செய்திக்கட்டுரை -கடிதம்

news

 

ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம்.

“நமது செய்திக் கட்டுரைகள்” குறித்துத் தங்களின் கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையே சுவைமிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவும் இருக்கிறது. மேலும் இதழாளர்களுக்குப் பயன்படும் பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது.

பண்படுத்தவும், சரிபடுத்தவும், மேன்மைபடுத்தவும், தரமுயர்த்தவும்தாம் தாங்கள் கருத்துகளைச் சொல்கிறீர்கள். உரியவர்கள் அவற்றைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிக்கொண்டு, உங்கள் மீது வெறுப்புமிழ்வது வாடிக்கையாகி விட்டது.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்” குறளை அவர்கள் உணர்வதில்லை.

நல்ல மனதுடன்தான் தாங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கமில்லை என்பதை நானறிகிறேன். உரியவர்களைச் சரிவிலிருந்து மீட்டுக் கைதூக்கிவிடும் பண்புதான் அது. அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது. ஆழ்ந்தும் உயர்ந்தும் பரந்தும் உள்ள உங்கள் வாசிப்பறிவு இனி எவரும் தொடமுடியாத வியப்பின் உச்சம்தான். அதனால்தான் இதுபோன்ற நெறிபடுத்தல்களை வகுத்து வழிகாட்ட முடிகிறது.

இப்படி எழுதுவதெல்லாம் சரியல்ல என்று சொல்வது பொத்தாம் பொதுவானவை. அதை எப்படி எழுத வேண்டும் என்று எடுத்துக் காட்டுகளுடன் புரிய வைப்பதுதான் வழிகாட்டும் முறை. நல்ல மனம்தான் எப்போதும் வழிகாட்டி மரமாக இருக்கும்.

இந்த ஒரு கட்டுரையே இதழியல் கல்லூரியின் மிக முக்கியமான பாடமாக இருக்கத் தகுதி வாய்ந்தது.

“சென்னை ராயப்பேட்டையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞரான திரு.வி.கல்யாணசுந்தரனார்  கூவம் ஆற்றில் தினமும் குளித்து சிவபூசை செய்வது வழக்கம்” – இது இதழியலுக்குரிய ஈர்ப்புள்ள தொடக்கம். என்ற எடுத்துக்காட்டு மிகவும் சிறப்பானது.

அடடா கூவம் ஆற்றில் குளித்தார்களா என நினைக்கும் போது, அதுவும் தமிழறிஞர் ஒருவர் குளித்து சிவபூசை செய்துள்ளார் என வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும்போது… ஈர்ப்பும் வியப்பும் நம்மை மேலும் படிக்கத் தூண்டுகின்றன.

”ஒரு நிருபரை அசோகமித்திரன் இல்லத்திற்கு அனுப்பி அங்கே அவருடைய இறுதிப்பயணம் நிகழ்ந்ததைச் சித்தரித்து எழுதுவது.ஏதோ ஒருவகையில் அது வரலாற்றுத்தருணம். பல ஆண்டுகளுக்கு பின்னரும்கூட அதற்கு அபாரமான ஆவணமதிப்பு உண்டு. உதாரணமாக புதுமைப்பித்தன் அல்லது தி.ஜானகிராமனின் இறுதிப்பயணத்தின் ஒரு சித்தரிப்பு இன்று எப்படி வாசிக்கப்படும் என எண்ணிப்பாருங்கள். [அங்கு சென்ற நண்பர்கள் எவராவது எழுதியனுப்பினால் நம் இணையதளத்திலாவது பதிவுசெய்து வைக்கலாம்]” என்றும் எழுதி உள்ளீர்கள். சரிதான். தங்களைப்போல் மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவந்த இளஞ்சேரன் என்பவர், அண்ணாவின் இறுதி நாட்களைப் பதிவு செய்துள்ளது நினைவுக்கு வருகிறது.

தினமணி, தி இந்து தமிழ்நாளிதழ் ஆகியவை மட்டுமே சொல்லத்தகுந்த தரமான நாளிதழ்களாக தமிழில் வருகின்றன. செய்திகளுக்காக தி இந்து தமிழ் நாளிதழை யாரும் வாங்குவதில்லை. அதில்வரும் செய்திக்கட்டுரைகளாலும் பிற கட்டுரைகளாலும்தாம் வாசகர்கள் பெருகி உள்ளனர். அதன் ஆசிரியர் குழுவில் ஆற்றல் வாய்ந்த ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலர் உள்ளனர். உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுச் செயல்படுத்துவார்கள் என உறுதியாக நம்புகிறேன். பிற நாளிதழ்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லவில்லை. தி இந்து நாளிதழ் தரத்தின் மீதும் ஆசிரியர் குழுவின் மீதும் தாங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதால்தான் இந்த வழிகாட்டுதல்களை வரிசைப்படுத்தி உள்ளீர்கள்.

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நேர்மையோடு கட்டுரையை எழுதுவதுதான் முதல் விதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தங்கள் நெறியுறுத்தல்களுக்கு மேலும் மெருகூட்ட இன்னும் சில நுட்ப விதிகளை அனுபவமுள்ள இதழாளர்கள் வகுக்கலாம்.

கடைசியாக ஒன்று…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் நடந்த பயிலரங்குகளுக்குச் சென்றுள்ளேன். முந்தைய நூற்றாண்டுகளில் பலர்கூறிப் புளித்துப்போன, சலித்துப்போன கருத்துகளையே நகலெடுத்துப் பேசுகிறார்கள். சிலர் அதுகூடப் பேசாமல் சொதப்பி விட்டு, அறிஞர் தாமென மிதப்பில் திளைக்கிறார்கள். முனைவர் பட்டமும் பல்லாயிரம் சம்பளமும் பெற்றுள்ள அவர்களோடு ஒப்பிடும் போது, நம் இதழாளர்களும் கட்டுரையாளர்களும் உயர்ந்திருக்கிறார்கள்.

அன்புடன்

கோ. மன்றவாணன்

***

அன்புள்ள மன்றவாணன் அவர்களுக்கு,

அப்படியெல்லாம் எவரும் இதையெல்லாம் நல்லநோக்குடன் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதே என் அனுபவம். இவ்வகையான எதிர்க்கருத்துக்கள் காழ்ப்புடனும் கசப்புடனும் மட்டுமே பார்க்கப்படும். பலவகையான எதிரிகளையே உருவாக்கும். ஆனால் வாசகர் தரப்பில் ஓர் எதிர்பார்ப்பு உருவாகும். அது முக்கியமானது. அத்துடன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு அது உதவக்கூடும். எழுதப்பட்டு இருக்கட்டுமே என எண்ணினேன், அவ்வளவுதான்

ஜெ

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
அடுத்த கட்டுரைநீலஜாடி -கடிதம்