புதிய ஆகாசம் புதிய பூமி

Puthiyaakasham1962

1962 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மலையாளத்தில் ’புதிய ஆகாசம் புதிய பூமி’ என்னும் படம் வெளியாகியது. எம்.எஸ்.மணி இயக்கியது. தோப்பில் பாஸி கதைவசனம். சத்யன் ராகினி நடித்தது. நட்டாலம் காளிவளாகத்துவீட்டில் பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா அப்போது முழுகருவடைந்திருந்தாள். முதல்மகனுக்கு ஒருவயது. பிரசவத்துக்காக நட்டாலம் வந்திருந்தாள்.

இரண்டாவது அண்ணனின் மனைவியின் தங்கைக்குத் திருமணம். ‘நல்வாதி’ ஆகையால் அனைவரும் சென்றாகவேண்டும். திருவனந்தபுரம் செல்வதென்பது அன்று ஒரு பெரும் கொண்டாட்டம். வீடே களிமயக்கில் இருந்தது. பூர்ணகர்ப்பிணியை பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போவது கடினம்.ஆனால் அனந்தபத்மநாபனை பார்த்தே தீர்வேன் என அவள் அடம்பிடித்தாள். பொதுவாக அவளுக்கு அடம் என்றால் அடமேதான். விரும்பியது நடக்கவில்லை என்றால் உயிர்வாழவே வேண்டாம் என்னும் எளிமையான நிலைப்பாடு

ஆகவே வசை, கண்டிப்பு, கெஞ்சல் எல்லாம் முடிந்து கூட்டிக்கொண்டு செல்வது என பெரியஅண்ணா வேலப்பன்பிள்ளை முடிவெடுத்தார். . நட்டாலத்தில் இருந்து கருங்கல்வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்து மார்த்தாண்டம் வந்து அங்கிருந்து நெய்யாற்றின்கரையிலும் பாறசாலையிலும் தலா அரைமணிநேரம் நிறுத்திப்போடப்படும் கேரள பஸ்ஸில் ஏறி திருவனந்தபுரம் சென்று சேர எட்டுமணிநேரம் ஆகியது. முழுப்பயணத்திலும் மூத்தமகனை அவள் அக்காக்கள்தான் வைத்திருந்தனர்.

அங்கே சொந்தத்தில் ஒரு வீட்டில் தங்கல். நீராடி சாப்பிட்டு பனைப்பாய்களில் படுத்து தூங்கி ஓய்வெடுத்தபின் அந்தியில் பத்மநாபசாமி கோயிலில் தரிசனத்திற்குச் சென்றார்கள். பத்மதீர்த்தத்தின் அருகே. அவள் ஒரு சினிமாப்போஸ்டரைப்பார்த்தாள். அந்த தலைப்பு அவளை பரவசமாக்கியது. சொல்லச்சொல்ல அச்சொல்லாட்சி பித்துப்பிடிக்கச் செய்தது. “புதிய ஆகாயம் புதியபூமி’ மறுநாள் அதைப்பார்த்தே தீர்வது என முடிவெடுத்தாள்

அன்று மாலை களைப்பில் மெல்லிய வலி வந்தது. மறுநாள் திருமணத்திற்குச் செல்லவேண்டாம், வீட்டிலே ஓய்வெடு என்று அக்காக்களும் அண்ணாக்களும் சொன்னார்கள். அவள் ’சரி, நான் திருமணத்திற்கு வரவில்லை, ஆனால் அந்தியில் சினிமாவுக்குப் போய்த்தான் தீர்வேன்’ என்றாள். கோபம் வந்து மூத்த அண்ணா அடிக்க கையோங்கினார். எழுந்து அவர் முன் சென்று நின்று “அடிச்சோளூ” என்றாள். அவர் கைதாழ்த்தி தளர்ந்த குரலில் “எந்தா மோளே இது?” என்றார்.

