என் கந்தர்வன் — பாலா

unnamed

அன்பின் ஜெ.

தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன.

கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் நிறுவனமான கூகூளுக்கு இதன் தேவை அதிகம் போல.

தினமும் நேரத்துக்கு வந்து போகும் அலுவலில் ஒருவிதமான கூலி வேலை மனநிலை வந்துவிடுகிறது. அதை மாற்ற இதுபோன்ற முயற்சிகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அதன் நோக்கம், அலுவலக மந்த மனநிலையை உடைத்து, கொஞ்சம் இளக வைப்பது. இளகுந்தோறும் செயல் திறன் அதிகரிக்கிறது என்பது சொந்த அனுபவம்.

https://www.youtube.com/watch?v=Y4_KbtwVj24

Ustad Zakir Hussain is a world-renowned tabla virtuoso, producer, film actor and composer. He’s a two-time Grammy winner and a pioneer of world music. In thi…

அப்படியாக, இன்று ஜாக்கீர் ஹுஸேனின் பேச்சைக் கேட்டேன். கலைஞர்களுக்கே உரித்தான மனநிலையும், அதைப் பொது மேடையில், மக்கள் கேட்கும் வண்ணம் சொல்லும் ஒரு நாகரீகமும் ஒருங்கே வாய்த்த ஒரு ஆளுமை ஜாக்கீர் ஸாப்.அதன் தொடர்ச்சியாக, அவரும், ஹரிப்ரஸாத் சௌராஸ்யாவின் உறவினரான ராகேஷ் சௌராஸ்யாவும் இணைந்த ஒரு நிகழ்ச்சியின் பதிவைப் பார்த்தேன்.

கூகூள் பேச்சில் அவர் சொன்னது போல, தொழில் நுட்பத்தின் உதவியால், தபலா, தாள வாத்தியத்தின் எல்லைகளைத் தாண்டி, மெலடியும் பேசத் துவங்கியதை உணர முடிந்தது.பிறந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில நாள் குழந்தையான தன்னைக் கையில் வாங்கிய தந்தை, தான் காதில் ஓதிய தாளக் கட்டுகள் துவங்கி, அவர் தன் பாதையைச் சொல்லும் கதையை கண்களில் நீருடன் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

இந்தக் கச்சேரியில் 35 ஆவது நிமிடத்தில் அவர் ஆடத்துவங்கும் தாள நாட்டியம் அபாரம்.. அதைத் தொடர்ந்து, பிறந்த ஆறே நாட்களான தன் பேத்தி ஸாராவுக்காக எனச் சொன்னவுடன், குழலில் ராகேஷ் வாசிக்கும் ஹேப்பி பர்த் டே டூ ஸாரா என்னும் துணுக்கு.. (இவருக்குப் பேத்தியா என இதயம் உடைந்து போனது).

வ.ராவுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கே.பி.சுந்தராம்பாள், அவர் கிட்டப்பாவைப் பார்த்த முதல் கணத்தைப் பற்றிச் சொல்லியிருப்பார் “அவர் கந்தர்வன் மாதிரி இருந்தார்” என.

இவர் என் கந்தர்வன்.

https://www.youtube.com/watch?v=O2K0ptoYpuc

****

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
அடுத்த கட்டுரைபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு