கடைசிக் குடிகாரன்

 

1985 ல் ஒரு ஆடிமாதம், மெல்லிய மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்த இரவில் நான் காசர்கோட்டில் அந்தச் சாராயக்கடை முன் வந்துசேர்ந்தேன். நான் தூங்கி பலநாட்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை ஓயாது துரத்திக்கொண்டிருந்த தனிமை இரவுகளில் பலமடங்கு  எடை கொண்டுவிடும். நோய்களெல்லாம் இரவுகளில் வீரியம் கொள்கின்றன. தனிமை ஒரு நோய். துயரமும் ஒரு நோய்தான்.

ஆனால் அவ்வப்போது ஓர் அலைபோல தூக்கம் வந்து என் மீது படர்ந்து என்னை எங்கெங்கோ கொண்டுபோய் சுழற்றி திருப்பிக் கொண்டு வந்துவிடும். சிலசமயம் சாலையில் நடந்துகொண்டே இருக்கும்போதுகூட தூக்கம் வந்து தாக்கும். சாலையிலேயே அம்மாவின் குரல் கேட்கும். எங்கள் வளர்ப்புநாய் ஓடிவரும். என் கிராமம், எங்கள் வீடு, எங்கள் பசுக்கள். ‘அம்மா!’ என்று விழித்துக்கொண்டால் எங்காவது சரிந்து அமர்ந்திருப்பேன்.

பெரிய இழப்புகளும் பெரிய அவமானங்களும்தான் நமக்கு மனம் என்பது எத்தனைபெரிய வதை என்பதைக் காட்டித்தருகின்றன.  ஓர் அறைக்குள் ஒருவனை அடைத்துப்போட்டு அவனால் நிறுத்தமுடியாத பல உரையாடல்களை இரவும்பகலும் ஒலிபரப்பிக்கொண்டிருப்பதுபோல. அல்லது நாலைந்து பைத்தியங்களுடன் ஒருவனை ஒரே விலங்கில் பிணைத்திருப்பது போல. அல்லது முற்றிலும் அமைதியான முற்றிலும் காலியான ஓர் அறையில் ஒருவனை மாதக்கணக்கில் தங்கச்செய்வதுபோல

நம் உடலுக்குள் மனம் என்ற நமக்கு கொஞ்சமும் கட்டுப்பாடில்லாத ஓர் இயக்கம் இருக்கிறது என்ற புரிதல். கனத்து கனத்து நடைதள்ளாடச்செய்கிறது. அதைப் பற்றப்போனால் புகையாகப் பிரிகிறது. அதன் வால் அடிபட்டு துடிதுடிக்கும்போது தலை  திரும்பி அவ்வலியை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது. கல்போல் இறுகி மறுகணமே கடலலைபோலக் கொந்தளிக்கிறது.

சிலநாட்களுக்குப் பின் நான் மனதை அஞ்ச ஆரம்பித்தேன். எனக்குள் ஒரு பேய்தான் குடியிருக்கிறதென எண்ணினேன். என்ன வேண்டும் அதற்கு என்று தெரியவில்லை. என்னை அது எங்கோ கொண்டுசெல்கிறது. அடியற்ற ஆழம் கொண்ட ஒரு பெரும்பள்ளம் நோக்கி  உருட்டிச்செல்கிறது.

எந்த பைத்தியத்தைப் பார்த்தாலும் என் மனம் கீழே விழுந்த தாம்பாளம்போல ஒலித்து அதிர ஆரம்பிக்கும். நானும் பைத்தியம்தானா? ஆனால் நான் என்னைப்பைத்தியம் என்று உணரும்வரைப் பைத்தியம் அல்ல தானே? அதை எப்படிச் சொல்ல முடியும். கீழே கிடக்கும் காகிதங்களைப்பொறுக்கிச் சேர்த்தபடி இதோ நிற்கும் இந்த பைத்தியமும் அப்படி தன்னை உணர்கிறானோ என்னவோ? துரத்தப்பட்டவன்போல அங்கிருந்து தப்பி ஓடுவேன்.

