இனிய ஜெயம்,
நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு, யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு.
நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் சாயங்காலம் வந்துடுவார் பேசிடுறேன். அப்டின்னு ஆறுதல் சொன்னார். அவர்தான் தான் வேலை செய்யும் பார்மசி ஓனர் என அந்த பெண்ணுக்கு தெரியாது. இவரும் அந்த முகமறியா ஓனரின் ஊழியர்களில் ஒருவர் என்றே அந்த பெண்ணுக்கு ரீல் ஓட்டி வைத்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லியபடியே காலை உணவை முடித்தார். ”ஜெயமோகன் சாரை கூப்டேன் பாவம் எதோ சினிமா வேலை வரமுடியாதுன்னு சினுங்கிகிட்டே சொன்னார்” என்றார். உணவு முடித்து உலகளந்த பெருமாள் கோவில் சென்று ஈரோடு குழுவுடன் இணைந்துகொண்டோம்.
பெருமாள் திருவிளையாடல் படத்தில் சாவித்திரி கலரில் இருந்தார். தாமரை வண்ண உள்ளங்கைகள் சங்கு சக்கரம். தூக்கிய பாதத்தை வணங்கும் பிரம்மன். பதிந்த பாதத்தின் கீழ் மூன்றடி மண் தந்தவர். சேவித்துவிட்டு வெளியே வர மூன்றாவது கார் நண்பர்களும் வந்து இணைந்து கொண்டனர்.
”நம்ம முதல் டெஸ்டிநேஷன் ஆலப்பாடி பாறை ஓவியங்கள் பாக்குறது.” என்ற ஈரோடு கிரிஷ்ணனை ”அங்க பாறை ஓவியம் எதுவும் இல்லன்னா?” என்ற வினாவுடன் ஒரு நண்பர் எதிர்கொண்டார்.
”வந்தத வேஸ்ட் பண்ணக்கூடாது நாமளே ஏதாவது பாறைய பிடிச்சி ஓவியம் வரைஞ்சிட்டு வந்துடுவோம்” என்றார் கிருஷ்ணன்.
திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் பன்னிரண்டு கிலோமீட்டரில் ஆலப்பாடி கூட்ரோடு.அதிலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே சென்றால் ஆலப்பாடி. ஊரில் விசாரித்து ஓவியங்கள் இருக்கும் பாறையை கண்டடைந்தோம். சாலை ஓரமாகவே காணக் கிடைக்கிறது. தொல்லியல் துறை சார்ந்த எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. உழுது புரட்டி, ஆனால் நடவு காணாத காய்ந்த வயல்கள் வழியே பாறையை அடைந்தோம். இற்று விழத் தயாராக பாறையை சுற்றிலும் கம்பி வலை. பாறை மேலே உச்சிக்கு செல்ல செய்து நிறுத்தப்பட்ட சிமின்ட் தூண்கள் மேல் படிக்கட்டு. புதைந்த பாறை மேல் நிற்கும் பாறையின் மேல் விதானத்தில் ஓவியங்கள். [யார் யாருக்கு தோழி, யார் யார் எல்லாம் காதலில் கலவியில் கிடக்கிறார்கள் எனும் அறிய வரலாற்று தகவல்கள் எல்லாம் பெய்ன்ட் கொண்டு குறிப்பிட்ட பாறை மேல் பொரிக்கப்ட்டிருந்தன]. பொக்கை வாய் போன்ற அமைப்புக்குள் குறுகிய எல்லைக்குள் இடைவெளிக்குள் மல்லாந்து படுத்தே ஓவியங்களை காண இயலும்.
முதலில் உள்ளே போய் செருகிக் கொண்டார் ராசுக்குட்டி. அடுத்தடுத்து நண்பர்கள் உள்ளே சென்று கிடைத்த வாக்கில் படுத்துக் கொண்டு ஓவியங்களை புரிந்து கொள்ள தலைப்பட்டனர். தேநீர் வண்ண பாறைப் பரப்பில் காவி வண்ண கோடுகளும் தீற்றல்களும் மெல்ல மெல்ல துலங்கி வந்தன. காவி வண்ண லே அவுட். குழந்தை கிறுக்கும் சித்திரம் போன்ற வடிவங்களுக்குள் சாம்பல் வண்ண பூச்சு என்ன நோக்கு, என்ன வடிவ,என்ன வரிசை, என எதற்கும் பிடி கிடைக்காத வினோத ஓவியச் சிதறல். முதல் பார்வைக்கு ஒன்றுமே பிடி படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக போதம் வடிவங்களுக்காகத் துழாவித் துழாவி,… ”அண்ணா இங்க பாருங்க சக்கரம்” என ராசுக்குட்டி துவங்க முதல் பிடி கிடைத்தது. அது சக்கரம், அல்லது கேடயம், அல்லது சூரியன்,அல்லது அவர்களின் குல அடையாளம். குழந்தை கிறுக்கிய உருவங்கள் போலவே மெல்ல மெல்ல துலங்கி வந்தது மான்கள். புதர் அருகே நின்றிருக்கின்றன. மாடுகள்.மயில். வேட்டைக்கு செல்லும் மனிதர்கள் போல உருவங்கள். உரிக்கப்பட்ட எதோ விலங்கின் தோலை லே அவுட் செய்த சில கோட்டு சித்திரங்கள். அருகே தோலுரிக்கப்பட்ட மாடு ஒன்றின் சித்திரம். முன்னறிவு இல்லாததால் குழம்பிய சித்திர வெளியை பொருள் கொள்ள இயலாமல் போதம் தவித்தது.
