பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

tol

நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது

அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் எழுதிய தொடர் இன்னும் நூல்வடிவம் பெறவில்லை. கல்வெட்டுக்களைப்பற்றிய ஆய்வு ஒன்றும் தொடர்கிறது

பறக்கையில் தோல்பாவைநிழற்கூத்து நடப்பதாக அ.கா.பெருமாளுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. முன்பு பலமுறை அருண்மொழியைக் கூட்டிச்செல்வதாக அவர் சொல்லியிருந்தாலும் அது நடக்கவில்லை. இப்போது போகலாமா என்று அருண்மொழி கேட்க உடனடியாக முடிவெடுத்து கிளம்பிவிட்டோம். நானும் அருண்மொழியும் சைதன்யாவும் ஆட்டோவில். அ.கா.பெருமாளும் ராமும் இருசக்கரவண்டியில்

1

பறக்கை அந்திநேரத்தில் நாகர்கோயிலின் பரபரப்பாக தெருபோலிருந்தது. ஆனால் ஆலயச்சுற்று பழமையுடன் மாறாத்தன்மை கொண்டிருந்தது. நாங்கள் சென்றபோது மதச்சொற்பொழிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. தேர்த்திருவிழாவின் இரண்டாம்நாள். உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்தோம். அ.கா.பெருமாள் கோயிலில் இருந்த பாண்டியர் காலகட்ட கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டினார்.

சுவாரசியமான அம்சம் ஒன்று அவர் சொல்லி உறைத்தது. மகபாராஜா பாலராமவர்மா ஆலயத்திற்குள் ஒரு நடராஜர் சன்னிதியை கட்டியிருக்கிறார். வைணவ ஆலயம் அது. அவரும் தீவிர வைணவர். கொடிமரத்திற்கு ராணி சேதுலட்சுமிபாய் பொன் வேய்ந்திருக்கிறார்

தோல்பாவைநிழற்கூத்து எட்டுமணிக்குத் தொடங்கியது.’தி ஹிந்து’ கோலப்பன் பறக்கையில் இருந்தார். பல்லாண்டுக்காலம் சென்னையில் ஆங்கில நாளிதழ்களில் பணிபுரிபவர். ஆனால் பறக்கையிலிருந்து அவர் வெளியே போனதே இல்லை எனத் தோன்றும் பேச்சு, நடை , அக்கறை அனைத்திலும். மரபிசை நாட்டம் கொண்டவர். நாதஸ்வர, தவில் இசையில் ஆய்வாளர்.

ஐந்தாம்திருவிழாவின் நாதஸ்வரக்கச்சேரிக்கு பல ஆண்டுகளாக கோலப்பன் தான் புரவலர். தமிழகத்தின் தலைசிறந்த வாத்தியக்காரர்களை. அழைத்துவருவார். அது பறக்கையின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று. சரியான ‘நாய்க்கோட்டி’. நானும் அவரும் தொலைபேசியில் நாய்பற்றி நிறையவும் இசைபற்றி கொஞ்சமும் பேசிக்கொள்வதுண்டு

அ.கா.பெருமாளின் ஊர் பறக்கைதான். அவரது தம்பி சொக்கலிங்கம்பிள்ளை அங்குதான் வாழ்கிறார். மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் நிகழ்ச்சிப்பொறுப்பாளரும்கூட.நான் பத்தாண்டுகளுக்குமுன் பறக்கையில் தோற்பாவைநிழற்கூத்து பார்க்க அ.கா.பெருமாளுடன் வந்திருந்தேன். அதே இடம். அன்று பரமசிவராவ் அந்நிகழ்ச்சியை நடத்தினார். மறக்கமுடியாத அனுபவம் அது.

தோல்பாவைநிழற்க்கூத்து அன்று சுந்தரகாண்டம். உச்சிக்குடும்பனும் உளுவத்தலையனும் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தோல்பாவைநிழற்க்கூத்து கலையைக்காக்கும் அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி ராமனிடம் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள்.

அனுமன் ராமனிடம் ஆணைபெற்று இலங்கைசென்று தேவியை கண்டு கணையாழி அளித்து இலங்கையை எரித்து மீண்டுவருவதுவரை கதை. இதே பறக்கையில் நான் முன்பு பரமசிவராவ் நிகழ்த்திய _க் கண்டிருக்கிறேன். இப்போது முத்துசந்திரன் நடத்துகிறார். இளைஞர். இன்னும் சிலகாலம் இக்கலை இவரால் வாழும். பெரும்பாலானவர்கள் இக்கலையிலிருந்து விலகிச்சென்றுவிட்டார்கள்.

A.k.-Perumal-1
அ.கா.பெருமாள்

 

மண்டிகர் என்னும் கலைஞர் இனக்குழுவால் தோல்பாவைநிழற்கூத்து நடத்தப்படுகிறது. இவர்கள் மராட்டிய மொழிபேசுபவர்கள். நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் வந்து தங்கியவர்கள். தென் தமிழகம் முழுக்க அலைந்து திரிந்த நாடோடிக்கலைஞர்களான இவர்களுக்கு ஆரல்வாய்மொழி அருகே திருமலாபுரம் என்னும் ஊரில் நிரந்தர வசிப்பிடம் அமைந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சாதிச்சான்றிதழும் பெறப்பட்டது. அதற்கு அ.கா.பெருமாளும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் நிரந்தர வசிப்பிடமும் கல்வியும் அமைந்ததும் பலரும் தோல்பாவைக்கூத்தை விட்டுவிட்டார்கள். காரணம் இது புரவலர் இல்லாக் கலை. தமிழகம் சினிமாவெறியில் இருப்பதனால் வேறு எதற்கும் மக்கள் வருவதில்லை. குமரிமாவட்ட ஆலயங்கள் மற்றும் ஆர்வலர் முயற்சியால் இங்கே இக்கலை ஓரளவு நீடிக்கிறது

