‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55

55. என்றுமுள குருதி

சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை வெளிப்படையாக தன் மைந்தனையே அனுப்புவாரா பிரஹஸ்பதி? அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா?” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ? தன் மைந்தனையே அவர் அனுப்பியிருப்பதனாலேயே அது சூழ்ச்சியல்ல என்று சுக்ரர் எண்ணலாமல்லவா?” என்றார்.

விருஷபர்வன் தலையை அசைத்தபடி “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். “பிறிதொன்றுக்காகவும் அவன் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்றார் சுகர்ணர். விருஷபர்வன் தன் சிறிய விழிகளைத் தூக்கி ஒற்றரை நோக்கி “மைந்தனுக்கும் தந்தைக்கும் பூசல் எழுவது எங்குமுளதுதானே? உண்மையிலேயே பிரஹஸ்பதியைத் துறந்து அவரை வெல்லும்பொருட்டு மைந்தன் இங்கு வந்திருக்கலாமல்லவா?” என்றான். “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவன் விழிகளைப் பார்த்த எவரும் அவன் வஞ்சம் கொண்டவனல்ல என்று உணர்வார்கள். இவ்வுலகின் தீமைகளை இன்னமும் உணராத சிறுவனின் நோக்கும் சிரிப்பும் கொண்டவன். அழகன். அவனை பேரழகனாக்குவது அந்த இளமை” என்றார் சுகர்ணர்.

விருஷபர்வன் திரும்பி அமைச்சர் சுகர்த்தரிடம் “நான் செய்ய வேண்டியதென்ன? சுக்ரரிடம் அவனைக் குறித்து எச்சரிக்க வேண்டுமா?” என்றான். “அதில் பொருளில்லை” என்றார் சுகர்த்தர். “அவரறியாத ஒன்றை அவரிடம் சென்று சொல்ல இயலுமா என்ன?” என்றார் சுகர்ணர். “பிறகென்ன செய்வது?” என்று சினத்துடன் கேட்டபடி எழுந்தான். சாளரத்தருகே சென்று கைகளைக் கட்டியபடி வெளியே நோக்கி நின்றான். சுகர்த்தர் “அவனைச் சூழ்ந்து நம் ஒற்றர்களை அங்கு நிறுத்துவோம். ஒவ்வொரு கணமும் அவனை அவர்கள் கண்காணிக்கட்டும். அவன் நோக்கு சஞ்சீவினிதான் என்றால் அவன் அதை அடைவதற்குள்ளேயே அவனை அழித்துவிடலாம்” என்றார்.

விருஷபர்வன் திரும்பி “உண்மையில் இதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், அமைச்சரே. அணு அணுவாக அசுரர் படை தேவருலகை வென்று வருகிறது. இந்திரனின் அரியணையை தொட்டுவிடும் தொலைவிலென ஒவ்வொரு நாளும் நான் கனவில் காண்கிறேன். ஒவ்வொரு முறையும் ஐயமும் அச்சமும் என் உள்ளத்தில் எழுகின்றன. இத்தனை எளிதாக இது நிகழாது, எதுவோ ஒன்று எழுந்துவரும் என. அதுவே இப்புடவி நெசவின் மாறா நெறி. ஆனால் இத்தனை எளிதாக, எளிமையினாலேயே புரிந்துகொள்ள முடியாததாக ஒன்று நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.

“அதில் கவலையுறுவதற்கு ஏதுமில்லை. சுக்ரர் அவனை ஏற்றது எதனாலென்று அவரை அறிந்தவர்கள் உணரமுடியும். தன் ஆசிரியர் மீதான வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார். அவர் மைந்தனை அவருக்கு எதிரியாக்கி களத்தில் கொண்டுசென்று நிறுத்துவாரென்றால் அவரது வெற்றி முழுமையாகிவிடும்” என்றார் சுகர்ணர். சுகர்த்தர் “ஆசிரியரிடமிருந்து முற்றிலும் கற்றுவந்தவர் சுக்ரர். அத்தனை கற்க வேண்டுமென்றால் அத்தனை அணுகியிருக்கவேண்டும். அத்தனை அணுகியவர் ஒருபோதும் ஆசிரியரை முற்றிலும் வெறுக்கமாட்டார். தன் ஆணவத்திற்கு அவரிடம் ஓர் ஒப்புதல் மட்டுமே அவர் கோருவது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியரை வெல்ல விரும்புவார், உடைப்பதை அவர் உள்ளம் ஏற்காது” என்றார். விருஷபர்வன் “ஆம், வெறும் ஆணவத்திற்காக அவர் அத்தனை உவகை கொண்டிருக்கமாட்டார்” என்றான்.

