‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62

62. புதுப்பொற்கதிர்

இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப் போகிறேன்” என்றாள். அவள் தோழி “அது நன்று. சென்று அழை” என்றாள். அடுமனைப்பெண் முன்செல்லப்போகும் அசைவு காட்டி மெல்ல அமைந்து “எப்படி நான் சென்று அழைப்பது? தெய்வம் போலிருக்கிறார்” என்றாள்.

“அதையேதான் நாங்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவரைத் தொட்டு அழைக்கும் இடத்தில் இங்கே எவருமில்லை” என்றாள் ஒரு முதுமகள். “ஏன்? அவர் தந்தை இருக்கிறாரே. அவர் வந்து சொல்லலாம் அல்லவா?” என்றாள் ஓர் இளம்சேடி. “ஆம் அவரே சொல்லாதபோது நாம் என்ன சொல்வது?” என்றார் அவர்களுக்குப் பின்னால் நின்ற அடுமனைக்காவலர்.

சுக்ரரின் குடில்வாயிலில் நின்றிருந்த கிருதர் சுஷமரிடம் “இரவு முழுக்க நிற்கப்போகிறாளா?” என்றார். “நாமென்ன செய்வது?” என்றார் சுஷமர். சத்வர் “மானுடர் மிகச் சில தருணங்களிலேயே உடலழிந்து வெறும் உள்ளமென இருக்கிறார்கள்” என்றார். “ஆசிரியரிடம் போய் சொல்வோம். அவர் சென்று பேசட்டும்” என்றார் கிருதர். “ஆசிரியரிடம் நீங்களே சென்று சொல்லுங்கள், உங்கள் அளவுக்கு அணுக்கமல்ல பிறர்” என்றார் சத்வர். “ஆம், நீங்களே சொல்ல முடியும், கிருதரே” என்றார் சுஷமர்.

கிருதர் சில கணங்கள் தலைகுனிந்து எண்ணி நோக்கிவிட்டு எழுந்து குடிலுக்குள் சென்று சிறிய அகல்விளக்கின் ஒளியில்  ஏடுகளை நோக்கிக்கொண்டிருந்த சுக்ரரின் அருகே சென்று அமர்ந்து “வணங்குகிறேன், ஆசிரியரே” என்றார். சுக்ரர் நிமிர்ந்து நோக்கினார். “தாங்கள் அறிவீர்கள், தேவி…” என்றார். “ஆம்” என்றார் சுக்ரர். “தாங்கள் சென்று அவளை அறைக்குள் சென்று துயில்கொள்ளும்படி சொன்னால்…” என்றார் கிருதர். “அங்கு நானும் நுழைய முடியாது” என்றார் சுக்ரர். “நுழைந்தாலும் அயலவனாக வெற்றுச் சொற்களைதான் சொல்ல முடியும். அதைவிட இங்கிருந்து எதுவும் நிகழவில்லை என்று எண்ணி நூல்களுக்குள் புகுந்துகொள்வதே சரியான வழியாக இருக்கும்.”

கிருதர் “அவள் நிலை அச்சமூட்டுகிறது” என்றார். சுக்ரர் சுவடியைப் பார்த்தபடி “எப்படியும் எதிர்கொண்டாகவேண்டிய தருணம். அனைத்து உணர்வுகளும் இப்படி ஓர் இரவிலேயே வெடித்து பீறிட்டு வெளியேறிவிடுமென்றால் விடுபடுவது எளிது” என்றார். “அதை அவள் உள்ளமும் உடலும் தாங்க வேண்டும்” என்றார் கிருதர். “ஆம், இறந்து மீள்வது அது. மீள வேண்டுமென்று உள்ளிருப்பது விழைந்தால் மீளலாம். பற்று விலகுமென்றால் பறந்தகலலாம். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றபின் பிறிதொரு சுவடியை எடுத்து எழுத்தாணியால் எழுதத்தொடங்கினார்.

எழுத்தாணி ஓலையை கீறிச்செல்லும் ஓசையைக் கேட்டபடி கிருதர் அமர்ந்திருந்தார். சில கணங்களுக்குப்பின் அது தன் தலைக்குள் மெல்லிய தோல்சவ்வொன்றை உரசிச்செல்வதுபோல் உணர்ந்தார். உடல் குறுக்கி, பற்கள் கிட்டித்து உரச, கண்கள் நிறைய இருமுறை உலுக்கிக்கொண்டார். கையூன்றி எழுந்து சுக்ரரை வணங்காது வெளியே சென்றார். வெளியே அந்தி இருட்டிவிட்டிருந்தது. குடில்களுக்குள் எழுந்த அகல்விளக்குகளின் ஒளி வாயில்கள் சாளரங்களினூடாக ஆங்காங்கே  நீள்சதுரமாக விழுந்து கிடந்தது. தொலைவில் இருந்த குடில்களின் வாயில்கள் வானில் பறந்து நிற்பவைபோல் தோன்றின.

தேவயானி அதே இடத்தில் அவ்வாறே நின்றிருந்தாள். கிருதர் “ஆம், இங்கிருந்து நோக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அடுத்த காய்நகர்வை அவளோ காலமோ நிகழ்த்தட்டும்” என்றபின் மெல்ல அமர்ந்தார். அச்சொற்கள் அவரை எளிதாக்கின. “இன்றிரவு முழுக்க… நாளை ஒளி வரும்வரை இவள் இங்கிருந்து விலக மாட்டாள்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். “இங்கேயே இருக்கப்போகிறீரா?” என்றார் சத்வர். சுஷமர் “தங்களுக்கு வேண்டுமென்றால் மரவுரிப்போர்வை கொண்டு வருகிறேன்” என்றார். “வேண்டாம்” என்றார் கிருதர். “அவள் என் மகள். அங்கு அவள் இதை போர்த்தியிருக்கவில்லை.” சுஷமர் “அவள் உடல் எரியால் ஆனது. குளிரை அவள் அறிவதில்லை” என்றார். கிருதர் மறுமொழி சொல்லவில்லை.

மறுபக்கம் அடுமனைத் திண்ணையில் அடுமனைப்பெண் சுவர் சாய்ந்து தேவயானியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். முதுமகள் வந்து “இங்கு அமர்ந்திருப்பதைவிட அருகே சென்று அவர் அருகே அமர்ந்திருக்கலாமே?” என்றாள். வேண்டாம் என்பதுபோல அவள் தலையசைத்தாள். “குளிர் ஏறி வருகிறது. வெளியே அமர்ந்திருப்பது எளிதல்ல” என்றாள் முதுமகள். பின்னர் அவளும் அடுமனைப்பெண் அருகே அமர்ந்தாள். நேரம் செல்லச்செல்ல அவள் உடல் நடுங்கத்தொடங்கியது. “தெய்வங்களே…” என்று முனகியபடி உள்ளே சென்று மரவுரிப்போர்வை ஒன்றை தலைவழியாக போர்த்திக்கொண்டு அமர்ந்தாள்.

வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக கனிந்தெழுந்தன. இரவின் ஒலிகள் மாறுபடத் தொடங்கின. நீர்வெம்மை கொண்ட காற்று காட்டுக்குள்ளிருந்து பச்சிலை மணத்துடன் வந்து குடில்களைச் சூழ்ந்து கடந்து சென்றது. மீண்டுமொரு காற்றில் எங்கோ குருளையீன்ற அன்னைவேங்கை  உறுமும் ஒலி கேட்டது. மீண்டுமொரு காற்றில் ஓநாய்களின் ஊளை எழுந்து வந்தது. மேலிருந்து குளிர் தொட்டுஉணரும் நீர்மை என எடை கொண்டு இறங்கி நிலத்தை மூடியது. கற்கள் குளிர்ந்து பனித்தன. இலைப்பரப்புகள் பனிப்படலம் சூடின. பின்னர் அவை எடை கொண்டு நுனி துளித்து உதிர்த்து விடுபட்டு எழுந்தசைந்தன. துளி சொட்டும் ஒலியாக மரங்கள் இருளுக்குள் பரவியிருந்தன. குளிர் கிருதரை நடுங்க வைத்தது. குளிர் ஒருவகையான அணைப்பு என உணர்ந்திருந்தார். அது ஓர் அச்சம் என அப்போதுதான் அறிந்தார். இருட்டை ஒரு போர்வை என இளமைமுதலே விரும்பியிருந்தார். அது ஓர் அழுத்தமென  உணர்ந்தார்.

