58. முள்நுனிக் காற்று
அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும் உணர்வுகளும் நன்கு பழகிவிட்டிருந்தமையால் பல தருணங்களில் உளம் அமையாமலேயே செவிகளும் கைகளும் இணைந்து ஒலியை எழுத்தாக்கின. அவள் எழுந்து விடைகொண்டபோது சுக்ரர் “இன்று நீ உளம் குவியவில்லை” என்றார். அவள் மறுமொழி சொல்லவில்லை.
தன் குடிலுக்கு வந்தபோது ஏனென்றறியாத தனிமையையும் ஏக்கத்தையும் உணர்ந்தாள். அது ஏனென்று தன்னுள் சென்று தேடத் தேட ஆழம் அதை உந்தி வெளித்தள்ளி விலக்குவதை உணர்ந்தாள். சலித்து எதையேனும் செய்து விலகலாம் என்றெண்ணி முன்பு படித்து எச்சம் வைத்திருந்த காவியம் ஒன்றை எடுத்து சுவடிகளை புரட்டினாள். எழுத்துக்களை மொழியென்றாக்க இயலாமல் மீண்டும் பட்டு நூலில் கட்டி பேழைக்குள் வைத்து மூடிவிட்டு எழுந்து வெளிவந்தாள்.
வேங்கைகள் அப்பால் மரத்தடியில் நிழலில் படுத்திருந்தன. அவளை நோக்கி செவி சொடுக்கிய வேங்கை ஒன்று கண்ணைச் சுற்றிப் பறந்த சிற்றுயிர்களை தவிர்க்கும் பொருட்டு இமைகளை மூடித்திறந்தது. அது எதையோ சொல்ல வருவதுபோல் தோன்றியது. அவற்றை நோக்கியபடி அவள் அங்கு நின்றாள். முன்பெலாம் எழுந்து உடல் குழைத்தபடி அவளை நோக்கி ஓடிவரும் வழக்கம் கொண்டிருந்த அவை அங்கிருந்து அவளை நோக்கியபின் வாய்திறந்து தலை திருப்பிக்கொண்டன.
அடுமனைக்குச் சென்று அங்கு ஏதேனும் வேலை செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் அங்குள அடுமனையாளர்களும் பெண்களும் கடினமான வேலை எதையும் அவள் செய்ய ஒப்புவதில்லை. அவளைக் கண்டதுமே அரசிக்குரிய உடல் வணக்கத்தை அவளுக்களித்து பணிந்த குரலில் ஒற்றைச் சொற்களில் பேசி உரிய இடைவெளிவிட்டு அகன்று நிற்பார்கள். ஆயினும் அடுமனை அவளுக்கு உகந்ததாகவே இருந்தது. அங்கே ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது எப்போதும்.
அடுமனைக்குள் அவள் நுழைந்ததும் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததென்ன என்னும் சிறிய துணுக்குறலை அடைந்தாள். ஒவ்வொரு விழியிலும் அறுபட்ட சொல்லொன்று ஒளியென நின்றது. தன்னைப்பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தபின் “ஏதேனும் பணி இயற்றலாமென்று வந்தேன்” என்றாள். பணிவுடன் “இங்கு அனைத்தும் முடிந்துவிட்டன” என்றார் அடுமனையாளர். அவள் “நான் கீரைகளை நறுக்குகிறேன்” என்றாள். “ஆம், அது ஒன்றுதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றபின் கழுவிய கீரைக்கட்டையும் கத்தியையும் கொண்டுவந்து வைத்தார் அடுமனையாளர்.
ஒவ்வொரு கீரையாக நோக்கி புழுஅரித்த இலைகளைக் களைந்து சீராக நறுக்கி அப்பால் குவித்தாள். அடுமனைக்கு அவள் வருவது அரிதென்றாலும் மெல்ல மெல்ல எந்தப் பணியிலும் எப்போதும் அவளிடம் இருக்கும் முழுமை அதிலும் கூடியது. அவள் கைகள் தேர்ந்த சூதனின் விரல்கள் யாழிலென கீரையிலும் கட்டையிலும் கத்தியிலும் தொழிற்படுவதை அவர்கள் விழிதிருப்பாது நோக்கினர். பெரிதோ சிறிதோ அல்லாமல் சீரான அளவிலேயே கீரையை வெட்டிக் குவித்த பின்பு சிவந்த கைகளை நோக்கி “செங்குழம்பிட்டதுபோல்…” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள்.
