57. குருதித்தழல்
ஓநாய் வயிற்றிலிருந்து மீண்டு வந்த கசன் ஆளுமையில் மிக நுட்பமான மாறுதல் இருப்பதை தேவயானி உணர்ந்தாள். அது என்னவென்று அவளால் உய்த்துணரக்கூடவில்லை. அவன் முகத்தின் மாறாச்சிரிப்பும், அசைவுகள் அனைத்திலும் இளமையும், குரலின் துள்ளலும் அவ்வாறேதான் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் பிறிதொன்று வந்து சேர்ந்துவிட்டிருந்தது. அது ஓர் ஓநாய்த்தன்மை என்று எப்போதோ ஒருமுறை மிக இயல்பாக அவள் உள்ளம் சொல்லாக்கிக்கொண்டது. உடனே என்ன இது என்று அவளே திகைத்தாள். தன் உள்ளம் கொள்ளும் பொய்த்தோற்றம் அது என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அச்சொல்லையே அவள் மீண்டும் மீண்டும் சென்றடைந்துகொண்டிருந்தாள்.
ஓநாயின் நோக்கல்ல, உடலசைவல்ல, ஓநாயென எண்ணுகையில் எழும் எதுவுமே அல்ல, ஆனால் ஓநாயென்று உளமுணரும் ஒன்று அவனிடம் குடியேறிவிட்டிருந்தது. அவன் உண்ணுகையில் அப்பால் நின்று அவள் நோக்கினாள், ஓநாயின் பசி அவனில் உள்ளதா என்று. நிலவில் அவன் அமர்ந்திருக்கையில் தன் குடிலில் நின்று தூணில் மறைந்து நின்று நோக்கினாள், அது ஒநாயின் தனிமையா என. என்ன செய்கிறோம், பித்தியாகிவிட்டோமா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். இல்லை இல்லை என நூறுமுறை மறுத்துக்கொண்டாள். ஆனால் அவன் திரும்பும் ஓர் அசைவில் ஓரவிழியின் மின்னில் ஓநாய் எழுந்து மறைந்தது.
இறந்தவன் மீள்வதென்பது இயல்பானதல்ல. மானுடம் அறியாத வேறெங்கோ சென்று மீண்டிருக்கிறான். அவ்வுலகத்தின் இருளோ கெடுமணமோ ஒன்று அவனில் படிந்திருக்கிறது. சென்றவர்கள் மீளலாகாதென்றே பிரம்மத்தின் பெருநெறியைக் கடந்து வந்திருக்கிறான். ஆனால் அதுவும் பிரம்மம் அளித்த நுண்சொல்லால்தானே என எண்ணம் பகடைபுரண்டது. வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழ்ந்ததனால் உருவாகும் ஐயமா இது? சற்றே வண்ணம் மாறிய உணவைக்கண்டு உருவாகும் ஒவ்வாமை போலவா? எனக்குள் நானே இதை தொட்டுத் தொட்டு வளர்த்துக்கொள்கிறேனா?
அந்த ஐயம் உருவானதால் மேலும் வெறியுடன் அவள் அவன் மீது ஒட்டிக்கொண்டாள். மேலும் மேலும் தன் அன்பை அவன் மேல் குவித்தாள். அவன் நினைவன்றி மறு உள்ளமின்றி இரவும்பகலும் இருந்தாள். ஓரிரு நாட்களில் தன் உள்ளத்தை அது வெறும் எண்ணமயக்கமே என்று நம்பவைக்க அவளால் முடிந்தது. ஆனால் ஒருமுறை வகுப்பு முடிந்து அவன் எழுந்துபோனதும் சுக்ரர் கிருதரிடம் “ஓநாய்க்குட்டியென மாறிவிட்டிருக்கிறான். ஒருதுளிக் குருதியைக்கூட நூறுமுறை நக்கும் அதன் பசியும் சுவையும் அவனுக்கு சொல்லில் அமைந்துள்ளது” என்றார். அவள் உள்ளம் நடுங்கிவிட்டது. கிருதர் “ஆம், இப்போது ஒவ்வொரு சொல்லிலும் புதிய வாயிலொன்றை திறக்க முடிகிறது அவனால்” என்றார்.
அவள் தலைகுனிந்து தன் கைநகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். “இத்தனை விரைவில் கற்றால் இவன் கற்பதற்கு இனி இப்புவியில் ஏதும் எஞ்சாது” என்று சுக்ரர் சொன்னார். “எது மையமோ அங்கே சென்று நிற்பான்” என்றார் கிருதர். அவள் ஒன்றும் சொல்லாமல் சுக்ரரின் காலைத்தொட்டு தலையில் சூடியபடி எழுந்து வெளியே சென்றாள். அவர் அவளை நோக்கிவிட்டு புருவம்தூக்கி கிருதரை நோக்கினார். கிருதர் “அவளிடம் மெல்லிய அமைதியின்மை ஒன்று குடியேறியுள்ளது, ஆசிரியரே” என்றார். “அவளிடமா? அவன் மேல் பித்தாக அல்லவா அலைகிறாள்?” என்றார். “ஆம் கட்டற்ற பெரும் காதல்மயக்கில் இருக்கிறாள். அவளுள் அவனன்றி வேறு எதுவுமே இல்லை என்பதை விழிகள் காட்டுகின்றன. ஆனால் அடியாழத்தில் ஓர் அமைதியின்மை இருக்கிறது.”
சுக்ரரால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “அவள் ஐயம் கொண்டிருக்கலாம்” என்றார் கிருதர். “என்ன ஐயம்?” என்று சுக்ரர் கேட்க கிருதர் “பெருங்காதல் அதன் பெருவிசையாலேயே இயல்பற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. இயல்பற்ற ஒன்று எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற ஐயம் அதற்கே எழுகிறது. விரைந்தெழுவது நுரை. மலைப்பாறைகளின் உறுதி அதற்கில்லை என்பதை அதுவே அறியும்” என்றார்.
“ஏன் ஒரு நுரையென இருக்கவேண்டும் அது? உலகியல் உணர்வுகள் அனைத்தும் குறுகியவை, எனவே நிலையற்றவை என்று நாம் கற்றிருக்கிறோம். ஆனால் எப்போதும் அது அவ்வண்ணமே ஆகவேண்டும் என்பதில்லை. நுரையென எழுந்து பாறையென்றாகி முடிவிலிவரை நீடிக்கும் ஒரு பெருங்காதல் இம்மண்ணில் நிகழக்கூடாதா என்ன?” என்றபின் சுக்ரர் நகைத்து “பிரம்மனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என்றார். கிருதர் மெல்ல புன்னகைத்தார்.
கசனிலிருந்த மாற்றத்தை சக்ரனும் உணர்ந்தான். காட்டில் அவனுடன் உரையாடியபடி தேன் சேகரிக்கச் செல்லும்போது அவன் மணத்தை அறிந்ததுமே மிகத்தொலைவில் ஓநாய்கள் ஊளையிடத்தொடங்குவதை அவன் கேட்டான். ஓரே ஒருமுறை தன்னியல்பாக அவன் முன் தோன்றிய ஓநாய் ஒன்று வேங்கைமுன் வந்துவிட்டதுபோல அச்சத்தில் உறைந்து பிடரிமயிர் சிலிர்க்க முன்னங்கால் தூக்கி நடுங்கி நின்றது. பின்னர் உயிர்கொண்டு தீ பட்டதுபோல துடித்து துள்ளித் தாவி புதர்களில் விழுந்து புரண்டெழுந்து ஓடி மறைந்தது. நெடுந்தொலைவிற்கு அதன் துயர்மிகுந்த ஊளை கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கேட்டு மலைமடிப்புகளிலும் மரப்பொந்துகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான ஓநாய்கள் ஓலமிடத்தொடங்கின.
