‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61

61. தென்முனைக்கன்னி

அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீராவிக்காற்று, எழுந்து வலுத்து அடங்கிய புள்ளோசை, அதன்பின் எழுந்த இரவுக்குளிர், சீவிடுகளின் இசை என அனைத்தும் இனித்தன. முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா? இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள்?

பொறுக்கா என்றால் வஞ்சம் கொண்டு கருக்கட்டும் அவை. எழுந்து தங்கள் படைக்கலங்கள் வீசி எதிர்வரட்டும். அழிக்கட்டும் என்னை. மீளாநரகில் தள்ளட்டும். ஆயினும் இத்தருணத்தில் இனித்து இனித்து சாவென்றும் வாழ்வென்றும் இல்லா இருப்பொன்றில் நிறைவேன். இக்கணங்கள் ஒவ்வொன்றும் ஒளிரும் மணிகள். இடைவெளியே இல்லாமல் விண்மீன்கள் செறிந்து உருவான வானம். இது போதும். இருந்து முழுத்து உதிர்வதற்கும்மேல் இப்பெருநிலை.

அவள் திண்ணையிலேயே விண்மீன்களை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.  பின்னர் அவற்றை விழிக்குள் நிறைத்தபடி இமைமூடினாள். சித்தப்பரப்பில் ஒட்டியிருந்து மின்மினித்தன அவை. எழுந்து பறந்து ஒளிக்கோடுகள் நீட்டின. பின்னி நெய்து வலையென்றாயின. அவற்றில் அவையே சிக்கியிருந்து தவித்தன. உதிர்ந்தன. விழுந்த இடத்தில் பற்றிக்கொண்டு மூண்டெழுந்தன. விழித்தபோது அவள் வெறுங்கூடென்றிருந்தாள். வாழ்வதற்கு மீதி ஏதுமில்லை என உணர்ந்தவளாக ஓய்ந்த கைகளுடன் அங்கே கிடந்தாள்.

எழுந்து குழல்முடிந்து ஆடைதிருத்தி நீராடக் கிளம்பியபோது உடலை உந்தவே முடியவில்லை. நனைந்த ஆடையென முள்ளும் கல்லும் தரையுமாக அப்படியே உடல்படிந்துவிடவேண்டும் போலிருந்தது. தனிமையில் நீராடினாள். மூழ்கி மீன்களை நோக்கி புன்னகை புரிந்தாள். எழுந்தபோது நீர் அவளை மீட்டிருந்தது. திரும்ப வரும்போது உதடுகளில் மெட்டு மீண்டு வந்திருந்தது. நடையில் துள்ளலும் கைகளில் மெல்லிய அலைவும் இருந்தது. வேங்கைக்கிளையை எட்டிப் பற்றி உலுக்கி மலருதிர்த்தாள்.

ஆடைமாற்றியபின் உணவருந்துவதற்கு முன்னர் அவனை பார்க்கவேண்டுமென தோன்றியது. அவன் குடிலுக்குள் அசைவு தெரிந்தது. ஒவ்வொருமுறையும் அவன் அசைவை காண்கையில் எழும் திடுக்கிடல் விலகி மெல்லிய உவகை மட்டுமே என ஆகிவிட்டிருந்த மாற்றத்தை அவளே உணர்ந்தாள். படியேறி குடில்வாயிலில் நின்று உள்ளே நோக்கினாள். அவன் மான்தோலை விரித்து தன் உடைமைகளை அதில் வைத்துக்கொண்டிருந்தான். “உன்னை தேடிவர எண்ணினேன், தேவி. நான் இன்று கிளம்புகிறேன்” என்றான்.

அவள் திகைப்புடன் “எங்கே?” என்றாள். “நான் வந்த இடத்திற்குத்தான். நேற்று ஆசிரியர் என்னிடம் நீ வந்த பணி முடிந்துவிட்டது என்றார்.” அவள் “என்ன சொல்கிறீர்கள்?” என்று பதறும் குரலில் கேட்டபடி உள்ளே சென்றாள். “ஆசிரியர் நேற்று அவ்வாறு சொன்னபோது எனக்கும் புரியவில்லை. ஆனால் இரவின் கனவில் அனைத்தும் தெளிந்தன” என்றான் கசன். “பிறிதொருவர் என்றால்  இக்கணமே உன்னை கொல்ல நான் ஆணையிட்டிருப்பேன் என்றார் ஆசிரியர். அது நிகழலாகாதென்றுதான் உன் தந்தை உன்னை அனுப்பியிருக்கிறார். நன்று, உன்னை வாழ்த்தி வெல்க என்று சொல்லளித்து மட்டுமே என்னால் அனுப்ப முடியும். சென்று வருக என்று சொன்னார்.”