நண்பர்கள் இயல்பாக நகைச்சுவைக்குள் செல்ல. ஈரோடு கிருஷ்ணன் அமியின் குகை ஓவியம் கதையை நினைவு கூர்ந்தார்.
ஓவியங்களை அவதானிக்க பார்வைப் புலனுக்கு தேவையான குறிப்பிட்ட தொலைவு அங்கே சாத்தியப்படாததால் ஓவிய சிதறல் குழப்பமும் தெளிவுமாக மாறி மாறி தோற்றமளித்தது. சக்தி கிருஷ்ணன் போலராய்டு சண் கிளாஸ் வழியே பாறை ஓவியங்களை பாருங்கள். கோட்டு சித்திரம் மிக தெளிவாக தெரிகிறது என, அனைவரும் அவரது கண்ணாடி வழியே அந்த பதினைந்துக்கு பதினைந்து அளவில் இருக்கும் ஓவியக் களத்தை மீண்டும் விழிகளால் வருடினோம்.
நேரமாச்சி கிளம்புவோம் கீழ்வாலை அடுத்து இருக்கு என ஈரோடு வக்கீல் துவங்க, ”அண்ணா இங்க வரிசையா சூலம் பாருங்க. இந்தக் குடி ஆதி சைவக் குடிங்கன்னா” என்று தனது கண்டடைதலை முன்வைத்தார் ராசுக்குட்டி.கிளம்பினோம். வெளியேற இயலாமல் அய்யய்யோ அய்யய்யோ என கதறிய ராசுக்குட்டியை எழுவர் இழுத்து வெளியே போட்டனர்.
மீண்டும் சக்தி கிருஷ்ணனுக்கு அந்த பெண்ணின் அழைப்பு. ”ஒண்ணு பண்ணுமா நீ. ஒரு மூணு நாள் லீவு போட்டுட்டு. முதலாளி கண்டிப்பா கேப்பார். சொல்லி சம்பளத்த வாங்கி வெச்சுடறேன் சரியா” அந்தப் பிள்ளையும் சரி சரி என மண்டையை ஆட்டியது இங்கிருந்தே தெரிந்தது. ”யோவ் ஏன்யா இந்த அநியாயம் பண்ற” எனக் கேட்டேன் ”என்ன செய்ய சீனி. சம்பளம் தரனும் மனம் இருக்கு, பணம் இல்லையே” என்றார் சக்தி.
கீழ்வாலை நோக்கி கிளம்பினோம். பிரபு யோகி இடையே விஷ்ணுபுரம் நாவலின் புக் மார்க் போல சிக்கி இருந்தேன். வெளியே அனலை வெளிச்சமாக பரப்பி விரிந்த வெயில் வெளி. விவசாயம் நலிந்து ஆட்கள் பெங்களூருக்கு கூலிக்கு சென்றுவிட்டதால் கைவிடப்பட்ட நிலங்கள். சுற்றிலும் வெய்யிலே பாறைகளாக உருண்டு, அந்தப் பாறைகளே மலைகளாக உயர்ந்த அனல் தொடர். குவிக்கப்பட்ட கோலிக்குண்டுகள் போல தோற்றமளிக்கும் மலைத்தொடர். ஒவ்வொரு பாறையாக நீக்கினால் மிச்சமின்றி காணாமல் போகும் மலை. ஆங்காங்கே குவாரிக்கு உணவான பாறைகள் வரிசை.
