‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65

65. பறந்தெழுதல்

தேவயானியின் வருகையால் சர்மிஷ்டை அகம்குலைந்தது அவள் முகத்தில் சொற்களில் நடையில் அனைத்திலும் வெளிப்பட்டது.  “சுழல்காற்று கலைத்த தாமரைபோல” என்று விறலி ஒருத்தி அகத்தளத்தில் அமர்ந்து அவளை நகையாடினாள். அப்போது அவள் அங்கே வர அவள் அதே சொல்லொழுக்கில் பேச்சை மாற்றி “நீரலைகள் காற்று சென்றதுமே மீள்கின்றன. தாமரையோ மீள்வதே இல்லை” என்றாள்.

சர்மிஷ்டை வந்து அமர்ந்து “என்ன?” என்றாள். “ஒரு பாடல்” என்றாள் விறலி. “பிரிவுக்குப்பின் அனைத்தும் மீண்டுவிடுகின்றன. தலைவன் வளர்த்த காளையும், அவன் பேணிய வேங்கைமரமும், அவன் அமரும் பீடமும். காதல்கொண்ட அவள் உள்ளம் மட்டும் மீளவே இல்லை என்று கவிஞர் சொல்கிறார்.” அவள் வெற்றுவிழிகளுடன் “அப்படியா?” என்றாள். அவர்கள் விழிநோக்கி மென்னகை பரிமாறிக்கொண்டனர்.

எதையும் பயிலாத சிறுவீட்டுப் பெண் போலிருந்தாள் சர்மிஷ்டை. இளமையிலேயே அவளுக்கு மொழியும் கலைகளும் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் விருஷபர்வன். தென்குமரி முதல் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொணர்ந்து அரண்மனை வளாகத்திலேயே தங்க வைத்திருந்தான். ஒவ்வொரு நாளும் அவர்கள் முறைவைத்து அரண்மனைக்கு வந்து சர்மிஷ்டைக்கு கலைகளும் காவியமும் நெறிநூல்களும் ஆட்சிமுறைமையும்  கற்பித்தனர். ஆனால் அவள் எதையுமே கற்றுக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு அறிவும் அவளுக்கு வெறும் செய்திகளாகவே சென்று சேர்ந்தது. ஒரு செய்தி பிறிதொரு செய்தியை அழித்தது.

“இளவரசி, இவை செய்திகள் அல்ல. மொழியில் பதிந்த நிலமும் வாழ்க்கையும் என்று உணர்க! மொழியிலிருந்து நிலமாகவும் வாழ்வாகவும் உயிர்ப்பித்தெடுத்து அதில் வாழுங்கள். கற்றவை அழியும், வாழ்ந்து அறிந்தவையே மெய்மையென தங்கும்” என்றார் காவிய ஆசிரியரான சுருதசாகரம் அஷ்டகர். “ஒவ்வொரு நெறியும் கண்ணீரால் குருதியால் கண்டடையப்பட்டது. பெருங்கருணையால் வகுக்கப்பட்டு வாளேந்திய சினத்தால் நிலைநிறுத்தப்படுவது. அவ்வுணர்வுகளாக நெறிகளை அறியாதவர்களுக்கு நெறிகள் வெறும் மொழியலைகள் மட்டுமே. நெறியை மொழியாக அணுகுபவர் நெறியின்மையையே சென்றடைவர்” என்றார் காமரூபத்து ஆசிரியரான மகாபத்மர்.

அவள் சிறுமியைப்போல மலர்ந்த விழிகளுடன் மாறாப் புன்னகையுடன் அமர்ந்திருப்பாள். “அப்புன்னகையால் அத்தனை அறிதல்களையும் அணைகட்டி இப்பால் நிறுத்திவிடுகிறீர்கள், இளவரசி” என்றார் இலக்கண ஆசிரியரான தண்டகர். “கல்வியால் சற்றேனும் வளர்பவரே கற்க முடியும் என்று இன்று அறிந்தேன். அடுத்த அடி வைத்த பின்னரே முந்தைய அடியை நாம் உண்மையில் புரிந்துகொள்கிறோம். திரும்பிநோக்கி அறிகையிலேயே அறிந்தவை செறிந்து அறிவென்றாகின்றன” என்றார் முறைமைகள் கற்பித்த சாந்தர்.

இயல்பிலேயே பாடுந்திறன் மட்டும் அவளுக்கு அமைந்திருந்தது. எனவே திருவிடத்தைச் சேர்ந்த பூர்ணர் கற்பித்த பண்களையும் பாடல்களையும் மட்டும் எளிதாக கற்றாள். அவற்றிலும் தேர்ச்சி என ஏதும் பெறவில்லை. உள்ளத்து உணர்வுகளை குரல் வழியாக வெளிப்படுத்தும் அடிப்படைப்  பயிற்சிக்குப் பின்னர் அவ்வெளிப்பாடுகளின் ஒவ்வொரு அலகையும் ஒரு வண்ணமெனக் கொண்டு கலந்தும் மயங்கியும் அவற்றை வண்ண அடுக்குகளின் வெளியென்று ஆக்கும் திறன் நோக்கி செல்ல அவளால் இயலவில்லை. “குயில் பாடுகிறது, அது குயில்பாட்டு என அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மானுடனின் இசை ஒவ்வொரு கணமும் மாறுபடுகிறது, விழியசைவுகளைப்போல. ஒவ்வொருவரின் உருவையும் செலவையும் பதித்திருக்கிறது, கால்சுவடுகளைப்போல” என்றார் பூர்ணர்.