“இதில் இவ்வண்ணம் நாம் சொல்லாடி சலிப்பதில் பொருளேதுமில்லை” என்றார் சுகர்த்தர். “நாம் செய்யக்கூடுவதொன்றே, காத்திருப்பது. அவன் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு நோக்கும் நம் ஒற்றர்களால் கணக்கிடப்படட்டும்.” அவரை திரும்பி நோக்கிய விருஷபர்வன் “நன்று, அதுவே என் ஆணையாகுக!” என்றான். சுகர்ணர் தலைவணங்கி வெளியேறினார். சுகர்த்தர் அவனருகே வந்து “எண்ணிநோக்கினால் தீதென்று ஏதும் தெரியவில்லை, அரசே. ஆனால் உள்ளுணர்வு தீதென்றே சொல்கிறது. நன்றுசூழ்ந்து உவகைகொண்டு இயற்றுவதும் பேரழிவை விளைக்கலாகும் என நூலில் கற்றுள்ளேன்” என்றார். விருஷபர்வன் பெருமூச்சுவிட்டான்.

சில நாட்களுக்குள்ளேயே ஒற்றர்களின் செய்தி வந்தது. அச்செய்திகளைத் தொகுத்து அவனிடம் சொல்ல வந்த அமைச்சர் சுகர்த்தர் “இதை நான் முன்னரே எண்ணியிருந்தேன்” என்றார். “எவரும் விழையும் பேரழகன். அத்தூண்டில் சுக்ரருக்காக அல்ல, அவர் மகளுக்காகவே” என்றார். விருஷபர்வன் “ஆம், எவரும் எண்ணும் எளிய வழிதான் அது. ஆனால் அவள் வேலின் விசை முனையில் திரள்வதுபோல சுக்ரரின் ஆணவம் கூர்கொண்டு எழுந்தவள் என்று எண்ணியிருந்தேன்” என்றான். “ஆம் அரசே, அதுதான் இவனை அவள் காமுறுவதற்கு அடிப்படை. அவளைப்போன்ற ஒரு பெண் நிகரற்ற ஒன்றை தான் மட்டுமே அடையவேண்டுமென எண்ணுவாள். பேரழகனொருவனைக் கண்டதும் அவனை தனக்குரியவன் என்று எண்ணாமலிருக்க அவளால் இயலாது” என்றார்.

“அவர்கள் கொண்ட உளப்பரிமாற்றம் அக்குருநிலையில் அனைவருக்கும் தெரிந்துள்ளது. அவள் சுக்ரரின் கரவறைகளுக்குள் நுழைவதற்கான புதைவுப்பாதை” என்று அவருடன் வந்து சற்று பின்னால் நின்ற சுகர்ணர் சொன்னார். “சுக்ரர் இதை ஒப்புகிறாரா?” என்று விருஷபர்வன் கேட்டான். “ஆம், அவர்கள் தங்களுக்குள் சொல்லென அதை பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் எண்ணங்களால் அது உறுதிப்பட்டுவிட்டதென்பதை மூவரின் விழிகளும் நகைகளும் காட்டுகின்றன” என்றார் சுகர்ணர். “சுக்ரர் ஏன் அவனை ஏற்கிறார்?” என்றான் விருஷபர்வன். “அவர் தோளில் வளர்ந்த மைந்தன். தன் மகளுக்கு பிறிது எவரை கணவனாக ஏற்க முடியும்?” என்றார் அமைச்சர் சுகர்த்தர். “அவனை தன்னுடன் எப்போதைக்குமாக நிறுத்திக்கொள்வதற்கு, அவன் தந்தை மீதான வெற்றியை முழுமை செய்துகொள்வதற்கு சுக்ரர் இதையே சிறந்த வழியென்று எண்ணுவார்.”

தொடர்ந்து “தேவயானியும் பிறிதொன்று எண்ண வழியில்லை. தந்தையை வென்று கடந்து செல்லும் ஒருவனையே அவளால் ஏற்கமுடியும். பிரஹஸ்பதியின் இளவடிவான கசனன்றி எவரும் சுக்ரரை வெல்ல இயலாது. இப்புவியில் அவள் முழுதேற்கும் ஆண் இன்று அவன் ஒருவனே” என்றார். விருஷபர்வன் எண்ணம் தழைந்து தன் பீடத்தில் சென்று அமர்ந்தபடி தலைகுனிந்து தரையையே நோக்கிக்கொண்டிருந்தான். மடியில் கோத்து வைக்கப்பட்ட கைகள் மெல்ல அசைந்துகொண்டிருந்தன. அதில் அவன் உள்ளம் இயங்கும் முறை அவர்களின் கண்ணுக்கு தெரிந்தது. கட்டைவிரல் அசைவு நின்றதும் அவன் விழிதூக்கி “அப்படியென்றால் இதுவே தருணம் அல்லவா?” என்றான்.