அப்புன்னகை அவர்கள் அனைவரையும் எளிதாக்கியது. “காய்கள் எவையேனும் உள்ளனவா?” என்றாள். “கிழங்குகள் உள்ளன” என்றார் ஒருவர். அவர் கொண்டுவந்த கிழங்குகளை விரல் தடிமனுக்கு வெட்டி கலவைக்கூட்டுக்காக தனித்தனியாக வைத்தாள். அச்செயல்களினூடாக உள்ளமைந்திருந்த நிலைகுலைவை வென்றுசெல்ல அவளால் இயன்றது. கைகள் உள்ளத்தை இயக்கும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டாள். உள்ளத்தை எங்குதான் கொண்டு செல்ல முடியவில்லை? கால்களில், கைகளில், கண்களில், சொற்களில். ஆனால் எத்தனை இறைத்தாலும் குறையா ஊற்றென அது உள்ளில் அமைந்திருக்கிறது. நன்று, மனிதருக்கு செயலாற்றும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விலங்குகள்போல இங்கிருப்பவற்றை அப்படியே உண்டு அமைந்த இடத்திலேயே உறங்கி வாழவேண்டியதில்லை.
உச்சிப்பொழுது கடந்த பின்னர் கசன் காட்டிலிருந்து திரும்பி வந்தான். தொலைவில் காட்டின் விளிம்பில் அவனைக் கண்ட முதற்கணம் அவள் உணர்ந்தாள், அதுவரை அவளுக்குள் இருந்த பதற்றம் அவனைக் குறித்தே என்று. அது ஏனென்றும் அப்போது தெரிந்தது. அவனைக் கொல்ல முயன்றது எவர் என்று கண்டடைய முடியவில்லை. பாறை உச்சியிலிருந்து அவன் தவறி விழுந்திருக்கலாம் என்றுதான் சுக்ரரும் பிறரும் எண்ணினர். அவ்வாறு தவறி விழக்கூடியவன் அல்ல அவன் என அவள் அறிந்திருந்தாள். வேங்கைகளின் பிழையாத கால்நுண்மை கொண்டவன். அவனை எவரோ கொல்ல முயல்கிறார்கள் என்று தனித்திருக்கையில் மிக ஆழத்தில் ஒரு எண்ணம் உறுதியாக சொன்னது. மரத்தரையில் செவிவைத்து படுத்திருக்கையில் அப்பாலெங்கோ பேசும் குரல் சொல்புரியாது தலைக்குள் கசிந்து செல்வதுபோல.
எதன் பொருட்டு? எதன் பொருட்டு அவன் வந்திருக்கிறான்? சஞ்சீவினிக்காக என்று சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் எண்ணுவது அவளுக்கு தெரிந்திருந்தது. அவ்வாறு எண்ணுவதற்கே அனைத்து வழிகளும் இருந்தன. ஆனால் அவள் அவ்வாறு எண்ண விழையவில்லை. அதனாலேயே அவ்வாறல்ல என்பதற்கான நூறு செல்வழிகளை உருவாக்கிக் கொண்டிருந்தாள். ஒன்றை மறுத்தாலும் பிறிதொன்றுக்கே கடக்க முடிந்தது. அத்தனை சொற்களையும் கொண்டு தன்னுள்ளத்தை அவ்வாறே பயிற்றுவித்தாள். ஆயினும் அந்த ஐயமும் எங்கோ எஞ்சியிருந்தது. புல்விதையையும் ஐயத்தையும் முற்றிலும் அகற்ற எவராலும் இயலாது என்று இளவயதில் கேட்ட முதுமொழியை எண்ணிக்கொண்டாள்.
வேங்கைகள் கசனைக் கண்டதும் பெண்மைநிறைந்த அசைவுகளுடன் அணுகி அவன் உடலில் உரசியபடி சுழன்று, தாவி கால்தூக்கி எழுந்து, தோள் தழுவி மடியில் படுத்துப் புரண்டு மகிழ்வொலி எழுப்பி, வால் சுழற்றி, பொய்க்கடி கடித்து, போலிச் சீறல் எழுப்பி மகிழ்வு கொண்டாடின. அவன் அவளருகே வந்து “இன்று முன்னதாகவே மீண்டுவிட்டேன்” என்று சொன்னபோது ஏன் அந்த சீற்றம் தன்னுள் எழுந்ததென்று அவளுக்கு புரியவில்லை. கடுத்த முகத்துடன் “நன்று” என்றபின் திரும்பி தன் குடிலுக்குள் சென்றுவிட்டாள். அவள் உணர்வு மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் சில கணங்கள் நின்றுவிட்டு அவன் தன் குடிலுக்கு சென்றான்.
