ரியாஸ் -கடிதம்

11

ஜெ,

நான் உங்களுக்கு எழுதிய அதே கடிதத்தை மனுஷுக்கும் அனுப்பியிருந்ததாக அவர் எழுதியிருந்த பதிவைப் படித்ததுமே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று உங்கள் தளத்தில் மனுஷ்யபுத்திரனின் அந்த பதிவைப் பற்றிய ஜெம்ஸ் ராஜசேகரின் கடிதத்தைப் பார்த்ததும், நான் மனுஷுக்கு எழுதிய அந்த கடிதத்தை உங்களுடன் பகிரலாம் என்று தோன்றியது.

***

அன்புள்ள மனுஷ்யபுத்திரன்,

நான் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தை உங்களுக்கும் அனுப்பியிருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காகத் தான் அப்படி சொல்லியிருப்பீர்கள் என்றாலும், நானே உங்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்றுதான் இருந்தேன். தமிழ் இலக்கிய சூழலில் உள்ள மூன்று எழுத்தாளர்களை ஒவ்வொரு காலக்கட்டத்தில் எனக்கான எழுத்தாளராக உணர்ந்து வந்திருக்கிறேன். முதலாமவர், சாரு. நான் சாருவை என்னுடைய பத்தாம் வகுப்பிலிருந்து படித்து வருகிறேன். (இப்போது எம்.இ. இரண்டாம் ஆண்டு). சாரு மூலம் தான் உலக இலக்கியங்கள் அறிமுகமானது. வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் சமமாக அணுகும் பண்பும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பெயர் சொல்லியே அழைக்கும் பழக்கமும் சாருவிடமிருந்தே கற்றுக் கொண்டது. என் ஆரம்பகால சிந்தனைப் போக்கில் அதிகம் தாக்கம் செலுத்தியது சாரு தான். என்னுடைய பதின்ம வயதில் என்னுடைய ஒவ்வொரு செயலையும் சாருவுடன் தான் ஒப்பிட்டுப் பார்ப்பேன். அதே காலகட்டத்தில் தான், உங்கள் கவிதைகளும், எஸ்.ராவின் படைப்புகளும் அறிமுகமானது. ஆனால் எஸ்.ரா எனக்கான எழுத்தாளர் இல்லை என்பதை சீக்கிரமே உணர்ந்துவிட்டேன். பிறகு உங்களுடைய கவிதைகளுடனும், சாருவுடைய எழுத்துகளுடனும் தான் என்னுடைய வாசிப்பு பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சாருவின் எழுத்துகளுடன் நான் முரண்பட ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஜெயமோகனின் எழுத்துகள் அறிமுகமானது. கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் சாருவுடைய சிந்தனையைக் கொண்டுதான் மற்றவர்களை மதிப்பிட்டு வந்திருந்தேன். அதனாலயே ஜெயமோகனை படிக்காமலே, சாருவுடைய கருத்தைக் கொண்டே ஜெயமோகனையும் மதிப்பிட்டிருந்தேன். ஜெயமோகனின் கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கான எழுத்தாளராக அவரையே அடையாளம் கண்டேன். ஆனால் அப்போது அவருடைய ஒரு புனைவைக் கூட வாசித்ததில்லை. அவருடைய புனைவுகளைப் படித்த பிறகு, (குறிப்பாக விஷ்ணுபுரம் மற்றும் பின்தொடரும் நிழலின் குரல்) எனக்கான புனைவு எழுத்தாளர் அவர் இல்லை என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் அவருடைய அபுனைவுகளைப் பற்றியான பார்வை அதே தான்.

கவிதைகளில், உங்களுடைய கவிதைகளை மட்டும் தான் என்னால் நெருக்கமாக உணரமுடிந்தது. வேறு யாருடைய கவிதைகளும் உங்கள் கவிதைகள் ஈர்த்த அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை. கிட்டத்தட்ட உங்களுடைய பெரும்பாலான  கவிதை தொகுப்புகளையும் படித்துவிட்டேன். உங்கள் தொகுப்புகளிலே ஆகச் சிறந்ததாக நான் ‘ இதற்கு முன்பும், இதற்கு பிறகு’ ஐத் தான் மதிப்பிடுவேன். அந்த ஒரு தொகுப்பை மட்டும் என்னால் இன்னுமே கடந்து வரமுடியவில்லை.

உங்கள் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக பலரும் உங்களை விமர்சித்த போதும், எனக்கு உங்களுடைய முடிவு மிகச் சரியானதாகப்பட்டது. உங்களுடைய தரப்பை உங்களால் தர்க்கப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. உங்கள் கவிதைகளில் தன்னை உணரும் வாசனால் மட்டும் தான் உங்கள் தரப்பை புரிந்து கொள்ளமுடியும். என்னுடைய புரிதல் அவ்வாறானது. அதே சமயம் நீங்கள் உங்கள் அறத்திலிருந்து வழுகும் பல சமயங்களையும் நான் உணர்ந்திருக்கிறேன். அது உங்கள் மீதான வெறுப்பாக மாறவில்லை. மாறாக உங்களைப் பற்றியான என்னுடைய புரிதல் முழுமையடைந்ததாக உணர்ந்தேன்.