வழியில் ஒரு சிற்றூரில் மதிய உணவு முடித்து,கீழ்வாலை அடைந்தோம். கீழ்வாலை பெயர்ப்பலகைக்கு எதிரே விரியும் பாறைகள் செறிந்த திடலில் எங்கோ அந்த ஓவியப் பாறைகள் கிடக்கிறது. ஊரிலிருந்து ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் வழிகாட்டியாக கிடைத்தான். உண்மையில் வழிகாட்டி இன்றி அந்தப் பாறை ஓவியங்களை அங்கு கண்டு பிடிப்பது கடினமே.
நான், சக்தி, பிரபு மூவரும் பேசிக்கொண்டே பாறைக் குவியல் ஊடே நடந்தோம். பேசிக்கொண்டே வந்த சக்தி ”நான் ஜெயில்ல இருந்தப்போ பல அல் உம்மா ஆளுக என்ன பன்னுவாங்கன்னா ” என தொடர சக்தியின் பின் புலம் அறியாத பிரபு முகத்தில் மெல்லிய பீதி.
”சக்தி நீங்க… ஏன் ஜெயில்ல? ” குரலில் மெல்லிய நடுக்கம்.
சக்தி மிக இயல்பாக ” கைதவறி ஒரு கொலை பண்ணிப்புட்டேன்” என்றுவிட்டு அல் உம்மா உளவியல் பற்றி பேசிக் கொண்டே போனார். முகத்தில் அய்யய்யோ வுடன் இரண்டடி பின்னால் வந்தார் பிரபு.
பையன் பாறைகள் குவிந்து உருவான புதிர்ப் பாதை அமைப்புக்குள் எங்களை அழைத்து சென்றான். நாற்ப்பது அடி உயர பாறைகள் ஒன்றின் மீது ஒன்று சாய்ந்து அமர்ந்த இடைவெளிப் பிலத்தின் புதிப் பாதைகள் வழியே நடந்தோம். வெளியே காய்ந்த தகிப்பு நேரெதிராக இந்தப் பாதை எங்கும் குளிர் தென்றல் பீரிட்டு உலவியது. வெளியேறி மீண்டும் வெயில் திடலுக்கு வந்து எதிர்பட்ட முதல் பாறையில் ஏறினால் ஓவியங்கள்.
ஆலப்பாடிக்கு மாறாக இங்கே அமர்ந்து பார்க்கும் வசத்தில், வாகான தூரத்தில் ஓவியங்கள். பையன் கையில் இருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை பாறை மேல் விசிறி அடித்தான். அதுதான் பாறை ஓவியம் துலங்கும் வழி போலும். துல்லியமாக துலங்கி வந்தது ஓவியங்கள். அதே சக்கரம். மாடுகள், மான்கள், ஆயுதம் தரித்த நிலையில், எதிர் எதிர் நிலையில் போருக்கோ, நடனத்துக்கோ நிற்கும் கழுகு தலை மனிதர்கள். குதிரை போலும் பிராணி ஒன்றினில் அமர்ந்திருக்கும், அதை வழி நடத்தும் மற்றொருவன் என இரு மனிதர்கள். காலையில் பார்த்த ஆலப்பாடி ஓவியங்கள் இங்கே முன்னனுபவமாக சித்திரங்கள் சட் சட் டென பிடி கிடைத்தன.
பாறை மேல் வீசி வீசி நீர் காலி ஆக, போதும் இனிமே இருக்க தண்ணி குடிக்க வேணும் என கதறினார் ஈஸ்வர மூர்த்தி. வியர்வையில் தெப்பலாக நனைந்து பரிதாபமாக தோற்றமளித்தார் ஈமூ.
என்னை பார்த்தவர் ”அது எப்படி சீனு உத்ராகான்ட் போயிட்டு வந்த மாதிரியே எழுதி இருக்கீங்க” என்று கேட்டார்.
”அதுல பாருங்க உண்மைக்கு மூன்று அலகுகள். சுருதி, பிரதிக்ஷம், அனுமானம்…..பிரக்திக்ஷம் இல்லன்னா கூட ஸ்ருதியும் அனுமானமும் போதும் ஒரு நல்ல பயணக் கட்டுரைய எழுதிப் புடலாம் ”என்றேன். வந்தது வினை.
”அப்டின்னா இந்த பயணத்தையும் அது மாதிரியே எழுதுங்க எழுதுங்க. படிக்கறவங்க அடடா அந்த நிலத்த பாக்கலன்னா பொறந்ததே வேஸ்டு அப்டின்னு அந்த கட்டுரைய படிச்சு தவிக்கணும். இங்க வரணும். தண்ணி தவிச்சி சாகனும். ஆண்டவா மயக்கம் வருதே….” சரிந்தார் ஈமூ..
அடுத்தது செத்தவரை என்றார் ஈரோடு கிருஷ்ணன். யாரோ பேர் மங்களகரமா இருக்கு என்றார்.