சுகர்ணர் “ஆம்” என்றார். அமைச்சர் “அதை ஒற்றர்கள் தாங்களே செய்ய இயலாது. அரசாணை தேவை. அதன்பொருட்டே இங்கு வந்தோம்” என்றார். விருஷபர்வன் “அவ்வாறே ஆகுக!” என்று சுகர்ணரை நோக்கி சொன்னான். சுகர்ணர் தலைவணங்கி வெளியே சென்றார். அவர் அகன்றதும் அவர் சென்ற பாதையை ஒருமுறை நோக்கிவிட்டு அமைச்சர் குரல் தாழ்த்தி சொன்னார் “கசன் கொல்லப்பட்டதும் அச்செயலுக்கு உடன் நின்ற அத்தனை ஒற்றர்களையும் நாம் கொன்றுவிடவேண்டும், அரசே.” விருஷபர்வன் திரும்பி நோக்க “சுக்ரர் அவன் இறப்பை தாளமாட்டார். அவர் மகள் முப்புரமெரித்த மூவிழி அன்னையென சினங்கொள்ளக்கூடும். இன்று நாம் எவர் சினத்திற்கேனும் அஞ்சவேண்டுமென்றால் அவர்களுடையதைதான்” என்றார்.

விருஷபர்வன் எரிச்சலுடன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று இறுக்கிக்கொண்டான். “ஒவ்வொரு முறையும் அரசுசூழ்தலின்பொருட்டு ஓர் எளியவன் கொல்லப்படுகையில் எதன்பொருட்டோ நான் எரிச்சல் கொள்கிறேன். மானுடர் மீதல்ல. தெய்வங்கள் மீதுமல்ல. ஊழென்று சொல்லி என்னை மூடனாக்கவும் உளம் கொள்ளவில்லை. பிறிதொன்றின் மீது அச்சினம். மாற்று வழியிலாது இங்கு அமைந்த இந்நெறியின் மீது” என்றான். “அவன் எளியவன் அல்ல” என்று அமைச்சர் சொன்னார். “நூல்கற்றுத் தேர்ந்தவன். வலக்கையில் இருந்த மலர் இதழ் குலையாது இருக்க இடக்கையால் இரு வேங்கைகளை சரித்துவிட்டு அவன் நுழைந்ததை நம் ஒற்றர்கள் கண்டிருக்கிறார்கள். இங்கு அவன் வந்ததும் அரசுசூழ்தலுக்காகவே. படைக்கலம் எடுத்தவன் படைக்கலத்தால் தான் கொல்லப்படலாம் என அறிவிப்பு விடுத்தவனே.”

“இச்சொற்கள் என்னை எவ்வகையிலும் தேற்றவில்லை, அமைச்சரே. அவன் அந்தணன். அசுரர் அந்தணரைக் கொல்வது பிழையல்ல. ஆனால் பாடுந்திறன்கொண்டவன், கலைபயின்றவன், சொற்சுவை அறிந்தவன், ஊழ்கம் அமைந்தவன் படைக்கலம் எடுத்து களந்தோறும் உயிர்விடும் மானுடக்கோடிகளில் ஒருவன் அல்ல. தன் கலையினூடாக, சொல்லினூடாக, சொல்கடத்தல் வழியாக மெய்மையை ஒருகணமேனும் அவன் தொட்டிருக்கக்கூடும். அவன்மேல் பிரம்மம் தன் நோக்கை ஒருகணமேனும் பதித்திருக்கக்கூடும். ஓர் கலைஞனை, புலவனை, முனிவனை கொல்வதென்பது விதைநெல்லை எரிப்பது. கருக்கொண்ட பெண்டிரை கொல்வது. எதன்பொருட்டு என்றாலும் அந்நாட்டிற்கும் அரசகுடிக்கும் அது பழி சேர்க்கிறது. செங்கோலேந்தி முடிசூடி அரியணையில் அமர்ந்திருப்பவனுக்குத் தெரியும் அது. மிக ஆழத்தில் அவன் ஒரு அமைதியின்மையை உணர்வான்.”