பின்காலையின் குளிரில் தன்னை அறியாமல் அவர் துயின்றுவிட்டிருந்தார். துயிலக்கூடாதென்று தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் இரவெல்லாம் ஆணையிட்டுக்கொண்டிருந்தார். உள்ளம் பலமுறை உடலை கூர்முனையால் குத்தி திடுக்கிட்டு எழச் செய்துகொண்டே இருந்தது. பின்னர் அதை மீறி உடல் துயிலுக்குள் நழுவியது. துயின்ற உடல் மெல்ல அமர்ந்து உள்ளம் நான் துயிலவில்லை விழித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. பின்னர் ஊர்தி இல்லாமல் ஊர்பவன் வெட்டவெளியில் நின்று தவித்து கரைந்தான். விழித்துக்கொண்டபோது தான் துயிலவில்லை விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்ததைத்தான் முதலில் அவர் உணர்ந்தார். ஆகவே துயிலவே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

மறுகணம் தேவயானியின் நினைவெழ அவிழ்ந்திருந்த ஆடையை அள்ளி இடுப்பில் சுற்றியபடி திரும்பிப் பார்த்தார். அவர் உடல் குளிரில் நடுங்கி துள்ளிக்கொண்டிருந்தது. கண்கள் நோக்குக்கு பழகாமையால் வெறும் இருள் மட்டுமே தெரிந்தது. பின்னர் இருளுக்குள் இருள் வடிவங்களாக காட்சிகள் எழுந்தன. அங்குமிங்கும் எரிந்த ஓரிரு அகல்விளக்குகளின் சுடர்களைத் தொட்டு இணைத்து ஒளிப் பின்னணி ஒன்றை உருவாக்கி அதில் நிழலுருவங்கள் உயிர்பெறச் செய்தன விழிகள். தேவயானி தன் குடிலின் முன் திண்ணையில் சரிந்து விழுந்திருப்பதை அவர் கண்டார். முதல்கணம் எழுந்த திடுக்கிடலுக்குப்பின் அவள் துயில்கிறாள் என்று உள்ளம் உணர்ந்துகொண்டது.

ஆயினும் அச்சத்தில் கால்கூசி மெய் நடுங்கிக்கொண்டிருந்தது. மெல்ல  நடந்து அருகே சென்று குனிந்து அவள் துயின்று கொண்டிருக்கிறாளா என்று பார்த்தார். முலைக்குவைகள் எழுந்தமைய சீரான மூச்சு வந்துகொண்டிருந்தது. ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். அதன் பின்னரே அங்கு வரும்வரை தன்னிடமிருந்த ஐயம் என்பது ஒரு வகை விழைவோ என எண்ணி வியந்தார். அக்கதை அவ்வாறு முடிந்திருந்தால் காவியத்தன்மை கொண்டிருக்கும், சூதர் நாவில் பற்றிப் படர்ந்தேறும், தலைமுறைகள் அதை பாடும். அரியவை, உச்சம் நோக்கி செல்பவை வாழ்வில் நிகழ்ந்தாக வேண்டுமென்று உள்ளில் இருக்கும் ஒரு சிறுவன் ஏங்கிக்கொண்டே இருக்கிறான். எளியவன், பெரும்பாலும் அவன் ஏமாற்றமே அடைகிறான். அவனை உள்ளுறையும் அனைத்துமறிந்த முதியவன் ஒருவன் தலை தடவி ஆறுதல் சொல்கிறான்.

