இன்றைய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ‘மகாபாரதம் தொடர்பான சர்ச்சைக்கருத்து- நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு. மைசூரு பசேவேஸ்வரா மடத்தின் மடாதிபதி பிரணவானந்தா பேட்டி என்னும் செய்தி வந்துள்ளது. கமல்ஹாசன் ஒரு பேட்டியில் மகாபாரதம் பற்றிச் சொன்ன கருத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடுக்கப்போகிறாராம்.
ஒற்றைவரியில் சொல்லப்போனால் இஸ்லாமிய மதத்தினரின் ‘மதநிந்தனை சட்டம்’ போன்று ஒன்றை இந்துமதத்தில் உருவாக்குவதற்கான முயற்சி இது. சென்ற பலகாலங்களாகவே இது நிகழ்ந்துவருகிறது. இப்போது அரசதிகாரம் கையில் வருந்தோறும் மேலும் வலுப்பெற்று வருகிறது. இது இன்று ஏதோ சில தலைச்சூடு ஆசாமிகளின் விளம்பரவெறி அல்ல. அதிகாரம் கொண்ட அமைப்புகளின் ஒடுக்குமுறை முயற்சி.
இஸ்லாமியநாடுகளில் உள்ள மதநிந்தனைச் சட்டத்தை எதிர்த்து உலகளாவிய அறிவுஜீவிகள் பேசும் குரல் நாள்தோறும் வலுத்துவருகிறது. இஸ்லாமுக்குள்ளேயே முற்போக்குக் குரல்கள் எழுந்துள்ளன. இந்துமதத்திற்குள் அப்படி ஒரு சட்டம் உருவாவதற்கு தத்துவ அடிப்படையில், நெறிகளின் அடிப்படையில் எந்த வழியும் இல்லை. ஆனால் அதை உருவாக்க நினைக்கிறார்கள்.
மதநிந்தனைச் சட்டம் போன்றவற்றின் முக்கியமான பிரச்சினை என்ன? எது மதநிந்தனை என எப்படி முடிவுசெய்வது? அப்படி முடிவுசெய்யும் அதிகாரம் சில அதிகார அமைப்புக்களிடம் அளிக்கப்படும். அல்லது அவர்களே எடுத்துக்கொள்வார்கள். பின்னர் தங்களுக்குப்பிடிக்காத எதையும் மதநிந்தனை என அவர்கள் முத்திரைகுத்தி வேட்டையாடுவார்கள். கருத்துச்சுதந்திரம் என்பதே முழுமையாக ரத்துசெய்யப்படும்.
முதலில் மதநிந்தனை என சொல்லப்படுவது உண்மையிலேயே கடுமையான எதிர்கருத்தாக இருக்கும். ஆனால் அந்தக் கருத்தை ஒடுக்கும் அதிகாரத்தை அவர்களிடம் அளித்தால் நாளடைவில் அது எதற்கும் எதிராகக் கிளம்பும். மைசூரு பசேவேஸ்வரா மடத்தின் ஊழல்களையோ முறைகேடுகளையோ ஒருவர் தட்டிக்கேட்டால் அவர்மேலும் அந்த அதிகாரம் பாயும். அந்த அதிகார அமைப்பு வன்முறையையும் கையில் எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான், இருண்டகாலம் ஆரம்பமாகிவிடும்.
இந்துமதத்தை அழிக்கும் முயற்சி இது. எதிர்த்து தடுக்கப்பட்டாகவேண்டியது. இது நாத்திகர்களின் பிரச்சினை அல்ல, இந்துமதம் ஒரு மெய்ஞான வழியாக நீடிக்கவேண்டும் என்றும் அது பல்வேறு மதவெறியர்களாலும் மதகுருக்களாலும் அடக்கி ஆளப்படும் அதிகாரக்கட்டமைப்பாக சடங்குமுறையாக நீடிக்கக் கூடாது என்றும் விரும்பும் உண்மையான இந்துக்களின் பிரச்சினை.
அவர்கள் இங்கே இதை தவறவிட்டால் பல்லாயிரமாண்டுக் காலமாக தாங்கள் அடைந்து வந்த மெய்ஞானப்பயணத்துக்கான சுதந்திரத்தை முற்றாக இழப்பார்கள். அவர்களுக்கு சடங்குகளால் மூடப்பட்ட, வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவும் மதத்தலைமையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பே வந்துசேரும். ஒருமுறை உருவாகிவிட்டால் அதை கடப்பது பலநூறாண்டுகள் ஆனாலும் சாத்தியமில்லை
மேம்போக்காகப் பார்த்தால் இந்துக்களிலேயே ஒருசாராருக்கு இதில் பெரிய பிழை இல்லை என்ற எண்ணம் ஏற்படும். இந்து மதநூல்களை எவர் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிடலாமா என்ற கேள்வி எழும், இதேபோல இஸ்லாமிய நூல்களைப்பற்றிச் சொல்வார்களா என்பது அடுத்த கேள்வியாக வரும்.
