«

»


Print this Post

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64


64. நிழல்வேங்கை

முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி  எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து சீரமைத்தாள். அவள் எதிர்பாராதபடி குனிந்தது தேவயானியை திடுக்கிட்டு பின்னடையச் செய்தது. “ஆடை…, தேவி” என்றாள் இளம்சேடி. தேவயானி புன்னகையுடன் “சொல்லிவிட்டு செய்!” என்றாள். “அரசியர் பல மடிப்புகள் கொண்ட ஆடையணிந்திருப்பார்கள். அவற்றை சேடியர் சீரமைப்பது ஒரு வழக்கம்” என்றாள் இளம்சேடி.

அவள் தன்னளவே உயரம்கொண்டவள் என்பதை தேவயானி அப்போதுதான் உணர்ந்தாள். “இங்கே உன்னளவு உயரம்கொண்ட எவருமில்லை” என்றாள். “ஆம், நான் இக்குடியில் அரிதாகப் பிறந்தவள். அதனாலேயே இவர்களுடன் இணைய முடியாதவள்” என்றாள் இளம்சேடி. “உன் தோள்களும் நடையும்கூட என்னைப்போல் உள்ளன” என்று தேவயானி சொன்னாள். அவள் சிரித்து “ஆம், அதை சற்றுமுன் முதுசேடி ஒருத்தி சொன்னாள்” என்றாள்.

அவர்கள் இடைநாழியில் நடக்கத் தொடங்கியதும் இளம்சேடி “பேரரசியர் உருவாவதில்லை, பிறக்கிறார்கள் என்பதை இப்போதுதான் கண்டேன்” என்றாள். தேவயானி திரும்பிநோக்க வணங்கி “சூரியன் எழுந்ததும் பிற சுடர்கள் ஒளியிழப்பதுபோல இன்றைய அவை” என்றாள்.  முகம் மலர்ந்தாளென்றாலும் பொய்ச்சீற்றத்துடன் “முகமன் கூறுகிறாயா?” என்று தேவயானி கேட்டாள். “இல்லை தேவி, இங்கே முகமன் உரைகளே சொல்லாடலில் பெரும்பகுதி. ஆனால் என் உள்ளத்திலிருந்து உரைக்கும் சொற்கள் இவை” என்றாள் இளம்சேடி. “நீங்கள் அரசகுலத்தில் பிறந்து அரசமுறையில் ஊறிவாழ்ந்தவரல்ல என்பதனால்தான் இதை நேரடியாகக் கூறவும் துணிகிறேன்.”

“இளமை முதலே இவ்வரண்மனையில் பணியாற்றுகிறேன். நூல் கற்றிருக்கிறேன். நெறிகள் அறிவேன். நானும் அழகியே. பேரரசிக்கோ இளவரசிக்கோ பிழையேதும் இன்றி பணியாற்றி வருகிறேன். ஆனால் என் உள்ளே ஒரு கூர்முனை ஒருபோதும் வளைந்ததில்லை. ஒரு சிறு முரண் நான் சொல்லும்  அனைத்துச் சொற்களுக்கு அடியிலும் உண்டு. அதை அவர்களும் அறிவார்கள். அவர்கள் அறிவதனால் எவ்வகையிலோ என்னை மெல்ல புண்படுத்திக்கொண்டும் இருப்பார்கள்” என்றாள் இளம்சேடி. “என் அகம் அனைத்தும் முற்றிலும் பணியும் ஓர் ஆளுமை என உங்களை கண்டேன். உங்களுக்கு ஒரு பரிசுத்தாலத்தை கொண்டுவரும்பொழுது என் உளமெழுந்து பெருகிய உவகையை உணர்ந்தபோதுதான் நான் தேடிக்கொண்டிருந்தது உங்களைப்போன்ற ஒருவரை என்று உணர்ந்தேன்.”