தூக்கம்தான் என் பிரச்சினை என்று உணர ஆரம்பித்தேன். தூங்கி எழுந்தால் ஒருவேளை எலலமே தெளிந்திருக்கக் கூடும். தூக்கமின்மையால் என் மனம் குலைந்துவிட்டது. ஒரு மாபெரும் நூலக அடுக்கு சரிந்து நூல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தபடியே இருப்பதுபோன்ற பிரமை எனக்கு என்னை நினைக்கும்போது ஏற்பட்டது. தூங்கிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும்.துடல் களைத்து இமைகள் கனத்துச் சரிய தூக்கம் என்னில் தளும்பும்போது மெல்லச் சென்று படுத்துக் கொள்வேன். முகத்தின்மீது ஒரு துணியை போட்டுக்கொண்டு பெருமூச்சுவிடுவேன். தூக்கமே வா…எனக்கு அருள்புரி…என்னைக் காப்பாற்று…

மெல்ல நினைவுகள் மயங்கும். காட்டில் கடைசியாகக் கூடணையும் பறவையின் குரல் போல துயரார்ந்த பொருளற்ற தனிக்கேவல்கள். சில சிறகடிப்புகள். இருட்டுக்குள் சிறகுத்துழாவல்கள். என் மூளைக்குள் கனவுகளின் வாசல் திறந்துகொள்ளும். ஒவ்வொன்றும் விசித்திரமாகக் கலந்து திணிக்கப்பட்ட அந்த நிலவறைக்குள் எதனுடனும் அம்மாவும் இணைந்திருப்பாள். சிலசமயம் என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்திருப்பாள். சிலசமயம் ரௌத்ரபாவம் கொண்ட யட்சி போல எரியும் கண்களுடன் என்னைப் பார்ப்பாள். சிலசமயம் இருளுக்குள் கரியகற்சிலைபோல அமர்ந்திருப்பாள். அம்மாவின் கண்களை நான் ஒரு கணம் சந்தித்தால் போதும், சவுக்கடி பட்டதுபோல் என் பிரக்ஞை துடித்து எழும்

என் குரட்டையின் கடைசித்துணுக்கைக் கேட்டுக்கொண்டு கண்விழிப்பேன். என் உடல் படுக்கையில் கிடந்து நடுங்கிக் கொண்டிருப்பதை அறிவேன். வெளியே தென்னை ஓலைகள் சரசரக்கும் ஒலியைக்கேட்டுகூட உடல் அதிருமளவுக்கு என் நரம்புகள் நொய்ந்துபோயிருக்கும். அப்போது ஒரு சிறு தேங்காய் விழும் ஒலி கேட்டாலும் என் உடல் கட்டிலில் கிடந்து துள்ளி அதிர்ந்து வலிப்பு கொள்ளூம். பிறகு இரவெல்லாம் பிரக்ஞையின் வாசல் விரியத் திறந்து கிடக்கும். வெளியே இரவு கொண்டுவந்து பரப்பும் இருட்டையெல்லாம் இழுத்து உள்ளே நிரப்பிக்கொள்ளும்.

நான் தூங்குவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். பல கிலோமீட்டர்தூரம் நடப்பேன். கால்கள் ஓய்ந்து தளர்ந்து சரியும் வரை. அதன்பின் வயிறுபுடைக்கத் தின்பேன். தலையில் நிறைய எண்ணை தேய்த்து குளிர்ந்த நீரில் மூழுகி முழுகிக் குளிப்பேன். தலைக்குள் கொதிக்கும் லாவாவை தீண்டாமல் வெளியே குளிர்நீர் வழிந்து சென்றுகொண்டிருக்கும். முழு கிளைக்கோடின் புட்டியையும் வாய்க்குள் கவிழ்த்துக்கொள்வேன். கண்கள் சோர்ந்துவிழும்வரை வாசிப்பேன். எட்டும் தூரத்தில் நின்றாலும் கைநீட்டும்போதெல்லாம் எட்டி எட்டிச் சென்று  தூக்கம் விளையாடும். அதன் பின்னர்தான் மதுக்கடைக்கு வந்தேன்.

அப்பா குடிக்கமாட்டார். இளமையில் கொஞ்சம் குடித்துபார்த்திருக்கிறார், விட்டுவிட்டார். நாம் செய்வதற்கு நாமே பொறுப்பில்லாமல் ஆக்கும் ஒரு ஏற்பாடு அது என்று அவர் சொல்வார். ஆண் என்றால் அவனுக்கு அவனுடைய செயல்களில் பொறுப்பு வேண்டும். கொலைசெய்தாலும் ‘ஆமாம் கொன்றேன்’ என்றுசொல்லி சிறைக்குப் போகிறவன் தான் ஆண். குடிப்பவன் குடிக்காத நேரத்தில் பிறரிடம் மன்னிப்புகோரிக்கொண்டே இருப்பான். தன்னைத்தானே வெட்கிக் கூசிச் சுருங்கி நாளடைவில் அவனுடைய தோற்றமும் பாவனையுமே அன்னியதேசத்து நாய் நம்மூர்த் தெருவில் நடக்கும்போது தென்படுவதுபோல ஆகிவிடும். ஒருகட்டத்தில் அவன் குடிப்பதே குடிக்காதபோது அவனிடமிருக்கும்  சுயஇழிவை மறைப்பதற்காகத்தான்.