பிற்பகல் முழுக்க அவள் தன் அறைக்குள் முழங்காலை கட்டிக்கொண்டு சுவர் மூலையில் அமர்ந்திருந்தாள். பின்னர் அங்கேயே படுத்து காலிடுக்கில் கைகளை புதைத்துக்கொண்டு விழிமயங்கினாள். அவனிடம் ஏன் அச்சீறிய முகத்தைக் காட்டினேன்? ஏனெனில் இவன் நிலைகுலையச் செய்கிறான். உளம்தவித்து நான் விழையும் முற்றுறுதி ஒன்றை அளிக்க மறுக்கிறான். எழுந்துசென்று அவனை பற்றித்தூக்கி “சொல், என்னுள் நுழையாது உன்னுள் எஞ்சியிருப்பதென்ன…?” என்று கேட்கவேண்டும். ஆனால் ஒருபோதும் அதை கேட்டுவிட முடியாது. இப்புவியில் அனைத்து மகளிரும் ஆண்களிடம் கேட்பது அதைத்தான். அத்தனை உளச்சொல்லையும் பெண்களுக்கு அளித்துவிடும் ஆணென ஒருவன் இருக்கக்கூடுமோ? இருந்தால் அந்தப் பெண் அவனிடம் மேலும் எதை கேட்பாள்?
அந்தியிருள் பரவி சீவிடுகளின் ஒலியெழத் தொடங்கியதும் அவள் எழுந்து பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவி கூந்தலைச் சீவி முடிந்துகொண்டாள். நீராடலாம் என்று தோன்றியது என்றாலும் சோம்பலால் அதை ஒழிந்தாள். சேடி வந்து “உணவருந்துகிறீர்களா?” என்று கேட்டபோது வேண்டாமென்று கையை அசைத்தாள். குடிலின் பின்பக்கம் சிறு திண்ணையில் அமர்ந்து குடில் வளைப்புகளின் எல்லைக்கு அப்பால் குறுங்காட்டில் பறவைக்குரல்கள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
மின்மினிகள் எழுந்து இருளுக்குள் சுழன்று பறந்தன. காட்டு எருதொன்று காட்டின் எல்லையிலிருந்து வெளிவந்து அவளை நோக்கியது. அத்தனை தொலைவிலேயே அதன் விழிகள் மின்னித் திரும்புவதை அவள் கண்டாள். தலை குலுக்கி, செவிகளை உடுக்கென ஒலிக்கவிட்டு, எடைமிக்க காலடிகளை தூக்கி வைத்தது எருது. அதன் கால்பட்டு புரண்ட மட்கிய மரமொன்றிலிருந்து தழல்போல மின்மினிகள் எழுந்து காற்றில் சுழன்று சிதறி மறைந்தன. தோழி மீண்டும் வந்து “உணவருந்தவில்லையா, தேவி?” என்றாள். “வேண்டியதில்லை” என்று சொல்லி எழுந்து குடிலுக்குள் சென்றாள்.
மெல்லிய உறுமலோசை கேட்க சாளரம் வழியாக நோக்கியபோது கசன் தன் குடிலுக்கு முன்னால் வேங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் கால்களை அசைக்க அவற்றை இரையென நடித்து வேங்கைகள் பாய்ந்துசென்று உகிர் உள்ளிழுக்கப்பட்ட பூங்கால்களால் பற்றி பல் படாமல் கடித்து உறுமியபடி இழுத்து உதறி விளையாடின. மஞ்சத்தை விரிக்காமலேயே அவள் படுத்துக்கொண்டாள். மென்சேக்கை மீது முகத்தை அழுத்தி கைகளை தலைமேல் வைத்து இருளுக்குள் தன்னை புதைக்க முயன்றாள். துயில் வரவில்லை என்றாலும் விரைந்தோடிய எண்ணங்கள் ஒவ்வொன்றாக தயங்கி நின்றன. பொருளிலாச் சொற்களென சித்தம் சொட்டிக்கொண்டிருந்தது.