அன்றுமாலை கரிய அம்பாஸிடர் டாக்ஸி வரவழைக்கப்பட்டது. அதன் பின்னிருக்கையில் பெரிய வயிற்றைச் சரித்து ஏறி அமரும்போது அவள் முகத்தில் அப்படி ஒரு வெற்றிச் சிரிப்பு. ”இங்கிருந்து அங்கே போவதற்கு ஏழுரூபாயா…. பணம் சும்மாவா இருக்கிறது? உன் புருஷனிடம் வாங்கிக்கொண்டுவா” என அக்கா திட்ட “ஏன் அவரிடம் வாங்கவேண்டும்? என் வயலில் ஒருசெண்ட்டை விற்று அந்தப்பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “வாயை மட்டும் நீட்டு” என்றாள் அக்கா.

 “நீயும் வா அக்கா” என்று அவள் அழைத்தாள். “நானா? நான் செத்தாலும் இந்த சோப்புடப்பாவுக்குள் நுழையமாட்டேன்… ” என்று அக்கா பின்னால் சென்றாள். “நீ வா அக்கா” என இரண்டாவது அக்காவை அழைக்க “அய்யோடி… இதுக்குள்ளயா?” என்று அவளும் பின்னடைந்தாள். அவளும் மூன்றுகுழந்தைகளும் மட்டும் காரில் சென்றனர். அவளுடைய முதல்மகன் அவளைவிட அவள் அக்காக்களிடம் இருப்பதையே விரும்பினான்.

சினிமா அரங்கு தகரக்கூரைபோடப்பட்ட உயரமான கட்டிடம். செல்லும்போதே பாட்டுக்கள் போட்டுக்கொண்டிருந்தனர். பழைய திக்குறிச்சி சுகுமாரன் நாயர் படப்பாட்டுக்கள். அவள் அப்பாடல்களை கூடவே மெலிதாக பாடிக்கொண்டே இருந்தாள்.

நாற்காலியில் அமர்ந்து அவள் பார்த்த முதல்படம். அன்றெல்லாம் ஊர்ப்பக்கம் சினிமா அரங்குகள் இல்லை. தற்காலிகமாக ஓலைக்கொட்டகைபோட்டு புரஜக்டர் கொண்டுவந்து சினிமா காட்டுவார்கள்.மழைமழையாக படம் தெரியும். திக்குறிச்சி சுகுமாரன் நாயரின் உம்மா, பூத்தாலி எல்லாம் அங்கே பார்த்த படங்கள்தான். அங்கே மணல்மேல் அமர்ந்துதான் படம்பார்க்கவேண்டும்.

திருமணமாகி சினிமாவுக்குச் செல்லும்போது பெஞ்சு டிக்கெட் வாங்கிக்கொடுத்து மற்ற பெண்களுடன் அமரச்செய்துவிட்டு கணவர் வெளியே சென்றுவிடுவார். சினிமாபார்க்கும் வழக்கம் அவருக்கில்லை. அவள் தமிழ்ப்படங்களை அதிகமாக விரும்பியதில்லை. அவை நாடகம்போல இருப்பதாக நினைத்தாள்.

படம் தொடங்கி சத்யன் திரையில் தோன்றியதுமே மகிழ்ச்சியுடன் கைநீட்டி அக்காவின் கையை தொட்டாள். இருட்டில் அவள் கண்கள் மின்னின. அவள் சத்யனின் விசிறி. ஆண்மைமிக்க கரிய உருவம். மிகமிக மென்மையான நடிப்பு.நடிப்பதே தெரியாது, சன்னல்வழியாக பார்ப்பதுபோலிருக்கும்.

அந்தப்படம் அவளை ஒரு பெரிய கனவு என ஆட்கொண்டது. இடைவேளையில் கண்களைமூடிக்கொண்டு அந்த பின்னணி இசையை நினைவில் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். தண்ணீர்கூட குடிக்கவில்லை.இளமையில் அவளுக்கு ராகினியின் முகச்சாயல் இருந்தது. ராகினி என்றுதான் தோழிகள் அழைப்பார்கள்.

மூன்று பைசாவுக்கு அதன் பாட்டுப்புத்தகத்தை வாங்கிக்கொண்டாள். பத்து பாட்டுகள் அதில். அந்தப்பாடலின் மெட்டுக்கள் மறக்கக்கூடாது என்பதற்காக டாக்ஸியில் திரும்பிச்செல்லும் வழி முழுக்க அந்தப்பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தாள். மூன்று பாடல்கள் நினைவில் நின்றன. இரவிலும் அவற்றை பாடிக்கொண்டு நெடுநேரம் துயிலாமல் இருந்தாள்.