“இளவரசி, உணர்வுகளை நேரடியாக இசைப்பதே நாட்டுப்புற இசை. அதுவே இசையின் அடித்தளம். இசையின் ஒரு பகுதி குருதிபோல மூச்சுபோல நம்முள் இருந்து ஊறுவது. ஆனால் பிறிதொரு பகுதி இக்காற்றுபோல அப்பாறைகள்போல புறத்தே இலங்குவது. உள்ளிருப்பது புறமென்றாகி நின்றிருக்கும் விந்தையே இசை. புறம்திகழ்வது உள்ளமென ஆகும் மறுவிந்தையும்கூட” என்றார் பூர்ணர். அவள் விழிவிரித்து நோக்கி அமர்ந்திருந்தாள். “உங்கள் துயரங்களை எண்களாக்க முடியுமென்றால், கனவுகளை கோலப்புள்ளிகளாக இட முடியுமென்றால், பொங்கி எழும் உவகைகளை கற்களாக தொட்டு எடுத்து அடுக்கிவைக்க முடியுமென்றால் நீங்கள் இசையை நிகழ்த்துகிறீர்கள்” என்றார் பூர்ணர்.

“ஒவ்வொருவரும் தங்கள் துயரங்களையும் கனவுகளையும் உவகைகளையும் அதிலிட்டு நிறைத்து அருந்திக்கொள்கிறார்கள். ஒவ்வொன்றையும் உருக்கொள்ளச் செய்யும் அச்சு அது” என்றார் பூர்ணர். மெல்லிய குரலில் சர்மிஷ்டை “என் உணர்வுகளுக்கு என் இசையில் இடமில்லையா?” என்று கேட்டாள். “உண்டு, அதை தாங்கள் மட்டுமே அறிவீர்கள். இசை எவருடைய தனியுணர்வும் அல்ல, அது மானுடத்துக்குரியது” என்றார் பூர்ணர். அன்று அவள் சுட்டுவிரலால் தரையில் சிறு கோலங்களை எழுதியபடி தலை குனிந்து நெடுநேரம் அமர்ந்திருந்தாள். அவள் அடுத்த சொல் எடுப்பதற்காக ஆசிரியர் காத்திருந்தார்.

பின்னர் அவள் விழிதூக்கி  “என்னால் இசையையும் கற்றுக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை, ஆசிரியரே. இவ்வரண்மனையில் எனைச் சூழ்ந்திருக்கும் அனைத்துமே நீங்கள் சொல்வதைப்போல எண்களும் புள்ளிகளும் கற்களும்தான். அலறல்களும் அழுகைகளும் நீள்மூச்சுகளும்கூட வெளிவந்ததுமே இங்கு அவ்வாறு ஆகிவிடுகின்றன. எனக்கென எஞ்சியிருப்பது இந்த இசை மட்டுமே. அறைக்குள் கதவுகளனைத்தையும் மூடிக்கொண்டு எனக்கு நானே விசும்பி அழுவதைப்போன்றது அது. அதையும் நான் இழந்துவிட வேண்டுமா?” என்றாள்.

மொழியில் கற்பிக்கப்பட்ட எதையும் மொழி கடந்து நோக்க அவளால் இயலவில்லை. நூறுமுறை அணியியல் கற்பிக்கப்பட்ட பின்னர்கூட மலர் மலரென்றும் தேனீ தேனீ என்றும் அதன் மீட்டல் வெறும் ஓசையென்றுமே அவளுக்குத் தெரிந்தது. ஒவ்வொன்றுக்கும் அடியில் உறைந்துள்ள ஒன்றை தொட்டுத் திறக்க தன்னால் இயலவில்லை என்று விரைவிலேயே உணர்ந்துகொண்டாள்.  “ஒரு தேனீயை ஏன் யாழென்றும் பறக்கும் சுடர் என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும்? அது தேனீ என்றே இருந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது?” என்று அவள்  கேட்டாள்.

ஆறாண்டுகளாக அவளுக்கு காவியம் கற்பித்துக்கொண்டிருந்த அஷ்டகர் ஒருகணம் அவளை நோக்கியபின் சுவடிகளை மூடி கட்டிவைத்துவிட்டு  “நன்று, முதல் கவிதை எழுதப்பட்ட நாள்முதல் கவிஞரிடம் கேட்கப்படும் கேள்வி இது.  எக்கவிஞனும் இதற்கு நிலையான மறுமொழியை சொன்னதில்லை. ஏனென்றால் அவனும் அதே வினாவை தனக்குள் கேட்டுக்கொள்கிறான். இருந்தும் ஏன் அவன் கவிதை எழுதுகிறானென்றால் அவன் கவிஞன் என்பதனால், அவனால் எழுதாமலிருக்க இயலாதென்பதனால்” என்றார்.