“இல்லை ஆசிரியரே என்று நான் சொல்லத் தொடங்க, இனி என் முன் வந்தமர வேண்டாம். உனக்களிக்க என்னிடம் இனி எந்தச் சொல்லும் இல்லை, செல்க  என்றார். நான் அவரை வணங்கி வெளியே வந்தேன். அவர் என்னை புறக்கணிக்கிறார் என்னும் துயர் முதலில் எனக்கிருந்தது. அவர் அறைவிட்டு வெளியே வந்ததுமே அனைத்துக் கட்டுகளும் அறுபட்டு விலகியதுபோல் உணர்ந்தேன். இப்போது நான் வந்தது எதற்கென்றும் மீள்வது எங்கென்றும் தெளிவாக தெரிகிறது. என் பணி முடிந்துவிட்டது. நான் கிளம்ப வேண்டும்” என்று கசன் சொன்னான்.

உள்ளே சென்று அவனருகே நின்று சிறுமியைப்போல் தலையசைத்து  “நானும் வருகிறேன்” என்று தேவயானி சொன்னாள். “எனக்கும் இச்சிறிய தவக்குடிலும் இங்கு மீள மீள நிகழும் உணர்வலைகளும் சலித்துவிட்டன. நாம் செல்வோம்” என்றாள். அவன் “நீயா? நீ எப்படி என்னுடன் வரமுடியும்?” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்று அவள் திகைப்புடன் கேட்டாள். “தேவி, நீ இங்கு என் கனவிலிருக்கிறாய். நான் இங்கிருந்து அகன்றதும் இக்கனவு கலைந்து என் முந்தைய உலகிற்கு சென்று சேர்வேன். இந்த மானுட உடலுடன் மானுட சித்தத்துடன் நீ அங்கு வரமுடியாது. ஒவ்வொருவரின் கனவும் முற்றிலும் தனித்த பாதை. பிறர் அதில் காலெடுத்து வைக்கவே இயலாது” என்றான் கசன்.

தேவயானி அவன் கைகளைப் பிடித்து உலுக்கியபடி “என்னைப் பிரிந்து எப்படி செல்ல முடியும் நீங்கள்?” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். அவன் விழிகளை நோக்கியபோது அங்கு தெரிந்த தெளிவு அவளை துணுக்குறச் செய்தது. “நானின்றி நீங்கள் எப்படி செல்லமுடியும்?” என்று அவள் மேலும் உரத்த குரலில் மீண்டும் கேட்டாள். “ஏன், நான் இங்கு தனியாகத்தானே வந்தேன்? இங்கு உங்களுடன் இருந்தேன். என் பணி முடிந்தது என்று ஆசிரியரே உரைத்து விட்டார். நான் இங்கிருந்து சென்றாகவேண்டும். இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்ல முடியும்.”

அவளுக்குள் சினம் எழுந்தது. கைவிரல்கள் பதறத்தொடங்கின. “விளையாடுகிறீர்களா?” என்றாள். “நீ என்ன கேட்கிறாய் என்று எனக்கு புரியவில்லை” என்று அவன் சொன்னான். “நான் உங்கள் துணைவி. என்னை நீங்கள் மணம் கொண்டாக வேண்டும். தந்தையிடம் அதைப் பற்றி பேசுவதாக சொன்னீர்கள்” என்றாள். அவன் அவள் கையை உதறி பின்னால் ஓரடி எடுத்து வைத்து “என்ன சொல்கிறாய்? நீ எப்படி எனக்கு துணைவியாக முடியும்? உன் தந்தையின் வயிற்றிலிருந்து பிறந்தவன் நான். உனக்கு உடன்பிறந்தான்” என்றான்.

பல கணங்களுக்கு அவள் சித்தத்தில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி இறுகி செயலற்றிருந்தன. பின்னர் நோய்கொண்டு வலிப்பெழுந்தவள்போல முகம் சுளிக்க உடல் உதற “அறிவிலிபோல பேசலாகாது.  நாம் உடல் ஒன்றானவர்கள், உளம் இணைந்தவர்கள். என் கணவனன்றி பிறிதொரு நிலையை நான் உங்களுக்கு அளித்ததேயில்லை” என்று சொன்னாள். அச்சம் கொண்டு விரைத்தவன்போல “நானா? நாமிருவருமா?” என்று அவன் கேட்டான். “ஆம், நாம் இருவரும். நாம் ஒன்றானோம். நினைவில்லையா உங்களுக்கு?”

“மெய்யாகவே எனக்கு நினைவில்லை. நான் உணர்வதெல்லாம் இக்கனவில் எழுந்தபிறகு நிகழ்ந்ததை மட்டும்தான். இங்கு சுக்ரரின் மைந்தனாக நான் பிறந்திருக்கிறேன். உன்னை என் உடன்பிறந்தாளென்றன்றி வேறெவ்வகையிலும் கொள்ள முடியாது. அது பெரும் பாவம். குலப்பழி சேரும். மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். தெய்வங்கள் முனியும்” என்றான். அவள் “போதும் நிறுத்துங்கள்!” என்று கூவியபடி பாய்ந்துசென்று அவன் இடைக்கச்சையை பற்றிக்கொண்டாள். “துய்த்து தூக்கி எறிந்து செல்லும் இழிமகளென்று என்னை எண்ணினீர்களா? பிறிதொரு எண்ணமிலாது உங்கள் காலடியில் பணிந்தமையால் எளியவளென்று நினைக்கிறீர்களா?” என்றாள்.

“தேவி, உன் சினம் எனக்கு புரிகிறது. ஆனால் அது எதனால் என்று மட்டும் தெரியவில்லை. ஒவ்வொன்றும் தனித்தனிக் கனவெனவே நான் இங்கு இருந்து வந்திருக்கிறேன். இக்கனவில் நான் உன் தமையன். உன் உடன்குருதியன். ஒருபோதும் உன்னை என் துணைவியாக ஏற்க இயலாது. அதைவிட நான் உயிர் துறப்பேன்” என்றான். அவன் உரைப்பதனைத்தும் முற்றிலும் உண்மையென ஒருகணத்தில் உளமுணர உடல் தளர்ந்து அவள் பிடியை விட்டாள். அறியாது இரு கைகளையும் நெஞ்சில் கூப்பி “அருள் காட்டுங்கள்! என்னை கைவிட்டுவிட்டு செல்லாதீர்கள். பிறிதொரு வாழ்வு எனக்கில்லை” என்றாள்.

“உங்கள் காலடிகளில் அடிமையென இருக்கவும் சித்தமாகிறேன். பெண்ணென்றும் முனிவர் மகளென்றும் நான் கொண்ட ஆணவம் அனைத்தையும் அழித்து இங்கு நின்று இறைஞ்சுகிறேன். என்னை கைவிட்டு விடாதீர்கள்” என்றாள். அச்சொற்களை சொன்னமைக்காக அவளுக்குள் ஆழ்தன்னிலை ஒன்று கூசியது. எத்தனைமுறை எத்தனை ஆண்களிடம் பெண்கள் சொல்லியிருக்கக்கூடியவை அவை! அந்த தன்னிரக்கத்தால் அவள் மெல்லிய கேவல்களுடன் அழத்தொடங்கினாள்.

அவன் முகம் இரக்கத்தால் கனிந்தது. அவள் கண்களில் நிறைந்து கன்னங்களில் வழிந்து நெஞ்சில் சொட்டிய நீரைக் கண்டு அவன் விழிகளும் நிறைந்தன. “தேவி, நீ என்னை வணங்குவதைவிட மும்முறை நான் உன்னை வணங்குகிறேன். உன் அடிகளில் என் தலைவைத்து மன்றாடுகிறேன். இவ்வெண்ணத்தை ஒழி. இது நீ கொண்ட பொருந்தா உளமயக்கு. உன் தந்தையின் கருவிலமைந்தவன் நான், நாளை அவருக்கு நீர்க்கடன் செய்ய கடமைகொண்டவன். அவர் குருதிகொண்ட மைந்தன். என் பிறவிமுன் வாழ்க்கையின் நினைவுகள் அனைத்தும் நம் தந்தையிடமிருந்து வந்தவை, நாம் இணையக்கூடாது. அவ்வெண்ணமே என் உள்ளத்தைக் கூசி அருவருக்கச் செய்கிறது” என்றான்.