முதல் விஷயம் இந்துமதத்தின் நெறிகளில், அடிப்படைக் கொள்கைகளில் எங்குமே இந்துமதத்தின் நூல்களை நிராகரிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. ஒட்டுமொத்த இந்துமதத்திற்கும் பொதுவான, மறுக்கமுடியாத, மூலநூல் என்ற ஒன்று இல்லை. சில பிரிவுகள் சிலநூல்களை புனிதமானவையாகக் கருதலாம், இன்னொரு சாராருக்கு அப்படித் தோன்றவேண்டுமென்றில்லை.
இந்துமதத்தின் மெய்ஞானிகளில் எவரை எடுத்துக்கொண்டாலும் அவர் தொன்மையான நூல்களில் ஒருபகுதியை மிகக்கடுமையாக நிராகரித்து வேறுசிலவற்றை முன்வைப்பவராகவே இருப்பார். ராமலிங்க வள்ளலார் திருமுறைகளில் எந்தச்சாரமும் இல்லை என்றார்.
இந்துமதம் பலவகையான உட்பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் இன்னொன்றை கடுமையாக மறுப்பதாகவே இருக்கிறது. வைணவர்களுக்கு சைவநூல்கள் மொத்தமாகவே பொருளற்ற குப்பைகள். இந்த பசவ வீரசைவ மடம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வள்ளலார் மேலும் வைணவர் மேலும் வழக்குதொடுக்கும் என்றால் இந்தியாவில் என்னதான் நிகழும்?
இப்போது இதை அனுமதித்தால் இந்துமதத்திற்குள் ஞானவிவாதமே நிகழமுடியாது. மதவழிபாடுகளால் எந்த அர்த்தமும் இல்லை. ஆலயமும் கழிப்பறையும் ஒன்றுதான் என ஓர் அத்வைதி சொல்லக்கூடும். அவனை உடனே பிடித்து சிறையில் அடைக்க ஒரு கும்பல் கிளம்பும் என்றால் இந்தியா ஒரு மாபெரும் மனநோய் விடுதியாக ஆகிவிடும்
இந்துமதத்திற்குள்ளேயே வலுவான நாத்திகவாதம் உண்டு. சித்தர்மரபுக்குள் ஒருபோக்காக அது இன்றும் வாழ்கிறது. இந்து ஆன்மிகம் என எதையெல்லாம் சொல்கிறோமோ அதையெல்லாம் முழுமையாக, கடுமையாக நிராகரித்து ஒரு யோகி இங்கே ஞானச்சொல் அளிக்கக்கூடும். அவரை இந்த நாலாந்தர மதவெறியர்களின் அதிகாரத்திற்கு விட்டுக் கொடுக்கப்போகிறோமா என்ன?
மேலும் இவ்வாறு வழக்குதொடுக்கும் அதிகாரம் எவருக்கு உள்ளது? இந்துமதத்திற்கு என ஒரு தலைமைப்பீடமோ, அதிகாரம் கொண்ட அமைப்போ கிடையாது. இந்துமதம் சார்ந்த அமைப்புக்கள் அனைத்துமே வெவ்வேறு வகையான ஆலய நிர்வாக அமைப்புக்கள் மட்டுமே. பழையபாணி அறக்கட்டளைகள்தான் அவை. அவற்றின் தலைவர்கள் தங்களை ஞானிகளாகவோ மதத்தின்மேல் அதிகாரம் கொண்டவர்களாகவோ எண்ணவேண்டியதில்லை. அவர்களை அங்கே அமரச்செய்ய வேண்டியதுமில்லை.
தீண்டாமையேகூட மதநெறி, அதை மாற்றக்கூடாது என வாதிட்டவர்கள் நம் மடத்தலைவர்கள். அவர்களை வாயைமூடவைத்தே இந்த அளவு முன்னகர்ந்திருக்கிறோம். அந்த அதிகாரம் மக்களிடமிருந்தது. அதை திரும்ப அந்த மடத்தலைவர்களிடம் அளிக்கப்போகிறோமா என்ன?
இந்துமதத்திற்குள் நவீன முல்லா மௌல்வி அதிகாரத்தை உருவாக்க அவர்கள் ஆசைப்படலாம், அதற்கு இந்துக்களாகிய நாம் வாய்ப்பளிக்கக் கூடாது. அது மிகப்பெரிய நச்சுக்களை ஒன்றை நம் மதம்மீது படரவிடுவது ஆகும்.