அவளுக்கு ஆடலும் அணிநடையும் கற்பிக்க வந்த கலிங்கத்து ஆட்டரான சீர்ஷர் “உடலை உள்ளத்தால் அத்தனை இடுக்கிக்கொள்ள வேண்டியதில்லை, இளவரசி. அஞ்சும் அன்னைக்குரங்கு தன் சவலைக்குட்டியை என  உங்களை நீங்களே அத்தனை அள்ளி பற்றியிருக்கிறீர்கள். ஒருகணம்கூட உங்கள் தோள்களில் தன்னுணர்வில்லாமல் இருந்ததில்லை. உடலை மறந்திருங்கள். இளஞ்சிறுமியென எப்படி மலர்த்தோட்டத்தில் பாய்ந்தோடினீர்களோ அப்படி இருங்கள்” என்றார். “நான் எப்போதும் அப்படி ஓடியதில்லை, ஆசிரியரே” என்றாள் சர்மிஷ்டை.  “என்றும் என்னுடன் சேடியரும் செவிலியரும் இருந்தனர். நானறிந்த முதற்பேச்சே நீ இளவரசி என்பதுதான். எனைச் சூழ்ந்த விழிகளை உணராமல் துயின்றதே இல்லை.”

“விழிகளைச் சூழ உணர்வதேகூட உடலை விடுதலை செய்தலாகும்” என்றார் சீர்ஷர். “விறலியரும் பாணினியரும் விழிநடுவே பிறந்து விழிசூழ் மேடைகளில் வாழ்கிறார்கள். விழிகளே உலகம், விழிகளே காலம், விழியென மலர்ந்ததே பிரம்மம். விழிகள் முன் நம் உச்சத்தை நிகழ்த்தவேண்டும் எனும் எண்ணமே நம்மை சிறகுகொள்ளச் செய்யும்.” அவள் “என்னால் இயலாது” என்றாள். “ஆடல் என்பது உடலின் விடுதலை. விடுதலை கொள்கையிலேயே உடல் முற்றிலும் ஒத்திசைவை அடைகிறது” என்றார் சீர்ஷர்.

சர்மிஷ்டை “விழிமுன் திகழ்வதற்கு அழகிய உடல் வேண்டும். என் உடலை எவ்விழிக்கு முன்னும் தயக்கமின்றி முன்வைக்க என்னால் இயலவில்லை” என்று விழிதாழ்த்தி சொன்னாள்.  “என்னை நோக்கும் ஒவ்வொருவரும் பிறிதொருவரை நோக்குவதாக தோன்றுகிறது. என்னை அழைக்கும் ஒவ்வொரு குரலும் எனைக்கடந்து பிறிதொருவரை நோக்கி செல்வதாகத் தோன்றுவதுதான் எனது துயர்.”

“நீ எதை அஞ்சுகிறாய்? மண்ணில் எவரிடமும் பணியவேண்டியதில்லை நீ, எனினும் உன் உடல் எப்போதும் பணிந்திருப்பது ஏன்?” என்று எரிச்சலுடன் கேட்ட தன் அன்னையிடம் அவள் சொன்னாள் “பொருந்தாத ஆடைகளை அணிந்திருப்பவர்களின் தயக்கம் தாங்கள் அறிந்தது, அன்னையே. பொருந்தாத உடலை அணிந்திருக்கிறேனோ என்று நான் உணர்கிறேன்.” அன்னை சினந்து  “இது நீ பயிலும் பயனற்ற காவியங்களின் விளைவு. அவையனைத்தும் சூதர்களின் வீண் கற்பனைகள். அவற்றிலுள்ள பெண்களின் அழகையும் ஆற்றலையும் உன்னுடன் ஒப்பிட்டுக் கொள்கிறாய். அவர்கள் மண்ணில் எப்போதும் வாழ்ந்ததில்லை” என்றாள்.

அவள் சினத்துடன்  “வாழாதவர்களைப் பற்றியா இத்தனை காவியங்கள் எழுதப்பட்டுள்ளன? வெறும் கற்பனையையா இத்தனை மக்கள் சொல்பெருக்கி சித்தம் நிறைத்துக்கொள்கிறார்கள்?” என்றாள்.  “உனக்கென்ன தெரியும்? தான் இருக்கும் உடலில் தான் வாழும் இல்லத்தில் தன் குடியில் நிறைந்து வாழ்பவர் எவருளர்? விரிந்து கடந்து செல்லவேண்டுமென்ற கனவு அல்லவா மனிதர்களை ஆட்டி வைக்கிறது? ஆகவேதான் மாவீரர்கள், பேரழகிகள், விண்ணுலாவும் தேவர்கள் சொல்லில் எழுகிறார்கள். அவர்களைப்போல் ஆகவேண்டுமென்று இளமையில் எண்ணிக்கொள்வதில் பிழையில்லை. இளமை முடிந்தபின்னும் அவ்வாறு ஆகவில்லையே என்று எண்ணி ஏங்குவது அறிவின்மை” என்று அரசி சொன்னாள்.