செத்தவரை. உண்மையாகவே ஆமியின் குகை ஓவியம் கதையின் மூன்றாவது குகை நோக்கிய பயணம் போல, பயண சாகசம் அதிகரித்துக்கொண்டே போனது. செங்குத்தான பாறை உருண்டைகள் மேல் ஒரு கிலோமீட்டர் உயரவேண்டும். பிரபு ”மிடில சாமி” என்று கீழேயே அமர்ந்து விட்டார். அண்ணாமலை உச்சிக்கு நெம்புகோல் போட்டு போட்டே உயர்த்தி கொண்டு செல்லும் தீப அண்டா போல, எழுவர் நெம்புகோல் போட்டு போட்டு ராசுக்குட்டியை உயர்த்தினர்.
இங்கே கண்டவை முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. உலகெங்கும் குகை ஓவியங்களில் காணப்படும் பொது அடையாளமான ”கை” அடையாளம் இங்கே பெரிதும் சிறிதுமாக நிறைய காணக் கிடைக்கிறது. சிறிய கைகள் கோட்டு சித்திரமாகவும், பெரிய கை [ஆட்காட்டி விரல் இல்லை] முற்றிலும் காவித் தடமாகவும் காணக் கிடைக்கிறது. அனைத்துமே இடது கை. வித்யாசமாக இங்கே பெரிய பெரிய மீன்களும் சிறிய படகு ஒன்றும் வரையப்பட்டு இருக்கிறது. சிந்து சமவெளி ஒற்றை கொம்பு மிருகம் போலும் ஒரு மிருகத்தின் கோட்டு சித்திரம். அருகே தீயில் வாட்டப்படும் ஊண் குறித்த சித்தரிப்பு.
இந்த மூன்று நிலைகளில் கண்ட ஓவியங்கள் இன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு முதல் ஐயாயிரம் ஆண்டுகள் வரை என இணையம் சொல்கிறது. பெருங்கற்கால வேட்டை உணவு சேகரிக்கும் இனக் குழு ஒன்றின் பதிவுகள் இவை என முதல் பார்வையிலேயே புரிகிறது. வட்ட சின்னம் சூரியன், சக்கரம் அல்லது குல சின்னமாக இருக்கக் கூடும். கழுகு தலை [அல்லது அவ்வாறான கிரீடம்] கொண்டவன் முதன்மையானவன் என புரிகிறது. பழக்கம் செய்விக்கப்பட்ட மிருகம் ஒன்றின் மேல் [அனேகமாக குதிரைதான்] அமர்ந்திருக்கிறான். மிருகங்களை பழக்குவது அறிந்த குலம். தோலுரித்த மாட்டை கொண்டு, உரித்த தொலை கொண்டு, ஆயுத்தத்தை நுட்பமாக பயன்படுத்தி, சீராக பணி செய்ய கூடிய திறன் வாய்ந்த குலம் என்றும்,சேகரம் செய்ய தெரிந்த குலம், என்றும் ஊகிக்கலாம். சுட்டு சமைத்து உண்ட குழு. மீன் பிடிக்க, படகு சவாரி தெரிந்த குழு, மீன் பிடித்தல் செய்வோர் வேட்டை புரிவோர் காட்டிலும் உயர்ந்த நிலையில் அன்று மதிப்பிடப் பட்டிருக்கக் கூடும்.
அனைத்துமே கண்டு உருவாக்கிக்கொண்ட புரிதல் சட்டகம் மட்டுமே. இதற்க்கான முறையான கல்வி கற்று இதை விரித்துப் பொருள் கொண்ட வல்லுனர்கள் சொன்னவற்றை அறிந்தபிறகு இங்கே மீண்டும் வர வேண்டும் அது வரை இவை இங்கே இருக்க வேண்டும். தொல்பொருள் துறை கீழே இவை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதான எந்த ஒரு தடயமும் இங்கே கண்ட மூன்று ஊர்களிலும் இல்லை. உளுத்துப்போன வலை வேலியும் விழுந்து போனால். எஞ்சும் ஓவியங்கள் விரைவில் ஆவி ஆகும் எல்லா சாத்தியக்கூறுகள் அங்கே நிலவுகிறது.
குழு மொத்தமும் கைத்தாங்கலாக ராசுக்குட்டியை இறக்கியது. ”உயிருள்ளவரை மறக்க முடியாது இந்த செத்தவரை” என இறங்கியதும் பிரகடனம் செய்தார். மாலை வெயில் ஏந்தி பொன்னாகப் பொலிந்து கொண்டிருந்தன வெம்பாறைகள் சிதறிய வெளி.