அப்பாவுக்கு ஒழுக்கத்தில் அபாரமான நம்பிக்கை இருந்தது. அவரது காலத்திலும் அவர் மறைந்த பின்னரும் ஒழுக்கநெறிகளின் எல்லைகளை ஒருபோதும் அவர் மீறியதாக கேட்டதில்லை. ஆனால் அதற்கான காரணம் ஒழுக்கநெறிகள் சமூகத்தால் விலக்கப்பட்டவை என்பதனாலோ புனிதமானவை என்பதனாலோ, கடவுளுடன் தொடர்புடையவை என்பதனாலோ, சட்டத்தின் தண்டனை கிடைக்கும் என்பதனாலோ அல்ல. அவர் சமூகம், சட்டம், கடவுள் எதையும் அஞ்சுபவரல்ல. அப்பாவின் கோட்பாட்டின்படி நல்ல ஆண்மகன் அவற்றை அஞ்சவேகூடாது. அவரது கோட்பாட்டின்படி ஒழுக்கத்தை மீறினால் எங்காவது எவரிடமாவது தலைகுனிந்து நிற்கநேரிடும்.”ஆணாபொறந்தவனுக்கு அவமானமே மரணம்” .அது அப்பாவின் ஆப்த வாக்கியம்.

அப்பாவின் உலகப்பார்வை என்பதே ‘அபிமானம்’ என்ற சொல்லில் அடங்கும். அதற்கு மலையாளத்தில் சுயமரியாதை என்று பொருள். அப்பாவைப்பொறுத்தவரை அது ஆண்களுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பியல்பு. வயதுக்குவந்த எந்த ஆணையும் அப்பா சாதாரணமாக அவமரியாதையாகப் பேசுவதோ அவமதிப்பதோ இல்லை — அப்படிப்பேசினால் அவர் கடும் சினம் கொண்டு அவனைத்தாக்குகிறார் என்று பொருள். அவருக்கு அது ஒரு போர்முறை மட்டுமே. தன்னைவிடக்கீழான நிலையில் இருப்பவர்களை ஓயாது வசைபாடும் கிராமத்துப்பண்ணையார்த்தனம் அவருக்கு இருக்கவேயில்லை. பத்துவயது தாண்டியவர்களில் அவரால் ‘டேய்’ என்று அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. ஆகவே அவர் எங்கு ‘டேய்’ என்று அழைத்தாலும் அது என்னை மட்டுமே குறிக்கும். என் காதுகளை விட்டு அக்குரல் இன்றுவரை நீங்கவில்லை.

பிறரை அப்பா மரியாதையாக அழைப்பார். சாதிசொல்லி அழைப்பதுதான் அவரது நோக்கில் மரியாதை. என்னுடன் படித்த கொச்சப்பனைக்கூட ”என்ன நாடாரே, இண்ணைக்குச் சோலி உண்டா?” என்றுதான் கேட்பார். ஆண்மகன் எங்கும் எவர்முன்னாலும் தலைதாழக்கூடாது என்பதனால் அவன் தன் தொழிலில் திறமையும் நேர்மையும் கொண்டவனாக இருந்தாக வேண்டும். நான்குபேருக்கு முன்னால் நிமிர்ந்து நின்று வெளிப்படையாகச் சொல்லமுடியாத எதையுமே செய்யக்கூடாது. ஒளித்து வைக்க ஏதாவது இருப்பவனுடைய தோள்கள் தானாகவே வளைய ஆரம்பித்துவிடும் என்பார் அப்பா.

கல்லூரியில் நான்சேர்ந்தபோது அப்பா எனக்களித்த அறிவுரைகளில் ஒன்று குடிக்கக் கூடாது என்பது. அண்ணாவுக்கு அந்த அறிவுரையைச் சொல்லவில்லை, அவனால் நிறுத்தவும் முடியும் என்றார். ஒரு பெண் போதும் வாழ்க்கையில் என்பது அடுத்த அறிவுரை. உணர்ச்சிகரமாகவே என்னால் காமத்தை அணுகமுடியும்என அவர் அறிவார். எந்நிலையிலும் நானே பணத்தை கையாளக்கூடாது, வணிகம் சூதாட்டம் எதிலுமே ஈடுபடக்கூடாது என்பது மூன்றாவது விதி. நான் அப்பா எனக்கு அளித்த அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டேன். அவ்விதிகளை மீறவேயில்லை.