அன்று மாலை சக்ரன் தன் தோழரிடம் சொன்னான் “அவன் ஒநாய்களை கிழித்தெழுந்ததை அவை அறியும். நினைவாக அல்ல, மணமாக இருக்கலாம், அல்லது பிறிதொரு புலனுணர்வாக இருக்கலாம். ஆனால் ஓநாய்கள் அஞ்சும் ஒன்று அவனில் குடியேறியுள்ளது. ஒநாய்கள் அனைத்திலும் வாழும் ஒன்று. பேருருவம் என்று அல்லது செறிவு என அதை சொல்லாக்குவேன். அது என்னையும் அச்சுறுத்துகிறது.” “நமக்கு இன்னும் நெடுநாள் வாய்ப்பில்லை” என்றான் சூக்தன். “மீண்டும் அரசரின் ஆணையை சுகர்ணர் அளித்திருக்கிறார். இன்னும் அவன் கொல்லப்படவில்லை என்ற செய்தியை சொன்னபோது மீண்டும் ஒருமுறை இச்செய்தியைக் கேட்க அரசர் விரும்பமாட்டார் என்றார். அவ்விழிகள் என்னை சிறுமையுறச் செய்தன.”
“ஒருமுறை பிழைத்த முயற்சி என்பது மீண்டும் அதை பழுதறச்செய்வதற்கான வாய்ப்பென்று கொள்வோம். இம்முறை ஒவ்வொன்றையும் எண்ணி இயற்றுவோம். நான் முன்னரே சொன்னதுதான், எரியூட்ட இயலாது. புதைப்பது பயனற்றது. ஓநாய்கள் அவன் உடலை தொடுமென்று தோன்றவில்லை” என்றான் பிரபவன். “மேலும் வெம்மை கொண்ட எரி. அது என்ன?” விறகுப்புரையில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மிகத் தொலைவில் வேங்கைகளின் ஒலியை சக்ரன் கேட்டான். பின்னர் தனக்குள் என “அவை வெறும் விலங்குகள்” என்றான்.
“எவை?” என்றான் பிரபவன். “அந்த வேங்கைகள். சென்ற முறை அவன் மறைந்துவிட்டதை முன் உணர்ந்து சொன்னவை அவை. ஓர் இரவுப்பொழுது கடந்திருந்தால் அவன் உடல் ஓநாய்களின் வயிறுகளில் எரிந்தழிந்திருக்கும். மீண்டு வந்திருக்கமுடியாது. இம்முறை அவற்றுக்கு அவ்வாய்ப்பை நாம் அளிக்க வேண்டியதில்லை” என்றான். “எப்படி?” என்றான் சூக்தன். “அவனை அவை விரும்புகின்றன. விரும்பியவற்றை அவை உண்ணவும் கூடும்” என்றான் சக்ரன். “குருதி! அவற்றிலிருந்து அவை தப்ப முடியாது. இக்குடிலுக்குள் வந்து இவ்வாறு வளர்ந்து இவை அடைந்த அறிவனைத்தும் இப்பிறவிக்குரியவை. அவற்றின் குருதி யுகங்களின் தொன்மைகொண்டது. அக்குருதி தேடுவது குருதியையே.”
மறுநாள் இரவு கசன் தன் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கையில் ஓசையற்ற காலடிகளுடன் அவர்கள் குடிலை அடைந்தனர். ஒருவன் அகிஃபீனா பொடியிட்ட புகை கொண்ட தூபக்கலத்தை சாளரத்தினூடாக மெல்ல கசனின் துயிலறைக்குள் வைத்தான். மெல்லிய புகை எழுந்து அறையைச் சூழ ஆழ்ந்து அதை உள்ளிழுத்து மூச்சில் கலந்து கொண்டான் கசன். இருமுறை அவன் தும்மியபோது அவர்கள் திடுக்கிட்டு அசையாமல் நின்றனர். அவனுக்கு விழிப்பு வந்துகொண்டே இருந்தாலும் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திக்கொண்டது. மெல்ல உடல் தளர்ந்து ஆழ்துயில் கொள்ளலானான்.