“காட்டுக்கனிகளில் சிறந்ததை உண்டு விதைபரப்பும் பறவைகள் போன்றவர்கள் சூதர்” என்று சர்மிஷ்டை சொல்ல “இல்லை, அனைத்தையும் பொன்னாக்கிவிடமுடியும் என்னும் கனவை மண்ணில் நிலைநிறுத்தும் பொய்யர்கள்” என்றாள் அன்னை. சிறுமிபோல தலையை அசைத்து சர்மிஷ்டை  “ஷத்ரியர்கள் காவியங்கள் சொல்லும் அந்த அழகிய தோற்றமுடையவர்கள் என்று விறலி சொன்னாள்” என்றாள்.

“அவள் எங்கு கண்டாள்? அவ்வண்ணம் அவர்கள் அழகு கொண்டிருந்தாலும்கூட இன்று உன் தந்தையின் அரியணை முன் வந்து அவர் காலடியில் மணிமுடியை வைத்து வணங்கி வாழ்த்து பெற்றுச் செல்லும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வளரும் எந்த அழகியையும் சுட்டுவிரல் சுட்டிக் காட்டி தன் மகளிரறைக்கு கொண்டுவர அவர் ஆணையிட முடியும். நோக்கு, பாரத வர்ஷத்தை ஆளும் எந்த ஷத்ரியச் சக்ரவர்த்தி உனக்கு கணவனாக வேண்டுமென்று எண்ணுகிறாய்? அவனை இங்கு வரவழைக்கிறேன்” என்றாள். “தந்தையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர் என் கைபற்றலாம். என் அழகையோ நல்லியல்பையோ விரும்பி வரமாட்டாரல்லவா?” என்றாள் சர்மிஷ்டை.

சினங்கொண்ட அன்னை  “இப்பேச்சுகளுக்கு மறுமொழி அளிக்க எனக்கு பொழுதில்லை. நீ பாரதவர்ஷத்தை ஆளும் விருஷபர்வனின் மகள். ஹிரண்யபுரியின் இளவரசி. அதை உன்னுள் கூசிச் சுருங்கும் அச்சிறுமியிடம் ஒவ்வொரு நாளும் நூறுமுறை சொல். ஏதோ ஒரு சொல் அவள் சித்தத்தை அடையும்போது உன் தோள்களில் நிமிர்வு வரும். உன் தலை மேலெழும். அதுவரை இவ்வாறு சுவர்மடிப்பில் ஒண்டி ஓடும் எலிபோலத்தான் இங்கு வாழ்வாய்” என்றபின் எழுந்து சென்றாள்.

உப்பரிகையில் நின்றபடி தொலைவில் வண்டியில் வந்துகொண்டிருந்த தேவயானியை முதலில் கண்டபோதே சர்மிஷ்டை தன்னுள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். பின்னர் எங்கும் எச்சொல்லும் நிலைகொள்ளாத பதற்றத்தை அடைந்தாள். விரல்நுனிகள் அனைத்தும் குளிர்ந்து தளிர்முனைகளென நடுங்கும் உவகையையும் அறிந்தாள். அருகே நின்ற தோழியிடம்  “காவியங்களில் வாழும் பெண்கள் பொய்யென்று அன்னை சொன்னார். இதோ, இவளைக் கண்டபின் என்னவென்பார்?” என்றாள்.  “ஆம், நானும் அதையே எண்ணினேன். பெருங்காவியத்திலிருந்து எழுந்து வந்ததுபோல் இருக்கிறார்கள்” என்றாள் அவள்.

அவைமுற்றத்தில் தேவயானியின் உடலிலிருந்து தன் நோக்கை விலக்க அவளால் இயலவில்லை. கால் விரல்கள் முதல் தலைமயிர்ச் சுருள்கற்றை வரை ஒவ்வொன்றிலும் முழுமை கூடிய ஓர் உருவம் அமையக்கூடுமா என்ன? முற்றிலும் நிகர்நிலை. முற்றிலும் ஒத்திசைவு. அழகென்பது பிறிதொன்றிலாமை. இதுவொன்றே இங்கெங்கும் என்று சித்தமுணரும் உச்சம். அந்த முனையிலிருந்து அவளை நோக்கும் உள்ளம் ஒருகணமும் இறங்காதென்று தோன்றியது. துலாக்கோலென முற்றிலும் நிகர் நின்ற தோளகல்வு. நடுவே அசைவிலாத தலைநிமிர்வு. பிற பெண்களைப்போல் அவள் இடை குழையவில்லை, நடை ஊசலாடவில்லை. சீராக ஓடும் கண்ணுக்குத் தெரியாத ஆறொன்றில் மிதந்து செல்பவளைப்போல நடந்தாள். அமர்கையில் ஒவ்வொரு பீடமும் அவளுக்கென்றே முன்னரே  வடிவமைக்கப்பட்டது போலிருந்தாள்.