தேவயானி கைநீட்டி அவள் தோளை மெல்ல தொட்டாள். அதில் மேலும் நெகிழ்ந்து அவளை அணுகி “என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், தேவி. உங்களுடன் இருப்பின் நான் இப்பிறப்பில் நிறைவுடையவளாவேன்” என்றாள். “உன் பெயரென்ன?” என்று தேவயானி கேட்டாள். “காமவர்த்தினி” என்று அவள் சொன்னாள். “வர்த்தினி என என்னை அழைப்பார்கள். வியாஹ்ரை என்றும் சாயை என்றும் நகையாட்டுப் பெயர்கள் உண்டு.” தேவயானி “அது ஏன்?” என்றாள்.  “நான் ஓசையற்ற காலடிகொண்டவள். ஆகவே புலி என்றும் நிழல் என்றும் சொல்கிறார்கள்” என்றாள் காமவர்த்தினி.

“நன்று! நான் பேரரசியிடம் சொல்கிறேன்” என்றாள் தேவயானி. இளம்சேடி சாயை “இன்று பரிசுத்தாலத்தை எடுப்பதற்காக நான் உள்ளறைக்குச் சென்றபோது அத்தனை சேடியரும் பேசிக்கொண்டிருந்தது ஒன்றே. தாங்கள் வந்திறங்கியதுமே ஹிரண்யபுரியின் இளவரசிக்கு எது குறைகிறது என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது” என்றாள். தேவயானி புன்னகையுடன் “எது?” என்றாள். “அவள் இளவரசி அல்ல என்பது” என்றாள் வர்த்தினி. தேவயானி வாய்விட்டு நகைத்தாள். பின்னர் “எண்ணிச் சொல்லெடு. இங்கே அது அரசமறுப்பு என எடுத்துக்கொள்ளப்படும்” என்றாள். “அதனால் எனக்கென்ன? நான் எவருக்கும் குடியல்ல, உங்கள் ஒருத்திக்கே ஆள்” என்றாள் சாயை.

அரண்மனையில் தனக்கு அளிக்கப்பட்ட அறைக்குள் சென்று அங்கிருந்த ஒவ்வொன்றையும் விழியோட்டி நோக்கினாள் தேவயானி. தூயவெண்மஞ்சம், நாய்க்குட்டியின் தோல் என மென்பரப்பு கொண்ட மரவுரிகள், காற்றில் அலையிளகிய மென்பட்டு விரிப்பு. முகில்கீற்றென இறகுத்தலையணை. அணிகளைக் கழற்றி வைப்பதற்கான சந்தனப்பேழைகள் நான்கு பீடத்தின்மேல் இருந்தன. நீள்வட்ட வடிவிலான உலோகஆடியில் அவள் உருவம் பிறிதொரு அறையின் வாயிலுக்கு அப்பால் என தெரிந்தது. திறந்த சாளரத்தில் மெல்ல நெளிந்த கலிங்கத்து செம்பட்டுத் திரைச்சீலை. அவள் திரும்பத்திரும்ப நோக்கியபின் “இப்படியே எப்போதுமிருக்குமா?” என்றாள். “தேவி, காற்று கடந்துசென்ற நீர்போலிருக்கவேண்டும் அரசியர் அறை என்பது சேடியருக்கான நெறிக்கூற்று” என்றாள் சாயை.

தேவயானி “பகட்டு என்று சொல்லலாம், ஆனால் அழகென்பதே ஒரு பகட்டு அல்லவா?” என்று சொன்னபடி கைகளை விரித்து மெல்ல சுழன்றாள். “அழகின் உள்ளடக்கம் ஆனந்தம். இரு, நிறை, திகழ் என அது சொல்லிக்கொண்டிருக்கிறது.” சாயை சிரித்து “சார்த்தூல நிருத்யம்” என்றாள். தேவயானி வியப்புடன் “சாரங்கதரரின் காவியம், நீ கற்றிருக்கிறாயா அதை?” என்றாள். சாயை “ஆம், உளப்பாடம்” என்றாள். “எவரிடமிருந்து?” என்றாள் தேவயானி. “இங்கே நூல்மடம் ஒன்றுள்ளது. அங்குள்ள சுவடிக்காப்பாளர் என் தாய்மாமன்.” தேவயானி “ஆனால் கற்பிக்கப்படாமல் எப்படி காவியத்தை கற்கலாகும்?” என்றாள். சாயை “காவியப்பொருளை முன்னரே அறிந்தவர்களே காவியத்தை கற்கமுடியும், தேவி. காவியப்பொருளே இயற்கை என அழைக்கப்படுகிறது” என்றாள். தேவயானி அவள் தோளில் கைவைத்து “நான் எனக்கு நிகர்ச்சொல் கொண்ட பெண்ணை முதன்முதலாக சந்திக்கிறேன்” என்றாள்.