‘ஆம், இவ்வாறுதான். எப்போதும் எங்கும் இவ்வாறுதான் இவை நிகழ்கின்றன. உச்சங்கள் நிலைகுலைவை உருவாக்குகின்றன. அரியவை பேரெடை கொண்டு அழுத்துகின்றன. அன்றாடம் என்பது ஒவ்வொரு கணமும் இயல்பாக நழுவி பிறிதொரு கணமாக ஆகும் ஒழுக்கன்றி வேறல்ல. உடல் தொடர்ச்சியாக முன்நோக்கி விழுவதே நடை. ஒரு கால் உந்த நிலைபெயர்ந்து முன்விழும் உடலை அடுத்த கால்வைப்பு தாங்கி அதற்கடுத்த விழுதலாக ஆக்குகிறது. விழுதலின் தொடராகவே மானுடர் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த எண்ணம் அவரை புன்னகைக்க வைத்தது. தன் குடிலுக்குள் சென்று சூடாக எதையாவது அருந்தவேண்டுமென்று எண்ணினார். அந்த உணர்வு எழுந்ததுமே பக்கவாட்டில் எவரோ நிற்பதைப்போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தார். அடுமனைப்பெண் விழித்தெழுந்து தூணருகே வந்து நின்றிருந்தாள். அவர் அவளை நோக்கி “துயில்கிறாள்” என்றார். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கு அருந்துவதற்கு ஏதாவது கொடு” என்றார். “வருக!” என்று அவள் அவரை அழைத்துச் சென்றாள்.

இன்நீர் அருந்திய பிறகு இருவரும் திரும்பி வந்து அடுமனைக் குடிலின் திண்ணையிலேயே அமர்ந்துகொண்டனர். ஒரு சொல்லும் உரையாடிக் கொள்ளவில்லை. விடியல் எத்தனை மெதுவாக நடக்கிறதென்பதை அன்றுதான் கிருதர் உணர்ந்தார். ஒளி எழுந்துவிட்டது என்று விழி அறிந்த பின்னரும் நெடுநேரம் வெயிலெழவில்லை. இருளின் இரும்புப்பரப்பில் கூரிய கல்லால் கீறியதுபோல முதல் பறவைக்குரல் எழுந்தபோது தலை திருப்பி தொலைவில் தெரிந்த விடிவெள்ளியை பார்த்தார். விடிந்துவிட்டது என்று தனக்கே சொல்லிக்கொண்டார். ஆனால் தொடர்ந்து பறவைக்குரல் எழவில்லை. ஊழிமுதல் அங்கேயே அப்படியே பதிந்திருப்பதுபோல் விடிவெள்ளி மின்னிக்கொண்டிருந்தது.

பிறிதொரு பறவைக்குரலுக்காக காத்து பொறுமை இழந்து, இன்று ஏதேனும் மாறுபட்டு நிகழ்கிறதா என்று ஐயம்கொண்டு, எழுந்து நின்று தொலைவில் தெரிந்த காட்டின் நிழல்கோட்டையை பார்த்தார். அப்போதுதான் அடுத்த பறவைக்குரல் எழுந்தது. அது இருளில் எய்யப்பட்ட ஓர் அம்புபோல் ஒலித்தது. அதைத் தொடர்ந்து பறவைக்குரல்கள் ஒன்றொன்றாக பெருகி மெல்ல இரைச்சலாயின. நனைந்த பட்டுத்துணிபோல வானம் தெரிய அதன் பின்னணியில் பறவைகளின் கரிய சிறகடிப்புகள் தெளிவுகொள்ளத் தொடங்கின. கூட்டம் கூட்டமாக அவை வானைக் கடந்து மறுபக்கம் சென்றன. வான்பளிங்கில் வழுக்கும் புள்ளிகள் என.

