பொய்ப்பித்தல்வாதம் -கடிதம்

karl p

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

திரு. இளையராஜா அவர்களின் பொய்ப்பித்தல் வாதம் – பெய்சியன் வாதம் கட்டுரை வாசித்தேன். தெளிவாக புரிந்து கொள்ளும்படியான நல்ல கட்டுரை. அவர் நிறைய எழுத வேண்டும். மூன்று இடங்களில் மட்டும் சற்று நிதானிக்க வேண்டிஇருந்தது.

ஒன்று – இரண்டு குழந்தைகள் பிறக்க இருக்கும் இடத்தில் முதலாவது பெண் என்ற யூகம் – முதலாவது பெண் இரண்டாவது ஆண் என்ற யூகம் – இவ்விரண்டு யூகங்களுக்கான வாய்ப்பு சதவீதம் கூறும் இடம். இதை –

சாத்தியக்கூறுகள் முதல் இரண்டாவது   வாய்ப்பு%

  1. பெண்             – 50%
  1. பெண், ஆண் – 25%
  2. ஆண்               – 50%
  3. ஆண் பெண்  – 25%
  4. பெண் பெண் – 50%
  5. ஆண் ஆண்    – 50%

– என்று அமைத்துப் பார்த்தேன்.

இரண்டாவது – பேய்சியன் தேற்ற சமன்பாட்டின் நான்கு கூறுகள் விளக்கப்பட இடத்தில் பலமுறை முறை கவனித்து யோசித்து புரிந்து கொண்டேன்.

மூன்றாவது – ஷாலி கிளார்க் வழக்கு பேய்சியன் வாதத்தின் அடிப்படையில் இரண்டு கருதுகோள்களின் வாய்ப்பு (கொலை/SIDS) (Odd’s ratio): 1 – என்ற இடம்.

மிகவும் எளிய விஷயங்கள் – இளையராஜா போன்ற அறிவியலாளர்களுக்கு இவையெல்லாம் ஒன்றுமே இல்லை பல படிகளை ஒரே தாவில் தாவுபவர்கள் அவர்கள் – இதைவிட எளிமையாக எப்படி விளக்குவது என்றும் தோன்றும். ஆனால் என் போன்ற பொதுவாசகர்களுக்கு நீட்டி முழக்கி விளக்க வேண்டும் இல்லாவிட்டால் ஏதோ அறிவியல் – நமக்கெல்லாம் புரியாது என்றும் தோன்றும். இளையராஜா தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுத வேண்டும் – இங்கு அதற்கு பெரும் பஞ்சம் நிலவுவது போலவே தோன்றுகிறது.

மேலும் எனக்கு சில அய்யங்கள் – ஒரு கருதுகோள் என்பது சான்றுகளுடன் முன்வைக்கப்படும் போது அதன் மீதான மறுப்புக் கருத்து வைக்கப்படுகிறது – அந்த மறுப்புக் கருத்தை எதிர்கொள்ள கருதுகோளின் ஆதரவு தரப்பில் அதை நிலை நிறுத்த மேலும் கருத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. புவியியல் என்னுடைய படிப்பு என்பதால் அதிலிருந்து சிலவற்றை முன் வைக்கிறேன். உதாரணமாக பூமியின் வயது தோராயமாக 450 கோடி ஆண்டுகள் என்று கணிக்கப்படுகிறது. இதன் கணிப்பு முறை துல்லியமானது என்று என் பேராசிரியர் அப்போது கூறினார். யூரேனியம் – பாதி ஈயமாக சிதைவடைய 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன – அதாவது ஒரு கல்லில் மொத்த யூரேனியம் அணுக்கள் 100 என்றால் அவற்றில் பாதி குறைவுபட (தொடர்ந்து கதிரியக்க செயல்பாட்டால் – உமிழ்தலால்) 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன (இதற்கு zircon கனிம கற்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன). ஒரு கல்லின் வயதை நிரூபிக்கும் வரை நேரடி நிறுவப்பட்ட உண்மையாக தோன்றுகிறது – ஆனால் இதைக் கொண்டு பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்று சொல்லும் போது கருதுகோளாக மாறுகிறது. சரி யுரேனியம் இத்தனை ஆண்டுகளில் பாதி ஈயம் ஆகிவிட்டது – அதனால் அது எப்படி பூமியின் வயது ஆகும்?. ஏன் பூமி முழுவதுமே கூட யுரேனியம் கொண்ட கற்களே கொண்டு கூட பல யுகங்கள் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி வரும் போது – அதற்கு பதிலாக இன்னொன்றும் சேர்த்தே கூறப்படுகிறது அதாவது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது சூரிய குடும்பம் இளையது – பூமி உருவான சிறிது காலம் (புவியில் கால அளவு கோலில்) முன்புதான் சூரிய குடும்பமே உருவானது – சூரியனில் இருந்து தெறித்து எல்லா கோள்களும் பிறந்திருந்தன – அப்போது தான் பூமி கதிர் வீச்சு கனிமங்கள் அதிகம் கொண்டிருக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கருதுகோளுக்கு நிகழ்தகவு பயன்படுத்தப்படும் போது – விரித்துக் கொண்டே செல்லப்படும் அல்லது முதல் கருதுகோளை நிறுவ துணையாக கூறப்படும் அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் பிற கருதுகோள்களுக்கும் – பல்வேறு நிலைகளில் நிகழ்தகவு சான்றுகளுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறதா? அவ்வாறு பயன்படுத்தப்படும் போது அவை ஒன்றுக்கொன்று முரண்பட வாய்ப்பு உள்ளதா?

நேரடி நிரூபணம் பெற்ற உண்மையின் நீட்சியாக கருதுகோள்கள் உருவாக்கப்படும் போது – அறிவியல் தர்க்கமாக மாறும் போது மட்டும் தானே புள்ளியியலின் துணை அதிகம் தேவைப்படுகிறது?. (முற்றிலும் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு கணிதமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது). உதாரணமாக பூமத்தியரேகைப் பகுதியில் இருப்பதை விட துருவங்களில் புவி ஈர்ப்பு விசை அதிகம் என்று கூறும் போது அது நேரடியாக நிரூபிக்கக் கூடியதாக உள்ளது – ஒரு குறிப்பிட்ட பொருளின் எடை பூமத்தியரேகைப் பகுதியில் இருப்பதை விட துருவப் பகுதியில் அதிகமாக ஆகிறது – இதுவே நிரூபணம். அதே போல துருவங்களில் புவி ஈர்ப்பு விசை அதிகம் என்பதால் காற்று மண்டலத்தின் உயரம் பூமத்தியரேகைப் பகுதியில் இருக்கும் காற்று மண்டலத்தின் உயரத்தை விட குறைவு என்று சொல்லும் போது இங்கும் கருதுகோளின் தேவை இல்லை. ஆனால் புவியியலை வேறு துறைகளுடன் இணைக்கும் போது – அதாவது பூமத்தியரேகைப் பகுதியில் வெப்பம் அதிகம் அதனால் தரைக்கு அருகில் உள்ள முதல் காற்று அடுக்கின் அடர்த்தி குறைகிறது அதனால் இங்குள்ள மனிதர்களின் நாசித்துளைகள் பெரிதாக உள்ளன – துருவப் பகுதியின் தரைக்கு அருகில் உள்ள முதல் காற்று அடுக்கின் அடர்த்தி அதிகம் எனவே எஸ்கிமோக்களில் நாசிகள் துவாரம் சிறியவை என்று கூறும் போது – மானுட இன இயலுக்கு நீட்டும் போது – அல்லது வெப்பமண்டலத்தில் நாசிகளின் வழியாக இழுத்து ஆனால் பேசும் போது அதிக காற்று-சக்தி செலவாகாதவாறு மொழிகள் அமைத்துள்ளன – (உதாரணமாக தமிழ்) குளிர் பகுதிகளில் சிறு நாசிகளில் சுலபமாக உள்ளே புகுந்துவிடும் காற்றை – வயிற்றில் இருந்து காற்றை வெளியே தள்ளும் விதத்தில் சக்தி அதிகம் செலவழியும் விதத்தில் அங்குள்ள மொழிகள் உள்ளன (உச்சரிப்பு சுத்தமாக 5 மணிநேரம் தமிழ் பேசுவதை விட உச்சரிப்பு சுத்தமாக 2 மணிநேரம் ஆங்கிலம் பேசுவது களைப்பை உருவாக்கும்) என்று மொழிகளின் அமைப்புடன் தொடர்புபடுத்தும்போது – அல்லது வெப்ப மண்டல மதங்களில் சொர்க்கம் குளிர்ச்சியானது எஸ்கிமோக்களின் சொர்க்கம் வெப்பமானது என்று மதத்துடன் தொடர்புபடுத்தும் போது – இனம், மொழி, மதம், வாழ்க்கை முறை, உளவியல் என எல்லாவற்றுக்கும் புவியியலை – தொடர்புபடுத்தும் போது – ஏராளமான கருதுகோள்கள் உருவாக்கப்பட்டு – அவற்றின் நம்பகத்தன்மைக்கு புள்ளிவிவரங்களின்-புள்ளியலின் துணை அதிகம் தேவைப்படுகிறது.