சாயை புன்னகைத்து “அணிகளைக் கழற்றி சித்தமாக இருங்கள், தேவி. நீராட்டுச் சேடியரை நான் அழைத்துவருகிறேன்” என்றாள். “நீராடி ஆடை மாற்றி அணி புனைந்து எழுங்கள். அரசர் தன் முதல் ஆசிரியருக்கு இன்று அவைச்சிறப்பு அளிக்கிறார். அவையில் அரசியர் நிரையில் தாங்களும் இருக்கவேண்டுமென்று அரசரும் விழைகிறார்” என்றாள். “எங்களுக்கான தவக்குடில் எங்குள்ளது?” என்றாள் தேவயானி. “நாளை காலையில்தான் ஆசிரியர் தன் தவக்குடிலுக்கு செல்வார் என்றார்கள். இன்று தாங்கள் இந்த மாளிகையில் தங்கவேண்டும்.”

மீண்டும் அறையை சூழ நோக்கியபடி “நன்று” என்றாள் தேவயானி. சாயை தலைவணங்கி மெல்ல பின்வாங்கிச் சென்று கதவை மூடினாள். கதவின் விளிம்பு சென்று பொருந்தியதுமே தன் உளம் சற்றே திசைமாறி அதுவரை இருந்த உவகையை இழந்து முள்நெருடலொன்றை அடைவதை தேவயானி உணர்ந்தாள். எழுந்து சாளரத்தருகே சென்று திரைவிலக்கி வெளியே பார்த்தபோது அது ஏன் என்று தெரிந்தது. சர்மிஷ்டையின் கண்கள். குழந்தைத்தன்மையைத் தவிர்த்து எவராலும் அவளை எண்ண இயலாது. அவள் அக்கண்களையே எண்ணிக்கொண்டிருந்தாள். திரும்ப தலையை அசைத்து தன்னைக் கலைத்து வெளியே இளங்காற்றில் ஆடிக்கொண்டிருந்த மரக்கிளைகளை நோக்கினாள்.

tigerஹிரண்யபுரிக்கு தென்கிழக்கே இருந்த சூக்தவனம் என்னும் குறுங்காட்டில் அதை வளைத்தோடிய பிரதமை என்னும் ஆற்றின் கரையில் சுக்ரருக்கான பெரிய தவக்குடில் அமைக்கப்பட்டிருந்தது. அரக்கும் மெழுகும் பூசிய மரப்பட்டைகளை வண்ணம் சேர்க்கப்பட்ட மூங்கில்களாலான கழுக்கோல்கள் மேல் கூரையாக வேய்ந்து கைசுற்றி பிடிக்கமுடியாதபடி பெரிய சித்திரத்தூண்கள் மேல் நிறுத்தி எழுப்பப்பட்டிருந்த பெரிய மூன்றடுக்குக் குடில் சுக்ரருக்கு. அதைச் சூழ்ந்து பிறைவடிவில் நூற்றெட்டு சிறுகுடில்கள். சுக்ரர் முகம் மலர்ந்து “அரண்மனை வளாகம் போலிருக்கிறது” என்றார்.

உடன் வந்த விருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் “அரண்மனையேதான். ஆசிரியர்கள் அரண்மனையில் தங்கமாட்டீர்கள் என்பதனால்தான் குடில்வடிவம்” என்றார். “மையக்குடிலை ஒட்டி வலப்பக்கம் அமைந்த வேள்விச்சாலையில் ஆயிரம்பேர் அமரமுடியும். இடப்பக்கம் இருக்கும் கல்விச்சாலையில் முன்னூறு மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்க முடியும். தாங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் அனைவருக்கும் நன்கு கேட்கும்படி ஒலியும் எதிரொலியும் தேர்ந்த கலிங்கச்சிற்பிகளால் அமைக்கப்பட்டது அக்கூடம்” என்றார்.

அவர்கள் உள்ளே நுழைந்தனர். குடில்களைக் கட்டிய கலிங்கச்சிற்பிகள் வந்து வணங்கி நின்றனர். தலைமைச்சிற்பி சிரத்தர் அவருடன் நடந்தபடி “இது தாங்கள் ஓய்வெடுப்பதற்கான இடம். தங்கள் மாணவர்கள் மட்டும் தங்களிடம் உரையாடுவதென்றால் இந்தச் சிறிய கூடம்” என ஒவ்வொன்றையும் அறிமுகம் செய்தார். “இங்கே இனிய தென்றல் எழும் என்பதை நோக்கி இடம் தேர்ந்தோம். இருப்பினும் இந்த தூக்கிவிசிறி மேலே அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த கயிறு அங்கே ஆற்றின் சரிவில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்ச்சகடையுடன் இணைந்துள்ளதனால் மானுடக்கை இல்லாமலேயே ஆடி காற்றை அசைத்துக்கொண்டிருக்கும்.”

தேவயானியின் குடில் வலப்பக்கம் காட்டின் ஓரமாக அமைந்திருந்தது. சேடியருக்கான இரு சிறுகுடில்கள் அதன் இருபுறமும் இருந்தன. அவற்றிலிருந்து அவள் குடிலுக்குள் நுழைய கூரையிடப்பட்ட பாதை இருந்தது. அவளுடைய துயிலறைச் சாளரத்துக்கு வெளியே நாணல்கள் செறிந்த கரைகளுக்கு நடுவே நீலச்சிற்றலைகளுடன் பிரதமை சென்றது. மெழுகுபூசப்பட்ட மரத்தால் தளமிடப்பட்டிருந்த தரையில் சாளரப்பாவைகள் நீர்மையென ஒளிகொண்டு சரிந்துகிடந்தன. பின்பக்கம் ஆடைமாற்றும் அறையும் பொருள்வைப்பு அறையும் இணைக்கப்பட்டிருந்தன. திண்ணையில் அமர்ந்து ஆற்றையும் மறுபக்கம் சோலையையும் நோக்கிக்கொண்டிருப்பதற்காக பிரம்பு முடைந்த பீடங்கள் இடப்பட்டிருந்தன.

புதிய குடில் சுக்ரரைப்போலவே தேவயானியையும் உவகையில் ஆழ்த்தியது. சிறுமியைப்போல ஒவ்வொரு அறையாகச் சென்று நின்று கைகளை விரித்து அதன் அகலத்தை அறிந்து மகிழ்ந்தாள். சுவர்களை தட்டிப்பார்த்து அவற்றின் தடிமனை உணர்ந்தாள். அவற்றில் வரையப்பட்டிருந்த வண்ணமெழுகு ஓவியங்கள் அனைத்தையும் நின்று நோக்கினாள். பறக்கும் கந்தர்வர்கள், சிப்பி பதிக்கப்பட்ட விழிகள் ஒளிரும் யட்சர்கள், அவர்களைச் சுற்றி வளைத்து பின்னிப் படர்ந்திருந்த மலர்க்கொடிகள், அவற்றினூடாக சிறகசைத்தன வண்ணப்பறவைகள். பல கோணங்களில் மிரண்டு நோக்கி நின்றன மான்கள். உடல் ஒன்றுடன் ஒன்று பிணைத்துச் சென்றன களிற்றுயானை நிரைகள்.

ஓரிரு நாட்களிலேயே தேவயானி அவ்விடத்தை முழுமையாக நிறைத்தாள். என்றும் அங்கேயே இருந்தவள்போல உணர்ந்தாள். முதுசெவிலி “பெண்கள் நீர்போல, தேவி. அவர்கள் இருக்குமிடமளவுக்கு விரிவடைவார்கள்” என்றாள். குடில்தொகையிலும் சூழ்ந்த பூங்காட்டிலும் ஒவ்வொன்றையும் தனக்குகந்த முறையில் அவள் அமைத்துக்கொண்டாள். மலர்ச்செடிகள், ஊடாக சிறுபாதைகள், அமர்வதற்கான மரப்பீடங்கள், கொடிமண்டபங்கள், நிழல்மரங்களுக்குக் கீழே ஓய்வெடுப்பதற்கான இலைமஞ்சங்கள். ஒவ்வொன்றையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள். ஒவ்வொரு காவியத்திலும் ஒருபிறவிகொண்டு வாழ்ந்து மீண்டிருந்தாள்.

