நோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

பெருநோட்டு அகற்ற நடவடிக்கையினால் “இந்தியப் பொருளியலே அழியும் என எத்தனை ‘ஆய்வாளர்கள்’ எழுதியிருக்கிறர்கள் என்று திரும்பிப்பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது. அவர்களெல்லாம் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்தவற்றுக்குச் சென்றுவிட்டார்கள்.” என்று அங்கலாய்த்திருக்கிறீர்கள். மற்றவர்களை விடுங்கள்.மாபெரும் பொருளாதார மேதை என்று போற்றப்படும் அமர்த்தியாசென்னோ பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்கோ, அல்லது ப.சி.மோ என்னவெல்லாம் பேசினார்கள்? இந்த நடவடிக்கை நாட்டிற்கு ஒரு பேரழிவைக்  கொண்டுவரும் என்றும்  மோதி யாரையும் கலந்தாலோசிக்காமல் (தனது நிதியமைச்சரைக்கூட) முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடுமையாக குறையுமென்றும், சகஜநிலைக்குத் திரும்ப வருடங்கள் ஆகும் என்று கூக்குரலிட்டார்கள்! அப்போதிருந்த தலைமை நீதிபதி ஒருபடி சென்று மக்கள் நாடெங்கிலும் கலகம் செய்வார்கள் என்று கூட பயமுறுத்தினார்! அவர்களெல்லாம் இன்று இருக்குமிடத்தை ஒளி பாய்ச்சித்தான் பார்க்கவேண்டும். இது பற்றி கருத்து கூறிய இவர்களில் ஒருவராவது இன்று வந்து தங்களது கணிப்புக்கள் சில பொய்த்துப்போய்விட்டன என்று நேர்மையாக ஒத்துக்கொள்வார்களா?

நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

 

இனிய ஜெயம்,

முன்பு ஒரு பயணத்தில் நானும் அஜியும் கர்ஜா எனும் ஊரில் நின்றிருந்தோம். அங்கே அருகில் கொண்டானா பௌத்த விகாரை தேடி என் ஆண்ட்ரைடை வாங்கி நெட்டில் துழாவினான் அஜி. நான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி, [இன்னமும் அங்கேயே உறைந்திருக்கும்] இணைய சேவையில் இருக்கும் பி எஸ் என் எல் இன் நிரந்தர கஸ்டமன். வேறு நெட்ஒர்க் இன்றுவரை நான் பயன்படுத்தியதில்லை. பி.எஸ்.என்.எல் அழகு மற்றும் தனித்தன்மை என்னவென்றால் அது உங்களுக்கு தேவையான நேரத்தில் உங்களுக்கு தேவையான வேலையை செய்யாது என்பதே.

அஜி எதிரே சென்ற ஒருவரை நிறுத்தி விசாரித்துவிட்டு வந்து ”சீனு இதோ இந்த மலைக்கு பேரு கலசகிரி. அதுக்கு கீழ ஓடுற இந்த ஆத்துக்குப் பேரு குண்டலிகா ” நான் வரலாற்று கதை கேட்கும் ஆவலுடன் உம் கொட்டினேன். ”உங்க நெட் ஒர்க்க தூக்கி இந்த ஆத்துல போடுங்க” என்றான் அஜி.

சென்ற பயணத்தில் டில்லி நெருங்கியதும். வெல்கம் டு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடேட் என குறுஞ்செய்தி வந்த மறு நொடி சிக்னல் மாயமானது. மைய டில்லி வந்த பிறகே உயிர் வந்தது. மகாராஷ்டிரா முழுதும். பி.எஸ்.என்.எல் பதிலாக டால்பின் எனும் பெயரில் சிக்னல் கிடைக்கிறது. இயக்கினால் மராத்தியில் இருக்கும் எல்லா தடங்களும் உபயோகத்தில் இருப்பதாக எந்திரன் இயம்பும்.

முந்தா நாள் பயணத்தில் இதோ இங்கிருக்கும் திருவெண்ணெய் நல்லூரில் சிக்னல் இல்லை. இருப்பினும் நான் எப்போதும் பாரத் மாதா கி ஜெய் சொல்லி பி.எஸ்.என்.எல் உடனே மட்டுமே வாழ்ந்து வருகிறேன். மொபைல் வழியே கணிப்பொறி இணைத்து அதன் வழியே இணையம் பயன்படுத்துகிறேன். நிற்க.

