யோகி- கடிதங்கள்

yogi-adityanath-

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம்! நலமா? நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊறிய  பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது எதை நோக்கி உ.பியை கொண்டு செல்லும் என்று வருத்தப்பட்டிருந்தீர்கள்.உ.பியில் இதற்கு முன் ஜனநாயக விழுமியங்களின் எச்சங்களா ஆட்சி செய்தார்கள்? யாதவ் குண்டாராஜ்தானே நடந்தது? அரசியல்வாதிகளின் எருமை மாட்டை காணவில்லை என்றால் காவல்துறை ஆய்வாளரே விரட்டி பிடிக்க வேண்டும் என்பதுதானே நிலை.

சட்டையும்/பேண்ட்டும் போட்டுவிட்டால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் என்றில்லையே.ஜாதிய வன்மத்தை ஏதேனும் ஒரு பொதுப் போர்வைக்குள் கொண்டு வந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னேற்ற வேண்டிய கடைமை உள்ளதே.கட்டற்று இடதுபுறம் சென்ற வாகனத்தை அதைவிட வேகமாக வலதுபுறம் திருப்பினால்தானே நடுநிலையை அடைந்து சீராகும்.உங்களுடைய அச்சம் எதார்த்தமானது உங்களுடைய கள அனுபவமும் பெரிது இரு முனையும் கூராகிறது என்கிற நுண்ணிய பார்வையை யாராலும் மறுக்க முடியாது.நிச்சயம் யோகி அந்த விளிம்புநிலை வரை செல்லமாட்டார் என்றே தோன்றுகிறது.

நன்றி
சுந்தர்ரராஜசோழன்
மயிலாடுதுறை

***

அன்புள்ள சுந்தர்ராஜ சோழன்

நீங்கள் சொல்லியிருப்பது இன்னொருவகை உண்மை. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும் லல்லுவும் ஆட்சி செய்தபோது சென்றிருக்கிறேன். அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பை எவ்வகையிலும் அவர்கள் கலைக்க விரும்பவில்லை. அதன் அதிகார அமைப்பில் சுகம் கண்டார்கள். யாதவர்கள் அதில் டாக்கூர் பூமிகார் பிராமணர்களின் இடத்தை யாதவர்கள் எடுத்துக்கொண்டார்கள். மாயாவதிகூட அங்கே தலித்துக்களை அடிமைகளாக வைத்திருக்கும் அமைப்பை ஆதரித்தார் என்பதே உண்மை

சாலைகளிலேயே நேரடியான ரவுடித்தனம் உபியின் முக அடையாளம். எல்லா சாலைகளிலும் தனிப்பட்ட ரவுடிகள் செக்போஸ்ட் அமைத்து காசுவசூல் செய்வார்கள். பிகாரிலும் இது உண்டு. தட்டிக்கேட்கவே முடியாது. உபியில் பல இடங்களில் பொதுமக்களே கையில் துப்பாக்கியுடன் அலைவதைப்பார்க்கமுடியும். ஆனால் யோகி ஆதித்யநாத்தும் அந்தப் பண்பாட்டில் வந்தவரே. அவர் அதை மாற்றுவார் என எனக்குப் படவில்லை

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
அடுத்த கட்டுரைகுற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு