முதன்மை எழுத்தாளர் -கடிதம்

j

ஜெமோ,

முதன்மையான எழுத்தாளர்களை அவர்களின் புத்தக விற்பனையை மட்டுமே கணக்கில்கொண்டு முடிவு செய்யும் பேதமையை என்னவென்று சொல்வது.?

இவர்களுக்கு என்ன வருத்தம்? உங்களின் புத்தகங்கள் அதிக பக்கம் என்பதா? இல்லை நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதா? இல்லை உங்களுடைய விமர்சனங்கள் கடுமையாக (அதாவது நேர்மையாக) உள்ளது என்பதாலா?

இதுவரை உங்களுடைய படைப்புகளை முழுமையாகப் படித்து நேர்மையாக விமரிசித்த எந்த இணைய எழுத்தாளரும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

மேலும், நீங்கள் உங்களுடைய முன்னோடிகள் என்று கருதுவர்களைப்போல எழுதவில்லையாம். கலிகாலம்டா…ஆசிரியர்களையும் தலைவர்களையும் துதிமட்டுமே பாடும் கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தானே நாம்.

‎அன்புடன்

முத்துக்குமார்

***

அன்புள்ள முத்துக்குமார்,

எப்போதுமே எழுத்தாளர்களை அளக்க புறவயமான அளவீடுகள் இல்லை. அவரவர் வாசிப்பு, ரசனை சார்ந்தே மதிப்பீடுகள் அமைகின்றன. விற்பனை ஒருவகையில் புறவயமான ஓர் அளவீடுதான். உண்மையில் சர்வதேச அளவில் இன்று தரம், பாதிப்பு என்பதைவிட விற்பனையே அளவீடாகக் கொள்ளப்படுகிறது என நினைக்கிறேன். அத்தனை நூல்களின் பின்னட்டைகளும் அதைத்தானே கூவிச் சொல்கின்றன

ஜெ

***

அன்புள்ள ஜெ

கீற்று கட்டுரையை நீங்கள் பகிர்ந்திருப்பது ஒரு கணம் ஆச்சரியம் அளித்தது. பிறகு வேடிக்கையாகத் தோன்றியது.

தமிழில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் விற்பனையின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகிறார்கள் என நினைக்கிறேன். நீங்கள் எழுதிய இத்தனை ஆயிரம் பக்கங்களும் அச்சில் இருப்பதே தமிழ்ச்சூழலில் பெரிய ஆச்சரியம்தான் என்று நினைக்கிறேன்.

கீற்று இதழில் அந்த ஆராய்ச்சியாளரின் மெனக்கெடல் நல்ல விஷயம்தான். நிற்க விஷ்ணுபுரம் அகரம்1, கவிதா 3, நற்றிணை 1, கிழக்கு 1 என ஆறு பதிப்புகள் வந்துள்ளன இல்லையா?

செந்தில்வேல்

***

அன்புள்ள செந்தில்

நன்று, அவர்களின் கோணம் அது. அவர்கள் முன்வைக்கும் எழுத்தாளர்களை ‘பிரமோட்’ செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு இல்லையா? பதிப்பு விஷயங்களை கீற்று இதழிடம்தான் கேட்கவேண்டும். நான் நினைவு வைத்துக்கொள்வதில்லை

ஜெ

***

ஜெ

கீற்று கட்டுரையுடன் நீங்கள் கொடுத்திருக்கும் படம் மிகமிக அற்புதம். மிகச்சிறந்த சுயபகடி. இல்லை அது உங்கள் இணையதள நிர்வாகிகள் அளித்தது என்றால் உங்களை மிக அற்புதமாக கேலிச்செய்யும் நட்புடன் இருக்கிறார்கள். சிரித்து கவிழ்ந்துவிட்டேன்

லலிதா

***

அன்புள்ள ஜெ

பாவெல் என்பது நீங்கள் இடதுசாரி இயக்கத்தில் இருந்தபோது இடப்பட்ட பெயர் அல்லவா? ஏதோ பின்நவீனத்துவ கதை போல உங்கள் தளம் போதாமல் கீற்றிலும் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்.

தட்டு வைத்திருக்கும் நாய், தலையில் துண்டு கட்டியிருக்கும் நாய் என்ற தொடரில் அந்த அம்மா நாய் படம் ரொம்ப அழகு. பாக்கெட் நாவல் மாதிரி வசவசவென்று பெற்றுத்தள்ளியிருக்கிறது. நீலப்பட்டை கட்டியிருப்பது எல்லாம் புனைவு, இளஞ்சிவப்பு பட்டை அபுனைவு என்று வைத்துக்கொள்ளலாமா?

(உங்களை சுற்றி எப்போதுமே இருந்துகொண்டு ஞானப்பால் குடிக்கும் இளைஞர் பட்டாளத்தை குறிப்பிடுவதாகவும் குறியீட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்)

மது

***

அன்புள்ள மது,

ஆமாம், பாவெல். மக்ஸீம் கோர்க்கியின் கதாபாத்திரம். ஒருவேளை நானேதான் எழுதித்தொலைத்துவிட்டேனா?

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
அடுத்த கட்டுரைநோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்