63. இணைமலர்
சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா? சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா?” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான்? பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்?” என்றாள் முதுமகள்.
“மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்து வெண்சாமரத்தால் வீசப்பட்டால் அழகு இயல்பாகவே கூடிவரும்… எந்தச் சேடியைப் பற்றியாவது சூதர்கள் பாடியிருக்கிறார்களா? சேடியரில் அழகு இல்லையா என்ன?” என்றாள் அடுமனைப்பெண். “நம் தேவி அங்கே நுழையட்டும், அழகென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் ஒர் இளம்பெண். “அழகு எங்கும் மதிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதே அழகென்றாகிறது” என்றாள் முதுமகள். அவள் மேலும் சொல்வதற்குள் தேவயானி அருகணைவதைக்கண்டு அவர்கள் பேச்சை நிறுத்தினர்.
தேவயானி அவ்வுரையாடலை ஓரளவு கேட்டிருந்தாள் என்பதை அவர்களும் அறிந்துள்ளார்கள் என அவர்களின் முகங்கள் காட்டின. “இளம்காலை ஒளியில் நகர்நுழைகிறோம், தேவி” என்றாள் முதுமகள். “ஆம், பேரரசர்களுக்குரிய வரவேற்பு ஒருங்குசெய்யப்பட்டிருப்பதாக வண்டியோட்டி சொன்னான்” என்றாள் அடுமனைப்பெண். தேவயானி ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களை எடுத்து தானும் தொடுக்கலானாள். அவள் செய்துகொண்டிருந்த அணி அவர்களின் நோக்கைக் கவர்ந்து விழிபரிமாறிக்கொள்ளச் செய்தது.
“அங்கே நகர்முறை என்னவென்று நாம் அறியோம். நம்மால் மலரால் மட்டுமே அணிசெய்துகொள்ள இயலும்” என்று ஒரு பெண் சொன்னாள். “மலர்களைப்போல பிறிதொரு அணி ஏது? பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா?” என்றாள் முதுமகள். அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப் பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே விட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா?” என்றாள்.
விருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் கோட்டை முகப்புக்கே வந்து சுக்ரரை எதிர்கொண்டார். ஹிரண்யபுரியின் அமுதகலக் கொடியுடன் அவரும் ஏழு சிற்றமைச்சர்களும் படைத்தலைவர் மூவரும் குலமூத்தார் எழுவரும் காத்து நின்றிருந்தனர். அவர்கள் அணுகுவதைக் கண்டு கோட்டைக்குமேல் சுக்ரரின் காகக்கொடி மெல்ல ஏற முரசுகள் முழங்கின. அவர்கள் அணுகியபோது கொடிவீரன் ஒருவன் புரவியில் பாய்ந்துவந்து அதை சுக்ரரின் வண்டிக்கு முன் தாழ்த்தி “அரசகுருவுக்கு நல்வரவு. நகரும் நகர்வேந்தன் முடியும் தங்கள் முன் பணிகின்றன” என்றான். அவனை கைதூக்கி வாழ்த்தினார் சுக்ரர்.
வண்டிகள் கோட்டைக்குள் நுழைந்து ஹிரண்யபுரியின் மண்ணில் சுக்ரர் தன் வலக்காலெடுத்து வைத்தபோது மாமுனிவர்களுக்கும் பேரரசர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் நூற்றெட்டு பெருமுரசுகளின் முழக்கம் எழுந்தது. ஆயிரத்து எட்டு கொம்புகள் வான்நோக்கி வளைந்து பிளிறின. கோட்டைமேல் இருந்த வீரர்கள் மலர்க்கடவங்களைக் கவிழ்த்து வண்ணமழை பெய்வித்தனர். சம்விரதர் அவரை வணங்கி எட்டுமங்கலங்களை அளித்து வரவேற்றார். அவர்கள் கொண்டுவந்த திறந்த தேரின் தட்டில் நின்று இரு கைகளையும் விரித்து ஹிரண்யபுரியை வாழ்த்தியபடி சுக்ரர் நகர்த்தெருக்களினூடாக சென்றார்.