அவள் கூப்பிய கைகள்மேல் தன் நெற்றியை வைத்து தோள்கள் குலுங்க அழுதாள். அவன் அதை நோக்கியபடி அசைவற்று நின்றான். பின்னர் “இக்கணத்தில் நாம் எத்தனை பேசினாலும் பொருளில்லை. நான் விலகிச்செல்வதொன்றே வழியாகும். நீயே எண்ணிப்பார்! இத்தருணத்தின் உணர்வழுத்தங்கள் விலகுகையில் நான் சொல்வது எத்தனை சரியானதென்று உன் உள்ளமே உணரும்” என்றபின் தன் மூட்டையை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறப் போனான்.

அவன் உடல் திரும்பியதும் அவள் உடல் அதிர்ந்தது. அவனுடைய ஒவ்வொரு காலடி பதியும்போதும் அது தன்மேல் விழுந்ததுபோல் விதிர்த்தாள். அவன் கடந்து சென்று முற்றத்தில் இறங்கியதும் வானிலிருந்து சரடறுந்து விழுபவளைப்போல அவனுக்குப் பின்னால் விரைந்தாள். “நில்லுங்கள்!” என்றாள். “நில்லுங்கள்…” என்று குரலெழுப்பி கூவினாள். அவன் திரும்பி சினத்துடன் “ஏன் கூச்சலிடுகிறாய்? இங்கு நம்மைச் சுற்றி விழிகளும் செவிகளும் நிறைந்துள்ளன. அவர்களால் நம் உணர்வுகள் கதையென ஆகி சிறுமைப்பட இடமளிக்கலாகாது” என்றான்.

“அறியட்டும், இவர்கள் அத்தனை பேரும் அறியட்டும்” என்றாள் தேவயானி. “விண்ணும் மண்ணும் அறியட்டும், நான் உங்கள் துணைவி. நாம் உடல்கூடியவர்கள். நீங்கள் எனக்கு அளித்த சொல் என் கையிலும் நெஞ்சிலும் உள்ளது. அதை மீறி நீங்கள் செல்ல முடியாது!” கசன் நிலைக்குரலில் “நான் எச்சொல்லையும் அளிக்கவில்லை. அவ்வண்ணம் சொல்லளித்திருந்தால்கூட அது ஒரு பொருட்டல்ல. தெய்வங்களின் நெறிக்கெதிராக எவரும் வாய்மையை துணைக்கழைக்க முடியாது. நெறிநூல்கள் அதை ஒப்புவதில்லை. ஐயமிருந்தால் உன் தந்தையிடம் சென்று கேள்!” என்றான்.

“எவரிடமும் நான் கேட்க வேண்டியதில்லை. எந்த தெய்வமும் எனக்கு சான்று சொல்ல வேண்டியதில்லை. எனக்குத் தெரியும், நான் உங்கள் துணைவியென்று”  என்றாள். “நன்று, ஒன்று சொல்கிறேன். உன் தந்தையிடம் அல்லது இங்கிருக்கும் முனிவர்களிடம் சென்று கேள்! அவர்கள் ஒருவரேனும் நெறிநூல்களின்படி நான் உன் கணவனாகலாம் என்று சொன்னால் தலைவணங்குகிறேன்” என்றான் கசன். “ஆனால் உனக்குக் கணவனாக வாழ என் உடலும் உள்ளமும் ஒப்பாது. அக்கணமே வாளெடுத்து என் கழுத்தை அறுத்துகொண்டு உன்முன் இறந்து விழுவேன்” என்றான்.

அவள் வஞ்சத்துடன் பற்களைக் கடித்து “அவ்வாறெனில் அதுவே ஆகுக! என் கணவன் என்று ஒரு சொல் உரைத்துவிட்டு இங்கு குருதி சிந்தி வீழுங்கள். உங்கள் உடல் தொட்டு நான் உங்கள் துணைவி என்று சொல்லி துவராடை அணிந்து கைம்மை நோன்பேற்கிறேன். இப்பிறவி முழுக்க புலனொடுக்கி வாழ்ந்து மடிகிறேன். துணைவியென்று வாழ்ந்தேன், கைம்பெண்ணென்று இறப்பது அதன் நீள்முறையே. என்னை நீங்கள் துறந்துவிட்டுச் செல்ல ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றாள்.