ஆணையிடுவதனூடாக அவள் தன்னை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டாள். அவள் குரலாலேயே அவ்வாணைகளை செங்கோலின் குரலென ஏற்றுப்பணிந்தனர் விருஷபர்வனின் ஊழியர்களும் காவலர்களும். அவள் குரலை காமவர்த்தினியும் அடைந்தாள். பின் அவள் குரலே அனைவருக்கும் ஆணையிடலாமென்றாயிற்று. தேவயானியின் நிழல் என்னும் பொருளில் அவளை அனைவரும் சாயை என்றே அழைக்கலாயினர்.  மெல்லிய பாதங்களுடன் அவள் வருவதைக் கண்டால் வாயசைக்காமல் ஒருவருக்கொருவர் “வியாஹ்ரை” என்றனர்.  அடுமனைமுதுமகள் தேவயானியிடம் நகையாட்டாக “உங்களை வியாஹ்ராரூடையாகிய துர்க்கை என்கிறார்கள், தேவி” என்றாள்.

அனைத்தும் எண்ணியவாறு அமைந்தபின் தன் குடில்முகப்பில் பீடத்தில் அமர்ந்து ஒளிவிடும் ஆற்றை நோக்கியிருந்தவள் திரும்பி சாயையிடம் “மீண்டும் புதிதாகப் பிறந்ததுபோல் உணர்கிறேன்” என்றாள். அவள் புன்னகைத்து “மெய்யாகவே மீண்டும் பிறந்திருக்கிறீர்கள், தேவி” என்றாள். “இங்கு ஓர் அரசியென உணர்கிறேன். எளிய குடில் வாழ்க்கையில் இருக்கையில் அதுவே நிறைவென்று தோன்றியது. மாளிகைக்கு வரும்போதுதான் நாம் இழந்ததென்னவென்று புரிகிறது. எளிமையென்பது அழகுக்கு எதிரானது” என்றபின் விழிவிலக்கி சாளரத்தை நோக்கியபடி “எளிமை என்பது ஒளி. விழியற்றோர் அதை அறியமுடியாது. செல்வம் மலைகளைப்போல. விழிமூடி எவரும் அதை புறக்கணிக்கமுடியாது” என்றாள்.

“அரசர்களுக்கன்றி எவருக்கும் மெய்யான செல்வம் இல்லை, தேவி” என்றாள் சாயை. “வணிகர்கள் செல்வம் ஈட்டலாம், செலவழிக்க இயலாது. அவர்கள் அதை வெளிப்படுத்தும்தோறும் இழக்க நேரும்.” தேவயானி “ஆம், நான் ஓர் அரசியாக வேண்டும். பேரரசியாக. எனக்குமேல் பிறிதொருவரை ஏற்க என்னால் இயலாது” என்றாள்.  “அங்கே அரண்மனையிலேயே அவ்வெண்ணம் வந்தது. இக்குடிலுக்குள் நுழைந்ததுமே அதை முடிவுசெய்தேன். என் பிறவி நூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியாக ஆவேனென்று எழுதப்பட்டுள்ளது. இளமையிலேயே அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். பின்னர் அது வெறும் விழைவென்று எண்ணி ஒதுக்கினேன். இப்போது அறிகிறேன், நான் செல்ல வேண்டிய இலக்கு அதுவே.”

“நான் தங்களை பிறிதொருத்தியாக பார்க்கவில்லை, தேவி” என்றாள் சாயை. “ஆகவே இன்றுமுதல் உங்களை நான் அரசி என்றே அழைக்கப்போகிறேன். கேட்பவர்களிடம் நீங்கள் எனக்கு பேரரசி என விளக்கம் அளிக்கிறேன்.”  தேவயானி ஒளிகொண்ட பிரதமையை நோக்கிக்கொண்டிருந்தாள். “ஐயமே இல்லை. நான் பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணை அமர்வேன். என் நகருக்கு நிகராக அமராவதியும் என் மாளிகைக்கு நிகராக இந்திரன் மாளிகையாகிய வைஜயந்தமும் அமையலாகாது” என்றாள்.