மறுநாள் முழுக்க அவளுக்கு விலாவில் வலி இருந்தது. அவள் அடம்பிடித்தாள் என்று பஸ்ஸில் கூட்டிவந்த அண்ணாவை அக்கா திட்டிக்கொண்டே இருந்தாள். “அவளுக்குத்தான் தலைக்குச் சூடு அதிகம் என்று தெரியுமே . உங்களுக்கு எங்கே போயிற்று அறிவு?” என்றாள். ”எனக்கு என்ன தெரியும்? பெண்கள் சொல்லியிருக்கவேண்டும்” என அவர் கத்தினார்

ஆனால் அதற்கு மறுநாள் வலி குறைந்துவிட்டது. அதற்கு அடுத்தநாள் பஸ்ஸில் நட்டாலம் திரும்பினார்கள். வழியெல்லாம் அவள் எவரிடமும் பேசாமல் மூன்று பாட்டுகளையே தனக்குள் பாடிக்கொண்டிருந்தாள். எதன்பொருட்டும் அவள் கனவுக்குள் இருந்து வெளிவரவே இல்லை. மகனை திரும்பிக்கூட பார்க்கவில்லை ” “கிறுக்கு ஜென்மம். என்ன கேட்டாலும் காது கேட்காது… கேட்பவர்கள் கிறுக்காக வேண்டியதுதான்” என்று அக்கா திட்டினாள்

கருங்கல்லில் பஸ் இறங்கி நடந்து நடு இரவில் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள். நடந்துவந்த களைப்பில் அவள் திண்ணையிலேயே படுத்துக்கொண்டாள். இரவில் ஏதோ ஓசைகேட்டு எழுந்துபார்த்த அக்கா அவள் இருளுக்குள் எழுந்து அமர்ந்து அந்தப்பாடல்களை மெல்ல தனக்குள் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். “யட்சி பாடுவதுபோல இருந்ததுடீ” என்று அவள் பின்னர் தன் இன்னொரு தங்கையிடம் சொன்னாள்.

மறுநாள் அவள் தோழி நீலி வந்தாள். இருவரும் மரவள்ளித்தோட்டத்திற்குள் நுழைந்து ஒளிந்து தோள்சேர்த்து அமர்ந்து அந்தப்பாடல்களை சேர்ந்து வாசித்தனர். அவற்றின் மெட்டுக்களை அவள் நீலிக்கு கற்றுக்கொடுத்தாள். இருவரும் சேர்ந்து மீண்டும் மீண்டும் அவற்றைப் பாடினர்

அவளுக்கு மேலும் ஐந்துநாள் கழித்து வலிகண்டது.ஏப்ரல் 22, நள்ளிரவில்.வீட்டிலேயே பெரிய அக்காவும் இரு அத்தைகளும் பேறுநோக்கினர். ஆண்குழந்தை பிறந்தது. மூத்தவனைவிட சிவந்த நிறம் என்பதில் பெரியஅக்காவுக்கு மகிழ்ச்சி. மூத்த அண்ணா வந்து நோக்கிவிட்டு “இவள்சாயல்தான்” என்று சொன்னார்.

பேற்றுமயக்கு முடிந்து நினைவு மீண்டு குழந்தையை கையில் வாங்கி முலைகளுடன் சேர்த்துக்கொண்டாள். தயங்கித்தயங்கி பால்குடிக்கும் குழந்தையின் சிவந்த கன்னங்களை நோக்கியபடி, அதன் நெளியும் கால்களை வருடியபடி அந்தப்பாடல்களையே நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தப்போதை வெகுவாக இறங்கிவிட்டிருந்தது. அந்தவரிகளும் மெட்டும் சற்று பிரிந்து நிற்பதாகத் தோன்றியது.

பின்னர் அப்பாடல்களை அவள் பெரிதாக எண்ணிக்கொள்ளலவில்லை. ஒரு பாட்டு மட்டும் நினைவில் நின்றது.

 

ஆச தன் பூந்தேன் அறியாதே மோந்தி ஞான்

ஆனந்த லஹரியில் அறியாதே நீந்தி ஞான்

காலிடறிக் காலிடறி வீழுமோ ஞான்?