முத்துசந்திரனின் முன்னோர்கள் மாபெரும் கலைஞர்கள். தோல்பாவைநிழற்க்கூத்துக் கலையின் ஆசான் எனப்படும் கோபால் ராவின் மகன் சுப்பையாராவின் மகனாகிய பாலகிருஷ்ணனின் மகன் முத்துசந்திரன். இவரது சித்தப்பா பரமசிவ ராவும் பெருங்கலைஞர். இப்போது சோதிடராக மாறிவிட்டார். கூத்து நிகழ்த்துவதில்லை. முத்துசந்திரனும் அவர் மனைவி ராதாவும் இப்போது இக்கலையை நிகழ்த்துகிறார்கள். அவர் தம்பி முத்து முருகன் தோல்பாவைகளை வரைவதில் வல்லவர்

இளம் ஆட்டுத்தோலில் வரையப்பட்ட மென்மையான ஓவியப்பதாகைகளை விளக்கொளியில் காட்டி ஒரு வெண்திரைமேல் வண்ணநிழலாக ஆடவிடுவார்கள். குச்சிகளால் அந்த பாவையை இயக்கி குரல்கொடுத்து நாடகத்தை உருவாக்குவார்கள். தோல்பாவைநிழற்கூத்துக்கும் சினிமாவுக்குமான ஒற்றுமை திகைப்பை அளிப்பது.

முதல்முறை நான் தோல்பாவைநிழற்க்கூத்தைக் கண்டபோதே அதன் வண்ண ஓவியங்கள் திரையில் தெரியும் துல்லியத்தையும் அழகையும் கண்டு வியந்திருக்கிறேன். அவற்றிலிருந்து முகபாவனைகளைக்கூட நாம் ஊகிக்கமுடியும். அசைவுகளின் தர்க்கத்தைப்புரிந்துகொண்டால் நம்மால் நாடகத்தருணங்களை அடையவும் முடியும். ஒருவரே நிகழ்த்தும் கலை. முத்து சந்திரனுடன் உடன் அவர் மனைவி ராதா மத்தளம் மற்றும் பாடலுக்கு. முத்துசந்திரன் தன் பலகுரல்திறனால் அத்தனை கதாபாத்திரங்களுக்காகவும் பேசுகிறார்

tol2

குழந்தைகளுக்குரிய கலை. அவர்கள் குதூகலிப்பது தெரிந்தது. உச்சிக்குடும்பன் உளுவத்தலையன் நம் கவுண்டமணி செந்திலுக்கு முன்வடிவம். உச்சிக்குடும்பன் உதைத்துக்கொண்டே இருக்க உளுவத்தலையன் ‘சவிட்டாதீங்கண்ணே’ என்று சொல்லிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறான். இருவரும் பார்வையாளர்களிடமும் கடவுள்களிடமும் ஒரே சமயம் பேசும் ஆற்றல் கொண்டவர்கள்.

இம்முறை பின்னணி இசையை பதிவுசெய்து பொருத்தமாகவே பயன்படுத்துவதுதான் வேறுபாடு. அனுமன் கடல்தாவும் காட்சிகளில் உள்ள காட்சிப்பகுப்பு இன்றைய சினிமாவின் செல்வாக்கு கொண்டதா, இல்லை முன்னரே அப்படித்தானா என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டியது.

அனுமன் விஸ்வரூபம் எடுப்பது, ராவணனைச் சீண்டுவது , அந்த ரணகளத்தை ‘ஒரு சின்னக் கொரங்கு அந்தால வந்திட்டுபோச்சு’ என ஊர்க்காரர்கள் புரிந்துகொள்வது என நுட்பமான நகைச்சுவையும் ”பச்சைப்புளியங்கா திங்கிற கொரங்கே” என ராவணன் அனுமனை அழைப்பதன் உள்ளூர் குறிப்பும்  [அதாவது பசி தாங்காமல் புளியங்காய் தின்னும் குரங்கு. அதன் முகமாற்றம்]  கொண்டாட்டமும் கொண்ட கலை. ஒன்றரைமணிநேரம் வேறெங்கோ இருந்தோம். மீண்டு முப்பரிமாண உலகுக்கு வந்தபோது கண்கள் கூசின

சொக்கலிங்கம்பிள்ளை வீட்டில் இரவுணவு. ரசவடை இட்லி என பறககையின் சிறப்புச்சுவை. அவரது நண்பரின் காரில் திரும்பி வந்தோம்.   அனுமன் சீதையிடம் அவளுக்கும் ராமனுக்கும் நடந்த அந்தரங்க உரையாடல்களைச் சொல்ல “நீ சொல்லுகது கரெக்டு” என்று சீதை மறுமொழி சொன்னதை எண்ணி சைதன்யா சிரித்துக்கொண்டே இருந்தாள்.

***

அ கா பெருமாள்

அ கா பெருமாள் தோல்பாவைக்கூத்து கடிதம்

நகர்நடுவே நடுக்காடு

என்ன ஓய் கத்திக்கிட்டு இருக்கீரு?

நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்

சுசீந்திரம்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

அ கா பெருமாள் அறுபது

அ கா பெருமாள் 60 நிகழ்ச்சி

அ கா பெருமாள் கருத்தரங்கு உரிய முன் பதற்றங்கள்

அ கா பெருமாள் விழா கடிதங்கள்

பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம் அ கா பெருமாள்

***

முந்தைய கட்டுரைநோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65