“ஆம்” என்றாள் சாயை. “ஆனால் இன்று பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே தங்கள் மணிமுடிகளைக் கொண்டுவந்து விருஷபர்வரின் காலடியில் வைத்து பணிந்து மீள்பவர்களே.” தேவயானி திரும்பி நோக்கி “அனைவருமா?” என்றாள். “அனைவருமல்ல. பணியாத சிலர் உள்ளனர். தேவர்களுடனான போர் நிகழ்வதனால் அவர்களை வெல்ல இயலவில்லை என்கிறார்கள் அசுரர்களின் பாணர்கள். ஆனால் அவர்கள் ஷத்ரியர்கள் என்பதும் தலைமுறைகள்தோறும் வேள்வியளித்து தேவர்களை தங்கள் காவலர்களாக நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும்தான் உண்மை. தேவர்களை வெல்லாமல் அவர்களை ஹிரண்யபுரி வெல்லமுடியாது” என்றாள் சாயை.

“யார் அவர்கள்?” என ஆர்வமற்றவள்போல விழிகளை ஆற்றின் ஒளியில் நட்டு இயல்பான அசைவால் நெற்றியில் சரிந்த குழல்கற்றையை ஒதுக்கியபடி தேவயானி கேட்டாள். “சந்திரகுலத்து ஷத்ரியர்கள். குருநகரி அவர்களின் நாடு. அசுரர்களுக்கும் அவர்களுக்குமாக பாரதவர்ஷம் பகுக்கப்பட்டுள்ளது. நடுவே கங்கை எல்லையென நீர்பெருகியோடுகிறது” என்றாள் சாயை. “சந்திரகுலத்தின் கதைகளைப் பாடும் சந்திரவம்சம் என்னும் பெருங்காவியம் சக்ரதரரால் இயற்றப்பட்டது. நான் அதை முழுமையாகவே கற்றிருக்கிறேன்.” தேவயானி அவளை நோக்கி “பாடு” என்றாள்.

“சந்திரனின் மைந்தன் புதன். புதன் மைந்தன் புரூரவஸ். புரூரவஸ் ஆயுஸைப் பெற்றான். ஆயுஸின் மைந்தன் நகுஷன் இந்திரனை வென்று அரியணை அமர்ந்து நகுஷேந்திரன் என்று புகழ்பெற்றான்” என்று சாயை பாடத்தொடங்கினாள். “நகுஷனின் மைந்தர் அறுவர். நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது.  அவன் சினம் ஆயாதியாகியது.  வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. அவன் கொண்ட  காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது.”

tigerமெல்லிய காலடிகளுடன் தன் படுக்கையறைக்குள் நுழைந்தவளை தேவயானி முன்பு அறிந்திருக்கவில்லை. எழுந்து அமர்ந்து “யார்?” என்றாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்தன. ஆனால் அழுகையல்ல, கடுஞ்சினம் எனத் தெரிந்தது. “யார்?” என்று அவள் மீண்டும் கேட்டாள். அவள் நீள்மூச்சுவிட்டபோது நெஞ்சு எழுந்தமைந்தது. “எப்படி நீ உள்ளே வந்தாய்?” என்றாள் தேவயானி. “நான் வேறு எங்கோ இருக்கிறேன்” என்றாள். அந்த மறுமொழி முற்றிலும் பொருத்தமற்று இருந்தது. பிச்சியோ என ஐயுற்றாள். பகலா இரவா என்று தெரியவில்லை. மிக அப்பால் சாயையின் பேச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது.