அவருக்குப் பின்னால் சென்ற கூண்டு வண்டிக்குள் அமர்ந்து சிறு சாளரத்தினூடாக அந்த பெரும் வரவேற்பை தேவயானி பார்த்தாள். இருபுறமும் மாளிகைகளின் உப்பரிகைகளில் நின்றிருந்த மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். இளைஞர்கள் இரு கைகளையும் தூக்கி தொண்டை நரம்புகள் புடைக்க களிவெறியுடன் அவரைப் போற்றி கூவினர். அந்த வாழ்த்துகளிலும் கூச்சல்களிலும் இருந்த உண்மையான களிப்பு அவள் முகத்தை மலரச் செய்தது. ஹிரண்யபுரியின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சுக்ரரே அடிப்படை என அவளும் அறிந்திருந்தாலும் அம்மாபெரும் மக்கள் திரள் அவரை தங்கள் குலமூதாதைக்கு நிகராக, குடித்தெய்வமென்றே எண்ணுகிறது என்பதை அப்போதுதான் அவள் கண்ணெதிர் உண்மையாக தெரிந்து கொண்டாள்.
சுக்ரரின் தேர் மலர்த்திரையை அகற்றி அகற்றிச் சென்று அரண்மனையின் உட்கோட்டைக்குள் நுழைந்தது. அங்கும் மங்கல முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. கைகூப்பியபடி சுக்ரர் தேர்த்தட்டில் நிற்க அரண்மனை முகமுற்றத்தில் தன் மூன்று தேவியருடன் அரசணிக்கோலத்தில் காத்து நின்றிருந்த விருஷபர்வன் கைகூப்பியபடி தேரை நோக்கி வந்தான். இரு அமைச்சர்கள் ஓடிவந்து சுக்ரரின் தேரை அணுகி முகமனுரைத்து அவரிடம் இறங்கும்படி சொல்ல தேரின்படிகளில் கால்வைத்து அவர் இறங்கினார். அரண்மனை முற்றத்தில் அவர் கால் படுமிடத்தில் ஒரு பொற்தாலத்தை வைத்தனர். வாழ்த்துக் கூவியபடி விருஷபர்வன் முன்னால் வந்து அவரை கைப்பற்றி அதில் நிற்க வைத்தான். அவனும் அரசியரும் மஞ்சள் நீரால் அவர் கால்களை கழுவினர். மலரிட்டு அதை வணங்கினர்.
விருஷபர்வன் தன் மணிமுடியைக் கழற்றி அவர் காலடியில் வைத்தான். சுக்ரர் வாழ்த்துரைத்தபடி குனிந்து அதை எடுத்து மீண்டும் அவன் தலையில் சூட்டினார். செம்பட்டுப் பாவட்டாவில் அவர் கால் வைத்ததும் அவர் கால் கழுவிய நீரை எடுத்து மூன்று பூசகர்கள் அங்கு கூடி நின்ற அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஐங்குலத்து மூத்தவர்கள் அனைவரிடமும் கொண்டு சென்றனர். அவர்கள் அதைத் தொட்டு தங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டனர். பின்னர் அந்நீரைத் தொட்டு அரண்மனைமேல் தெளித்தனர் பூசகர். விருஷபர்வனும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்று தலைவணங்கி முகமன் கூறி சுக்ரரை அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றனர்.
தேவயானியின் கூண்டு வண்டியை நோக்கி வந்த முதுசேடி ஒருத்தி திரையைத் திறந்து “வெளியே வாருங்கள், தேவி” என்றாள். அவள் கைகூப்பியபடி படிக்கட்டில் கால்வைத்து தரையில் இறங்கினாள். விருஷபர்வனின் மூன்று அரசியரும் அவளை அணுகி கைகூப்பினர். பட்டத்தரசி காஞ்சனை “ஹிரண்யபுரிக்கு நல்வரவு, தேவி. தவம்தோய்ந்த உங்கள் கால்பட்டு இம்மண் பொலிவு பெறட்டும். நீங்கள் வாழ்ந்தது இந்நகரென்று புகழ் பெறட்டும்” என்றாள். இரண்டாவது அரசி சுபகை “சுக்ரரின் மகள் பேரழகியென்று அறிந்திருந்தேன். காவியங்கள் அழகை சொல்லி முடித்துவிட முடியாது என்று இப்போது தெரிகிறது” என்றாள். மூன்றாவது அரசி மாதவி சிரித்தபடி “பேரரசிக்குரிய நிமிர்வுடையவள் என்று சொன்னார்கள். நாங்கள் பேரரசியொருத்தியை இப்போதுதான் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது” என்றாள்.