அதன் பிறகு எழுவரும் கதவுப்படலைத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்தை சூழ்ந்துகொண்டனர். சூக்தன் வெளியே என்ன நடக்கிறது என்று நோக்கி நிற்க சக்ரன் தன் வாளை உருவி கசனின் தலையை வெட்டினான். ஓசையுடன் உருண்டு தலை மரத்தரையில் விழுந்தது. துள்ளி உதைத்துக்கொண்டிருந்த கால்களை பிறிதொருவன் வெட்டினான். விரல் சுருட்டி அதிர்ந்த கைகளை பிறிதொருவன் வெட்டினான். எழுவர் ஏழு வாட்களால் மிக விரைவில் அவனை சிறு சிறு துண்டுகளாக வெட்டினர்.
சக்ரன் வெளியே சென்று திண்ணையில் நின்று நோக்கினான். தேவயானியின் குடில்முன் நாவல்மரத்தடியில் குருதிமணம் அறிந்து முன்னரே எழுந்து நின்றிருந்த வேங்கைகளில் ஒன்று மெல்ல உறுமியபடி ஓர் அடி எடுத்து வைத்தது. அவன் தாழ்ந்த குரல்கொடுத்து அழைத்தான். அவற்றின் செவிகள் அவ்வோசைக்கேற்ப அசைந்தன. கண்களின் ஒளி மின்னித் தெரிந்தது. “அவை குருதியை அறிந்துவிட்டன” என்றான் சக்ரன். “ஆம், அவை வரட்டும்” என்று சாம்பவன் சொன்னான்.
முதல் வேங்கை மூக்கை நீட்டியபடி இருவிழிச்சுடர்களாக மெல்ல காலெடுத்து வைத்து அணுகி வந்தது. அதைத் தொடர்ந்து பிற இரு வேங்கைகளும் இரு வெண்ணிறநிழல்கள் போல வந்தன. “அவற்றை இவ்வறைக்குள் கொண்டு வா!” என்றான் சக்ரன். ஒருவன் முற்றத்தில் இறங்கி சிறு கல் ஒன்றை எடுத்து முதலில் வந்த வேங்கையின் மேல் எறிந்தான். கல் அப்பால் விழுந்தாலும் விதிர்த்து உடலொடுக்கிப் பதுங்கிய மூன்று வேங்கைகளும் உறுமலுடன் பாய்ந்து அவனை நோக்கி வந்தன. அவன் ஓடி கசன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். வேங்கைகள் வந்து திண்ணையிலேறி குருதி மணத்தில் கசனை உணர்ந்து திகைத்து நின்றன.
“சாளரத்தினூடாக வெளியேறுங்கள்!” என்று மெல்லிய குரலில் ஆணையிட்டான் சக்ரன். அவர்களனைவரும் வெளியேற அவன் மட்டும் அங்கே நின்றான். முதல் வேங்கை தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. இன்னொன்று முகம் சுளிக்க வாய்திறந்து உள்வளைந்து நுனி எழுந்த நீள்நாக்கு பதைக்க அப்படியே வயிறு பதித்து படுத்தது. இருவேங்கைகளுக்கு இடையே தன்னை நுழைத்து மூன்றாவது வேங்கை எட்டிப்பார்த்தது. சக்ரன் அவற்றின் கண்களைப்பார்த்து அசையாமல் நிண்றான். பின்னர் குனிந்து தன் அருகே கிடந்த கசனின் உடல் துண்டுகளில் ஒன்றை எடுத்து அவற்றை நோக்கி வீசினான்.
தங்கள் முன் வந்து விழுந்த ஊன் துண்டை மூன்றுவேங்கைகளுமே விலாவும் தோளும் தோல்விதிர்க்க உற்றுப் பார்த்தன. அவற்றின் தோள்களுக்குள் கால் எலும்புகள் துழாவி அசைந்தன. வால்கள் மேலே தூக்கப்பட்டு மெல்ல சுழன்றன. முதல்வேங்கை மேலுமொரு அடிவைத்து நாக்கை நீட்டி கீழே சொட்டிக்கிடந்த குருதித்துளி ஒன்றை நக்கியது. மூன்று வேங்கைகளும் ஒரே குரலில் உறுமத்தொடங்கின. அரங்களை உரசிக்கொள்வதுபோல. பனையோலை இழுபடுவதுபோல. அவை பிறந்த கணம் முதல் வாழ்ந்த மானுடச்சூழலை முற்றிலும் உதறி கான்விலங்குகளாக மாறுவதை காணமுடிந்தது. அவை சேற்றில் தவளை விழுவதுபோன்ற ஒலியுடன் சப்பு கொட்டின.
முதல் வேங்கை பதுங்கி மேலுமொரு காலடி எடுத்து வைத்து அந்த ஊன் துண்டை முகர்ந்தது. அதன் மேல் படிந்த குருதியை தழல்போன்ற நாவால் நக்கியது. பின்னர் காதுகளை விரித்து அதை நோக்கி உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்க அசையாமல் நின்றது. பின்னர் மெல்ல கால்களை நீட்டி வயிற்றை நிலம்பதித்து படுத்தது. முன்னங்காலால் அவ்வூன் துண்டை தட்டி தன்னை நோக்கி கொண்டுவந்தது. நாக்கை நீட்டி அவ்வூன் துண்டை சுழற்றி எடுத்து கடித்து ஒருமுறை தயங்கியபின் முகத்தை ஒருக்களித்து கடைவாயால் மென்று விழுங்கியது. உறுமியபடி எழுந்து உள்ளே துண்டுகளாகக் கிடந்த கசனின் உடல் நோக்கி வந்தது.
அறைமுழுக்க சிந்திக்கிடந்த குருதியை அது நக்கி உண்ணத்தொடங்கியதும் பிற இரு வேங்கைகளும் எழுந்து உறுமியபடி அறைக்குள் நுழைந்து அவன் உடலைக் கவ்வி உண்ணலாயின. அவை உள்ளே நுழைந்ததுமே பாய்ந்து சாளரத்தினூடாக வெளியேறிய சக்ரன் “கதவுகளை மூடுங்கள். அவை உண்டு முடித்தபின் வந்து திறந்து விடலாம்” என்றபின் மெல்ல வெளியேறி அகன்றான். “ஒருவர் மட்டும் இங்கு நின்று என்ன நிகழ்கிறதென்று சொல்லுங்கள். பிறர் விறகுப்புரையருகே காத்திருப்போம்” என்று ஆணையிட்டான்.
அவர்கள் இருளுக்குள் ஒடுங்கி காத்துநின்றனர். குடிலுக்குள் வேங்கைகளின் உறுமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அவை கசனின் உடலை உண்கின்றன என்று நோக்கி நின்றவன் கைகளால் குறிப்புணர்த்தினான். இருளில் விலகி நின்றபோது குருதிமணம் மேலும் வீச்சத்துடன் எழுந்தது. அவர்களின் நாவில் எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. மாறி மாறி உமிழ்ந்தனர். உண்டு முடித்துவிட்டன என்று அவன் கைகாட்டியதும் சக்ரனும் பிறரும் அணுகி சாளரத்தினூடாக நோக்கினர். அங்கு கசனின் உடலில் வெள்ளெலும்புகளும் முடிநீண்ட தலையும் மட்டுமே எஞ்சியிருந்தன. அவன் காலை கடித்துமென்றுகொண்டிருந்த வேங்கை கைகளால் அதைப்பற்றியபடி தலைதூக்கி அவர்களை நோக்கி பன்றிபோல மெல்ல உறுமியது.
