விஷம் தடவிய வாள்

sukumaran3

அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். [நெடுங்காலம் புகைந்துகொண்டிருப்பதைவிட பற்றி எரிவது மேல், ஒருகணம் எனினும்] நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின் பிரிவின் மரணத்தின் கவிதைகளாகவே வாசித்துக்கொண்டிருந்தேன்.

இன்று காலையில் இருந்தே அம்மாவின் நினைவு. நேற்று அம்மாவுக்குப் பிடித்த ஒரு பாடலில் இருந்து ஆரம்பித்து இப்போது வரை நீண்டது அவ்வுணர்வு. அதைத் துயரம் என்றோ உளச்சோர்வு என்றோ சொல்ல முடியாது. இறப்பு வாழ்க்கையைச் சூழ்ந்துள்ளது. அதை அறியாது கொள்ளும் எளிய உவகைகளை விலகி நின்று நோக்கும் ஒரு நிலை. மனிதர்கள் அனைவரும் மிக அப்பால் இருந்தனர்

சென்னை செல்வதற்காக ரயில்நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அம்மாவின் முகத்துடன் சுகுமாரனின் வரிகள் நினைவில் எழுந்தன, எப்போதும் போல

உன் பெயர்-

கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து

என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு

என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்

என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை

காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

மனப்பாடமான வரிகள். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பறக்கையில் போகன் சங்கரை கண்டேன். ”ஏன் உங்கள் தலைமுறையினரின் கவிதைகள் வரிகளாகவே நினைவில் நீடிக்கவில்லை, சுகுமாரன் வரிகளைப்போல?” என்றுகேட்டேன். “அவர் மேற்கோள்தன்மையுடன் எழுதுகிறார். அவ்வியல்பு இருக்கவே கூடாது, ஒருவரிகூட மேற்கோளாகத் தெரியக்கூடாது என நாங்கள் கவனம் கொள்கிறோம்” என்றார்

இருக்கலாம். ஆனால் கவிதை என்பதே தன்னை நினைவில் வலுக்கட்டாயமாகச் செருகிக்கொள்ளும் சொல்லமைவு மட்டும்தான். அதன் தொடக்கம் அதை நம்மால் மறக்கமுடியாது என்பதுதான். பலசமயம் மிகச்சாதாரணமான வரிகள். ஆனால் தங்களை மறக்கமுடியாமலாக்கிக்கொள்வன என்பதனாலேயே அவை கவிதையாகிவிடுகின்றன

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை

என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை

கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்

என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்

நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்

நீயே என் துக்கம், பிரிவின் வலி.

திரும்பி வீட்டுக்கே வந்து விடுகிறேனே என அருண்மொழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். பரவாயில்லை சென்று திரும்பு, வேலை இருக்கிறது அல்லவா என அவள் பதில் அனுப்பினாள். என் தனிமையயும் சோர்வையும் குறுஞ்செய்திகளாக அனுப்பிக்கொண்டு நின்றிருந்தேன்.

கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதம். அனந்தபுரி முன்னரே வந்துவிட்டது. என் முன் அதன் பி2 பெட்டி நின்றது. அதிலிருந்து சுகுமாரனே இறங்கி எதிரில் வந்தார். முகம் மலர்ந்து சந்தித்து கைதொட்டுக்கொண்டோம். பேசிக்கொண்டோம். கொஞ்சம் முகமன், கொஞ்சம் இலக்கியம். ரயில் கிளம்பிச்சென்றது

நான் அவரிடம் அவர் கவிதைகளைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லவில்லை. அந்த அளவுக்கு அவர் நெருக்கமில்லை. அவர் கவிதைகள் இருக்கும் அந்தரங்கமான அந்த வெளிக்கு அவரை நான் அனுமதிக்கமுடியாது. அம்மா அவரைக்கண்டால் திடுக்கிட்டுவிடக்கூடும்.

சுகுமாரன் கவிதைகள்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
அடுத்த கட்டுரைகமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்