நேற்று ஊடக நண்பர் எனது இணைய பயன்பாட்டுக்காக ஜியோ வாங்கித் தந்தார். இந்தியாவுக்குள் எல்லா அழைப்புகளும் இலவசம் .முப்பது ஜிபி டேட்டா முன்னூறு ரூபாய். அதாவது ஒரு ஜீபி பத்து ரூபாய்க்குள். சில மாதம் முன்பு வரை அனைத்து நெட் ஒர்க்குகளும் ஒரு ஜிபி இருநூறு ரூபாய் வரை வசூலித்தன. இன்று ஜ்யோக்கு பிறகு அனைத்து நெட் ஒர்க் குகளும் ஜியோ விலைக்கு வந்து விட்டன.

மூன்று மாதத்துக்குள் இந்த நெட் ஒர்க் உலகில் நிகழ்ந்த கதகளி என்னவாக இருக்கும்? எத்தனை லாஜிக்கான கணக்கை அவை முன் வைத்தாலும் இருநூறுக்கும் பத்துக்கும் இடையே இருக்கும் பாரதூரம் பிரமிக்கவைப்பது. எத்தனை கோடி நுகர்வோர் எத்தனை கோடி நூற்று தொண்ணூறு ரூபாய்? இன்று அத்தனை நெட் ஒர்க்கும் செய்யும் ”தியாகத்துக்கு” பின்னணி என்ன?

இனிய ஜெயம் வசமாக ஏமாற்றப்பட்ட உணர்வில் இருக்கிறேன். ஏதேனும் சொல்லி என்னை ஆறுதல்படுத்தவும்.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

இதைப்பற்றி எனக்குத்தெரிந்த ஒரே விஷயம் என் சாதாரண நோக்கியா செல்போனை அழுத்தினால் சிலரைக்கூப்பிட்டு பேசமுடியும், அவர்கள் என்னைக்கூப்பிட்டால் ஒரு பித்தானை அமுக்கினால் பேசமுடியும் என்பது மட்டுமே

ஜெ

***

MTV Latest

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்..!

ஹமீதுவின் வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை கட்டுரையை நான் 100 சதவீத அரசியலாகவேப் பார்க்கிறேன்.

தமிழில் இந்தியா டுடே வெளிவந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் அதிகாரமிக்கவர்களில் ஹமீது ஒருவர் என்று பட்டியலிடப்பட்டிருந்தார். சாரு அவர் துப்பாக்கி எல்லாம் வைத்திருக்கிறார் என்று தன் தளத்தில் எழுதி இருக்கிறார்.

அது மட்டுமல்ல திமுகவிற்காக ஹமீது தன் அடிவயிற்றிலிருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஒரு இணைய தளத்தில்

திமுகவின் தலைவரின் மகளிடம் பணம் பெற்றுக் கொண்டு உயிர்மை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு மொத்தமாக சுவாஹா செய்யப்பட்டதாகவும் ஹமீது பற்றி எழுதப்பட்டிருந்தது. இது அத்தனையும் சென்னை வாழ் மக்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது.

வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள் கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

ஹமீது தனக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பதை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாகவே பார்க்கிறேன். ஆனால் அதை அழகாக அரசியலாக்கி இருக்கிறார் என்பது தான் நிதர்சனம்.

சென்னையில் முஸ்லிம்கள் வாடகைக்கு வசிக்கவே இல்லையா என்று கேட்டால் ஹமீது என்ன சொல்வார்? அவர்களுக்கு கிடைக்கிற போது இவருக்கு ஏன் கிடைக்கவில்லை? என்பதன் காரணத்தை அவர் நன்கு அறிந்திருப்பார்.

இருப்பினும் தன் பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக்கிய அவரின் திறமைக்கு சல்யூட் தான் அடிக்க வேண்டும். இது அரசியல் புத்தி.

அரசியலுக்கு அழகியலும், சகிப்புத்தன்மையும் முக்கியம். ஆனால் ஹமீதுவுக்கு புளிச்ச திராட்சைதான் கிடைக்கப்போகிறது.

அண்ணாதுரையின் குஷி கிளப்பும் பேச்சையும், நடிகைகளின் ஆட்டத்தையும் கண்டு ரசித்தவர்கள் இப்போது இல்லை. நெட்டில் எல்லாவற்றையும் பார்க்கும் மக்கள் தான் இங்கு இருக்கின்றார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் பலருக்கு வந்து விட்டது. இவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்று பல வித கோணங்களில் ஆராய்ச்சி செய்து விடுகின்றார்கள்.