பிறகெப்போதோ விழித்துக்கொண்டபோதுதான் அனலோசையை கேட்டாள். விழிப்பதற்கு முன்பே கனவில் கசனுடன் அவள் நடந்து சென்று கொண்டிருந்தபோது காடு பற்றிக்கொண்டு தழல்மணம் எழுந்ததையும் செஞ்சுடர் பட்டுக்கொடி பறப்பதுபோல் ஓசையிட்டதும் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே தீயா என அரைத்துயில் கொண்ட உள்ளம் திகைத்தது. அதற்குள் சக்ரனும் பிறரும் எழுப்பிய குரலை அவள் கேட்டாள். பதறியபடி கதவைத் திறந்து வெளிவந்தபோது கசனின் குடில் எரிந்து கூரை தரை நோக்கி அமிழ்ந்துவிட்டிருந்தது. சுவர்கள் எரிந்து அதன்மேல் விழுந்தன. குடில்களிலிருந்து அலறியபடி ஓடிவந்த அனைவரும் மரக்குடங்களும் குடுவைகளும் கொண்டு நீரள்ளி சூழ்ந்திருந்த பிற குடில்களின் கூரைகளில் வீசினர். அவன் அக்குடிலுக்குள் இல்லை என அவள் அப்போதே உணர்ந்துகொண்டாள்.
மெல்லிய ஒலியொன்றைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். எழுந்து நின்று காட்டையே உற்று நோக்கினாள். அது வேங்கைகளின் உறுமல் என தெரிந்தது. ஆனால் மிக மெல்ல ஒரு சிறு வண்டு காதோரம் சென்றதைப்போலவே அது ஒலித்தது. மீண்டும் செவிகூர்ந்தபோது அவ்வொலி கேட்கவில்லை. ஆனால் அது செவிமயக்கு அல்ல என உறுதியாகவே தெரிந்தது. காட்டுக்குச் செல்லும் பாதையை நோக்கி சென்றாள். “எங்கு செல்கிறீர்கள், தேவி?” என்றான் ஒருவன். ஒன்றுமில்லை என்றபடி அவள் இடைவழியினூடாக நடந்து காட்டின் விளிம்பை சென்றடைந்தாள்.
அணுகியபோது வேங்கைகளின் உறுமலை அவள் கேட்டாள். அச்சிறு ஒலியிலேயே அவள் உள்ளம் அச்சம் கொண்டது. அவளறியாத வேறு வேங்கைகள் அங்கே காட்டிற்குள் இருப்பதாகத்தான் தோன்றியது. இருளுக்கு விழிபழகுந்தோறும் மரங்களின் கிளைகள் தெளிந்தன. பின்பு இலைகளின் வான்விளிம்பு துலங்கியது. பாதை செந்நிறத் தடமாக வளைந்து சென்றது. காட்டின் எல்லையை அவள் அடைந்தபோது உள்ளே புதர்களுக்குள் மூன்று வேங்கைகளும் படுத்திருப்பதை கண்டாள். அவள் காலடியோசை கேட்டு ஒன்று எழுந்து அவளை நோக்கி செவிகோட்டியது. வலது முன்காலை நீட்டி வாய்திறந்து வெண்பற்கள் தெரிய உரக்க உறுமியது. அக்கணத்திலேயே அவள் அறிந்தாள், அவை கசனைக் கொன்று உண்டுவிட்டன என்று.
திரும்பி பாதையினூடாக ஓடி குடில்தொகையை அடைந்தபோது கசனின் குடில் எரிந்து முடிந்திருந்தது. அதன்மேல் மணலையும் நீரையும் வீசி தழல்களை அணைத்துவிட்டிருந்தனர். நீராவியும் கரிப்புகையும் கலந்த மணம் சூழ்ந்திருந்தது. அவள் அங்கு கூடிநின்றவர்களை உந்திக் கடந்து சுக்ரரின் குடிலை அடைந்து படிகளில் பாய்ந்தேறி அங்கு திண்ணையில் கிருதரின் அருகே நின்று எரியணைப்பதை நோக்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கைகளைப்பற்றி “தந்தையே, அவரை உயிர்பிழைக்க வையுங்கள், உடனே” என்றாள். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்?” என்று சுக்ரர் கேட்டார்.
அவர் கைகளை உலுக்கியபடி மூச்சிரைக்க உடைந்த குரலில் “அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை அவை உண்டுவிட்டன” என்றாள். “எவை?” என்றார் சுக்ரர். “வேங்கைகள். அவை அவரை உண்டுவிட்டன. எந்தையே, அவரை மீட்டளியுங்கள். அவரை மீட்டளியுங்கள். இக்கணம் இங்கு அவர் எழவில்லையென்றால் நாளை புலரியில் நானிருக்க மாட்டேன். தெய்வங்கள்மேல் மூதன்னையர்மேல் ஆணை!” என்றாள்.