எளிய இடையாடையும் பட்டு மேலாடையும் அணிந்திருந்தாள். அரண்மனையில் அணிசமைக்கும் பெண்கள் அவள் இடையாடைக்கும் மேலாடைக்கும் இடையே இருந்த அப்பொருத்தமின்மையை சுட்டிக்காட்டி நகைக்கக்கூடும். சீனப்பட்டாடைக்கு சற்றும் ஒவ்வாமல் காட்டுமலர்களை அணிந்திருந்தாள். ஆனால் ஒவ்வொன்றும் இயல்பாக அவளுடன் இணைந்து பிறிதொரு தோற்றத்தை அவள் கொள்ளமுடியாதென்று எண்ண வைத்தன. அரண்மனை முகப்பில் அவள் இறங்குகையில் கூடத்தில் அரியணையில் நிமிர்ந்து அமர்ந்திருக்கையில் சூழ்ந்திருந்த அரசியரும் அரச குடிப்பெண்களும் அவளுக்கு பணிபுரிய வந்த எளிய சேடிகள்போல் தோன்றினர்.

வேறெங்கும் அமர்ந்ததில்லை என்பதுபோல் மையப்பீடத்தில் அமர்ந்து சுட்டுவிரல் தொட்டு அருமணிகள் பதித்த நகைகளையும் நிகரற்ற விலைகொண்ட பட்டாடைகளையும் அவள் ஏற்றுக்கொண்டபோது முடிமன்னர் காலடியில் நிரத்தும் கப்பங்களை பெறுபவள் போலிருந்தாள். இயல்பாக அவற்றை கணக்கிட்டு அப்பால் திரும்புகையில் விழிதிறந்த நாள் முதல் பெருஞ்செல்வத்தில் விளையாடியவளாகத் தெரிந்தாள். ஒவ்வொரு சொல்லும் காவியங்களிலிருந்து அப்போது எழுந்து வந்ததுபோல் அவள் நாவில் பிறந்தது. ஒவ்வொரு தருணத்துக்கும் உகந்த வரி எழவேண்டுமென்றால் எத்தனை கற்றிருப்பாள்!

தேவயானி அரண்மனைவிட்டு நீங்கியபின் தன் அறைமஞ்சத்தில் கால்மடித்தமர்ந்து அவளையே எண்ணிக்கொண்டிருந்த சர்மிஷ்டை அறியாது நெஞ்சுவிம்மி ஒரு துளி கண்ணீர் விட்டாள்.  “என்னடி?” என்று அறைக்குள் அமர்ந்து சேடியருக்கான ஆணைகளை ஓலைகளில் பொறித்துக்கொண்டிருந்த அவள் அன்னை கேட்டாள்.  “ஒன்றுமில்லை” என்றாள் சர்மிஷ்டை. எழுந்து அவள் அருகே வந்து  “சொல், என்ன?” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை” என்று அவள் எழப்போனாள். அவள் தோளில் கைவைத்து அழுத்தி  “நானறிவேன். நீ அதை உன் வாயால் சொல்!” என்றாள். அவள் மேலும் இரு துளி கண்ணீர் வழிய தலை கவிழ்ந்தாள்.

அவள் தலையை மெல்ல வருடி “ஆம், அவள் பேரரசிக்குரிய நிமிர்வு கொண்டிருக்கிறாள். அவள் முன் நீ எளிய பெண் போலிருக்கிறாய். ஆனால் ஒன்று எண்ணிக்கொள், எவ்வண்ணமிருப்பினும் அவள் அந்தணப்பெண். அந்தணர் ஒருவரையே அவள் மணங்கொள்ள வேண்டும். எப்படி உயர்ந்தாலும் பெருவைதிகன் ஒருவனின் இடம் அமர்ந்து வேள்விப்பந்தலில் தலைமை கொள்வதை மட்டுமே அவள் எட்ட முடியும். நீ பாரதவர்ஷத்தின் இளவரசி. பேரரசர்கள் உன் காலடிகளில் பணிவார்கள். உன் சொற்களுக்கென அசுரப் படைநிரைகள் காத்திருக்கின்றன” என்றாள்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க மறித்து “ஆம், நீ சொல்ல வருவது எனக்கு புரிகிறது” என்றாள் அன்னை. “அவள் அருகே நிற்கையில் நீ பொருந்தாத உரு கொண்டவளாகத் தோன்றுகிறாய் அல்லவா? அறிக இளையவளே, இப்புவியில் எவரும் எந்தச் செயலுக்குமென பிறந்து வரவில்லை. பூண்ட உருவை நடித்து முழுமை செய்பவர்களே இங்குள்ளவர் அனைவரும். அரசியென்று அமர்க! அரசியென்றாகுக! அரசியென்றே அறியப்படுவாய்” என்றாள். பின்னர் அவள் தோளை மெல்ல வருடி  “பிறிதொரு வழியில் எண்ணிப்பார். உன் தந்தைக்கு சுக்ரர் அமைந்ததுபோல் உனக்கு இவள் அமைந்திருக்கிறாள். இவளுடன் சென்று சேர். இவளிடம் இருந்தே நூலையும் நெறியையும் கலையையும் நீ ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?” என்றாள்.