ஹமீதுவின் இந்த அரசியல் கல் வீச்சு தமிழகத்தில் எடுபடாது என்றே நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரின் பதிப்பகத்துக்கு நன்றிக்கடன் பட்டவராக இருக்கலாம். உண்மை வேறு அல்லவா?

கவிஞர்களுக்குப் பொதுப்புத்தி வேண்டுமென்பார்கள். ஆனால் இன்றைய கவிஞர்களோ அரசியல் புத்தி கொண்டு உள்ளனர்.

Best Regards,

Covai M Thangavel B.Sc., DSIM.,

***

 ஜெமோ,

தங்களின் இப்பதிவை பார்த்தவுடன் என் நண்பன் ஒருவனுக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவனும் நாகர்கோவில்காரனே.

ஒரு நாள், தன் மனைவி, இரு குழந்தைகள் மற்றும் 70 வயது நிரம்பிய தன் பெரியம்மாவுடன் தாம்பரம் இரயில் நிலையத்தில் காத்திருந்தான், நாகர்கோவில் Express வருகைக்காக.

திடீரென்று, வயதான பெரியம்மா மயங்கி விழுகிறார். பேச்சு மூச்சு எதுவுமில்லை. என் நண்பன் ஒரு அவத்தப்பய. சிக்கனம் என்ற பேரில் மொத்த குடும்பத்தாரையும் பஸ்ஸில் அழைத்து வந்துள்ளான் வீட்டிலிருந்து. பத்தாக்குறைக்கு இரண்டு மூன்று உயரமான நடைமேடை வேறு ஏறி இறங்கியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட அப்பெரியம்மா இறந்துதான் போயிருக்கிறார். அங்கிருந்த நடுத்தர வயதுடைய இஸ்லாமியத் தம்பதியினர் நண்பனின் பதற்றத்தை தணித்துள்ளனர். அத்தம்பதியரும் நாகர்கோவிலுக்குச் செல்லும் அதே வண்டிக்காகத்தான் காத்திருந்தனர்.

அந்த முஸ்லீம் அன்பர், தன் மனைவியை மட்டும் வண்டியில் அனுப்பிவிட்டு என் நண்பனோடு சேர்ந்து அப்பெரியம்மாவின் பிரேதத்தை வீடு கொண்டு சேர்ப்பதிற்கு உதவியுள்ளார்.

இரயில் நிலையத்தில் இருந்து ஒரு பிரேதத்தை அவ்வளவு எளிதாக எடுத்துச் சென்று விட முடியாது. ஏகப்பட்ட சட்டநடைமுறைகள். அத்தனையும் சமாளித்து, Postmortem என்ற பெயரில் கூறுபோடப்படாத பெரியம்மாவை என் நண்பன் வீடு கொண்டு செல்ல உதவியிருக்கிறார். இத்தனைக்கும், அந்த முஸ்லீம் அன்பர் யாரென்றே என் நண்பனுக்குத் தெரியாது.

அந்த முஸ்லீம் அன்பரின் இடத்தில் நானிருந்திருந்தால், முன்பின் தெரியாத ஒருவருக்காக என் மனைவியைத் தனியாக இரயிலில் அனுப்பியிருப்பேனா? இவ்வளவு உதவிகளையும் கூடவேயிருந்து செய்திருப்பேனா? என எண்ணிப்பார்க்கிறேன். ம்ஹூம்…சந்தேகந்தான்.

“அன்பே சிவம்” வந்திருந்த நேரம் அது. கமலின் நடிப்பையும், அப்பட வசனங்களையும்  நானும் என் நண்பணும் சிலாகித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது.

“முன்பின் தெரியாத ஒருவரின் கஷ்டங்களுக்காக உதவுபவரே கடவுள்” என்பார் கமல், மாதவனைப் பார்த்து.

என் நண்பனின் மொபைலில் அவரை GOD என்றே store செய்திருக்கிறான். நானாக இருந்தால் “நபி” என்று store செய்திருப்பேன்.

அன்புடன்

முத்து

முந்தைய கட்டுரைமுதன்மை எழுத்தாளர் -கடிதம்
அடுத்த கட்டுரைபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து