கண்களில் கடும்சினத்துடன் கசன் அவளை நோக்கி “அவ்வண்ணமெனில் உனக்கொரு வாய்ப்பளிக்கிறேன். எது என் வழியோ அதில் காலுறுதி கொண்டு கடந்து செல்வதே என் தெரிவு. உன்னை துறந்து செல்கிறேன் என்று அறிவித்து என்னை நீ கொல்லலாம். இறந்தவன் உன் கணவன் என்று உலகுக்கு அறிவிக்கலாம். அதன் பின் என்னுடன் நீயும் சிதையேறலாம். நம் இருவர் உயிர்களும் மூச்சுலகுக்கு செல்லட்டும். அங்கு மூதாதையர் முடிவு செய்யட்டும், நீ என் துணைவியாக முடியுமா இல்லையா என்று” என்றான்.

பின்னர் இதழ்கள் ஏளனத்துடன் கோட “ஆணவமும் பெருவஞ்சமும் கொண்டவள் நீ என்று கிருதர் சொன்னார். வஞ்சத்தின் உருவாகவே உன் அன்னை இங்கு வாழ்ந்தாள் என்றார். உனது பேரன்னை வஞ்சப்பெருமகளாக ஏழன்னையரில் ஒருத்தி என அமர்ந்து பூசையும் பலியும் கொள்கிறாள். நீயும் அவ்வுரு எடுக்கலாம்” என்றான்.  அவள் விழிகளை அச்சமற்ற கண்களுடன் நோக்கி “அதோ, சுவரில் மாட்டப்பட்டுள்ளது என் உடைவாள். ஒரே வெட்டில் என் கழுத்தை துணித்து தலையுருள வைக்கும் அளவுக்கு கூரியது. அதற்கு நிகரான கூர்மை உள்ளத்தில் உள்ள எவராலும் அதை கையாளமுடியும்” என்றான்.

பல்லைக் கடித்து இரு கைகளையும் முறுகச் சுருட்டி, குருதி கொப்பளித்து செந்தழல் சிவப்பு கொண்ட முகத்துடன், கசிந்து நீர்ப்படலமாகி நோக்கு மறைந்த கண்களுடன் அவள் அங்கு நின்றாள். சீரான காலடிகளுடன்  அவன் கோலொன்றை எடுத்து அதில் பொதியை மாட்டில்  தோளில் வைத்தபடி அவளை நோக்கினான். “ஐயுற வேண்டாம்! நம்மிடையே எழுந்த இச்சொல்லாடலை முடிக்கும் எளிய வழி அதுவே” என்றான். அவள் உடல் பதறிக்கொண்டிருந்தது. “நீ முடிவெடுக்க வேண்டும், தேவி. அதுவரை இங்கு காத்திருக்கிறேன்” என்றான்.

அவள் நூறுமுறை அந்த வாளை நோக்கி சென்றாலும் உடல் அசைவு கொள்ளவில்லை. பின்னர் வளைகள் ஒலிக்க அவள் இரு கைகளும் தளர்ந்து விழுந்தன. “என்னால் இயலாது. ஏனெனில் நான் உடனிருந்தபோது அத்தனை நெகிழ்ந்துவிட்டேன். இரவும் பகலும் இனித்து இனித்து பிறிதொருத்தியாக மாறிவிட்டேன். இன்று என் கைகளில் படைக்கலம் நிற்காது” என்றாள் தளர்ந்த குரலில். “உங்களையல்ல, எவரையும் கொல்ல என்னால் இயலாது. ஆனால் நீங்கள் இங்கு வந்தது ஏனென்று இப்போது தெரிகிறது. என்னை நாற்களக் காயாக நகர்த்தி எந்தையை வென்று சஞ்சீவினியை கொண்டு செல்கிறீர்கள். எதன் பொருட்டு இங்கு வந்தீர்களோ அது நிறைவேறலாகாது என்று நான் தீச்சொல்லிடுகிறேன்.”