“நானா? எனக்கு எதுவுமே உள்நுழையவில்லை, அன்னையே” என்றாள் சர்மிஷ்டை.  “ஆம், ஏனென்றால் இதுவரை உனக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தும் வெறும் சொல்வடிவில் சொல்லுறைந்த நுண்வடிவில் இருந்தன. இன்று அவை ஒரு பெண் வடிவில் உன் முன் நின்றிருக்கின்றன. நீ ஆகவேண்டிய உருவம் அவளுடையது. அவளை நோக்கி செல்! அவளாக முயல்க! அவ்வழியில் நீ எவ்வளவு முன்னகர்ந்தாலும் அவ்வளவுக்கு நன்மையே” என்றாள் அன்னை. சற்றுநேரம் எண்ணியபின் மெல்ல கலைந்து சர்மிஷ்டை புன்னகைத்தாள்.

tigerசர்மிஷ்டை நான்கு நாட்கள் தேவயானியை சென்று பார்ப்பதைப்பற்றி எண்ணி அவ்வெண்ணத்தை ஒத்திப்போட்டு தன்னுடன் போராடியபின் அப்போராட்டத்தால் சலிப்புற்று அதை கடக்கும் வழி சென்று பார்த்துவிடுவதே என முடிவெடுத்தாள். அங்கே ஏதேனும் ஒன்று நிகழ்ந்து அவளை மேலும் சந்திக்காமலிருக்கும்படி தன்னை ஆக்குமென்றால், தன் வாழ்விலிருந்து அவள் உதிர்ந்துபோக வழி அமையுமென்றால் நன்று என்று அவள் எண்ணினாள். எவரிடமும் சொல்லாமல் அணுக்கச்சேடியை மட்டும் அழைத்துக்கொண்டு தேவயானியின் குடில்தொகையை நோக்கி சென்றாள்.

மையக்குடிலின் கோபுரம் போன்ற கூரை தொலைவில் தெரிந்ததுமே அவள் கால் தளர்ந்தாள்.  தேரிலிருந்து இறங்காமலேயே திரும்பிவிடலாமா என எண்ணி அதை சொல்லென ஆக்காமல் தேர்த்தூணைப் பற்றியபடி நின்றாள். தேர்முற்றத்தில் இறங்கி குடில்முகப்பு நோக்கி நடக்கும்போது எதிரே குளிர்காற்று ஒன்று எழுந்து தன்னை பின்னுக்குத் தள்ளுவதாக உணர்ந்தாள். குடில்முற்றத்தில் மலர்ச்செடிகளின் பழுத்த இலைகளைக் களைந்தபடி நின்றிருந்த சாயையைக் கண்டதும்  முதலில் தேவயானி என எண்ணி உளம் அதிர்ந்தாள். அவளல்ல என மறுகணம் உணர்ந்தாலும் அந்தப் பதற்றம் உடலில் நீடித்தது.

மெல்ல அருகணைந்து படிகளில் ஏறியதும் சாயை தலைதூக்கி நோக்கி புன்னகைத்து “வருக இளவரசி. தாங்கள் வருவீர்கள் என அரசி எதிர்பார்த்திருந்தார்கள்” என்றாள். அவள் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை சர்மிஷ்டை உணர்ந்தாள். பேச்சும் நோக்கும் அசைவும் தேவயானியைப் போலவே இருந்தன. அவள் அத்தனை உயரமானவள் என்பதையும் அவள் தோள்களும் தேவயானியைப் போலவே திரண்டு அகன்றவை என்பதையும் அப்போதுதான் அத்தனை கூர்ந்து அவள் நோக்கினாள். உரு வந்துசேர்வது வரை நிழல் இங்கு காத்திருந்திருக்கிறது என எண்ணிக்கொண்டாள்.

தேவயானி எப்படி தன்னை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்மிஷ்டை கற்பனை செய்துகொண்டே வந்தாள்.  எளிய சிறுமியென்று இயல்பாக நடத்தக்கூடும். அறிவின்மையை நகையாடக்கூடும். அவள் தந்தையின் அரசுநிலையை எண்ணி சொல்கருதி உரையாடக்கூடும். அவளுக்குள் தேவயானி கதைகளின் அரக்கிகளைப்போல புதுப்புது முகங்களுடன் எழுந்து வந்துகொண்டே இருந்தாள்.  படிகளைக் கடந்தபோது தன் எண்ணங்களின் எடைதாளாமல் அவள் நின்றுவிட்டாள். பின்னர் உள்ளே நுழைந்தபோது கையில் ஏடுகளுடன் எதிரே வந்த தேவயானி அவளை நோக்கி புன்னகை செய்து “வருக!” என்றாள். அவள் முறைமைச்சொல் ஏதேனும் சொல்லவேண்டும் என எண்ணி அது எழாமல் வெறுமனே புன்னகைத்தபடி நின்றாள். தேவயானி அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு “வருக, இளவரசி!” என அழைத்துச்சென்றாள்.