மீண்டும் ஒன்றும் நிகழாமல் அனைத்தும் அவ்வாறே அமைந்திருந்தன. நெடுநேரத்திற்குப் பின்புதான் அனைத்தும் சற்றே ஒளிகொண்டிருப்பதை அவர் கண்டார். வானம் நீர்ப்பரப்பில் மூழ்கி அண்ணாந்து நோக்குவதுபோல சாம்பல்நீல ஒளி கொண்டிருந்தது. இலைகள் மெல்லிய பளபளப்புடன் தெரிந்தன. மரப்பட்டைகள் வெண்ணிற முப்புடைப்பு கொண்டன. துயின்றுகொண்டிருந்த தேவயானியை திரும்பிப் பார்த்தார். எப்போது அவள் விழிப்புற்று எழுவாள்? எழுந்து சென்று அவளை எழுப்ப வேண்டுமா? ஆனால் அவளைத் தொட்டு எழுப்ப தன்னால் இயலாது என்று உணர்ந்ததும் மீண்டும் வானை பார்த்தார். இலைகளின் மீதிருந்த கரிப்புகைப் பரப்பு கரைந்து வழிந்து சொட்டுவதுபோல் இருந்தது.

கருமை தெளிந்து பச்சை நிறமாயிற்று. மண் ஒளி கொண்டது. வானில் செல்லும் பறவைகளின் வண்ணங்களை பார்க்க முடிந்தது. காகங்கள் காட்டிலிருந்து சிறிய புகை அலைபோல கிளம்பி வந்து அடுமனைக்குப் பின்புறம் குவித்திட்ட கலங்களைச் சூழ்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின. முதல் ஒளி எப்போது வரும்? கதிரவனின் கை முதலில் நீண்டு வந்து ஒரு தாமரையைத்தான் தொடுமென்று அவர் காவியங்களில் கற்றிருந்தார். முதல்கதிர்த் தொடுகையிலேயே நீர்நிலைகள் உள்ளிருந்து ஒளிவிடுவதை கண்டிருந்தார். முற்றம் துலங்கியபடியே வந்தது. அதன் அனைத்து கூழாங்கற்களையும் பார்க்க முடிந்தது. கூரைப்பரப்புகள் பளபளக்கத் தொடங்கின.

மரங்களுக்குமேல் எழுந்த பறவைக்குரல்களின் ஒற்றை ஓசை முற்றிலும் மாறுபட்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில துடித்துத் துடித்து காற்றில் பறந்து வந்து கூரை விளிம்பில் அமர்ந்தன. பின் மிதந்து தரையில் இறங்கி வாலை ஆட்டியபடி குனிந்து குனிந்து மணிகளை பொறுக்கின. திடுக்கிட்டவைபோல சிறகடித்து காற்றில் எழுந்து அப்பால் அமர்ந்தன. இலைகளுக்கு அப்பால் மெல்லிய செந்நிறத்தை அவர் கண்டார். அங்கு காடு தீப்பற்றிக் கொண்டதைப்போல தெரிந்தது. நீண்டு விழுந்த மெல்லிய நிழல்கள் செந்நிறமும் கலந்திருப்பதுபோல. அவை தழலாட்டத்தால் அதிர்ந்து கொண்டிருப்பது போல.

எழுந்து நின்றால் மரக்கூட்டங்களினூடாக கிழக்கு தொடுவானை பார்க்க முடியும். கதிரவனின் விளிம்பு எழுவதை சுக்ரரின் குடில்முற்றத்தில் நின்று அவர் பலமுறை பார்த்ததுண்டு. ஆயினும் எழாமல் அவர் பார்த்து நின்றார். இரு மரங்களுக்கிடையினூடாக மெல்லிய ஒளி ஒன்று வந்து சருகுகளின்மேல் நீண்டு விழுந்தது. சாளரம் வழியாக வரும் அகல்விளக்கின் ஒளி என்று தோன்றியது. செந்நிறப் பொடியை சருகின்மேல் நீட்டித் தூவியது போல. அந்த ஒளி நீண்டு தேவயானியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேலும் மேலும் நீள்கதிர்கள் மரங்களுக்கிடையிலிருந்து எழுந்து முற்றத்தை நோக்கி வந்தன. அவர் நோக்கி நின்றிருக்கவே ஒரு கதிர் அவள் முகத்தின்மேல் விழுந்தது.

