பெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு

1

பெரும்பாலான தருணங்களில் நாம் சமூகவலைத்தளவிவாதங்களில் பேசப்பட்டவற்றைத் திரும்பச்சென்று பார்ப்பதே இல்லை. எதையும் மிதமிஞ்சி சொல்லி, உக்கிரமாக வாதாடி, அப்படியே விட்டுவிட்டு மீண்டு வந்திருப்போம். மோடியின் பெருநோட்டு அகற்ற நடவடிக்கை வந்தபோது அது அறிவிக்கப்பட்ட பத்து நிமிடத்திலேயே நம்மூர் மோடி வெறுப்பாளர்கள் பொருளியல்மேதைகளாக வேடமிட்டுக்கொண்டு அது மொத்த தேசத்தையும் பேரழிவுக்குக் கொண்டு செல்லும் என அறிவித்தனர். அந்நடவடிக்கையின் நோக்கமேகூட இந்தியப்பொருளியலை அழிப்பதுதான் என ஆரூடம் சொன்னார்கள். பாரதியஜனதாவின் தற்கொலை என சிலர் மகிழ்ந்தார்கள்.

அத்தனை வகைகளிலும் அவநம்பிக்கையை கசப்பைப் பரப்பி அம்முயற்சியை முறியடிக்க முடிந்தவரை முயன்றனர். தன் சேமிப்பு ஒட்டுமொத்தமாகவே வீணாகிவிட்டது என ஒரு பாட்டி ஐநூறுரூபாயைக் காட்டி அழும் ஒரு காணொளி பல லட்சம்பேரால் பகிரப்பட்டதை நினைவுறுகிறேன், அந்தப்பாட்டி பொய்சொல்லி ஏமாற்றப்பட்டு அக்காணொளி எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், அந்தப்பாட்டி அருகிலிருந்த தபால்நிலையத்திலெயே அந்த நோட்டை மாற்றமுடியும் என்றும் எவருமே சொல்லவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இந்தியப்பெண்களில் எதிர்காலமே அழிந்துவிட்டது என்றார்கள் ஓர் அம்மணி.அத்திட்டம் வென்று மோடி வலுவடைந்துவிடக்கூடாது, அதைவிட அத்திட்டம் தோற்று நாட்டுப்பொருளியல் அழிந்து மோடி வலுவிழக்கவேண்டும் என்று விரும்பி எழுதிக்குவிக்கப்பட்டவை அவை.

சமூகவலைத்தளங்களை விடுங்கள், தொடரும் ஆறுமாதங்களில் மாபெரும் நெருக்கடி வரும், இந்தியப் பொருளியலே அழியும் என எத்தனை ‘ஆய்வாளர்கள்’ எழுதியிருக்கிறர்கள் என்று திரும்பிப்பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது. அவர்களெல்லாம் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்தவற்றுக்குச் சென்றுவிட்டார்கள்.இவ்வளவு மொண்ணையாகவா நம்மூர் படித்த இணைய உலாவிகள் இருக்கிறர்கள்? அல்லது இவர்களை இப்படி மொண்ணைகளாக மதிப்பிடுமளவுக்கு கருத்துச்சொல்லிகள் மொண்ணைகளா? எவ்வளவு ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு எவ்வளவு பீதி கிளப்பப்பட்டிருக்கிறது!

அப்போது பெருநோட்டு அகற்றம் குறித்து நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன், ஆறுமாதம் கழித்து என் கட்டுரையை மறுபிரசுரம் செய்வேன், அப்போது எவர் உண்மையைச் சொல்கிறார்கள், எவர் வெறும் அரசியல் செய்கிறார்கள் என தெரியும் என்று. இன்னும் ஆறுமாதம் ஆகவில்லை.இன்று வாசித்த இக்கட்டுரை என் கருத்தையே மீண்டும் உறுதிசெய்கிறது

மோடியின் அந்நடவடிக்கை நான் எண்ணிய அளவுக்கு வெற்றிபெறவில்லை என்று இப்போது நினைக்கிறேன். மேலிருந்து கீழ்வரை ஊழலில் ஊறிய நம் அமைப்பு அதை பெரும்பாலும் தோற்கடித்தது – அதற்கும் நம்மூர் அரசியலாளர் மோடியைக் குறை சொல்லக்கூடும். ஆனாலும் அது இந்தியப்பொருளியலுக்கு பெரிய நன்மையையே அளித்தது என்றே நினைக்கிறேன். வரியே கட்டாமல் மாறாமல் நிழலில் நடந்த மாபெரும் தொழிலுலகின் ஒருபகுதியை வெளியே கொண்டுவர அதனால் முடிந்தது. அதனூடாக நம் வரிவசூலை பலமடங்கு பெருக்க முடிந்தது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக இந்தியப்பொருளியலுக்கு அதனால் நன்மையே விளைந்தது.

முந்தைய கட்டுரைஎன் கந்தர்வன் — பாலா
அடுத்த கட்டுரைஅமிர்தாஞ்சன் கீரை மிக்சர்