தேவயானி முகமன்களுக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் என்ன சொல்வதென்றறியாமல் சிவந்து விழிநீர்மை கொண்டு புன்னகைத்து “ஆம், என்னை என் தந்தை அவ்வாறு சொல்வதுண்டு” என்றாள். காஞ்சனையின் விழிகளில் மெல்லிய திகைப்பும் உடனே ஏளனப் புன்னகையும் வந்தன. அதை மறைத்தபடி திரும்பி தன் பின்னால் நின்றிருந்த இளம்பெண் நிரையிலிருந்து சற்றே முன்வளைந்த சிறிய தோள்களும், மெலிந்த கைகளும், பெரிய விழிகளும் கொண்ட மாநிறமான பெண்ணைத் தொட்டு அழைத்து முன்னால் நிறுத்தி “இவள் என் மகள் சர்மிஷ்டை” என்றாள். தேவயானி “ஆம், அறிந்திருக்கிறேன். ஹிரண்யபுரியின் இளவரசி” என்றாள்.
சர்மிஷ்டை மெல்லிய நாணத்துடன் ஒரு கணம் தலை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கி “உங்களை சந்தித்ததில் பெருமைகொள்கிறேன், தேவி” என்று சொன்னாள். அதற்குள் அச்சொற்களின் வெம்மை தாளாது மெழுகுடல் உருகி நெளிவதுபோல் அசைந்து விழிதிருப்பிக்கொண்டாள். “வரும்போதுகூட என் சேடியர் உங்களைப்பற்றி சொன்னார்கள், அரசி” என்றாள் தேவயானி. “சூதர்கள் சொல்லை நான் கேட்பதே இல்லை” என்று சர்மிஷ்டை சொல்லி முடித்ததுமே உதடுகளை உள்மடித்து துடைத்தபடி சற்றே பின் நகர்ந்து அன்னையின் விரல்களை பற்றிக்கொண்டாள். அவள் முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நரம்புகளின் படபடப்பு தெரிந்தது.
முதுசேடி “உள்ளே செல்லலாம், தேவி” என்றாள். “நன்று” என்றபடி தேவயானி தலை நிமிர்ந்து பதினான்கு அடுக்கு மாளிகையை பார்த்தாள். “தேன்கூடு போலிருக்கிறது” என்றாள். உடனே அவ்வாறு வியப்பை வெளிக்காட்டலாகாது என உணர்ந்தவளாக “காவியங்கள் சொல்லும் மகோதயபுரம் குறித்த அணிச்சொல் அது” என்றாள். அவள் சொன்னதெல்லாமே பொருத்தமில்லாமல் இருந்தன என்பது அப்பெண்கள் என்ன எதிர்வினை காட்டுவதென்றறியாமல் திகைத்ததிலிருந்து தெரிந்தது. “பல அடுக்குகள் கொண்டதென்றாலும் மலரிதழ்களைப்போல எடையற்றிருந்தது அது என்கிறார் பார்க்கவர் தன் காவியத்தில்” என்றாள்.
அவர்கள் நிலையான முகமலர்வுடன் பொதுவாக தலையாட்டியதிலிருந்து அவர்களுக்கு காவிய அறிமுகமே இல்லை என்று அவள் உய்த்துணர்ந்தாள். அவளுக்குள் இருந்த பதற்றம் விலகி புன்னகை எழுந்தது. அப்புன்னகை முகத்திலும் விரிய “எடையின்மை என்பது எப்போதுமே உள்ளத்தை மலைக்கச் செய்கிறது. எடையின்மை கொள்பவை தாங்கள் இழந்த எடையை முழுக்க நோக்குவோன் உள்ளத்தில் ஏற்றிவைக்கின்றன என்று பார்க்கவரின் நூலுக்கு உரைசொன்ன சாம்பவர் கூறுகிறார்” என்றாள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என எண்ணியபோது அவளுக்குள் சிரிப்பு நிறைந்தது.