அவள் குரல் வஞ்சத்துடன் எழுந்தது. “அச்சஞ்சீவினி நுண்சொல்லை ஒருமுறைகூட உங்கள் நா இனி சொல்லலாகாது” என்றாள். அவன் திகைத்து ஏதோ சொல்ல முயல கைநீட்டி “நீர் கற்ற வேதச்சொல் அனைத்தும் கோடைவானில் முகிலென கரைந்து மறைக!” என்றாள். இடறி அழுகையென்றான குரலில் “நெஞ்சம் எரியும்போதும் இதற்கப்பால் ஒரு கடுஞ்சொல் எடுக்க என்னால் இயலவில்லை. அன்னையென்றிருப்பதைப்போல் ஆற்றலின்மை பிறிதொன்றில்லை. இப்புவியிலுள்ள அனைத்துயிர்களும் மிதிக்கக் கிடக்கும் நிலப்புழு என ஆகும்நிலை அது” என்றபின் திரும்பி இறங்கி படிகளில் கால் வைத்து விழுந்துவிடப்போகிறவள்போல் தள்ளாடினாள். தலைகுனிந்து கைகளைக் கோத்து நின்று தன்னை நிலை திரட்டிக்கொண்டு தன் குடில் நோக்கி ஓடினாள்.

படிகளில் இறங்கி அவள் பின்னால் வந்த அவன் உரத்த குரலில் “நான் தீச்சொல்லிடுகிறேன்! நான் சொன்னவை மெய்யென்றால் உன் ஆணவம் முற்றழிந்து வெறும் பெண்ணென உணர்ந்து நிலம் ஒட்டிக் கிடந்து இறப்பாய். அன்று நீ உதிர்க்கும் கண்ணீர் காண நான் வந்து நிற்பேன்” என்றான். அவனை திரும்பிப் பார்த்தபின் பற்கள் உரசிக்கொள்ள நெஞ்சிலிருந்து எழுந்த சொற்களை நா முற்றிலும் மறுக்க நின்று துடித்தபின் திரும்பி நடந்து தன் குடிலுக்கு சென்றாள் தேவயானி.

tigerதேவயானியின் சிற்றாலயத்தின் படியிலமர்ந்து முண்டன் சொன்ன கதைகளை தான் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து நிலைமீண்டான் பீமன். திரும்பி கருவறைக்குள் பீடத்தில் அமர்ந்த சிலையை பார்த்தான். அவ்விழிகள் சற்று முன்புவரை நோக்கு கொண்டிருந்தன என்றும், தான் விழி திருப்பியபோது கன்மைக்கு மீண்டன என்றும் தோன்றியது. திறந்த வாயிலின் வழியாக வந்த வெளிச்சம் சிலையில் படிந்து பெரிய குழல் முடிச்சிலிருந்து கன்னம் தோள் இடையென வழிந்திருந்தது. கரிய சுடர். இளங்காற்றடித்தால்  அது அசைவு கொள்ளக்கூடும்.

முண்டன் “ஆணுக்கு போர் தோல்வி, பெண்ணுக்கு கைவிடப்படுதல் இரண்டும் இறப்புக்கு நிகரான தருணங்கள். முற்றிறப்பு எளிது, அது முடிந்து போவது. மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத் துயர்ப்பெருக்கு. அந்த மீண்டெழும் நுனிவரை ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அணுவும் இறப்பை நீட்டிக்க வைக்கும். அது கோடி இறப்பின் நிரை” என்றான்.

“கசன் கிளம்பிச் சென்றான் அல்லவா?” என்று பீமன் கேட்டான். “ஆம், அவன் மீண்டபின்னரே அவன் எதையும் கொண்டுவரவில்லை என பிரஹஸ்பதி உணர்ந்தார். அவன் எங்கு சென்று எவ்வண்ணம் மீண்டான் என்றே அவனுக்கு நினைவிருக்கவில்லை. தேவர்கள் சஞ்சீவினியை அறியவேயில்லை. ஆனால் சுக்ரர் அந்நுண்சொல்லை கையாள்வதை ஒழிந்தார். ஆகவே போர் இரு பக்கமும் நிகர்நிலையில் முடிந்தது. மண்ணில் ஓர் இந்திரன் என்று விருஷபர்வனை தேவர் ஏற்றுக்கொண்டனர்” என்றான் முண்டன்.

“சுக்ரரின் குருநிலைவிட்டு சென்ற கசன் திரும்பிப் பார்க்கவே இல்லை. அம்பு நீரில் என காட்டுக்குள் சென்று மறைந்தான். அவன் வந்ததே இல்லையோ என ஐயம் எழுமளவுக்கு முற்றிலும் மறைந்தான். அங்கே எழும் ஒரு சிறு அசைவுகூட அதே புள்ளியில் அவன் மீண்டும் தோன்றி வரக்கூடும் என்று தோன்றச் செய்தது.  அந்தப் புள்ளியை நோக்கி விழி நிறுத்தி தன் குடில் வாயிலில் அவள் நின்றிருந்தாள். சித்தம் அசைவற்றிருந்ததனால் அவள் விழிகளும் அசைவிழந்திருந்தன.

அவன் செல்வதை குடிலில் இருந்த பிறர் உணர்ந்தனர். அவனுக்கு வாழ்த்துரைக்கவும் முறைமைச் சொற்கள் சொல்லி விடையளிக்கவும் பலர் விழைந்தனர். அவர்கள் அவளை எண்ணி தயங்கி தங்கள் முற்றங்களிலும் அடுமனைத் திண்ணைகளிலும் ஓசையின்றி நின்றிருந்தனர். அவன் மறைந்த பின்பு மெல்ல நிலைமீண்டு மூச்சு ஒலிக்க ஆடையும் குழலும் திருத்தி தங்கள் இடங்களுக்கு செல்லத் திரும்பியபோது அவள் அப்புள்ளியிலேயே உறைந்துவிட்டதைக் கண்டு ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். மேலும் சற்று நேரம் நின்று அவளை நோக்கினர். முற்றிலும் அசைவற்ற சுடர் அளிக்கும் அச்சம் என்னவென்றறிந்தனர்.

தங்கள் அறைகளுக்கு மீண்ட பின்னர்தான் உள்ளம் படபடத்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தனர். சாளரம் வழியாக பார்த்து தங்களுக்குள் தாழ்குரலில் பேசிக்கொண்டனர். “அங்கேயே நின்றுகொண்டிருக்கிறார்” என்றாள் அடுமனைத்தலைவி. “இயல்புதானே?” என்றாள் ஒரு முதுமகள். “நெடுநேரமாக நிற்கின்றார்” என்றாள் அடுமனைப்பெண்டு. “காலம் மறந்திருக்கும். உள்ளம் சில பொழுதுகளில் காலம் நிகழாத களம் ஆகிவிடும். ஆனால் உடல் ஒருபோதும் காலத்தை மறக்க முடியாது. அது எழுந்து உள்ளத்தை அசைக்கும். அப்போது மீண்டு வருவாள்” என்றாள் சத்வரின் முதுதுணைவி.

சுக்ரரின் குடில் திண்ணையில் நின்றிருந்த சத்வர் கிருதரிடம் “அவளுள் இப்போது என்ன நிகழ்கிறதென்று எந்தக் காவியமாவது சொல்லியிருக்கிறதா?” என்றார். “அத்தனை காவியங்களும் அதை சொல்லவே முயல்கின்றன. எப்போதும் சொல்லப்படாத ஒன்று எஞ்சுகிறது. ஆகவேதான் ஒன்றிலிருந்து ஒன்றென காவியங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன” என்றார் கிருதர். அவளை நோக்கியபின் தலையை அசைத்து “என்னவென்றறியாமல் நெஞ்சும் வயிறும் பதைத்துக்கொண்டே இருக்கின்றன, சத்வரே” என்றார் கிருதர். “சிறுமியாக இவளை பார்த்திருக்கிறேன். ஒருபோதும் இப்பெருந்துயர் வடிவில் அவளை காண்பேன் என எண்ணியதில்லை.”

அவளை நோக்கியபடி கால் தளர்ந்து மெல்ல திண்ணையில் அமர்ந்தார். கைகளை முழங்காலில் நாட்டி அதில் தலையை வைத்து அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தார். “நான் சென்று அவளை அழைக்கலாமா என்று எண்ணுகின்றேன்” என்றார் சத்வர். கிருதர் வெறுமனே தலையை மட்டும் அசைத்தார். இரு படிகளில் இறங்கியபின் சத்வர் தயங்கி கிருதரிடம் “ஆனால் அத்தனிமைக்குள் நுழைய பிற மானுடருக்கு உரிமை உண்டா என்ன? அங்கு இப்போது தேவர்களும் தெய்வங்களும்கூட விலகி நின்றிருப்பார்கள் அல்லவா?” என்றார்.