tigerசுகர்ணரின் பதினெட்டு ஒற்றர்கள் இளமாணவர்களாக காவலர்களாக சுக்ரரின் குருநிலையில் இருந்தனர். பிரபவன், சாம்பவன், சக்ரன், சுபலன், சுதார்யன், சூக்தன், முக்தன் எனும் ஏழு மாணவர்கள் கசனுக்கு விளையாட்டுத் தோழர்களாக மாறிவிட்டிருந்தனர். அவனுடன் கனி தேரவும் கன்று மேய்க்கவும் காட்டுக்குள் சென்றனர். புதர்களிலும் மரக்கூட்டங்களிலும் அலைந்து கனிகளும் கிழங்குகளும் திரட்டினர். கொடிகளை முறுக்கி கயிறாக்கி கவர்க்கிளை வெட்டி கொக்கி செய்து பாறையெழுச்சிகளில் தொற்றி ஏறி மலைத்தேன் எடுத்தனர். சுக்ரரின் குருநிலையில் அசுர மாணவர்கள் ஊனுணவு அருந்தும் வழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் முயல்களையும் கொன்று உரித்து ஊன்துண்டுகளாக்கி ஈச்சையோலை முடைந்து செய்த கடவங்களில் அவற்றைப் பொதிந்து தலைச்சுமையாக்கி அவர்கள் மீண்டு வந்தனர்.

அவர்கள் ஒற்றர்களென்று சுக்ரரோ கிருதரோ சுஷமரோ அறிந்திருக்கவில்லை. நூல்கல்வியிலும் அரசுசூழ்தல்களிலும் மெய்யான ஆர்வம்கொண்ட மாணவர்களையே ஒற்றர்களென உளம்பயிற்றி அங்கே இணைத்துவிட்டிருந்தார் சுகர்ணர். நூல் ஆயும் அவைகளில் அமர்ந்து அவர்களும் சுக்ரரின் உலகியல் அரசுண்மைகளையும் பொருள்நிலை மெய்மைகளையும் கற்றவர்கள். தானறிபவற்றைத் தொகுத்து அதில் தன்நோக்கை பதித்து அறிந்தபின் தன்னைத்தான் துணிக்கும் சொல்லாடலை தேர்ந்தவர்கள். நெடுநாள் அங்கிருந்ததனால் அவ்விடத்திற்குரியவர்களாகவே நோக்கும் சொல்லும் செயலும் உருமாற ஒற்றர்களென்று பிறிதெவரும் அறியாமல் நீரில் கரைந்த நஞ்சென கரந்திருந்தனர்.

சுகர்ணரின் ஆணை வந்ததும் அவர்கள் அடுமனைக்கு அருகே விறகுப்புரையில் ஒருங்கு கூடினர். மேலிருந்து எடை மிகுந்த விறகுத் துண்டுகளை எடுத்து கீழே நின்றவர்களின் தலையில் கொடுத்த சக்ரன் சுகர்ணரின் ஆணையை சொன்னான். கோடரியுடன் நின்ற பிரபவன் “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். விறகு பொறுக்கி அடுக்கிய சாம்பவன் “இது மிக எளியது. அதனாலேயே ஐயமாக இருக்கிறது, இதுவே தீர்வா என” என்றான். அவன் சொன்னதையே அனைவரும் எண்ணிக்கொண்டிருந்ததனால் திகைப்புடன் திரும்பிப்பார்த்தனர். அவன் அந்நோக்குகளால் நிலையழிந்து “ஆம், பல தருணங்களில் மிக எளிய செயல்களே தீர்வுகள்” என்றான். சக்ரன் “எளியவை பலமுறை நிகழ்த்தப்பட்டமையால் நிறுவப்பட்ட வழிகள். நாம் அவற்றை மீளமீள கேள்விப்பட்டிருக்கிறோம் என்பதனால் ஐயம்கொள்கிறோம். ஏனென்றால் நாம் மேலும் திறன்கொண்டவர்கள் என்றும், ஆகவே புதிய எதையாவது செய்யவேண்டுமென்றும் எண்ணிக்கொள்கிறோம். ஆணவமே அவ்வாறு எண்ணச்செய்கிறது” என்றான். “ஆம், அவனை கொன்றாகவேண்டும்.”

விறகுச்சுமையை தலையில் வாங்கிக்கொண்டு சென்ற சுபலனும் சுதார்யனும் அச்சொற்களை மெல்லிய விழிமாற்றத்துடன் பெற்றுக்கொண்டனர். “அவன் துளியும் எஞ்சலாகாது என்பதே ஆணை” என்று சக்ரன் சொன்னான். “இறந்தவனை நுண்சொல்லால் எழுப்ப ஆசிரியரால் இயலும். அவனை அவர் எழுப்புவாரென்றால் அவன் கொல்லப்பட்டான் என்பதும் தெரியவரும். நாம் பிடிபடுவோம்” என்றான். அவர்கள் விழிதாழ்த்தி நிற்க “நமது அரசரும் பிடிபட்டதாகவே பொருள். இறந்தவரை சுக்ரரால் உடலில் இருந்து எழுப்ப முடியும். உடலில் இருந்து அகன்று அலைபாயா மூச்சுவெளியில் நின்றிருக்கும் ஆத்மாவை மீண்டும் உடல்புகுத்துவார். நீர்ப்பாசிப் படலத்தை தூண்டிலிட்டு இழுத்து குவித்துக்கொண்டு வருவதுபோல் அவனிடமிருந்து எழுந்து வெளியில் பரவிய மூச்சை அவரால் சேர்த்தெடுக்க இயலும்” என்றான்.

“ஆசிரியர் இன்று எழுப்ப விழையும் முதல் உயிர் அவர் துணைவியாகவே இருக்கக்கூடும். ஆனால் அது இயலாது. ஏனெனில் அவர் இறந்த பிறகு ஏழாண்டுகள் கழித்து சஞ்சீவினியை அவர் அடைந்தார். அவர் உயிர் மண்ணுலகிலிருந்து மூச்சுலகிற்கும் அங்கிருந்து வினையுலகுக்கும் மூதாதையர் உலகுக்கும் சென்றிருக்கும். அவர் இங்கே வாழ்வை தவமென இயற்றியவர் என்பதனால் தவத்தோருலகுக்கும் மெய்யுலகுக்கும் ஒளியுலகுக்கும்கூட சென்றிருக்கக்கூடும். மூச்சுலகிலிருந்து அகன்ற உயிரை மீட்கவியலாது” என்றான் சக்ரன். “அவன் அகன்றதை அவள் அறிந்தால் அவரிடம் சொல்லி உயிர்மீட்டு எடுப்பாள், ஐயமே வேண்டாம். ஆனால் அவன் திரும்பிவர உடலிருக்கக் கூடாது. அவன் கொண்டிருக்கும் அந்த அழகிய தோற்றம் மீண்டெழக்கூடாது… அவன் உருவம் அழிந்தால் அவளால் அவனை ஏற்கமுடியாது.”

அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே கணத்தில் ஒரே இடத்தை வந்தடைந்தனர். அதையே சுபலன் சொன்னான். “அவனை புதைத்தால் எழுவான். எரித்தழிப்பது நன்று. சாம்பலில் இருந்து அவன் உடல்பெற இயலாது.” சக்ரன் “மூடா, சிதை எரியும் கெடுமணம் நெடுந்தொலைவுக்கு எழுவது. அனல் தசையைத் தொட்டதுமே காட்டுக்குள் ஆடுமேய்க்கும் எவரும் அதை உணர்ந்து வந்துவிடக்கூடும். எரிக்க வேண்டும், ஆனால் காற்றில் கலக்காது எரியும் அனலில்” என்றான். “அது என்ன?” என்று பிரபவன் கேட்டான். “அனல்கள் ஏழு. அதில் முதல் அனல் மண்ணில் உறைகிறது. புதைக்கப்படும் உடலை ஏழு நாட்களில் எலும்பென்றாக்குகிறது. விறகிலும் நெய்யிலும் வாழ்கிறது ஒளிகொண்ட எரி. அதன் சீற்றம் நமக்கு ஒவ்வாதது. விண்ணில் வாழும் எரிகளை விலக்குவோம். எஞ்சுவது வயிற்றில் எரியும் அனல்” என்றான் சக்ரன். “ஜடராக்னிக்கு அவனை இரையாக்குவோம்.”