அவர்கள் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அத்தனை பெண்களுடைய தலைவகிடுகளும் அவளுக்கு தெரிந்தன. அவள் கைகள் அவர்களுடையதைவிட எடையும் நீளமும் கொண்டவையாக இருந்தன. இயல்பாகவே பிறருடைய தலையிலோ தோளிலோ கைவைத்துதான் அவளால் பேச முடிந்தது. அரண்மனை இடைநாழியினூடாக அவள் செல்லும்போது சேடியரும் ஏவல் பெண்டுகளும் தங்கள் அறைகளிலிருந்து வாசல்களினூடாகவும் சாளரங்களினூடாகவும் முட்டி நெரித்து தலைநீட்டி அவளை பார்த்தனர். அத்தனை விழிகளும் மலைப்பும் தவிப்பும் சூடின.
அவளை இருபுறமும் அகம்படி சமைத்து அறைக்கு கொண்டுசென்ற முதன்மைச்சேடி “அரண்மனையிலேயே தாங்கள் தங்கியிருக்கலாம் என்று ஆசிரியரிடம் சொன்னோம். அவரோ தாங்கள் அவருடன்தான் தங்கவேண்டுமென்று சொல்லிவிட்டார்” என்றாள். இன்னொரு சேடி “ஆனால் அங்குள்ள தவக்குடிலும் அரண்மனைக்கு நிகராகவே அமைக்கப்பட்டுள்ளது, தேவி” என்றாள். இடைநாழி நீண்டு இருபுறமும் சந்தனச்செதுக்குத் தூண்கள் நிரைவகுக்க அவற்றின் நிழல்கள் விழுந்து படிக்கட்டுகள்போல் தெரிந்தன.
அவர்கள் அவளை அமரவைத்த சிற்றவைக்கூடத்திற்குள் பதினான்கு பீடங்கள் இருந்தன. நடுவே மூன்று பீடங்கள் சாய்வுமகுடங்களுடன், பொற்கவசப் கைப்பிடிகளுடன், செம்பட்டு மெத்தையுடன், சிம்மக்காலடிகளுடன் அரசியருக்குரியவையாக அமைந்திருந்தன. பேசியபடியே இயல்பாக சென்ற தேவயானி மையத்திலிருந்த பட்டத்தரசியின் பீடத்தில் சென்றமர்ந்து நன்கு சாய்ந்து இரு கைகளையும் கைப்பிடிமேல் வைத்துக்கொண்டாள். குழல்கற்றை தோளில் சரிய தலைதிருப்பி அவளுக்குப் பின்னால் சேடியர் உடன்வர உள்ளே வந்த பட்டத்தரசி காஞ்சனையிடம் “மூன்று அரசியருமே இங்குதான் தங்குகிறீர்களா?” என்றாள்.
சேடியர் பதற்றத்துடன் பேரரசியை நோக்க விழிகளை அசைத்து அவர்களை சொல்விலக்கிய பட்டத்தரசி அவள் அருகே வந்து வலப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், இதுதான் மகளிர் மாளிகை. இங்கு ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு அரசியருக்கு” என்றாள். இடப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்த இரண்டாவது அரசி சுபகை “கீழ்த்தளங்கள் ஏவலருக்கும் சேடியருக்கும் உரியவை. இரண்டாவது தளத்தில் நீராட்டு அறைகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் சமைய அணியறைகள். அதற்குமேல் ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றாள். அவர்கள் அத்தருணத்தை இயல்பாக்கும்பொருட்டு பேசவிரும்பினர்.
சர்மிஷ்டை தன் மூன்றாவது அன்னை மாதவியின் தோள்பற்றி பாதி உடல் மறைத்து முகம் தோளுக்குமேல் நீட்டி பெரிய விழிகளால் நோக்கி நின்றிருந்தாள். அவள் நோக்கு பட்டதும் உடலில் மெல்லிய அசைவெழ அவள் விழிதாழ்த்தினாள். “இவள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறாள்?” என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதில் கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று! எவ்வளவு காலம் குழந்தையாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு மகளிர் மகிழ்ந்திருக்கிறார்கள்” என்றாள்.
பட்டத்தரசி கைகாட்ட சேடியர்கள் உள்ளே சென்று தேவயானிக்கு பரிசுகள் கொண்டு வந்தனர். ஐந்துமங்கலப் பொருட்கள் வைத்த பொற்தாலம் முதலில் வந்தது. பீதர்நாட்டுப் பட்டாடைகளும், கலிங்கத்து மென்பருத்தி ஆடைகளும், அருமணிகள் பதித்த நகைகளும், சிமிழ்களும், விளையாட்டுப்பொருட்களும் என பதினெட்டு தாலங்களில் பரிசுப்பொருட்கள் அவள் முன் வந்தமைந்தன.