அவளுடன் அமர்ந்திருக்கையில் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டிருப்பதை மட்டுமே அவளால் செய்யமுடிந்தது. அவ்வாறு கைகள் எழவேண்டுமென்றால் தோள்கள் அத்தனை திரண்டிருக்கவேண்டும். தோள் அத்தனை திரண்டும் பெண்மை தோன்றவேண்டுமென்றால் இடை அவ்வளவு சிறுத்து இறுகியிருக்கவேண்டும். குரல் ஓங்கும்போதும் இனிமை குறையாதிருக்கவேண்டுமென்றால் அதற்கு பேரியாழின் ஆழ்ந்த கார்வை இருக்கவேண்டும். நேர்நோக்கு திகழ்கையிலும் விழியழகு வேண்டுமென்றால் இமைகள் இதழ்களாக விரிய மாமலர்கள் போலிருக்கவேண்டும் கண்கள்.

“என்ன நோக்குகிறாய்?” என அவள் இயல்பாக கேட்டபோது சர்மிஷ்டை உளம்பொங்க தலைகவிழ்ந்தாள். ஒன்றுமில்லை என தலையசைத்தாள். “ஏன் அஞ்சுகிறாய்?” என்று மீண்டும் தேவயானி கேட்டாள். “இந்த ஆடையில் அழகாக இருக்கிறீர்கள்” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி சிரித்து “இது சாயையின் தெரிவு” என்றாள். “எல்லா ஆடையும் உங்களுக்கு அழகே” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி அதற்கும் உரக்க நகைத்தாள். “நீ என்ன கற்கிறாய் இப்போது?” என சுவடிகளை கட்டிவைத்தபடி தேவயானி கேட்டாள். “நாளும் கல்விதான். எதுவும் என்னுள் நுழைவதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “கற்றவற்றைப்பற்றி உன் கருத்தை உருவாக்கிக்கொள், உன்னுள் முளைத்தவையே உன்னில் வளரமுடியும்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை வெறுமனே தலைகவிழ்ந்து புன்னகை புரிந்தாள். அவள் தொடையை எட்டி மெல்ல அடித்து “என்ன நகைப்பு?” என்றாள் தேவயானி.

ஒவ்வொருநாளும் காலையிலேயே சர்மிஷ்டை தேவயானியின் குடிலுக்கு வந்தாள். அவளுடன் சேர்ந்து சுக்ரரின் வகுப்புகளில் அமர்ந்து விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருந்தாள். திரும்பி வரும்போது எளிய ஐயங்களைக் கேட்டு தேவயானியை நகைக்கச் செய்தாள். அன்னைத்தன்மை கொண்ட இளிவரலுடன் மட்டுமே அவளை தேவயானி அணுகினாள். அவள் பேசுவதை கண்களில் சிரிப்புடன் கேட்டு மெல்லிய பகடியுடன் மறுமொழி சொன்னாள்.

அதைக் கடந்து ஒருசொல்லும் அவளிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்ந்தபோது சர்மிஷ்டை தன்னை அவ்வாறே ஆக்கிக்கொண்டாள். மழலை பேசவும் சிணுங்கவும் ஊடவும் சிரித்து விளையாடவும் தொடங்கினாள். வேண்டுமென்றே பிழையான வினாக்களை கேட்டாள். புரிந்துகொண்டவற்றையும்கூட புரியவில்லை என நடித்தாள். பேதையாகும்தோறும் தேவயானியை மேலும் அணுகமுடியும் என்று கண்டு மேலும்மேலுமென தன்னை அவ்வாறு ஆக்கிக்கொண்டே இருந்தாள்.

அவளைப் போலவே சாயையும் சர்மிஷ்டையை குழவியென நடத்தலானாள். நீராடச் செல்கையில் அவள் இருவரின் ஆடைகளையும் தூக்கிக்கொண்டு சென்றாள். மரக்கிளைகளில் ஏறி குழலில் பூசுவதற்கான மலர்களை சாயை உலுக்கியிடும்போது கீழே ஓடி ஓடி பொறுக்கி சேர்த்தாள். மேனியில் மலர் விழ கூசிச் சிரித்து கைவிரித்து மழையாடினாள். “என்ன செய்கிறாய்? மலர் சேர்க்கச்சொன்னால்…” என சாயை அவளை அதட்டினாள். நீரில் பாய்ந்து மறுகரை நோக்கி சென்று மண்ணில் காலூன்றாமல் திரும்பிவந்து இங்கும் காலூன்றாமல் மீண்டும் திரும்பி ஏழுமுறை ஒழுக்குமுறித்துக் கடந்து தேவயானி திரும்பி வந்தபோது கைதட்டிக் கூச்சலிட்டுச் சிரித்தபடி குதித்தாள்.