யார் உங்கள் மூவரையும் விமர்சித்தாலும், என்னுடைய அடிப்படை புரிதல் இதுவாகத்தான் இருக்கும். எந்த ஒரு எழுத்தாளனும், மானுட அழிவை நோக்கி சிந்திக்கமாட்டான். தான் வாழும் உலகத்தின் மேன்மையே அவனுடைய இலட்சியமாக இருக்கும். ஆனால் அதனை அடைய அவன் தேர்வு செய்யும்பாதை வேறுபட்டதாக இருக்கலாம். அதற்காக அவனை மானிட குல விரோதி என விமர்சிப்பது சரியாகாது. உதாரணத்திற்கு மரியோ வாரக்ஸ் யோசாவை எடுத்துக் கொண்டால் அவர் சார்ந்த நிலத்தில், பழங்குடியினருக்கும், பொது சமூகத்திற்கும் உள்ள போராட்டமே அவருடைய தேடலாக இருக்கும். இதில் அவர் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பது, பொதுச் சமூகம் தன்னுடைய விருப்பத்தை பழங்குடியினர்கள் மீது தினிப்பதை ஆதரிப்பாத அல்லது பழங்குடியினர்கள் அவர்கள் விருப்பப்படியே வாழ விடுதை ஆதரப்பதா. முதலாவதை தேர்ந்தெடுத்தால் அது மனித உரிமை மீறல். இரண்டாவதை தேர்ந்தெடுத்தால் பழங்குடியினர்கள் இறுதிவரை அவ்வாறே எவ்வித முன்னேற்றமின்றி காலம் முழுமைக்கும் அவ்வாறே இருப்பார்கள். இந்த சிக்கல்களின் வெளிப்பாடே அவருடைய படைப்புகள். நீண்ட நாள் நோக்கில் அவருடைய தேர்வு முதலாவதாக இருந்தால், யோஸாவை மானிட குல விரோதி என்று விமர்சிப்பது சரியாகாது தானே? அந்த புரிதலின்மை தான் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளரை வெறுக்கும் நிலைக்கு கொண்டு சொல்கிறது.

உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளையும் சரி, ஜெயமோகனின் அரசியல் நிலைப்பாடுகளையும் சரி நான் இதன் அடிப்படையில் தான் பார்க்கிறேன்.

இறுதியாக,

ஜெ.மோ க்கு நான் எழுதிய அந்தக் கடிதம் அசோகமித்திரனின் இறப்பை ஒட்டி, ஜெ.மோ வுடைய அஞ்சலிக் குறிப்புக்கு வந்த எதிர்வினையை மனதில் கொண்டு எழுதியது. காலம் முழுவதும், தான் ஆதர்சமாக கருதிய எழுத்தாளரை கீழ்மைப் படுத்தும் நோக்கில் நிச்சயம் ஒருவர் அவ்வாறு சொல்லமாட்டார் என்ற புரிதலின்மையைத்தான், நான் அந்த எதிர்வினைகளில் பார்த்தேன்.

பின்குறிப்பு
நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் உங்கள் கவிதைகளைப் பற்றிய ஆய்வாக இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இறுதில் அது சுய விளக்க கடிதமாக ஆகிவிட்டது.

அன்புடன்
முகம்மது ரியாஸ்
கடையநல்லூர்.

***

அன்புள்ள ரியாஸ்

இரண்டு விஷயங்களை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தவகை வம்புகளை நீங்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. பொருட்படுத்தாமல் கடந்துசெல்லும் திமிரை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்குமளவுக்கு வாசிக்கும் மிகச்சிலரே இங்குள்ளனர்

இந்த வம்புகளுக்கு அஞ்சி உங்கள் ஆளுமையை குறுக்கிக்கொள்ளாதீர்கள், கருத்துக்களை சுருக்கவும் செய்யாதீர்கள். ஆனால் இவர்களுக்கு எதிர்வினையாக உங்கள் கருத்துக்களை அமைத்துக்கொள்வீர்கள் என்றால் அது மேலும் பெரிய சிக்கல். நீங்கள் உங்களை அறியாமலேயே இவர்கள் புழங்கும் தளத்திற்குச் சென்றுவிடுவீர்கள்.

இவர்கள் புழங்கும் அந்த முகநூல்தளம் மிகமிக அற்பமான விஷயங்களால் ஆனது. மறுநாள் அற்றது. இலக்கியம் சிந்தனை இரண்டுமே சாராம்சத்தில் காலம்கடந்தவை

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
அடுத்த கட்டுரைஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா?