கல்வி, தன்னிலை -கடிதம்

rishi(1)

டியர் சார்,

கல்வி- தன்னிலையும் பணிவும் வாசித்தேன். மிக நுட்பமான கட்டுரை. தன் ஆளுமையைச் சிறிதளவும் சீண்டிப்பார்க்க விரும்பாத மாணவர்களை அதிகம் என் வகுப்பில் பார்த்திருக்கிறேன். பாடத்தைத் தாண்டி பேசப்படும் எதையும் அவர்கள் வறண்ட நகைச்சுவையின் மூலமே எதிர்கொள்ள விரும்புகிறார்கள். பாடமல்லாது பேசப்படும் எதிலும் காந்தியை துணைக்கு அழைத்துக்கொள்வது வழக்கம்.

ஆனால் ‘அவரு வெள்ளக்காரியோட டான்ஸ் ஆடறமாதிரி பேஸ்புக்ல இருக்கே சார்’ போன்ற எதிர்வினைதான் பெரும்பாலும் வரும். காந்தி முதல் மோடி வரை அவர்களிடம் அசைக்கவேமுடியாத ஒரு கருத்துண்டு. இதை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பதற்குப் பின்னிருப்பது சமூகவலைத்தளங்கள் மட்டுமே. ஆளுமையை உருவாக்கும் இடத்தில் தொழில்நுட்பம் வந்துசேர்ந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. கல்விக்கூடங்களில் ஆளுமையை உருவாக்கும் ஆளுமைகளுக்கு நிறையவே பஞ்சம் இருக்கிறது. முதலீட்டியம் வலுப்பெற்ற பிறகு அடுக்குகளோடு சேர்ந்து கல்விநிலையங்களில் ஆசிரியதரமும் காணாமல் போயிருக்கிறது. அந்த இடத்தைத் தொழில்நுட்பம் இட்டு நிரப்புகிறதா என்ற கேள்வி எனக்குள்ளது.

கல்வியின் மீதும், கல்வி நிலையங்களின் மீதும் மாணவர்கள் கொண்டிருக்கும் அதீத வெறுப்பையும் மீறி ஒரு மாணவனுடன் உறவை பேணுவது உண்மையிலேயே பெரிய சவால். தன் கண்முன்னே அப்பாவோ, அம்மாவோ குறுகிநின்று பணத்தை கட்டும்போது உருவாகும் வெறுப்பை தீர்த்துக்கொள்ள பயிலும் மூன்று, நான்கு ஆண்டுகளிலும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். அந்த வெறுப்பு ஆசிரியர்கள் மீதும் திரும்புகிறது.

ரிஷி,

ராசிபுரம்

***

அன்புள்ள ரிஷி

என்ன சிக்கல் என்றால் நம் கல்விக்கூடங்கள் கல்விக்கானவை அல்ல, பயிற்சிக்கானவை என்பதுதான். வேலைவாய்ப்புக்கான பயிற்சியைப் பெறும்பொருட்டு மட்டுமே அங்கே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வேலைக்கு உதவாத எதையும் அவர்கள் கற்க தயாராக இல்லை. அவர்கள் பணம் கட்டி வாங்கிய பொருள் அக்கல்வி, ஆசிரியர் ஒரு ‘டெலிவரிமேன்’

மாணவர்களின் மனநிலையைப்பற்றி என்னிடம் பல ஆசிரியர்கள் மனம் வருந்திச் சொல்லியதுண்டு. தேவையில்லாம பேசாதீங்கசார், பாடத்தை எடுங்க என்றே மாணவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னார்கள். சென்ற தலைமுறையில் ஆசிரியர் பாடத்திட்டத்தைக் கடந்து தன் இலட்சியவாதம், தன் ரசனை ஆகியவற்றை வகுப்பறையில் முன்வைக்க இடமிருந்தது. இன்று அந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லை.

கல்லூரிகளில் உள்ள உதாசீனமனநிலை, நையாண்டி ஆகியவை கண்டு உருவான தயக்கம் காரணமாகவே நான் கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறேன்

ஆனால் அந்தக்கூட்டத்திலும் சிலர் இருக்க வாய்ப்புண்டு. தனிப்பட்ட முறையில் அவர்களைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
அடுத்த கட்டுரைஇணையதளம் வருவாய்