கண்களில் துணுக்குறலுடன் அவள் அவற்றை நோக்கி “இவையெல்லாம் எனக்கா?” என்றாள். “ஆம், முதல்முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங்கு கொண்டு வைப்பது?” என்றாள். “தாங்கள் இன்னும் குடில்கூட்டத்தை பார்க்கவில்லை. தங்கள் குடில் மூன்றடுக்குக் கூரையுடன் அரண்மனை போலவே கட்டப்பட்டுள்ளது. அங்கு தாங்கள் பேரரசிக்குரிய வாழ்க்கையை வாழ முடியும். விரும்பிய பணிசெய்ய சேடியர் உடனிருப்பர்” என்றாள் மாதவி. “இங்கிருந்து உரிய ஆடவனை தாங்கள் மணமுடித்துச் செல்லும்போது பேரரசியருக்குரிய பெண்செல்வத்துடன்தான் செல்ல வேண்டும்” என்றாள் சுபகை.
சிரித்தபடி தேவயானி சர்மிஷ்டையின் விழிகளை சந்திக்க அவள் பதறி தன் நோக்கை விலக்கிக்கொண்டாள். அதிலிருந்த மிரட்சி தேவயானிக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்ததுமே தேவயானியின் உடல்மொழி மாறியது. மேலும் தருக்கி தலைநிமிர்ந்து தோள்களை விரித்தபடி ஒவ்வொரு பரிசுப்பொருளாக அருகே கொண்டுவரச்சொல்லி பார்த்தாள். ஒவ்வொன்றின் மேலும் சுட்டுவிரலால் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஆடைகளையோ அணிகளையோ தன் கையிலெடுத்தோ உடல் மீது சேர்த்தோ நோக்கவில்லை.
அவை தனக்கொரு பொருட்டில்லை என்றே அவள் முகமும் உடலும் காட்டின. ஆனால் உள்ளத்திற்குள் அவள் பெரும் கிளர்ச்சி அடைந்திருந்தாள். இளமையிலேயே சுக்ரர் அணிகளும் ஆடைகளும் தனக்கென்றொரு எண்ணமோ கனவோ இல்லாதவர்கள் சூடவேண்டியது என்று அவளுக்கு கற்பித்திருந்தார். “வைரத்திற்கு எவரும் வண்ணம் பூசுவதில்லை, குழந்தை. அதன் உள்ளொளியை அவ்வண்ணங்கள் மறைத்துவிடும். மெய்யொளி கொண்டவர்களுக்கு ஆடையும் அணிகளும் திரையேயாகும்” என்று சுக்ரர் சொன்ன சொற்கள் அவளுக்குள் ஆழப்பதிந்திருந்தன.
காவியங்களை கற்கையில் அதன் தலைவியர் அணிந்திருக்கும் அணிகளைப்பற்றிய செய்திகளை வெறும் சொல்லணிகள் என்றே அவள் கடந்துசெல்வதுண்டு. ஊர்வசி பரிணயம் காவியத்தின் ஆசிரியரான மகாபத்மர் ஊர்வசி அணிந்திருந்த நூற்றியெட்டு நகைகளின் விரிவான செய்தியை அளித்திருந்தார். ஒவ்வொன்றையும் மலருடனும் தளிருடனும் கொடிச்சுருளுடனும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தியிருந்தார். அவள் அதை ஒருமுறை வாசித்து கடந்துசென்றாள். மறுநாள் அவையமைவில் சுக்ரர் அவ்வணிகளைப் பற்றி கேட்கையில் “நான் அவற்றை கடந்து சென்றுவிட்டேன். அவை எளியோருக்கான ஆழ்பொருளற்ற காட்சிப்படுத்தல்கள் அல்லவா?” என்று அவள் சொன்னபோது அவர் பதறி கைநீட்டி “அல்ல, அல்ல… பொருளற்ற காட்சிச்செய்திகளை சொல்பவர் காவிய ஆசிரியர் அல்ல. காவியத்தில் தலைவி அணிந்திருக்கும் அனைத்தும் பொருள்கொண்ட அணிகளே. சொல் ஓசையையும் இசைவையும் கொண்டு அழகு பெறுவதுபோன்றது அணிகளால் மானுட உடல் எழில்கொள்வது. ஆகவேதான் இரண்டையும் அணிகள் என்கிறார்கள்” என்றார்.