ஆனால் அப்பாவும் அம்மாவும் இறந்துபோன பின் நிலையற்று அலைந்த அந்த மாதங்களில் தூங்குவதற்காக குடிக்க விரும்பினேன். கசங்கி அழுக்கேறி நாறிய என் பிரக்ஞையைக் கழற்றிப் போட்டுவிட்டு கொஞ்சநேரம் வெற்று ஆழத்துடன் காற்றாட விரும்பினேன். மதுக்கடைவாசலுக்கு வந்து அந்த தெருமுனையை அடைந்ததும் கால்கள் தயங்கி நின்றன. வெண்ணிறமான பலகையில் சிவப்பு எழுத்துக்களில் சாராயம் என்று எழுதியிருந்தது. அதன்மீது செந்நிறமான ஒரு பெரிய குண்டுபல்ப் சிறிய பப்பாளிப்பழம்போல தொங்கி வெளிச்சம் சிந்தியிருந்தது. இரும்பு கிரில் திறந்துகிடந்த வாசலுக்கு உள்ளே நீலநிறமான வெளிச்சம். அங்கே பலர் பேசும் குரல்கள் கலந்து குழம்பி தயிர்கடையும்போது தெறிக்கும் நுரைத்திவலை போல வெளியே வந்தன.

நான் விளக்குக் கம்பத்தில் சாய்ந்துகொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அங்கே வந்த கணம்முதல் என் வாய் அசட்டுத்தனமான ஒரு சுவையுடன் ஊற ஆரம்பித்தது. அந்த எச்சிலைவிழுங்கினால் வயிறு கசந்து குமட்டிவந்தது. ஆகவே துப்பிக்கொண்டே இருந்தேன். சாலையில் சென்ற சிலர் அந்த வாசலுக்குள் சென்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். வந்தவர்கள் வாசலிலேயே காறிக் காறிதுப்பினார்கள். காற்றில் மிதந்து செல்வதுபோல சென்றார்கள். அந்த வாசல் எறும்புப்புற்றின் வாய்போல. உள்ளே போகும் எறும்புதானா திரும்ப வருகிறது என்ற ஐயம் எழுந்தபடியே இருந்தது.

நான் நின்ற இடம் முழுக்க மழைக்காலத்தில் மண்டும் செடிகள். அவற்றிலிருந்து கொசு கிளம்பி என் கால்களைக் அக்டித்தது. அவ்வப்போது நான் ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்தேன். நடுவே ஒரு தூக்கச்சுழல்காற்று வந்து என்னைத்தூக்கி என் இளமைக்காலத்தின் மீதாகப் பதறிப் பறக்கச் செய்து திருப்பியும் அங்கேயே கொண்டுவந்து தள்ளியது. உள்ளே யாரோ கெச்சலான குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிவலைநாய் வெளியே நின்று தலைசரித்து பவ்யமாக உள்ளே பார்த்தது. உரக்கச்சிரித்தபடி நாலைந்து பேர் வந்து என்னைப்பார்த்தபடியே உள்ளே சென்றார்கள்.

யாராவது வந்து என்னிடம் ஏதாவது விசாரிக்கக்கூடுமென நான் அஞ்சினேன். அப்படி வந்தால் அவர்களுக்குச் சொல்ல வித விதமாக சொற்றொடர்களைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் அந்தத்தெருவில் அப்படி ஒருவன் நின்றுகொண்டிருப்பது விசித்திரமே அல்ல போலும். பின்னர் என்னிடம் யாராவது விசாரிக்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்தேன். அவர்கள் என்னை புறக்கணித்துச் செல்ல செல்ல என் ஏமாற்றமும் ஆங்காரமும் அதிகரித்தது. ஆர்ப்பரித்துக்கூவியபடி அவர்களை தடுத்து நிறுத்தி வசைபாட விரும்பினேன். கற்களைப்பொறுக்கி வீச விரும்பினேன். பின்னர் அவர்களாலும்கூட நான் பொருட்படுத்தப்படாமையை எண்ணி  அங்கே நின்று கண்ணீர் வழிய விசும்பினேன். 

கால்கடுத்தபோது அமர்ந்துகொண்டேன். ஈரமான மண். அருவித்திவலைபோல மென்மழை கொட்டிக்கொண்டே இருந்தது. விளக்கின் முன்னால் அது பொன்னிறத்தில் புகைபோல இறங்கியது. பிற இடங்களில் இருட்டின் தொடுவுணர்வு போல தெரியவந்தது. அந்தத்தெருவில் தெருவிளக்குகள் ஏதும் இல்லை. தெரு விலக்கில் ஒரு சிறிய குண்டுவிளக்கு மின்கம்பத்தில் தனியாகத்தொங்கியது. அதற்குக்கீழே மஞ்சள் ஒளி சிந்தி பரவியிருந்தது. அங்கே கிடந்த ஒரு பாலிதீன்தாள் தத்தளித்து மெல்ல சிறகடித்து மீண்டும் அங்கெயே அமைந்தது.

அதற்கு அப்பால் பெரியசாலையில் அவ்வப்போது ஒருசில கார்களும் இருசக்கரவண்டிகளும் ஒளியை விரித்து இருளை தள்ளி விலக்கியபடிச் சென்றன. இருட்டுக்குள் நின்ற மரங்கள் பளபளக்கும் இலைத்தகடுகளுடன் ஒளிகொண்டு பின் அணைந்தன. தென்னை மரங்களின் நிழல்கள் எதிரில் நின்ற பெரும் கட்டிடங்களின் சுவர்ப்பரப்புகளில் கரிய பூதங்களாக தலைவிரித்து தோற்றம் கொண்டு மறைந்தன. விளக்குக் கம்பத்தின் நிழல் சாலைவழியாக கடந்துபோய் மறைந்தது.

மெல்லமெல்ல வண்டிகள்செல்வது குறைந்தது. சாலையில் செல்பவர்களும் தென்படாமலாயினர். நெடுநேரம் கழித்து ஒரு கார் செல்லும்போதுஅந்த ஒலியில் அப்பகுதியே அலறி விழித்துக்கொள்வதுபோல் இருந்தது. நாய் என்னருகே வந்து கூரிய முகத்தின் நுனியில் இருந்த கரிய மூக்கை நீட்டி என்னை மணம்பிடித்தது. ர்ர் என்று சற்று உறுமியபின் கோணலாக பின்னால் நீட்டி நின்ற வாலை மெல்ல ஆட்டியபின் என்னைக்கடந்து பின்னால்சென்று அங்கிருந்த மூடிய கடைவாசலை அணுகி மேலே ஏறிக்கொண்டது.

என் உடலில் நீர் வழிந்தது. உடைகள் உடலில் ஒட்டியிருந்தன. மழை சற்று வலுத்திருக்க வேண்டும். நான் அந்த நாய் படுத்திருந்த கடைவாசலில் சென்று ஒதுங்க விரும்பினேன். பலமுறை என் மனம் எழுந்து அங்கே சென்றது. அதை அறியாமல் உடல் கைவிடப்பட்டதுபோல அங்கேயே கிடந்தது. பேரொலியுடன் ஒரு லாரி இரைச்சலிட்டுச்சென்றது. பின்னர் மரங்களுக்குள் ஒரு பறவை க்ராக் என்று அலறல் எழுப்பியது. அந்தச்சாலை திரைச்சீலையில் வரையப்பட்ட ஓவியம்போல ஆடியது. அல்லது மதுக்கடை விளக்கு காற்றில் ஆடியது. மரங்கள் சலசலத்தன. காற்று என்மீது குளிராகக் கொட்டி என்னைக் கடந்து சென்றது.

நான் அங்கே வந்தபோது நேராக மதுக்கடைக்குள் ஏறிவிடவேண்டுமென்றுதான் எண்ணினேன். பின் ஒரு கணம் தயங்கினேன். அந்தத்தயக்கம் மணிக்கணக்காக நீடித்தது. பலநூறுமுறை என் கற்பனையில் விதவிதமாக அந்த மதுக்கடைக்குள் நுழைந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த எண்ணமே இல்லாமல் ஆகியது. அங்கே ஏன் அமர்ந்திருக்கிறேன் என நானே அறியவில்லை. நான் மதுக்கடைக்குள் செல்லும்பொருட்டு அங்கே வந்தேன். அபப்டியானால் ஏன் அமர்ந்திருக்கவேண்டும்?