“வருக!” என்று அவள் சொன்னாள். அவள் உதடுகள் அசைய ஒலி வேறெங்கோ இருந்து கேட்டது. “எங்கே?” என அவள் அச்சத்துடன் கேட்டாள். “வருக!” என்றாள் அவள் மீண்டும். அவள் அணிந்திருந்த ஆடைகள் அவளை அரசி என காட்டின. “எங்கே?” என்று கேட்டபடி தேவயானி எழுந்தாள். “இங்கிருந்து நாம் செல்லமுடியாது, நம்மை பிறர் பார்த்துவிடுவார்கள்” என்று அவள் சொன்னதை கேளாதவளாக அப்பெண் நடந்தாள். அவள் கால்களின் சிலம்போசையை அவள் மிக அண்மையில் என காதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ யார்?” என்று அவளைத் தொடர்ந்தபடியே தேவயானி கேட்டாள். அவள் திரும்பிநோக்கவில்லை.

முற்றத்தில் நின்றிருந்த அனைவருமே அவளை முன்னரே அறிந்திருந்தனர். அவர்கள் கடந்துசெல்வதை அவர்கள் இயல்பாகவே நோக்கினர். அதற்குள் தேவயானி அது கனவு என உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உள்ளே மஞ்சத்தில் படுத்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். அது கனவுதான் என்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது. எப்போது வேண்டுமென்றாலும் விழித்தெழ முடியும். கையை அசைத்தால் போதும். அவ்வெண்ணம் எழுந்ததுமே கையை அசைக்க முயன்றாள். கை மிகத் தொலைவில் எங்கோ கிடந்தது. உடலை பலமுறை சித்தத்தால் உந்தினாள். அவளால் அதை தொடவே முடியவில்லை.

அவள் பிரதமையின் கரையை அடைந்து திரும்பி நோக்கி அவள் தொடர்ந்து வருகிறாளா என்று நோக்கினாள். அவள் நடைவிரைவைக் கூட்டியதும் மேலும் நடந்தாள். இரு வளைவுகளுக்குப் பின் அவள் கண்ட ஆறு பலமடங்கு பெரிதாக கரைமரங்கள் செறிந்து வளைந்து நீரளாவும் கிளைகள் கொண்டிருக்க அலையிளகிச் சென்றுகொண்டிருந்தது. அதில் வந்து சேர்ந்த ஒரு சிற்றோடையருகே திரும்பி முன்னால் சென்றவள் நடந்தாள். அவளைத் தொடர்ந்து சென்ற தேவயானி ஒரு நோக்கில் திகைத்து நின்றாள்.  முன்னால் சென்றவளின் முகம் தன்முகம் போலவே இருப்பது அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது.

ஓடை மேலும் மேலும் சிறியதாகியபடியே சென்றது. அவளை அழைத்துச்சென்றவள்  அங்கே எவருக்காகவோ நின்றாள். ஓடையின் நீர் முற்றிலும் நிலைத்ததை தேவயானி அறிந்தாள். பாறை இடுக்குகள் வழியாக நுரையுடன் பீறிட்டு வந்த நீர் மெலிந்து வழிந்து நீர்த்தடம் வெண்ணிறமாகத் தெரிய ஓசை ஓய்ந்தொழிய தெரிந்தது. மரங்களுக்கு அப்பால் அவள் ஒருவனை கண்டாள். முதிரா இளைஞனாயினும் அவள் அதுவரை கண்டதிலேயே உயரமானவனாக இருந்தான். தலையில் கரியகுழல்களை மலைக்கொடியால் கட்டி முடிச்சிட்டிருந்தான். அவன் கையிலிருந்து அதிர்ந்த வில்லில் இருந்து எழுந்த அம்புகள் சீராகச்சென்று சேற்றிலும் பாறையிடுக்குகளிலும் ஊன்றி நின்று முடைந்த தடையில் சீப்பில் சிக்குவதுபோல ஓடையின் சருகுகளும் கொடிகளும் வந்து படிந்து உருவான இயற்கையான அணைத்தடுப்பு நீரை முழுமையாக நிறுத்தியிருந்தது.

அவள் ஓடையை நோக்கிய சரிவில் மெல்ல இறங்கி முன்னால் சென்றவளிடம் “யார் அவன்?” என்றாள். “குருநகரியின் அரசன், அவன் பெயர் யயாதி” என்று அவள் சொன்னாள். அவன் தோள்களும் புயங்களும் திரண்டு தசைஇறுகித் தெரிந்தன. அவன் வில்லை வைத்துவிட்டு நெற்றிவியர்வையை அம்பால் வழித்து சொட்டிவிட்டுத் திரும்பினான். அவர்களை அவன் காணவில்லை. இலைத்தழைப்பு மறைத்த அவன் முகத்தை அவள் கண்டாள். திடுக்கிட்டு அலறியபடி பின்னடைந்தாள். அது கசன்.

அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அது கனவு என்று உணர்வு சொன்னது, இக்கணமே நான் எண்ணினால் என் படுக்கையில் எழுந்துவிடமுடியும். ஆனால் மரங்களும் மண்ணும் ஆறும் அனைத்தும் மெய்யென்றிருந்தன. “அவனை அறிவாயா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அறிவேன்” என்றாள் தேவயானி. “அவ்வண்ணமென்றால் அவனை கொல்…!” அவள் பின்காலடி வைத்து “இல்லை” என்றாள். “கொல் அவனை, இல்லையேல் அவன் மீண்டும் வெற்றுநெறி பேசி மீண்டுமொருமுறை பெண்பழி கொள்வான்.” அவள் “இல்லை இல்லை” என்றபடி பின்னடைந்தாள். “ஒரு சொல் உரை… இந்த ஓடை அனல்பெருக்காக ஆகும். இக்காடு பற்றி எரியும்.” அவள் மேலும் மேலும் பின்னால் நடந்தபடி “இல்லை, என்னால் இயலாது…” என்றாள். உடல் உலுக்கிக்கொள்ள அழுதபடி “என்னால் இயலாது… என்னால் இயலாது” என கையை அசைத்தாள். ஆனால் அப்போதும் அவள் தன் அறையின் படுக்கையில்தான் கிடந்தாள்.

“ஒரு சொல்… ஒரு சொல் போதும். நீ மீண்டும் மீண்டும் துறக்கப்படாமலிருப்பாய்” என்றபடி இரு கைகளையும் விரித்தபடி அவள் தேவயானியை நோக்கி வந்தாள். “இல்லையேல் இது முடிவிலாச் சுழற்சி. இங்கு அதை நிறுத்து!” தேவயானி  “நீ யார்?” என்றாள். அவள் பன்றியின் ஒலியுடன் உறுமியபோது இரு கைகளின் விரல்களிலும் அனல்கொழுந்துகள் எழுந்தன. அவள் உடல் கருமைகொண்டது. முகம் நீண்டு பன்றிமூக்கும் வெண்தேற்றைகளும் விரிந்த செவிகளும் எழுந்தன. அவள் கைகளிருந்து காட்டுமரங்கள் பற்றிக்கொண்டன. நெய்மழை பெய்து நனைந்திருந்தவைபோல காட்டுமரங்கள் அனைத்தும் பேரொலியுடன் எரிந்தெழுந்தன.

தேவயானியின் ஆடைகள் பற்றிக்கொண்டன. அவள் காட்டெரியினூடாக உடலில் தீக்கொழுந்துகள் எழுந்து படபடத்துப் பறக்க ஓடினாள். மண்ணில் விழுந்து எழுந்து அலறியபடி ஓடினாள். “இல்லை இல்லை“ என்று கூவிக்கொண்டிருந்தாள். தொலைவில் அவள் தன் குடிலை கண்டாள். அதை நோக்கி ஓடி படிகளில் ஏறி உள்ளே சென்றாள். அங்கே செடிகளுக்கு நீர் இறைத்தபடியும் மலர்கொய்தபடியும் இருந்த சேடியரும் செவிலியரும் அவளை காணவில்லை. எரியும் தழல் படபடக்கும் ஒலி அவள் செவிகளில் இருந்தது. அவள் ஓடியபோது சிறகுபோல நீண்டது.

குடிலுக்குள் நுழைந்து தன் அறையை அடைந்து உள்ளே நோக்கினாள். உள்ளே காமவர்த்தினி தன் மஞ்சத்தில் படுத்து கைகளை சேக்கையில் அறைந்தபடி உடல்நெளிய தலையை அசைத்து “தழல்… தழல்… இல்லை… மாட்டேன்” என்று கூவிக்கொண்டிருப்பதை கண்டாள்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/97061/