அன்பின் சீனு!
எனக்கும் யோகிக்கும் இடையே நீங்கள் ‘’புக் மார்க்’’ போல எனக் கூறியதை மிகவும் ரசித்தேன்.
நாம் செத்தவரை சென்று வந்த இரண்டாம் நாள் மயிலாடுதுறை நண்பர் ஒருவருடன் மீண்டும் அங்கே சென்றேன். இம்முறை உள்ளூர் விவசாயி ஒருவர் வழிகாட்டினார். நாம் ஏறிச் சென்ற பாதைக்கு இணையான ஒரு பாதை இருந்தது. விவசாயி இலகுவாக ஏறினார். பாறைகளில் முட்டி போட்டு தவழ்ந்து மெல்ல மேலேறினோம். எங்களுக்கு வியர்த்துக் கொட்டி மூச்சு வாங்கியது. இரண்டு இடங்களில் பத்து நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே சென்றோம். இரண்டு தினங்கள் முன்னால் பாதி தூரம் ஏறிய அனுபவம் இருந்ததால் கால்கள் உயரத்தைக் கடந்து செல்ல பழகியிருந்தன. உச்சிப் பொழுதில் பங்குனி வெயில் தீயாய் எரியும் வேளையில் கற்பாறைகள் பார்வையெங்கும் நிறைந்திருக்க குகையின் குளிர்ச்சியில் பாறை ஓவியங்களின் முன் நின்றது மகத்தான உணர்வெழுச்சித் தருணமானது.பனி மனிதனில் வரும் கைகளைப் பற்றிய சுலோகம் நினைவில் எழுந்தது.
வீடு திரும்பியதும் சில வரிகளை எழுதினேன்.
காத்தல்
—————
துக்கம் மேலிட்ட
பெண்
கண்ணீருடன்
கை கூப்பி
கடவுளிடம்
பேசியதைக்
கேட்டேன்
வேல் ஏந்திய இளைஞன்
விரித்த கரம்
அவளைப்
பார்த்தது
அவள்
பாதங்களைக் கண்டாள்
அவன் முகத்தைக் கண்டாள்
அவன் கொடியைக் கண்டாள்
அவள் அலறல் நிற்கவில்லை
பொங்கிய துக்கம்
வடிந்து போன போது
கடவுளின் கரம்
கண்ணில் பட்டது
அவள்
நம்பிக்கைகளுடன்
நீங்கிச் சென்றாள்
ஆழியேந்தியவன்
தன் மாணாக்கனுக்கு
கரத்தினைக் காட்டி
ஆதலால் செயல் புரிக
என்றான்
***
அன்புடன்,
பிரபு
மயிலாடுதுறை
***
அன்புள்ள கடலூர் சீனு
கடலூர் சீனுவின் “ஜியோ” கேள்விக்கு பல கோணங்களில் பதில் தேடலாம்.
- ஜியோ வந்த பிறகு பல தொலை தொடர்பு நிறுவனங்கள், இதனால் பெரிதும் பாதிப்பும் அதிர்ச்சியும் அடைந்ததாக பல செய்திகள் வந்தது.
- இப்பொழுது போல் விலை குறைக்கப்படவில்லை என்றால், ஜியோவின் ஆதிக்கம் இன்னும் கூடவே செய்யும்.
- இதனால் எந்த அளவு யாருக்கு லாபம் என்பது அந்தந்த நிறுவனங்கள் கூறினாலொழிய நமக்கு தெரிய வாய்ப்பில்லை
- இதன் மற்றொரு விளைவாகவே, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் “வோடபோன்” “ஐடியா” மொபைல் நிறுவனங்களை இணைப்பதற்கான முடிவு.
இதில் ஏமாற்ற உணர்வாக எண்ண வேண்டிய அவசியமில்லை.
லட்சுமணன்
***