இவையாவும் சரியானவையே. ஆனால் எந்த வலுவான சான்றும் அற்று – நிகழ்தகவின் அடிப்படையிலும் வராமல் ஒரு கருதுகோளை நிலைப்படுத்த முடியுமா? – உதாரணமாக கண்ட நகர்வுக் கொள்கை (plate tectonics) – சான்றுகள் மிக குறைவு – நிகழ்தகவும் கூட (இந்த என் கருத்து தவறாகவும் இருக்கலாம்) ஆனால் கருதுகோள் வெற்றிகரமாக நிலவும் ஒன்று. வேறொன்று வராதவறை வைத்திருக்கலாம் என்பதாலா? எந்த கருதுகோளும் வைக்கமுடியாத இடத்தில் “தெரியாது” என்று வைக்க அறிவியல் ஏற்காதா? எல்லாவற்றுக்கும் விடை சொல்ல புராணங்கள் முயல்வது போல எல்லாவற்றுக்கும் விடை சொல்ல கருதுகோளை வைத்துதான் ஆகவேண்டும்? – “தெரியாது. விடை தேடிக்கொண்டு இருக்கிறோம்” என்று சொல்வதில் அறிவியலுக்கு என்ன இழுக்கு? விடை தெரியாதவரை அந்த இடம் மதங்களுக்குத்தான் இருந்து விட்டுப்போகட்டுமே? மதங்களை மறுப்பதற்கே சில கருதுகோள்கள் உருவாக்கப்பட்டது போல் தெரிவதால் இந்த கேள்வி. தொடர்ந்து தேடுங்கள் யார் வேண்டாம் என்றது? ஆனால் அதுவரை கண்டுபிடித்த இடம் உங்களுக்கு கண்டுபிடிக்காத இடம் எங்களுக்கு. அறிவியலின் வெற்றிடங்களை கலை நிரப்படுமே யாது பிழை?

இப்போது வணக்கத்துக்குரிய அசோகமித்திரன் அய்யாவின் கருத்து – எங்கோ என்றோ படித்தது நினைவுக்கு வருகிறது – பைபிளில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகள் எடுத்து நாத்திகம் என்று சொல்லி வாதிட முடியும் என்பதாக. நான் எழுதியதில் உள்ள குதர்க்கத்தை சுடுவது போல். அவரை வணங்குகிறேன். “இருந்தாலும் நான்கு மணிநேரம் இதற்கு செலவிட்டு விட்டேன் அனுப்பிவிடுகிறேனே அய்யனே. பிழைகள் சுட்டி தகர்க்கப்படட்டுமே.”

 

அன்புடன்

விக்ரம்

கோவை

 

 

முந்தைய கட்டுரைமலர் கனியும் வரை- சுசித்ரா
அடுத்த கட்டுரைகட்டுடைப்புத் தொழில்