அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா? சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே.
அன்புடன்
ஶ்ரீதர்
***
வணக்கம்.
உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு பக்கம் மட்டும் காட்டப்படுகிறது. அதில் தோன்றும் எந்த பதிவை க்ளிக் செய்தாலும் முடக்கப்பட்டதன் அறிகுறியையே அளிக்கிறது. ஒரு வேளை நீங்கள் அறிந்தே தளத்தை மேம்படுத்தும் பின்னணி வேலை நடக்கிறதா? அப்படி இருக்குமானால் முன்கூட்டியே சொல்லியிருப்பீர்கள். மின்னஞ்சலில் இன்றைய பதிவுகள் (நேற்றே பதிவிட்டவை) வரப்பெற்றன. இருப்பினும், தளம் என்னவாயிற்று? மூன்றாமவர் புகவில்லை என்றால் தெரியப்படுத்த வேண்டுகிறேன். ஒரு கலைக்களஞ்சியம் முடங்கியது போலத்தான் இது என்பதால் பதிலுக்குக் காத்திருக்கிறோம்.
நன்றி.
ஸ்ரீனிவாச கோபாலன்
***
அன்புள்ள ஸ்ரீதர், ஸ்ரீனிவாச கோபாலன்,
அவ்வப்போது இப்படி நிகழ்கிறது. முன்பு பார்வையாளர் எண்ணிக்கை மிகுந்து தளத்தால் தாளமுடியாமலானபோது அடிக்கடி இப்படி ஆகியது. அதன்பின்னரே மேலும் பொருட்செலவில் கிளவுட் முறைக்குச் சென்றோம். இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது
பொதுவாக அதிகமானபேர் இணையதளத்தை வந்துபார்த்து அதன் பார்வைஎண் மிகுதியாக ஆகும்போது இது நிகழ்கிறது என ஊகிக்கிறோம். பெரும்பாலும் சினிமா சார்ந்த செய்திகள், மத அரசியல் சார்ந்த செய்திகள் வரும்போது. எந்திரன் பற்றிய ஒருசெய்தி வந்தபோது. ஜக்கிவாசுதேவ் கட்டுரை வந்தபோது இவவாறு நிகழ்ந்தது.
அப்போது தளம் எவராலோ கவனிக்கப்படுகிறது. அது ஹேக்கிங் செய்யப்படுகிறது. பெரும்பாலும் பாகிஸ்தானில் உள்ள இணையதளங்களில் இருந்து. இந்தியாவிலுள்ள எல்லா இணையதளங்களும் அங்கிருந்துதான் ஹேக்கிங் செய்யப்படுகின்றன என்கிறார்கள். அரசியல் எல்லாம் இல்லை, வெறும் ஃபேஷன் தளங்களும் பாதிக்கப்படுகின்றன.
நாங்கள் இதன்பொருட்டே நிறையச் செலவுசெய்து ஒரு பின்பதிவு இணையதளமும் வைத்திருக்கிறோம். மொத்த தளத்திற்கும்ஒரு பிரதி அங்கே இருக்கும். அதைக்கொண்டு இதை மீண்டும் வலையேற்றிவிடுவோம். ஆனால் அதை எளிதில் நாங்கள் செய்ய இயலாது. ஊதியம்பெற்று பணியாற்றும் நிபுணர்கள் தேவை. அவர்கள் காலை எட்டு மணிக்குமேல்தான் தொடர்புக்கே வருகிறார்கள்.
இதிலுள்ள சிக்கல் செலவு பன்மடங்கு கூடுகிறது என்பதே. இப்போது இந்த இணையதளம் ஆண்டுக்கு இரண்டுமூன்றுலட்சம் ரூபாய்வரை செலவிழுப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. விளம்பரமோ சந்தாவோ இல்லாமல் நண்பர்களின் சொந்தச்செலவிலேயே இதை இதுவரை கொண்டுசென்றுவிட்டோம். பார்க்கலாம்
ஜெ
***