“அணிகள் என்பவை பிறிதொன்றின் அழகை ஒன்றின்மேல் ஏற்றிக் காட்டுபவை. அவ்வாறு இரண்டை இணைக்கையில் இரண்டுமே பொருள்விரிவு கொண்டு முடிவிலியை தொடுகின்றன. அருவியை அழகியின் சிரிப்புபோல என்னும்போது அருவியும் சிரிப்பும் முடிவிலாது அழகுசூடுகின்றன” என சுக்ரர் தொடர்ந்தார். “ஊர்வசியின் மூக்கில் ஒளிரும் மூக்குத்தி பொருளற்ற அணி அல்ல. அவள் முகமும் அகமும் கொண்ட இனிமை அனைத்தும் அவ்வணியென மையம் கொண்டுள்ளது. இளங்கன்னியாகிய தலைவி தலையை அசைத்து அசைத்து பேசுகையில் காதைத் தொட்டு நடனமிடும் குழை வெறும் அணி மட்டும் அல்ல. அவள் கொண்ட உளக் கொண்டாட்டத்திற்கு அடையாளமும் கூட” என்றபின் “நீரிலெழும் மலர் தன் நிழல்மலரை பீடமென கொண்டுள்ளது. இல்லை, நிழல்மலர் தன் தலையிலணிந்த அணிமலரா மேலெழுந்து மலர்ந்தது?” என அவர் அடுத்த வரிக்குள் சென்றார்.
விழிகள் கூர்ந்து அவர் முகத்தையே நோக்கியபின் குனிந்து அந்த வரிகளில் நெஞ்சோட்டினாள். வகுப்பு முடிந்து திரும்பி தன் அறைக்குச் செல்லும்போதே வழியில் நின்று அவ்வணிகளை கூர்ந்து படித்தாள். அறையில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தாள். சுவடியை மூடிவிட்டு அடுமனைக்குச் சென்றபோது அவ்வணிகளின் நினைவாகவே இருந்தாள். அங்கிருந்த காய்களும் கனிகளும் எல்லாம் நகைகளாகிவிட்டன. மீண்டும் தன் அறைக்கு வந்தபோது வரும் வழியில் பூத்து நின்றிருந்த சரக்கொன்றை அணி சூடி நிற்பதாகத் தோன்றியது. அறைக்கு வந்து சுவடியை எடுத்து அப்பாடல்களை மீண்டும் படித்தாள். பித்தெழுந்தவள்போல அவற்றையே திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தாள்.
அந்த அடிமைகொள்ளல் அவள் உள்ளுறை ஆணவத்தைச் சீண்டவே சலித்து சுவடியை மூடி கிருதரிடமே கொடுத்துவிட்டாள். ஆனால் எண்ணத்தில் பதிந்த அவ்வரிகள் எப்போது இயல்பாக பிறநினைவு ஓய்கிறதோ அப்போதெல்லாம் எழுந்து வந்துகொண்டிருந்தன. பின்னர் கனவில் அந்நகைகள் அனைத்தையும் அணிந்து அரியணையொன்றில் அமர்ந்திருக்கும் அவளை அவள் கண்டாள். ஒரு மலைமுடியின் உருளைப்பாறை மேல் அவ்வரியணை இருந்தது. அவளைச் சுற்றி எவருமிருக்கவில்லை. காற்று ஆடைகளையும் குழலையும் பறக்க வைத்தபடி கடந்துசென்றது. மிக ஆழத்தில் முகிற்படலம் படிந்த பெருநகரொன்று தெரிந்தது. அதன் கோட்டைச்சூழ்கையும் மாளிகைமுகடுகளும் மலர்ச்செடிவண்ணங்கள் கொண்ட உப்பரிகைகளும் முகிலுக்குள் தெளிந்தும் மறைந்தும் விரவிக்கிடந்தன. சிறிய தழல்கள்போல கொடிகள். கோட்டையைச் சுற்றி வளைத்த நீலஆறு மெல்ல திருப்பப்படும் வாள் என ஒளிசுடர்ந்தது.