செய்கையால் கதவை திறவுங்கள் என்றான் சக்ரன். சூக்தன் கதவைத் திறந்ததும் அவ்வசைவை நோக்கிய முதல் வேங்கை எழுந்து நீண்ட நாக்கால் தன் பக்கவாயை நக்கியபடி நிறைந்த வயிறு மெல்ல தொங்கிக் குலுங்க குருதி ஒட்டிய கால்களை தூக்கி வைத்து வெளியேறியது. திண்ணையில் அமர்ந்து தன் கால்களை புரட்டி நோக்கி நக்கியது. பிற இரு வேங்கைகளும் வெளியே வந்து அதனருகே படுத்து தங்கள் கால்களை நக்கின. புரண்டு எழுந்து அப்பால் எழுந்த ஓசை ஒன்றை கூர்ந்து உறுமிவிட்டு மீண்டும் படுத்து கால்களை நக்கியது ஒன்று.
அறைக்குள் இருந்த வெள்ளெலும்புகளை சிறிய கூடையொன்றில் பொறுக்கிச் சேர்க்கும்படி சக்ரன் தாழ்ந்த குரலில் சொன்னான். சாளரம்வழியாக உள்ளே நுழைந்து கசனின் எலும்புகளை கூடையில் சேர்த்துக்கொண்டு வெளியே சென்ற சூக்தனை ஒரு வேங்கை திரும்பிப் பார்த்தது. வாலைச் சொடுக்கியபடி எழுந்து நின்று அவனை நோக்கி உறுமியது. திண்ணையிலிருந்து தாவி முற்றத்தில் ஒருகணம் தயங்கியபின் அவனை நோக்கி ஓடிவந்தது. “ஓடு” என்று சக்ரன் சொன்னான் சூக்தன் கூடையுடன் விரைந்தோடத்தொடங்கினான்.
முன்னால் வந்த வேங்கை திண்ணையிலிருந்த பிறவேங்கைகளை நோக்கி உறும அவை பாய்ந்து வாலை தூக்கிச் சுழற்றியபடி அவனை துரத்திக்கொண்டு ஓடின. அவன் இடைவழியினூடாக பாய்ந்தோடி காட்டுக்குள் நுழைந்தான். வேங்கைகள் தாவித்துரத்தி மிக விரைவில் அவனை அணுகின. அதற்குள் அவ்வெலும்புகளை காட்டுக்குள் வீசிவிட்டு பாய்ந்து மரமொன்றில் ஏறிக்கொண்டான். புதர்களைத் தாவி இருள்செறிந்த காட்டிற்குள் சென்ற வேங்கைகள் இலையசைவுகளுக்குள் மூழ்கி மறைந்தன. சருகுகளுக்குள் அவ்வெலும்புகளை தேடி கண்டடைந்து கவ்விக்கொண்டு வந்து தரையிலிட்டு இருகால்களாலும் பற்றியபடி நக்கி உடைத்து கடைவாயால் மென்று உண்ணத்தொடங்கின.
“அக்குடிலை கொளுத்திவிடுங்கள்” என்று சக்ரன் ஆணையிட்டான். உள்ளே புகைந்து கொண்டிருந்த தூபத்திலிருந்து குடிலின் ஓலைக்கூரை வரை பற்றி ஏறும்படியாக ஒரு பட்டுச்சால்வையை நீட்டி வைத்துவிட்டு அவர்கள் விலகிச்சென்றனர். விறகுப்புரை அருகே நின்று பார்த்தபோது சால்வை மெல்ல பற்றிக்கொண்டு தழல் மேலேறுவது தெரிந்தது. செந்நிறமான வண்ணத்துப்பூச்சிபோல் சிறகு அசைய மேலெழுந்து கூரையில் தொற்றிக்கொண்டது. கூரையில் ஈச்சையோலைச்சருகுகள் சரசரவென்னும் ஒலியுடன் நெருப்பை வாங்கிக்கொண்டன.
