கமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்

kamal

 

ஜெ,

நீங்கள் இந்துத்துவ அரசியல் கொண்டவர், ஆனால் இன்று உங்களுக்கு சினிமா வாய்ப்பு அளிக்கும் கமல்ஹாசனுக்காக இந்துத்துவர்களை எதிர்க்கிறீர்கள்- இது என் நண்பர் விவாதத்தில் சொன்னது. சமூகவலைத்தளத்திலும் இதை பலர் எழுதியிருந்தார்கள். உங்களுடைய ‘நிலைமாற்றத்தை’ கண்டித்தும் சினிமாவுக்காக சோரம்போகிறார் என்றும் உங்கள் இந்துத்துவ நண்பர்களும் எழுதியிருந்தனர். உங்கள் மறுமொழி என்ன? [இதை நல்லெண்ணத்தில்தான் கேட்கிறேன், சீண்டுவதற்காக அல்ல]

ஜெ. நாகராஜன்

***

அன்புள்ள நாகராஜன்,

தனக்கு மாறான ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அவர் இழிவான நோக்கம் கொண்டவர் என்று ஆரம்பத்திலேயே நம்ப ஆரம்பிப்பது ஒரு மனநிலைச்சிக்கல். அதை அச்சிக்கல்கொண்டவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் சொல்லும் கருத்துக்களை ‘சினிமாவுக்காகச் சொல்கிறான்’ என்று சொல்லிவிட்டால் யோசிப்பதை ஒத்திப்போடலாமே. சொல்பவரின் இழிவு மட்டுமே அதில் வெளிப்படுகிறது.

அதோடு பலசமயம் இதைச் சொல்பவர்கள் தாங்கள் சொந்தப்பிழைப்பின் பொருட்டே சிந்தனையை வடிவமைத்திருப்பவர்கள், பிறர் வேறுவகையில் சிந்திக்கமுடியும் , சமூகக்கவனம் அறவுணர்வு என சில உண்டு என்றே அவர்களுக்கு தெரிந்திருக்காது

ஆம், கமலஹாசனை நான் தனிப்பட்டமுறையில் நன்றாக அறிவேன். வெளிப்படையாகவே அவர் திராவிட இயக்க நம்பிக்கை கொண்டவர். அதேசமயம் உறுதியான நிலைப்பாடுகொண்டவரும் அல்ல. கலைஞர்களுக்கே உரிய தேடலும் குழப்பமும் கொண்டவர். அவருடைய கருத்துக்கள் மேல் எனக்கு முரண்பாடு வரலாம், அவருடன் அல்ல

இந்தத் தளத்தை ஓரளவேனும் வாசிக்கும் எவருக்கும் தெரியும் என் நிலைப்பாடு என்ன என்று. நான் இந்தியத் தேசியம் மீது நம்பிக்கை கொண்டவன். ஏனென்றால் இது வரலாற்றின்போக்கில் சீராக உருவாகி வந்த ஓர் அமைப்பு. இதன் குலைவு அழிவை அளிக்கும். இது வலுவாக நீடிப்பதே நம்மை வாழச்செய்யும் என நினைக்கிறேன்.

ஆனால் அந்த தேசியம் மதம்சார்ந்ததாக இருக்கலாகாது என்றும் காந்தி நேரு அம்பேத்கர் வழிவந்த நவீன தேசியமாக, அனைத்து மதத்தினருக்கும் உரியதாக இருக்கவேண்டும் என விழைபவன்.

இந்துமெய்ஞான மரபில் ஆழ்ந்த பற்றுகொண்டவன். இதிலுள்ள ஞானிகளின் மரபை அறிந்தவன். அம்மரபில் ஒரு சரடில் என்னை பொருத்திக்கொண்டவன். அத்வைத மரபில் நாராயணகுருமுறையில் ஒருவன் நான். இந்து மரபு அளிக்கும் மாபெரும் பண்பாட்டுத் தொகையை, ஞானக்கருவூலத்தை கற்றுவருபவன். அது உலகுக்கு ஒரு கொடை என நினைப்பவன்

அந்த மரபு அது அளிக்கும் கட்டற்ற சிந்தனைச் சுதந்திரத்தால், அதன் கிளைபிரிந்து முரண்பட்டு விவாதித்து வளரும் முறையால்தான் எனக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என நினைப்பவன். ஆகவே அதை அமைப்பாக ஆக்குவது, அதன் இயக்கமுறையை கட்டுப்படுத்துவது, அதன் மெய்ஞானப்போக்குகளை அன்றாட அரசியலால் முடக்க முயல்வது போன்றவற்றை எப்போதும் வன்மையாகக் கண்டித்தே வருகிறேன்.

இக்கட்டுரையும் இதே நோக்கில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் வரிசையில் வருவதே. வெறுப்பையும் நக்கலையும் கக்குவதென்றால் தேவையில்லை, உண்மையில் அறிய ஆவலிருந்தால் வாசித்துப்பாருங்கள்.

ஜெ

***

சார்,

முன்பு போகன் னு ஒரு பதிவு போட்டீர்கள்.. பின் குற்றம் 23 படம், பிறகு கமல் பற்றி.. இவை அனைத்துற்குமான காரணங்கள் தெரிஞ்சுடிச்சி.. :-))

http://www.vikatan.com/news/article.php?aid=84857

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

***

அன்புள்ள காளி

நான் ஒரு இலுமினாட்டி என்பதை பலமுறை முன்னரே சொல்லியிருக்கிறேனே.

ஜெ

 

எம்.எஃப்.ஹுசெய்ன்

ஹூசெய்ன் இந்துதாலிபானியம்

எம்.எஃப்.ஹுசெய்ன் கடிதம்.

தேவியர் உடல்கள்

இரு எல்லைகள்

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

வளரும் வெறி

பஷீரும் ராமாயணமும்

பஷீரும் ராமாயணமும்- கடிதம்

இந்தியா இஸ்லாம்-கடிதம்

முத்திரைகள்

அ மார்க்ஸின் ஆசி

மதமாற்றத்தடைச் சட்டமும் ஜனநாயகமும்

தீண்டாமைக்கு உரிமைகோரி -கடிதம்

காதலர் தினமும் தாலிபானியமும்

தீண்டாமைக்கு உரிமைகொரி

பகவத்கீதை தேசியப்புனிதநூலா?

 பெருமாள் முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்

பெருமாள்முருகனுக்கு ஆதரவாக

 

முந்தைய கட்டுரைவிஷம் தடவிய வாள்
அடுத்த கட்டுரைஇஸ்லாமியர்களுக்கு வீடு