நடை திறக்கையில் ஆலயத்தின் சுவரில் வரையப்பட்ட தொன்மையான அன்னை ஓவியத்தின் முகம் துலங்கி விழி திறப்பதுபோல் என்று எண்ணிக்கொண்டார். அவளுடைய நெற்றியைச் சூழ்ந்திருந்த குறுமயிர்கள் பொன்னிறமாக ஒளிவிட்டன. கன்னத்தின் பூமயிர்ப்பரப்பு, மூக்கிலணிந்திருந்த சிறுமணிநகை, உலர்ந்து ஒட்டிய சிறியஇதழ்கள், ஆடைகளின் பூப்பின்னல் விளிம்புகள் என ஒவ்வொன்றும் ஒளிகொண்டன. சுருங்கி மூடியிருந்த கண்கள் அதிர்வதை கண்டார். பின்னர் அவள் விழிதிறந்து ஒளியை நோக்கினாள். அவள் முகம் மானுடத்திற்கு அப்பால் இருந்தது.

அவள் மெல்ல கையூன்றி எழுந்து ஒளியை நோக்கியபடி அமர்ந்தாள். முழங்காலுக்கு நடுவே இரு கைகளையும் செலுத்தி ஓய்ந்த உடலுடன் பெய்யொளியில் ஆடி. அடுமனைப்பெண் “மீண்டுவிட்டார்” என்றாள். அவர் திரும்பிப்பார்த்த பின் தலையசைத்தார்.

tigerஅன்றுமுதல் தேவயானி முற்றிலும் மீண்டு வந்தாள். இரு வேங்கைகளை இடக்கையால் சரித்து கையில் மூன்று வெண்மலர்களுடன் கசன் குடில்தொகையின் படியேறி வந்த கணத்திற்கு முந்தைய கணத்திலிருந்து துவங்கியவள் போல. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து சிற்றோடையில் நீராடி மீண்டு வந்தாள். சுக்ரர் முன் வந்தமர்ந்து காவியங்களையும் தத்துவங்களையும் முற்றிலும் உளம்கூர்ந்து கற்றாள். அடுமனையில் சென்றமர்ந்து பணியாளர்களுடன் சேர்ந்து வியர்வை வழிய உழைத்தாள். மாலையில் குறுங்காட்டின் எல்லைவரை சென்று தனித்துலாவி மீண்டாள். இரவில் காட்டின் குளிர் எழுவதுவரை சிற்றகலின் ஒளியில் விழிசுடர நூல்களை படித்துக்கொண்டிருந்தாள்.

சிரிப்பில் நடையில் சொற்களில் எங்கும் சிறு மாறுபாடுகூட தென்படவில்லை. கிருதர் சுக்ரரிடம் “முற்றிலும் மீண்டுவிட்டாள், ஆசிரியரே. தாங்கள் சொன்னது சரிதான். அவ்விரவில் அவ்வுச்சத்தை அடைந்ததனால்தான் மீள முடிந்தது. இல்லையேல் ஒவ்வொரு நாளும் உடனிருந்து உழற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கசப்பு” என்றார். “கசப்பு அங்குதானிருக்கும்” என்று சுக்ரர் சொன்னார். “உள்ளத்திலிருந்து விலக்கும் கசப்பு குருதியில் கலந்து தசைகளும் உயிரும் ஆகிவிடுகிறது.”

கிருதர் ஏமாற்றத்துடன் “என்ன சொல்கிறீர்?” என்றார். “இனி இங்கே அவள் இருப்பது உகந்ததல்ல. பிறிதெங்காவது அவளை அனுப்பி வைக்கலாமென்று எண்ணுகிறேன்” என்றார் சுக்ரர். “அனுப்புவதென்றால்…” என்று கிருதர் தயங்கினார். “ஆம், நீர் சொல்வதும் உகந்ததே. நானில்லாமல் அவள் மட்டும் எங்கும்  சென்று  தங்குவது சரியல்ல. நிமிர்ந்தே வாழ்ந்து பழகியவள். என்னுடன் இருப்பதே அந்நிமிர்வை அவளுக்கு அளிக்கிறது” என்றபின் சுக்ரர் “ஹிரண்யபுரியின் அருகிலேயே தவச்சாலை ஒன்று அமைத்துத் தருவதாக விருஷபர்வன் சொல்லியிருக்கிறான். அங்கே செல்லலாமென்று எண்ணுகிறேன்” என்றார்.