நெருப்பு நன்றாக கூரைமேல் எழுந்ததும் சக்ரன் “நெருப்பு! நெருப்பெழுகிறது! ஓடிவாருங்கள்!” என்று கூச்சலிட்டபடி அதை நோக்கி ஓடினான். “ஓடிவருக! தீ! தீ!” என்று கூவியபடி பிறரும் அவனுடன் இணைந்துகொண்டார்கள். அதற்குள் வெவ்வேறு குடிசைகளிலிருந்து இளைஞர்களும் முனிவர்களும் வெளியே வந்து கசனின் குடில் தீ பற்றி எரிவதை பார்த்தனர். அருகே ஓடிவந்து என்ன செய்வதென்று தெரியாமல் அலைமோதி நாற்புறமும் மணலை அள்ளி அதன் மேல் வீசினர். சக்ரனும் பிறரும் மரக்குடுவைகளுடன் சிற்றோடைக்குச் சென்று நீரை அள்ளிக்கொண்டு வந்து அக்குடில் மேல் வீசினர்.
ஆனால் விரைவிலேயே கூரை எரிந்து மூங்கில் உத்தரங்கள் கரியாகி முனகி உடைந்து முறிவோசையுடன் சரிந்து குடிலுக்குள் விழுந்தது. சுவர்களும் மூங்கில்தூண்களும் பற்றிக்கொள்ள மொத்தக் கூரையும் பற்றிக்கொண்டது. “பிற குடில்களின் கூரைகளில் நீர் விடுங்கள். தீ பரவாமலிருக்கட்டும்… இனி இக்குடிலை மீட்கமுடியாது” என்று சக்ரன் ஆணையிட்டான். கசனின் குடிலைச் சுற்றியிருந்த குடில்கள் அனைத்தின் கூரைகளையும் நனைத்தனர். அனல் பற்றி எரிந்த கூரைகளின் முளைகள் வெடிக்க சிம்புகள் தழல் துண்டுகளாகப்பறந்து வந்து அக்கூரைகளில் விழுந்து ஈரத்தில் வண்டுகள் போல் ஒலியெழுப்பி நனைந்து அணைந்தன.
“அருகில் நெருங்க வேண்டாம்… மூங்கில் தெறிக்கிறது” என்று சத்வர் கூவினார். அனல் மூங்கிலை நொறுக்கி உண்ணும் ஒலி கேட்டது. சுக்ரரும் கிருதரும் அவர்கள் குடில்களிலிருந்து எழுந்து வந்தனர். சக்ரன் அவர்களை நோக்கி சென்று “உள்ளே இளமுனிவர் இல்லை, ஆசிரியரே. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. வெறும் குடில்தான் எரிந்தது” என்றான். “ஆம், அவன் உள்ளே இருக்க வாய்ப்பில்லை” என்று தாடியைத் தடவியபடி சுக்ரர் சொன்னார். தேவயானி எழுந்துவந்து எரியும் குடிலை நோக்கிக்கொண்டிருந்தாள். சக்ரன் அவளிடம் “அனற்புகையின் மணம் பெற்று எழுந்தேன். ஆனால் அதற்குள் கூரை எரியத்தொடங்கிவிட்டது, தேவி” என்றான். “அஞ்சவேண்டாம், கதவு திறந்து கிடந்தது. உள்ளே எவருமில்லை.”