அவள் முகத்தை மெல்லிய ஒளியில் பார்த்தபோது சுக்ரர் அவள் உணர்வுகளை முழுக்க உணர்ந்துகொண்டார். அவள் கண்ணீரிலிருந்தே கசன் உயிருடனில்லையென்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. “அஞ்சாதே, வா! அவனை நான் மீட்கிறேன்” என்றார். தன் பீடத்தில் சென்று அமர்ந்த பின்னரே தேவயானி சொன்னது என்னவென்பதை உளம் வாங்கிக்கொண்டார் சுக்ரர். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன்னுடைய வேங்கைகளா?” என்றார். “ஆம். அவைதான். நான் நன்கறிவேன்” என்றாள். “நீ பார்த்தாயா?” என்றார். “பார்த்தேன்” என்றாள். “அவனை அவை உண்டனவா?” என்றார். “அவற்றின் கண்களை பார்த்தேன்” என்றாள்.
அவர் விழிசுருக்கி கூர்ந்துநோக்கி “கண்களையா?” என்றார். “கண்களை ஏந்திவரும் உடலையும்தான். அவைதான். அவை உண்ணும். நான் அறிவேன்” என்றாள். வாய் சற்று திறந்திருக்க அசைவிழந்து அவளையே நோக்கிக்கொண்டிருந்தார் சுக்ரர். பின்னர் கலைந்து “ஆம். உண்ணக்கூடும்” என்றபின் அருகிருந்த அகல்சுடரை தன்னருகே இழுத்துவைக்கச் சொன்னார். அவளால் அதை எடுக்க முடியவில்லை. கையிலிருந்து சுடருடன் நடுங்கி எண்ணெய் சிந்தியது. அதை தரையில் வைத்து தள்ளி அவர் அருகே கொண்டுவந்தாள். சுடரையே நோக்கிக்கொண்டிருந்த பின் அவர் திரும்பி “சஞ்சீவினியை சொன்னால் அவை மூன்றும் வயிறுகிழிந்து உயிர் துறக்கும்” என்றார். “சாகட்டும். அவை செத்தொழிந்தால் மட்டுமே எனக்கு விடுதலை. அவை அழியட்டும்” என்று பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் விரல்சுருட்டி இறுக்கிக்கொண்டு அவள் சொன்னாள்.
அரைக்கணம் விழிநிமிர்த்தி அவளை நோக்கியபின் “நன்று” என்ற சுக்ரர் பெருமூச்சுவிட்டார். கண்களை மூடி சுடர் நோக்கி கைநீட்டி சஞ்சீவினியை சொன்னார். மெல்லிய வலி முனகலொன்று அவளிடம் எழுந்ததைக் கேட்டு கண்களைத் திறந்து அவளை பார்த்தார். அவள் கழுத்து நரம்புகள் இழுபட்டிருந்தன. வலிப்பு வந்து பக்கவாட்டில் சரிந்து விழுபவள்போல் தெரிந்தது. “என்ன செய்கிறது?” என்று அவர் கைநீட்டி அவள் தொடையை தொட்டார். அவள் விழி திறந்து “ஒன்றுமில்லை” என்றபின் பெருமூச்சுவிட்டபோது உடல் முழுக்க மெல்லிய வியர்வை பூத்திருப்பதை நோக்கினார். “என்ன ஆயிற்று?” என்றார்.
“அவை இறந்துவிட்டன” என்றாள். “எப்படி தெரியும்?” என்று கேட்ட சுக்ரர் அக்கேள்வியை கலைக்க விரும்புபவர்போல தலையசைத்து “நன்று, அவன் உடனே வந்துவிடுவான். அவன் உடல் அழியவில்லை” என்றார். அவள் எழுந்து வெளியில் சென்று பார்ப்பாள் என்று அவர் எண்ணினார். அவள் கால்களைக் குவித்து அதன்மேல் கைகளைக் கட்டி முட்டுகளில் முகம் அமர்த்தி அமர்ந்திருந்தாள். எழுந்து அவள் குழல் கற்றைகளைத் தொட்டு வருடி என்ன செய்கிறது உனக்கு என்று கேட்க வேண்டுமென்று சுக்ரர் எண்ணினார். ஆனால் அவராலும் தன் இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.