கிருதர் அச்சொற்களை கேட்டதாக தெரியவில்லை. சத்வர் சென்று திண்ணையின் பிறிதொரு மூலையில் அமர்ந்து தேவயானியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பால் குடில்களிலிருந்து ஒவ்வொருவராக வந்து தேவயானியை நோக்கிக்கொண்டிருந்தனர். காற்றில் ஆடையும் குழலும் அசைந்தாட அவள் நின்றிருந்தாள். அவ்வசைவுகள் அனைத்துமே அசைவின்மை என்று தோன்றும் அளவுக்கு அவள் விழிகள் நிலைகொண்டிருந்தன.

“அவர் சென்ற பாதையைத்தான் பார்க்கிறார்” என்றாள் அடுமனைப்பெண். “அங்கு அவர் நிற்பதுபோலவே தோன்றுகிறது. தேவி அருகே சென்று நின்றால் அவரை பார்த்துவிடலாம் என்பதுபோல.” விறலி ஒருத்தி “பிரிவைப்போல பெருந்துன்பம் பிறிதில்லை. இறப்பு அதனினும் சிறிது. இறப்புக்கு பொறுப்பேற்றுக்கொள்ள தென்திசைத் தேவன் இருக்கிறான். பிரிவுக்கு மானுடரே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்” என்றாள்.

“இந்த தருணத்தைக் கடந்தார் என்றால் அவர் மீள்வார்” என்றாள் முதுபெண்டு. “இங்கு நின்று இப்படியே உயிர்துறப்பவர்போல் தோன்றுகிறார்” என்றாள் பிறிதொருத்தி. கூர்மர் என்னும் முனிவர் “தென்திசைக் கடல்முனையில் ஒரு தேவி இவ்வாறு நிற்பதாக கதைகள் சொல்கின்றன. அவள் நிற்கத்தொடங்கிய பின்னரே பாரதவர்ஷத்தின் பெருநிலம் அவளுக்குப் பின்னால் பெருகி உருவாகியது என்கின்றது திரிசமுத்திர பிரபாவம் என்னும் நூல். பாரதவர்ஷத்தில் பிறந்து வாழ்ந்து மடிந்த அத்தனை கன்னியர் உள்ளங்களிலும் புகுந்து தன் வாழ்வை அவர்கள் வாழச்செய்வாள் அவ்வன்னை. காத்திருக்கும் கன்னியென தன்னை உணராத ஒரு பெண்ணும் இங்கு முழுமைகொள்ள முடிந்ததில்லை” என்றார்.

சொல்லிச் சொல்லி அத்தருணத்தை வெவ்வேறு வகையில் விரித்தெடுக்க அவர்கள் முயன்றனர். பின்னர் தெரிந்தது அத்தருணத்தை குறுக்கி அறிந்தவற்றுக்குள், அன்றாடம் வாழ்பவற்றுக்குள் கொண்டுசென்று நிறுத்தவே தாங்கள் முயன்று கொண்டிருப்பதாக. அது அச்சொற்களுக்கு அப்பால் முற்றிலும் தொடப்படாமல் நின்றுகொண்டிருந்தது. “ஏன் இத்தனை சொற்களை அள்ளி வைக்கிறோம்?” என்றார் முனிவர் ஒருவர். “ஏனெனில் சொல்லிலாது இதை நோக்கி நிற்பது நமக்கு அச்சமூட்டுகிறது” என்றார் பிறிதொருவர். “சொல்லிச் சொல்லி அச்சத்தை களைகிறோம். இறப்பை நோயை பிரிவை வலியை குறித்தே மனிதன் பெரிதும் பேசியிருக்கிறான்.”

அந்தியாயிற்று. காடு இருண்டது, வானும் இருண்டது. இறுதியாக நிலம் இருண்டது. எஞ்சிய ஏதோ ஒளியை தான் பெற்று மெல்லிய கோட்டுவடிவென வெளியில் அவள் தெரிந்தாள். மூங்கில்தூண் அருகே மெல்ல தோள் சாய்ந்து அவன் சென்ற அக்கணத்தையே காலமென்றாக்கி நின்றுகொண்டிருந்தாள். இருளில் அவள் மூக்குத்தியின் அருமணியின் துளிவெளிச்சம் மட்டும் கூர்கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎன் கந்தர்வன் — பாலா