படையொன்றின் முழக்கம் மெலிதாக கேட்டுக்கொண்டிருந்தது. வலப்பக்கம் ஆழத்திலெங்கோ மாபெரும் கண்டாமணியொன்று ஏழு முறை அடித்து ஓய்ந்தது. விழித்த பின் அக்கனவின் மலர்வால் முகம் நகை சூட மயங்கியவள்போல நெடுநேரம் படுத்திருந்தாள். கண்மூடி அக்காட்சியை மீண்டும் எழுப்ப முயன்றாள். அப்போதுதான் மலைமுடியிலிருந்து நகரைப் பார்க்கும் ஒருத்தியாகவும் அவ்வாறு அமர்ந்திருக்கும் ஒருத்தியை பார்க்கும் பிறிதொருத்தியாகவும் அக்கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள்.
தன் முன் வந்த அணிகளை மிக விரைவிலேயே உள்ளம் கணக்கிட்டுவிட்டதை, நூற்றெட்டு அணிகளுக்கும் மேலாகவே அத்தாலங்களில் இருந்ததை தான் அறிந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மீண்டும் சர்மிஷ்டையை பார்த்தபோது அவள் உடம்பிலும் நூற்றெட்டு அணிகளுக்கு மேலிருப்பதை கண்டாள். கால் விரல்களில் அணியாழிகள், கணுக்கால்களில் சிலம்புகள், தொடையில் செறிமாலைகள் என நெற்றிச்சுட்டிவரை. அவ்வணிகள் அவள்மேல் கவ்வியும் தொங்கியும் சுற்றியும் பொருந்திக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கொன்றை மரத்தின் கிளை மலர்ச்சுமை தாளாது வளைந்து தாழ்ந்து நிற்பது போல.
அவள் மிக மெலிந்திருந்தாள். மாநிறம் சற்றே கருமைக்கு அருகே சென்றிருந்தமையால் நகைகளின் ஒளி அவளை மேலும் கரியவளாக காட்டியது. அச்சத்தாலும் நாணத்தாலும் உடலை ஒடுக்கி ஒடுக்கி முன்வளைவு கொண்டிருந்த தோள்களும், தசையற்ற புயங்களும், மெலிந்த கைகளுமாக அவள் எளிய வேளாண்குடிப்பெண் போலிருந்தாள். உள்ளூர் விழவொன்றில் முருக்கமரத்தில் செய்து வண்ணமிட்ட பொய்யணிகளை அணிந்து அரசியென உருக்கொண்டு வந்தவள்போல.
ஆனாலும் அவளை எண்ணமும் விழியும் மீண்டும் மீண்டும் நாடிச் சென்றுகொண்டிருந்தன. அவள் விழிகள். அவை இளங்குழந்தைகளுக்குரிய வியப்புடனும் உட்கரந்த நகைப்புடனும் முற்றிலும் புதியவையாக இருந்தன. அவள் உடலில் மின்னிய அத்தனை அருமணிகளைவிடவும் அத்தனை மதிப்பு மிக்க மணிகள். திறந்திட்ட பொற்குவைமேல் வந்தமர்ந்து சிறகடிக்கும் இரு அழகிய வண்ணத்துப்பூச்சிகள் அவற்றை ஒளியிழக்கச் செய்பவைபோல.
தேவயானி விழிகளை திருப்பிக்கொண்டாள். ஏன் இவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன் என வியந்தாள். தன் உடலின் நிமிர்வும் அழகும் அற்றவள். தன் அறிவும் ஆற்றலும் இல்லாதவள். உலகை வெல்லும் திறனுடைய தந்தையின் மகளும் அல்ல. அவர் அடிதொட்டு சென்னி சூடும் அரசன் ஒருவனின் மகள். அங்கு நின்று அவள் தன்னை கருவறை அமைந்த தேவியை நோக்கும் இளஞ்சிறுமிபோல் நோக்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் கொண்டுள்ள வியப்பிலுள்ள குழந்தைத்தன்மைதான் அவளை அழகியாக்குகிறதா?
புவி அனைத்தையும் ஆள்பவனின் மகள். அசுரேந்திரனின் குலக்கொடி. நாளை பட்டத்தரசியாக யாரோ ஒரு சக்ரவர்த்தியின் இடம் அமரப்போகிறவள். அவள் தன்முன் வியந்து நிற்கும்போது தருக்கி எழாமல் எது ஒன்று தன்னுள்ளிருந்து மீண்டும் மீண்டும் நிலையழிவு கொள்கிறது?