சத்வர் உள்ளே வந்து “காட்டுக்குச் சென்றிருந்த கசன் திரும்பி வந்துவிட்டான். அவன் குடில் எரிந்ததை பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்றார். “அவனை இங்கு வரச்சொல்க!” என்றார் சுக்ரர். “சரி” என்று சத்வர் திரும்ப வெளியே செல்வதற்குள் கூரிய வேலால் குத்தப்பட்டதுபோல உடல் துடிக்க எழுந்து தேவயானி ஆடையோசையும் அணிகளின் ஓசையும் எழ பாய்ந்து குடிலைவிட்டு வெளியே சென்று இருளில் இறங்கி ஓடினாள். கைகளை ஊன்றி எழுந்த சுக்ரர் குடில் வாயிலில் நின்று நோக்கியபோது எரிந்த குடில் அருகே நின்றுகொண்டிருந்த கசனை நோக்கி பாய்ந்தோடி அவன் தோள்களை தாவிப் பற்றிக்கொண்ட தேவயானியை கண்டார்.
கசனின் கைகளைப்பற்றி தன் தோளிலிட்டு இடைவரை வளைத்து அவன் தோளில் தலைசேர்த்து அன்னைக்குரங்குடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிக்குரங்கென ஆகி நின்றிருந்தாள் தேவயானி. அவன் அவள் தலைமயிரைக் கோதியபடி “என்ன இது? ஏன் அழுகிறாய்?” என்றான். ஓசையின்றி விம்மியபடி “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “சொல்! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் அழுகிறாய்?” என்று அவன் கேட்டான். “எங்கு சென்றிருந்தீர்கள்?” என்றாள்.
“அறியேன். காட்டில் விழித்துக்கொண்டேன். என்னைச் சுற்றி நம் வேங்கைகள் மூன்றும் இறந்துவிட்டவைபோல் கிடந்தன. தொலைவில் இந்தத் தீ எரிந்து அணைவதைக் கண்டேன். எழுந்து இடைவழியினூடாக நடந்து இங்கு வந்தேன்” என்றான். “காட்டிற்கு எப்படி சென்றீர்கள்?” என்றாள். “அது எனக்கு நினைவில்லை” என்றபின் “நேற்று குடிலில் படுத்தேன். ஆழ்ந்த துயிலில் புகை மணத்தை அறிந்தேன். மெல்லிய வெண்பட்டாடை ஒன்று பறந்து என்மேல் விழுந்தது. என் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் அது எனக்குள் புகுந்தது. என் தலை கல்லால் ஆனதுபோல் ஆயிற்று. கைகால்கள் எடைகொண்டு என்னால் அசைக்க முடியாமல் ஆயின. அப்போது என் அறைக்குள் மூன்று புலிகள் நுழைந்தன” என்றான்.
“புலிகளா?” என்றாள். “ஆம். எரிதுளிபோல மின்னும் அவற்றின் விழிகளை கண்டேன்” என்றபின் தலையை வலக்கையால் மெல்ல தட்டி “ஆனால் அவை மனிதர்கள்போல் எழுந்து நடந்தன. என்னை கூர்ந்து நோக்கின. என் உள்ளங்காலை ஒன்று முகர்ந்தது. பிறிதொன்று என் முகத்தை முகர்ந்தபோது அதன் மூச்சுக்காற்று ஊன்மணத்துடன் நீராவியுடன் என்மேல் படிந்தது. பின்னர் அவை அறைக்குள் நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டன” என்றான். தேவயானி “என்ன பேசிக்கொண்டன?” என்றாள். “தங்களுக்குள் பேசிக்கொண்டன, பெண் குரலில்” என்றான்.
“பெண் குரலிலா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அதில் ஒரு புலி என்னிடம் ஏதோ சொன்னது. பிற இரு புலிகளும் அப்புலியை கடிந்தன. பிறகு அவை மூன்றும் மாறி மாறி என்னிடம் பேசத்தொடங்கின.” அவன் சொல்வதை அவள் விழிகள் கூம்ப கேட்டுக்கொண்டிருந்தாள். “மூன்று புலிகள். ஒன்று சிறுமிபோல பேசியது. பிறிதொன்று மூதன்னையைப்போல. பிறிதொன்றின் குரல் இளங்கன்னியின் குரல். பின்னர் அவை மூன்றும் சேர்ந்து என்னைக் கவ்வி எடுத்துக்கொண்டன” என்றான். “கொல்ல விழைந்தனவா?” என்றாள். “கவ்வின என்றால்… உண்பதற்காக அல்ல. குழந்தையை பல்படாமல் கவ்வுமே அதைப்போல. என்னை அவை காட்டுக்குள் கொண்டு சென்றன.”
அவள் “நீங்கள் பிறிதொன்றையும் நினைவுகூரவில்லையா?” என்றாள். “இல்லை” என்றான் அவன். “வருக!” என்று அவனை தன் குடிலுக்கு அழைத்துச் சென்றாள். “இன்று இங்கு தங்குங்கள்.” அவன் மஞ்சத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான். “நான் எங்கு வாழ்கிறேன் என்பதே அடிக்கடி குழம்பிப்போகிறது. நான் இங்கிருப்பது ஒரு கனவு என்றும் பிறிதெங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் கனவில் அந்த மெய்வாழ்வே இருக்கிறது. அதில் இவ்வாழ்வை கனவு காண்பேன். ஆனால் இந்தப் புலிகள் அங்கும் இருக்கின்றன. மூன்று வேங்கைகள், ஒளிரும் விழிகள் கொண்டவை” என்றான்.
“களைத்திருக்கிறீர்கள். இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “வேண்டாம். நான் வேறேதாவது குடிலுக்கு செல்கிறேன்” என்றான். “படுத்துக்கொள்ளுங்கள்!” என்று அவள் அன்னையின் குரலில் அதட்ட “சரி” என்று அவன் மஞ்சத்தில் உடல் நீட்டி படுத்து கண்களை மூடிக்கொண்டான். “ஏதேனும் அருந்துகிறீர்களா?” என்று அவள் கேட்டாள். “ஆம். நன்கு விடாய் கொண்டிருக்கிறேன். இதுவரை என் உடலில் இருந்த பதற்றம் அந்த விடாய்தான். நீ கேட்கும்வரை அதை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான்.
“இருங்கள்” என்று அவள் வெளியே சென்று அடுமனைச்சேடி ஒருத்தியை அழைத்து நறும்பால் கொண்டு வரச்சொன்னாள். மஞ்சள்தூளும் மிளகுமிட்டு வெல்லத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பாலை மண்கலம் ததும்ப கொண்டுவந்து கொடுத்தாள் சேடி. அதை உள்ளே கொண்டுவந்து அவனிடம் அளித்து “அருந்துங்கள்” என்றாள். “ஆம், இதை அருந்துவது போலவே கனவு கண்டேன்” என்றபடி அவன் அதை வாங்கினான். “எப்போது?” என்று அவள் கேட்டாள். “இப்போது. நான் அதை அருந்திக்கொண்டிருக்கும் போதுதான் உன் காலடிகள் கேட்டன. விழித்துப் பார்த்தால் கலத்துடன் நீ வருகிறாய்.” பின்பு மெல்லிய ஓசையெழ கலத்தின் பெரும்பகுதி பாலைக் குடித்து அப்பால் வைத்தான். வாயை துடைத்தபின் “உடல் முழுக்க எரிந்த அனல் அணைவதுபோல் இருந்தது. மிகுந்த பசியும் இருந்திருக்க வேண்டும்” என்றான்.
அவள் “உங்களுக்கு அகிஃபீனா புகை போடப்பட்டிருக்கிறது” என்றாள். “எனக்கா?” என்றான். “ஆம், ஆகவேதான் இனிப்புவிடாய். நீங்கள் விரும்பி அதை இழுத்திருக்க மாட்டீர்கள். உங்கள் குடிலுக்குள் எவரேனும் புகைக்கலமாக அதை கொண்டு வைத்திருக்கலாம்.” அவன் “எவர்…?” என்றான். “அவ்வறைக்குள் வந்தவர்களைத்தான் நீங்கள் புலிகளாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.” “ஆனால் ஏன் அவர்கள் புலிகளாக வரவேண்டும்?” என்றான். “நீங்கள் புலிகளுடன் விளையாடிவிட்டுச் சென்றதனால் இருக்கலாம். புலிகளையே எண்ணிக்கொண்டு படுத்திருப்பீர்கள்” என்றாள். “அவர்கள் உங்களைக் கொன்றிருக்கிறார்கள்.”
