அன்புள்ள நண்பர்க்கு,
வணக்கம். அரூரை சார்ந்த நான் கால்நடை மருத்துவர்.நேரம் கிடைக்கும்போது வாசிப்பதுண்டு.உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன்.வலைத்தளத்தையும் பின்தொடர்கிறேன்.சமீபத்தில் உங்களின் கருணை நதிக்கரை பதிவில் தீர்த்தமலை குப்பைக் கழிவுகளால் சீர்கெட்டுள்ளதை குறிப்பிட்டிருந்ததை படித்ததும் துணுக்க்குற்றேன். நமது பகுதியிலுள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா தளத்தின் நிலையறிந்து வருந்தினேன்.ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்தேன்.முகநூல் வாட்ஸ்அப் மூலம் தீர்த்தமலையை சுத்தப்படுத்த அழைப்பு விடுத்தோம்.
நேற்று களத்தில் இறங்கியதில் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கெடுத்து ஓரளவு சுத்தப்படுத்தியுள்ளோம். இப்பணிக்கு தொடக்கப்புள்ளி நீங்கள்தான்.மிக்க நன்றி.
இது தொடர்பான செய்தி இன்றைய நாளிதழ்களில் வந்துள்ளது. தி இந்து உங்களின் வலைப்பதிவை குறிப்பிட்டு இன்று விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.
பழனி
அன்புள்ள பழனி அவர்களுக்கு,
நேற்றுத்தான் இதேபோல குப்பைமலையாக இருந்த மருத்துவாழ் மலை இளைஞர் தன்னார்வக்குழுக்களால் தூய்மைசெய்யப்பட்டது. அச்செய்தி அறிந்த மகிழ்ச்சியுடன் இச்செய்தியும். வாழ்த்துக்கள், நன்றி. உங்கள் அழைப்புக்கு மாணவர்கள் திரண்டுவந்ததே இன்று உருவாகியிருக்கும் மிகப்பெரிய மாற்றத்தைச் சுட்டுகிறது. இது வளரும் என்றே நினைக்கிறேன்
ஜெ
****