அவள் “தெரிந்தது” என்றாள். “தூபமோ அகல்விளக்கோ விழுந்து எரிந்திருக்கலாம்” என்றான் பிரபவன். “அவர் எங்கு போனார்?” என்று ஒரு பெண் கேட்டாள். “அறியேன். ஆனால் இரவுகளில் அவர் காட்டுக்குள் கிளம்பிச்செல்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். நாமறியாத சில வழிகள் அவருக்கு இருக்கும் என எண்ணுகிறேன். ஊழ்கமோ விண்ணவர் தொடர்போ” என்றான் சக்ரன். தேவயானி “வேங்கைகள் எங்கே?” என்றாள். அவன் “அவை வழக்கம்போல காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருக்கும்” என்றான். “அவை பின்காலையிலேயே வேட்டையாடச்செல்வது வழக்கம்” என்றாள். “அவை விலங்குகள், பசித்திருக்கலாம்” என்றான் பிரபவன். “ஆம்” என்றான் சக்ரன்.
அவள் காட்டை நோக்கியபடி நடந்தாள். அவள் உள்ளம் திடுக்கிட்டுக்கொண்டே இருந்தது. அது ஏன் என்று மீண்டும்மீண்டும் எண்ணிக்கொண்டாள். அவன் காட்டுக்குள் செல்வதாக அவள் அறிந்ததே இல்லை. ஆனால் போகலாகாதென்றில்லை. அவன் தனியன், தவத்தோன். அவனுக்கான நுண்வழிகள் பல இருக்கக்கூடும். அவள் ஓர் எண்ணம் எழுந்த விசையால் உடல் உறைய நின்றாள். வேங்கைகளைப் பற்றி கேட்டபோது சக்ரனின் விழிகள் கொண்ட மாறுதலை அவள் உள்ளம் அடையாளம் கண்டுகொண்டிருந்தது. மிக ஆழத்தில் மிகக்கூரிய ஒரு ஊசிமுனை சென்று அந்த ஊசிமுனைப்புள்ளியை தொட்டறிந்திருந்தது.
அவள் தன் தொடை ஒன்று நடுநடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவ்வுணர்வுக்கு ஒரு சொல் அமைந்தால் அதை கடந்துவிடலாமென்று தோன்றியது. மூச்சுக்களை ஊதி ஊதி விட்டுக்கொண்டு நெஞ்சைத் துழாவி “வந்துவிடுவார்” என்றாள். அச்சொல் பொருந்தாமலிருப்பதைக் கண்டு “காட்டுக்குள் இருக்கிறார்” என்றாள். பின்னர் நெற்றிப்பொட்டை அழுத்தியபடி நரம்புகள் மெல்ல அதிர்வதை உணர்ந்தபடி குனிந்தபோது “வேங்கைகள் உடனிருக்கின்றன” என்றது உள்ளம்.
அச்சொல் அவள் உள்ளத்தின் எடையை குறைத்தது. வேங்கைகளுடன் உலவச்சென்றிருக்கலாம். வேட்டைக்குக்கூட சென்றிருக்கலாம். அவை அவனுடன் இருப்பது வரை எவரும் அவனை நெருங்கமுடியாது. அவற்றின் இருள்கடக்கும் விழியும் தொலைவைக்கடக்கும் மோப்பமும் புலன்கள் மட்டுமேயான உள்ளமும் அவனுடன் எப்போதுமிருக்கும். அவனைவிட்டு அவற்றின் சித்தம் ஒருகணமும் விலகியதே இல்லை. அவையே அவனுக்கு காவல்.
அவள் முகத்தசைகள் எளிதாக நீள்மூச்செறிந்தபடி திண்ணையில் அமர்ந்தாள். தொலைவில் காட்டில் காற்று நிகழ்த்திய இருளசைவு. அதைக் கடந்து மூன்று விழியெரிகள் தெரியக்கூடும். அவனுடைய நிழலுருவம் தெளியக்கூடும். அவள் தாடையை கையால் தாங்கியபடி நோக்கிக்கொண்டிருந்தாள். காடு அவளுக்கு இதோ அவன் என ஒவ்வொருகணமும் காட்டி விளையாடிக்கொண்டிருந்தது.