இந்துமதம், இந்து நூல்கள் குறித்து என்னவேண்டுமென்றாலும் சொல்லலாமா? சொல்லலாம். ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடாது என ஆரம்பித்தால் எதையுமே சொல்லக்கூடாது என்னும் இடம் நோக்கித்தான் அது சென்று சேரும். எதைச் சொல்லலாம், எவ்வளவு சொல்லலாம் என தீர்மானிப்பவர் எவர்? அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்?
அப்படி ஒவ்வாதன சொல்லப்பட்டால் அந்தக்கருத்தை மிகவன்மையாக மறுக்கலாம். மிகக்கடுமையாக அவரை எதிர்க்கலாம். அதற்கான உரிமை எவருக்கும் உள்ளது. ஆனால் அக்கருத்தை ஒடுக்கமுயல்வது, அச்சுறுத்துவது மிகமிக கீழ்மையான செயல். இந்துமதத்தின் சாராம்சமான மெய்ஞானப்பயணத்தை ஒடுக்கி அதை அழிக்கும் முயற்சி
சட்டபூர்வ நடவடிக்கைதானே, அதில் என்ன தப்பு என கேட்கலாம். சட்டநடவடிக்கை என்பது இங்கே ஒரு வெளிப்படையான மிரட்டல். ஏனென்றால் இங்கே சட்டநடவடிக்கை என்பது ஆண்டுக்கணக்காக இழுத்துச் செல்லப்படும் ஒரு வீண்செயல். நேரவிரயம், பணவிரயம், மனஉளைச்சல். ஒரு தனிமனிதனை ஓர் அமைப்பு சட்டப்போருக்கு இழுக்கும் என்றால் அந்த தனிமனிதனின் வாழ்க்கையே அழியும். வாழ்நாள் முழுக்க அவன் நீதிமன்றத்தில் வாழவேண்டியிருக்கும்.
கமல்ஹாசனுக்கு எதிரான இந்தச் குற்றச்சாட்டு சட்டப்படி எந்தவகையிலும் பொருட்படுத்தப்படவேண்டியது அல்ல. ஒரு சட்டம் தெரிந்த நீதிபதி முதல்விசாரணையிலேயே இதை ரத்துசெய்வார். வழக்கு போட்டவரை கண்டிக்கவும் கூடும். ஏனென்றால் இந்திய அரசியல்சட்டம் வழங்கும் கருத்துரிமை என்னும் அடிப்படை உரிமைக்கு எதிரானது இது. எப்போதுமே இந்திய நீதிமன்றம் இப்படித்தான் தீர்ப்பளித்துள்ளது.
ஒருவரின் கருத்து நேரடியாக மதஇன, உணர்வுகளைப் புண்படுத்தி சமூக ஒற்றுமைக்கு பங்கமாக அமையக்கூடாது என்னும் துணைவிதி அதற்குள் உள்ளது. அதைப்பயன்படுத்தி தங்கள் உணர்வுகள் புண்பட்டுவிட்டன என்றுதான் இவ்வழக்கைத் தொடுக்கிறார்கள். இது சமூகமோதலை உண்டுபண்ணக்கூடும் என்கிறார்கள். அக்கூற்று நீதிமன்றத்தால் ஏற்கப்படாது. ஆனால் அந்த தீர்ப்பு வருவதற்குள் வழக்குதொடுக்கப்பட்டவர் அலைந்துநாறவேண்டியிருக்கும் என்பதே நடைமுறை
ஆனால் நம்மூர் நாத்திகர்கள், தமிழ்த்தேசியர்கள், தலித்தியர்கள் இதைக் கண்டிக்கும் தார்மிக உரிமையை இழந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரணமான கருத்துக்காக நடிகை குஷ்புவை இதே நீதிமன்ற மிரட்டல் என்னும் ஆயுதத்தைக் கொண்டுதான் அவர்கள் வேட்டையாடினார்கள்.
என்ன செய்யலாம்? இதை ‘வன்மையாக கண்டிப்பதி’ல் அர்த்தமில்லை. இதே ஆயுதத்தை இதை ஏந்தி வருபவர்களுக்கு எதிராகவே திருப்பலாம். இந்த மடாதிபதியின் பேச்சுக்களை எடுத்துக்கொண்டு இவர்மேல் பல இடங்களில் இதேபோல வழக்குகள் தொடரலாம். அப்படி வழக்கு தொடுப்பதற்கான அமைப்புக்களை உருவாக்கலாம். அவரும் வந்து நீதிமன்ற வாசலில் அமர்ந்திருக்கட்டும். சட்டத்தைக்கொண்டு மிரட்டுவதன் உண்மைப்பொருள் என்ன என அவரும் தெரிந்துகொள்ளட்டும்.
ஜெ
***