காலிடறிக் காலிடறி வீழுமோ ஞான்?

மனோராஜ்ய பூங்காவில் மலராயி பொந்தி ஞான்

கைக்கொள்ளான் ஆளில்ல பூ நுள்ளான் ஆளில்ல

பூநுள்ளான் ஓடிவரூ பூஜாரி

புதிய ஒரு லோகம் காட்டித்தரும் பூக்காரி

பூங்காற்றின் ஊஞ்ஞாலில் மெல்லெ மெல்லே ஆடி ஞான்

வண்டுகள் கண்டுஞான் வியாமோகம் கொண்டு ஞான்

சங்கல்ப வீணையில் சங்கீதம் மீட்டி ஞான்

மதி மதி இனி மனக்கோட்டகள் மலரே நீ மறந்நாலும்

*

[ஆசையின் மலர்த்தேனை அறியாமல் அருந்தினேன்

ஆனந்த மயக்கத்தில் அறியாமல் நீந்தினேன்

காலிடறிக் காலிடறி வீழ்ந்திடுவேனோ? நான்

காலிடறி காலிடறி வீழ்ந்திடுவேனோ?

பகற்கனவின் பூங்காவில் மலராக எழுந்தேன்

கைகொள்ள எவருமில்லை மலர்கொய்ய எவருமில்லை

மலர்கொய்ய ஓடிவருக பூசாரி

ஒரு புதிய உலகைத்தைக் காட்டுவாள் இப்பூக்காரி

பூங்காற்றின் ஊஞ்சலில் மெல்லமெல்ல ஆடினேன்

வண்டுகளைக் கண்டேன் வெறும் ஆசைகொண்டேன்

கற்பனை வீணையில் சங்கீதம் மீட்டினேன்

போதும் போதும்  இம்மனக்கோட்டைகள்,  மலரே நீ மறந்துவிடு]

 [பி. பாஸ்கரன் எழுதி, எம்.பி.சீனிவாசன் இசையமைத்து, ஜமுனாராணி பாடியது]

*

நெடுநாட்களுக்குப்பின் ரேடியோவில் அப்பாடல் ஒலித்தபோது சமையலறையில் இருந்து மலர்ந்த முகத்துடன் வெளிவந்து அதனருகே நின்று அது முடிவதுவரை விழிமயங்கிக் கேட்டாள். பின் தன் இரண்டாவது மகனிடம் அதை அவள் கேட்ட கதையைச் சொன்னாள். அத்தனை ஆண்டுகளில் அந்தப்பாடல் அவளுக்கு முழுமையாகவே மறந்துவிட்டிருந்தது. ஆனால் புதிய ஆகாயம் புதிய பூமி என்ற சொல்லாட்சி நினைவிலிருந்து அகலவே இல்லை

”நல்ல படம்தான். பாட்டும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்தப்போதை முழுக்க அந்தத் தலைப்பினால்தான்” என்று அவள் சொன்னாள். “புதிய ஆகாயம் புதிய பூமி” என்று அவனும் வாய்க்குள் சொல்லிக்கொண்டான்.

பின்னர் முதல்முறையாக இமையப்பனிமலையை கண்டபோது அவன் அதைச் சொல்லிக்கொண்டான். அமெரிக்காவில் மௌண்ட் சாஸ்தாவின் மடியில் நிற்கையிலும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டான் ஆஸ்திரேலியாவின் துயிலெழாத நிலவிரிவையும். ஆப்ரிக்காவின் பெரும்புல்வெளியையும் நோக்கி நின்றிருக்கையில் அச்சொல்லில் இருந்தான்.

ஆனால் அப்பாடல் நினைவுக்கு வரவேயில்லை.நீண்டநாட்களுக்குப்பின் ஓர் இரவில் அந்த முழுப்பாடலும் நினைவில் எழுந்தது. அதில் கற்பனைவீணையில் இசை மீட்டினேன் நான் என்னும் வரி அவனை அவ்விரவை முழுதும் நிறைத்த பெருந்துயர்கொண்டவனாக ஆக்கியது. .

 

 

 

 

Full movie

 

https://www.youtube.com/watch?v=8Rc_22jaLLs

முந்தைய கட்டுரைஇணையதளம் வருவாய்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்