மணந்தால் புவியில் பிற அரசர்கள் தனிமுடி சூட இயலாது அல்லவா?” என்றாள் தேவயானி. அவள் உள்ளம்செல்லும் திசையை அறிந்த சாயை “ஆம்” என்றாள்.
“அவனை நான் கண்டேன்” என்றாள் தேவயானி. “எங்கு?” என்றாள் சாயை திகைப்புடன். “கனவில். தோள் ஓய அம்புசெலுத்தி பெருகிச்செல்லும் நீரை அணைகட்ட முயன்றுகொண்டிருந்தான்.” சாயை சிரித்து “பெருக்கு அவிந்ததா?” என்றாள். தேவயானி “முற்றிலும் எப்படி நிலைக்கும்? அவன் ஆவநாழி ஒருபோதும் ஓயமுடியாது” என்றாள். சாயை சிரித்து “மூடன்” என்றாள். “நான் பிறிதொருத்தியையும் அக்கனவில் கண்டேன். வராகி, அனல்வடிவோள்” என்றாள் தேவயானி. சாயை புரியாமல் நோக்கிக்கொண்டு உடன்வந்தாள். “எரியும் காட்டில் அவள் குரல் முழங்குவதை கேட்டேன்” என்றாள் தேவயானி.