கிருதர் “ஆம், அது உகந்ததென்றே நானும் எண்ணுகிறேன். இந்தக் காட்டுக்குள் தேவி இப்படி நெடுங்காலம் இருக்க இயலாது. நகரருகே இருந்தால் அரசர்கள் எவரேனும் அவளை விரும்பக்கூடும். பிறிதொரு நல்வாழ்க்கை அவளுக்கு தொடங்கவும்கூடும்” என்றார். “நன்று” என்று மட்டும் சொல்லி சுக்ரர் தனக்கே ஆம் என  தலையசைத்தார். கிருதர் தயங்கி “அவள் முழுமையாக மீண்டுவிடுவாளா, ஆசிரியரே?” என்றார். “எவரும் முந்தைய நிலைக்கு மீள்வதில்லை. உதிரும் ஒவ்வொரு இலையின் தடமும் மரத்தில் இருக்கும்” என்றார் சுக்ரர்.

ஓரிரு நாட்களிலேயே காட்டில் இருந்த குடில்தொகைகள் அனைத்தும் ஒழிந்தன. சுக்ரரும் மாணவர்களும் உடனுறைபவர்களும்  பன்னிரண்டு வண்டிகளிலாக ஹிரண்யபுரி நோக்கி சென்றனர். அக்குடில்களிலிருந்து ஹிரண்யபுரிக்குச் செல்லவிருப்பதை கிருதர் தேவயானிக்கு சொன்னபோது அவள் அதற்கு மெல்லிய விழிச்சுருக்கத்திற்கு அப்பால் நெஞ்சு அளிக்கவில்லை. அவளுக்காகவே அவர்கள் கிளம்புவதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் எவரும் அதை அவளிடம் சொல்லவில்லை.

முதலில் அனைவருக்கும் அங்கிருந்து கிளம்புவது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிய செய்தியாக இருந்தது. பின்னர் பொதிகளைக் கட்டுவது, வண்டிகளை பழுதுநோக்குவது என பரபரப்பான செயல்களாக ஆகியது. குடில்களை ஒழித்தபோது அங்கே குடியேறிய வெறுமை அவர்களை துயர்கொள்ளச் செய்தது. அந்தத் துயர் தாளாமல் அங்கேயே இருந்துவிடலாம் என்று எண்ணி அதை வெவ்வேறு வடிவில் சொல்லிக்கொண்டனர். அங்கே காடாக, ஓடையாக அணுக்கம் கொண்டிருந்த அனைத்தும் அப்பொருட்கள் அல்ல, அப்பொருட்கள் என உள்ளம் கொண்ட உணர்வுகளே என எவ்வாறோ அனைவரும் உணர்ந்தனர். அப்பொருளுலகை விட்டுச்செல்லும்போது உணர்வுலகு உடன்வரும் என்றும்.

விரைவிலேயே அந்த ஒழிந்த குடில்கள் அளித்த வெறுமையை வெல்ல எளிய வழி அங்கிருந்து கிளம்புவதே என உணர்ந்தனர். கிளம்பியதும் ஒருநாள் முழுக்க சோர்வு நிறைந்த அமைதி நிலவியது. பின்பு மெல்ல பெண்கள் களிப்படைந்தனர். அது அனைவருக்கும் பரவியது. சிரிப்பும் கொண்டாட்டமுமாக அவர்கள் ஹிரண்யபுரியை சென்றடைந்தனர். ஹிரண்யபுரியை அவர்களில் பலர் இளமையில் கண்டிருந்தனர். பின்னர் மொழியினூடாக தீட்டிக்கொண்டிருந்தனர். அந்நகரை காணும் கிளர்ச்சியில் பலர் முந்தைய பல நாட்களாகவே உடல்பதறிக்கொண்டிருந்தார்கள். நகருக்கு அப்பால் இரவில் தங்கியிருந்த சோலையில் ஒருவரும் துயில்கொள்ளவில்லை.