“என்னையா?” என்று அவன் உரக்க கேட்டான். “ஆம். உங்களை மயங்கவைத்து கொன்றிருக்கிறார்கள். குருதியின் மணம் ஏற்றதால் வேங்கைகள் உள்ளே வந்திருக்கின்றன. உங்களை வேங்கைகளுக்கு உணவாக்கியிருக்கிறார்கள்.” அவன் “நான் எப்படி மீண்டு வந்தேன்?” என்றான். “வேங்கையின் வயிற்றைக் கிழித்து வந்திருக்கிறீர்கள்.” அவன் “ஆம், புரிகிறது. அவை அங்கு இறந்துதான் கிடந்தன என்று தெரிகிறது” என்றான்.
மீண்டும் படுத்துக்கொண்டு “நான் உயிர்மீள வேண்டுமென்பதற்காக அவை இறக்க வேண்டியிருந்தது. இனிய விலங்குகள், தங்கள் முழுதுள்ளத்தை எனக்களித்தன” என்றான். “ஆனால் அவை உங்களை உண்டன” என்றாள் தேவயானி. “குருதி விடாயென்பது அவற்றின் உடலில் உறைகிறது. அவற்றின் ஆன்மா எதையும் அறியாது” என்றான் கசன். “கலத்தின் அழுக்கு பாலிலும் உண்டு என்பார்கள். புலியின் உடலில் ஆன்மா புலி வடிவில் வாழ்கிறது” என்றாள். அவன் அதை கேட்காததுபோல் நீள்மூச்சுவிட்டு “அவற்றின் முகத்தில் மாறாக் குழந்தைத்தன்மை ஒன்றிருந்தது. அவற்றில் ஒன்றை என் மகள் என எண்ணிக்கொள்வேன்” என்றான்.
அவள் கைகளைக் கட்டியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “துயிலுங்கள்” என்றாள். “இன்றிரவு அவற்றை எண்ணாமல் என்னால் துயில முடியவில்லை” என்று கசன் சொன்னான். “அவற்றின் விழிகள் மிக அருகிலென்று தெரிகின்றன. ஆறு அருமணிகள். கைநீட்டினால் அவற்றை தொடமுடியும். ஆனால் மின்மினிகள்போல பறந்து சென்றுவிடுமோ என்று தோன்றுகிறது.” “வீண்பேச்சு. கண்ணைமூடி படுத்திருங்கள். துயிலுங்கள்” என்றாள். “துயிலவேண்டும். இந்த சித்தப்பெருக்கிலிருந்து துயிலொன்றே என்னை மீட்கும்” என்றபின் “தேவயானி” என அழைத்தான். “என்ன?” என்றாள்.
“அவை என்னை எத்தனை விரும்பி உண்டிருக்கும்! ஓர் உடலை உண்பதென்பது அதை முத்தமிட்டுக் கொஞ்சுவது போலத்தானே?” என்றான். அவள் “உளறவேண்டாம்” என்றபின் எழுந்து அவிழ்ந்து சரிந்த தன் கூந்தலை முடிந்துகொண்டாள். “அல்ல, ஓர் உடலை உண்பதென்பது முலையருந்துவதுபோல. அதை தன் உடலுடன் இணைத்துக்கொள்வதுபோல. அதுவாக ஆவதைப்போல. அவை என் உடலில் சுவைத்து திளைத்திருக்கின்றன. இதுநாள்வரை அவற்றிடம் நான் கொஞ்சியபோது ஒருபோதும் அந்த இரண்டின்மையை அடைந்ததில்லை.”
“இந்தப் பேச்சு எனக்கு சலிப்பூட்டுகிறது. துயிலுங்கள். துயிலவேண்டுமென்று எண்ணுங்கள். துயில் வந்து சேரும்” என்று அவள் சொன்னாள். “ஆம், துயின்றாக வேண்டும்” என்று தனக்குத்தானே என அவன் சொல்லிக்கொண்டான். பின் கண்களை மூடி கால்களை நீட்டிக்கொண்டு “இனிய வேங்கைகள். அவ்விழிகளிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்றான். அவன் முகம் மலர்ந்தது, பின் ஆழ்ந்த துயர்கொண்டது. “அவை மிக அருகே நின்றிருக்கின்றன. என்னை முத்தமிடுகின்றன. ஊன்மணம் கலந்த வெப்பக்காற்று” என்றான். “இனியவை… என் பிறவா மைந்தர்கள்” என்றபின் பெருமூச்சுவிட்டு “இல்லை, மகள்கள்” என்றான்.