எழுந்து நின்றேன். சட்டையை இழுத்துவிட்டு தலைமயிரிலிருந்து சொட்டிய நீரை வேகமாக கையால் நீவி துடைத்தேன். பெருமூச்சுகளாகவிட்டுக்கொண்டு மீண்டும் அந்த மின்கம்பத்தில் சாய்ந்து நின்றேன். எங்கோ ஒரு கடிகாரம் அடித்தது. நெடுநேரம் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கும் எவரும் விழித்திருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு வேளை நகரத்தின் மொத்த மக்கள்தொகையே செத்துப்போயிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.

மதுக்கடைக்குள் இருந்து ஒருவன் இன்னொருவனை புஜங்களைப்பிடித்து உந்தி வெளியே கொண்டுவந்தான். தள்ளப்பட்டவன் ஒரு மெலிந்த கரிய நடுவயதுக்காரன். ”இஷ்டா, ஞா¡ன் பறயட்டே.. எடோ ஞான் பறயட்டே” என்று அவன் சொல்லிக்கொண்டு உடலை முறுக்கி தள்ளிக்கொண்டுவந்தவனிடம் பேச முயன்றான். வேட்டியை மடித்துக்கட்டி பழைய டி ஷர்ட் போட்ட தடித்த இளைஞன் அதை பொருட்படுத்தாமல் ஒரு குப்பையை வெளியே கொண்டு போடும் பாவனையில் அவனை வெளியே தள்ளிவிட்டு உள்ளே சென்று கிரில் கதவை ர்ர்ரீங் என்று இழுத்து மூடி பூட்டினான்.

தள்ளப்பட்டவன் ” இஷ்டா, நிக்கெடா…ஞான் பறயுந்நது கேள்க்கூ.. எடோ…”என்று திரும்பி கிரில்லைப்பிடித்தான். அவன் இவனைப் பார்த்தபாவனைகூட இல்லாமல் கதவை உள்ளிருந்து மூடினான். போர்டுக்கு மேலே எரிந்த விளக்கு அணைந்தது. தெருவின் நின்றவன் ”அது எவிடுத்தே மரியாத? ஆ? ஞான் பறயுந்நது கேள்கூ…டே”என்று அந்த கதவை நோக்கிச் சொன்னான். கணம் தோறும் அந்தக்கதவின் கதவுத்தன்மை இல்லாமலாகி அதுவும் ஒரு சுவராக ஆகியது. குடிகாரன் அங்கேயே நின்று அந்த கட்டிடத்தை நோக்கி கைநீட்டி ஏதேதோ சொன்னான். கொஞ்சநேரம் முறைத்து பார்த்தான்.

சட்டென்று அவன் உக்கிரமாக விசும்பி அழுதான். அந்த ஒலி என்னை அறுத்து இரண்டாகப்பகிர்ந்தது போலிருந்தது. என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அழும்தோறும் அவனால் அதைக் கட்டுப்படுத்த முடியாமலாகி மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். ”ஞான் சாவுந்நேன்!  ஞான் சாவுந்நேன்! ஞான் சாவுந்நேன்! ”என்று மீண்டும் மீண்டும் சொல்லி கேவிக் கெவி அழுதான். அந்த அழுகையொலி கேட்டு என் மனம் தவித்தது. கடுமையான தாகம் போல உதடுகள் வரண்டு உலர்வதுபோல ஒரு பதைப்பு.

அது தீவிரமான பரிதாப உணர்ச்சி என்று உணர்ந்தேன். முன்னால் சென்று அவனை அணைத்து மார்போடு இறுக்கி அவன் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்று எண்ணினேன் ஆனால் என் மனத்துக்கும் உடலுக்கும் தொடர்பே இல்லை. அவன் மெதுவாக தள்ளாடி நடந்து என்னருகே வந்தான். என்னை திரும்பிப்பார்த்தான். அவனுடைய கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது நானும் என்னுள்ளே உருகி அழுதுகொண்டிருந்தேன். ஒருகணம் அவன் கண்கள் என்னைச் சந்தித்தன. அவன் ஏதோ சொல்லவருவதுபோல தோன்றியது. ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை.

அவன் என்னைத்தாண்டிச் சென்று அந்த விளக்குக் கம்பத்தின் ஒளியைத்தாண்டி அப்பாலுள்ள இருட்டுக்குள் சென்றான். நானும் அவ்வழித்தான் செல்லவேண்டும்,ஆனால் நான் மறுபக்கமாகச் சென்றேன்.

முந்தைய கட்டுரைஒளியை அறிய இருளே வழி .
அடுத்த கட்டுரைநிழல்கள்