“இறங்கு” என்றாள் தேவயானி. “அய்யோ, எனக்கு நீச்சலே தெரியாது” என்றாள் சர்மிஷ்டை. “இறங்கு, நான் சொல்லித்தருகிறேன்” என்றாள் தேவயானி. “இல்லை… இல்லை…” என சர்மிஷ்டை விலகி ஓட “அவளைப் பிடி” என்று தேவயானி கைநீட்டி கூவினாள். அவள் ஓடி புல்தடுக்கி விழ சாயை அவளைப்பற்றி அப்படியே தூக்கிக் கொண்டுவந்து நீரில் வீசினாள். மூச்சு பதற கைகால்கள் வீசி உதறிக்கொள்ள நீரில் மூழ்கி மூழ்கி அவள் எழுந்தபோது தேவயானி பாய்ந்து அவளருகே வந்து வயிற்றில் கை வைத்து மெல்ல உந்தினாள். நீர் அவள் கைகால்களை ஏந்திக்கொண்டது. அவள் கைகால்கள் வீசியும் அறைந்தும் நீரில் துடித்தன. பாசிமணத்துடன் நீர் வாய்க்குள்ளும் மூக்கினுள்ளும் சென்றது.

பின்னர் கைகள் ஓர் ஒத்திசைவை உணர்ந்தன. கால்களுடன் அந்த ஒத்திசைவு இணைந்துகொண்டபோது அவளுக்குள் இருந்த ஒன்று அந்த ஒத்திசைவை தன்னுடன் அடையாளம் கண்டது. அவள் நீந்திக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். தேவயானி தன் கையை எடுத்திருப்பதை உணர்ந்ததும் அஞ்சி மூழ்கினாள். உடனே கால்களால் நீரை உதைத்து எம்பி கைவீசி நீந்தலானாள். தேன்சிட்டுபோல பறந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள். வாழ்க்கையில் பிறிதெப்போதும் அத்தகைய விடுதலையை அவள் உணர்ந்ததில்லை.

கரையில் ஏறிநின்ற தேவயானி “மேலே வா, பொழுதாகிறது” என்றாள். அவள் நீரை ஒளியாக உமிழ்ந்து “இதோ” என்றாள். “வாடி” என தேவயானி கூவினாள். “இதோ” என்றபின் மூழ்கி அப்பால் எழுந்தாள் சர்மிஷ்டை. தேவயானி கரையில் சுற்றும் நோக்கி காய்ந்த நெற்றுகளை பொறுக்கி அவள்மேல் எறிந்தாள். அவள் சிரித்தபடி மூழ்கி மூழ்கி விலகினாள். மீன்போல எம்பித் தாவினாள்.

சாயை நீரில் பாய்ந்து அவளை நோக்கி வர சிரித்தபடி அவள் விலகிச் சென்றாள். சாயை பெரிய கைகளை வீசி அவளை துரத்திப்பிடித்து அவள் குழல்பற்றி இழுத்து கரைநோக்கி நீந்தினாள். “நானே வருகிறேன்” என்று சர்மிஷ்டை கூவினாள். இருவரும் கரைநோக்கி நீந்தியபோது சாயையின் கைசுழற்சியும் காலலைவும் போலவே அவளுடையனவும் இருந்தன. சீராக நீரை முறித்து வந்து தாழ்ந்த புன்னைமரக் கிளைகளைப் பற்றி தொற்றி மேலேறினார்கள்.

உடலோடு ஒட்டிய ஆடைகளை கையால் நீவி நீர் களைந்தபடி சர்மிஷ்டை “நான் நீந்துவேன் என நினைத்ததே இல்லை” என்றாள். “என் உடல் நீந்துவதற்குரியதல்ல என்றார்கள்.” தேவயானி “மானுடருக்கு நீந்தத்தெரியும். மொழியால்தான் நாம் மூழ்குகிறோம் என்று எந்தை சொல்வதுண்டு. நம்மை மூன்று காலங்களிலும் இரண்டு வெளிகளிலுமாக சிதறடித்துக்கொண்டே இருக்கும் மொழியை விட்டுவிட்டால் நம் உடல் ஒத்திசைவுகொள்கிறது, நீந்திவிடலாம்” என்றாள்.

சர்மிஷ்டை நீந்தும்போது தன்னுள் சொற்கள் இருந்தனவா என எண்ணிநோக்கினாள். சொல்லின்மையில் திளைத்ததுபோல் தோன்றியது. சொற்களின் அலைகளில் ஆடியதுபோலவும் இருந்தது. உவகையுடன் மூச்செறிந்து கைகளால் நெஞ்சை அழுத்தி வானம்பெருகி ஓடிக்கொண்டிருந்த ஆற்றை நோக்கியபடி “நான் இதைப்போல விடுதலையை உணர்ந்ததே இல்லை” என்றாள் சர்மிஷ்டை.

முந்தைய கட்டுரைபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து
அடுத்த கட்டுரைசீனுவுக்கு இரு கடிதங்கள்