“அசுரப்பெருநகர். செம்பொன்நகர். மண்ணில் எழுந்த அமராவதி” என பாணன் யாழ்மீட்டிப் பாடினான். அதைக் கேட்டு விழிகள் துலங்க அமர்ந்திருந்த பெண்களுக்குப் பின்னால் ஓர் அடிமரத்தில் சாய்ந்து தேவயானி அமர்ந்திருந்தாள். அடுமனைப்பெண் அவளிடம் “தாங்கள் இதுவரை நகர் என எதையும் கண்டதில்லை அல்லவா?” என்றாள். “ஆம், நான் நம் குடில்நிலைவிட்டு வெளிப்போந்ததில்லை” என்று அவள் சொன்னாள். “அனைத்தையும் காவியங்களில் அறிந்திருப்பீர்கள்” என்றாள் அடுமனைப்பெண். தேவயானி புன்னகைத்தாள். அப்பால் அமர்ந்திருந்த சத்வர் “சொல்லில் இருப்பது விதை. விதையிலிருந்து காட்டை எழுப்புவது மிக எளிது” என்றார்.

மறுநாள் காலையில் கிளம்பியபோது தேவயானி அடுமனைப்பெண்ணிடம் “என் பேழைக்குள் முன்பு தந்தைக்கு கொடையென வந்த பீதர்நாட்டுச் செம்பட்டு ஒன்றுள்ளது. அதை எடு” என்றாள். “ஆடையென அணிய இயலாத அளவுக்கு அது சிறியது, தேவி” என்றாள் அவள். “அதை மேலாடையாக அணிகிறேன்” என்றாள் தேவயானி. அதை எடுத்தபோது முன்பு அவளே காட்டில் பொறுக்கிய வண்ணக்கற்களை உரசி மணியாக உருட்டி கோத்து செய்த மாலை ஒன்று இருப்பதைக் கண்டாள். அதையும் அணிந்துகொண்டபோது அவள் தோற்றம் மாறிவிட்டிருப்பதை அடுமனைப்பெண் கண்டாள். அவளே ஓடி காட்டுமலர்களை கொய்துகொண்டுவந்து தேவயானியின் குழலில் சூட்டினாள்.

வண்டிகள் செம்மண்பொடி பறந்த சாலையில் மெல்ல ஒழுகிச்செல்ல அருகே விரைவுத்தேர்களும் புரவிகளும் புழுதிமுகிலை சிறகுகளாக ஆக்கியவைபோல கடந்துசென்றன. மாபெரும் கருமணிமாலைபோல பொதிவண்டிகளின் நிரை சென்றுகொண்டிருந்தது. பின்னர் அவள் தொலைவில் மழைக்கார் எழுந்ததுபோல கரிய கோட்டையை கண்டாள். “கரிய நிறமா?” என்று அவள் வண்டிக்கு அருகே நடந்து வந்த சத்வரிடம் கேட்டாள். “தேவி, பொன் செல்வத்தின் நிறம். கருமை ஆற்றலின் நிறம்” என்றார் சத்வர்.

அவள் அணுகிவந்து பெருகிச்சூழ்ந்த கோட்டையின் நூற்றுக்கணக்கான உப்பரிகைகளையும் அவற்றில் ஒளிர்வேல்களுடன் நின்றிருந்த காவலர்களையும் காற்றில் படபடத்த கொடிகளையும் பார்த்தபடி விழிமலைத்து அமர்ந்திருந்தாள். மெல்ல நெஞ்சு நிறைந்து விழி வழியத்தொடங்கியது. எங்கிருக்கிறோம் என்றே அறியாதவளாக கனவொன்றுக்குள் நுழைபவள்போல அவள் ஹிரண்யபுரிக்குள் நுழைந்தாள்.

முந்தைய கட்டுரைஅமிர்தாஞ்சன் கீரை மிக்சர்
அடுத்த கட்டுரைரியாஸ் -கடிதம்