அன்புள்ள ஜெ
ரியாஸ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே தனக்கும் எழுதியதாக சொல்லி மனுஷ்யபுத்திரன் தன் முகநூலில் நக்கலடித்திருக்கிறார் .உங்கள் வாசிப்புக்காக
ஜெம்ஸ் ராஜசேகர்
அன்புள்ள ராஜசேகர்,
நலம்தானே?
அவர் நுணுக்கமாக கிண்டலடிக்கிறாராமாம். அதாவது ரியாஸ் என எவரும் இல்லை, அது பொய்யான கடிதம், அதைச் சுட்டிக்காட்டுகிறாராமாம். என்னத்தைச் சொல்ல
இது தொடர்ந்து நிகழ்கிறது, இணையத்தின் அரைவேக்காடுகள் என் தளத்தில் வரும் கடிதங்களை வைத்துக்கிண்டல்செய்வது. இது ஒருபெரிய அறிவார்ந்த வட்டம் என்பதை, இங்கே பேசப்படும் விஷயங்களின் ஒட்டுமொத்தம் வெளியே மொத்த இணையத்திலும் பேசப்படுவதைவிட அதிகம் என்பதை அவர்கள் அறிவார்கள். அது உருவாக்கும் பதற்றம்
சிலநாட்களுக்கு முன் ஓர் அரைவேக்காடு விக்ரம் என்னும் பேரில் எவரும் இல்லை, அது நானே எழுதும் புனைபெயர் என எழுதியது. விக்ரமின் படம் வெளியானதும் அதை அப்படியே கடந்து அடுத்த பெயரை பிடித்துக்கொண்டது. மின்னஞ்சல் வெளியானால் உடனே அதற்கு இதே கும்பல்கள் வேறுபெயரில் வசைக்கடிதங்களை அனுப்பத் தொடங்குகிறார்கள். முகம் பிரசுரமான பலர் கடிதங்களை வெளியிடவேண்டாம் என குறிப்புடன் எழுதும் நிலை இருக்கிறது.
இணையத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இது, எவரையும் இழிவுசெய்யலாம். ரியாஸ் என்னும் உலக இலக்கிய வாசகரை இதோ அசட்டு வாசகர் என்று முத்திரைகுத்தியாகிவிட்டது. இனி ஹமீது முன்வைக்கும் இலட்சிய அறிவுஜீவி யுவகிருஷ்ணாவோ அதிஷாவோ ஆக இருக்கலாம். தலையெழுத்து!.
ஹமீது என் நண்பர். நான் விரும்பும் கவிஞர். ஆனால் அவரைச்சூழ்ந்துள்ள அற்பக்கும்பலின் அற்பத்தனத்திலிருந்து அவரால் தப்ப முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் இதைச் சொல்லும்போதே சென்ற பதினைந்து நாட்களகவே அவர் எனக்கு அனுப்பிவைத்த அவருடைய கவிதைகளில்தான் உளமுலாவிக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லியாகவேண்டும்
நண்பர் ரியாஸ் நம் சந்திப்புகளில் கலந்துகொண்டவர். முனைவர் பட்ட ஆய்வாளர். அனேகமாக அத்தனை இளம் எழுத்தாளர்களுக்கும் தெரிந்த மகத்தான வாசகர். நான் எழுதியது போல ஒரு ஹோவார்ட் ரோர்க் குணத்தையும் தன் ஆளுமையுடன் சேர்த்துக்கொண்டார் என்றால், கொஞ்சம் நிமிர்ந்து தருக்கி நிற்க பயின்றார் என்றால் அடுத்த முப்பதாண்டுக்காலம் தமிழகத்தில் பேசப்படும் முதன்மையான அறிவாளுமைகளில் ஒருவர். அவருள் ரோர்க் எழுவதற்கு இந்த சந்தர்ப்பம் ஒரு தொடக்கமாக அமையட்டும்.
ஜெ
ஜெ,
உங்கள் நண்பர் ஜடாயு இணையத்தில் வசைபாடிகொண்டிருப்பதை பார்த்தீர்களா? உங்கள் தளம் வழியாகவே அவரைப்பற்றித் தெரியவந்தது. அவர் இன்று எழுதுவதை வாசிக்க வருத்தமாக இருந்தது.
செல்வக்குமார்
அன்புள்ள செல்வக்குமார்,
ஜடாயு மேல் எனக்கு பெருமதிப்பு உண்டு – அறிஞர் என்றவகையில். அறிஞர்களுக்குரிய சாத்தியங்களும் எல்லைகளும் அவருக்குண்டு.
அறிஞர்களில் மிகப்பெருபாலானவர்கள் மரங்களைப்போல. தாங்கள் முளைத்தெழுந்த நிலத்தில் வேரூன்றி அங்கெயே நின்றுகொண்டிருப்பார்கள். பறப்பது கலைஞர்களுக்கே சாத்தியப்படும்
ஜடாயுவைப்பொறுத்தவரை அவர் உறுதியான அரசியல்நிலைபாடு கொண்டவர். உறுதியான அரசியல்நிலைபாடு மிக எளிதில் காழ்ப்பாக, கசப்பாக மாறிவிடும். அதற்கு நட்பு உறவு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல.
கருத்தியல் அமைப்புக்களில் முழுவாழ்நாளையும் அர்ப்பணித்தவர்கள் கூட கருவேப்பிலைபோல தூக்கி எறியப்படுவதை, அவருடன் வாழ்நாள் உறவுகொண்டிருந்தவர்கள் ஒரே நாளில் பகைவர்களாகி உச்சகட்ட வெறுப்பையும் பழியையும் கக்க ஆரம்பித்துவிடுவதை நாம் எப்போதும் காண்கிறோம். அதற்கு இடதுசாரி வலதுசாரி வேறுபாடுகள் இல்லை. இந்த மனநிலையைத்தான் பின்தொடரும்நிழலின் குரல் நாவலில் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறேன்.
அதில் வருந்த ஏதுமில்லை, என்றும் அது அப்படித்தான். இக்காழ்ப்புகள் சிறுமைகளுக்கு அப்பால் சென்று அறிஞர்களை அறிஞர்களாகவே காண்பதற்கு எப்போதும்முயலவேண்டும், அவ்வளவுதான்
நிற்க, நம் நண்பர்களும் இணைந்து ஒழுங்குசெய்த நிகழ்ச்சி, மன்னார்குடியில். நீங்கள் காரைக்கால் என்பதனால் சென்று கேட்கலாம். நன்றாகவே இருக்கும்
ஜெ