“நமக்கு அத்தனை பொழுதில்லை. அவனை காணவில்லை என்று உணர்ந்த மறுகணமே அவர் சஞ்சீவினியை சொல்லக்கூடும்” என்றான் சுதார்யன். அவர்களில் இளையோனாகிய முக்தன் “வேள்வித் தீயின் அளவிற்கே விரைவுள்ளது ஓநாயின் வயிற்றில் எரியும் அனல்” என்றான். அனைவரும் அவனை நோக்கி திரும்ப அவன் “நான் இதை காவியமொன்றில் கற்றேன்” என்றான். சக்ரன் “ஆம், சரியான சொல். நாம் அதை செய்வோம்” என்றான். “ஓநாய்களுக்கா?” என்றான் சுதார்யன். “ஆம், வெறும் நான்குநாழிகை போதும் அவன் எரிந்தழிந்திருப்பான்” என்றான் சக்ரன். அவர்கள் தலையசைத்தனர்.

tigerமறுநாள் குருநிலையின் மாணவர்கள் முதற்புலரியிலேயே எழுந்து தங்கள் மூங்கில் கூடைகளும் கவண்களும் அகழ்விகளும் துரட்டிகளுமாக காட்டுக்குள் காய்கனிகள் தேர கிளம்பிச் சென்றனர். ஒருவரோடொருவர் நகையாடியும் பிடித்துத் தள்ளியும் அடித்துவிட்டு ஓடி துரத்திப்பிடித்தும் விளையாடியும் துயிலெழத் தொடங்கியிருந்த பறவைக்குரல்கள் பரவிய இலைத்தழைப்புக்கு அடியில் பனித்துளி சொட்டி அசைந்துகொண்டிருந்த புதர்களினூடாக காட்டுக்குள் நுழைந்தனர். முன்னரே வகுத்து வைத்திருந்ததன்படி ஒற்றர்கள் எழுவரும் கசனுடன் நடந்தனர். அவர்கள் உள்ளங்கள் அறைபட முகம் பதற்றம்கொண்டிருந்தது. முக்தன் அடிக்கடி சிறுநீர் கழித்தான். “என்ன இது?” என பிரபவன் வினவ “ஒன்றுமில்லை” என அவன் சிரித்தான்.

அவர்கள் அனைத்தையும் நூல்களிலேயே கற்றிருந்தனர். அனைத்துப் பயிற்சிகளையும் களரிகளிலேயே அடைந்திருந்தனர். ஆகவே நேருக்குநேர் வந்த அத்தருணம் அவர்களை அச்சுறுத்தியது. அது முற்றிலும் புதிதெனத் தோன்றியது. சக்ரன் அதை நன்குணர்ந்திருந்தான். மிகப்பெரிய பிழை எதையோ இயற்றப்போகிறோம் என அவன் உள்ளம் கூறியது. ஆகவே அனைத்து வாய்ப்புகளையும் எண்ணி எண்ணி தவிர்த்துக்கொண்டிருந்தான். அதற்குமப்பால் சென்று அவன் ஆழம் பதறிக்கொண்டிருந்தது. “எங்கே?” என்று அவன் பிரபவனிடம் கேட்டான். அவன் “மலைமுனம்புக்கு அப்பால் பள்ளத்தில் ஓநாய்க்குலம் ஒன்று வாழ்கிறது… எப்படியும் இருபது மூத்த ஓநாய்கள் அதிலுண்டு” என்றான். “உம்” என்றான் சக்ரன்.

சக்ரன் கசனிடம் மந்தணக்குரலில் “நேற்று அங்கு மலைச்சரிவில் வேர்ப்பலா ஒன்று கனிந்திருப்பதைக் கண்டேன்” என்றான். “பலாவின் மணம் எழவில்லையே” என்று கசன் கேட்டான். “ஆம், எழலாகாதென்பதற்காக அங்கே கரடியின் மலத்தை கொண்டுசென்று உடைத்து பரப்பிவிட்டு வந்தேன். குரங்குகளோ பிற கரடிகளோகூட அம்மரத்தை அணுகாது” என்றான் சக்ரன். சூக்தன் “எவருமறியாது அங்கு செல்வோம். எவரும் கொண்டு வராத கனிச் சுமையுடன் குடில் மீள்வோம்” என்றான். சிரித்தபடி “ஆம், கிருதர் திகைத்துவிடவேண்டும்” என்றான் கசன். அவர்கள் பிறரிடமிருந்து ஒதுங்கி புதரில் மறைந்து விலகிச்சென்றனர். பிறர் தங்கள் தோழர்களிடமிருந்து பிரிந்து தனித்தனியாக புதர்களுக்குள் நுழைந்து ஒரு பெரிய காணாவளையமென அவர்களை சூழ்ந்து சென்றனர்.

கசனை மிக விலக்கி கொண்டுசென்ற சக்ரன் பாறை முனம்பொன்றை சென்றடைந்தான். “இங்கிருந்து இறங்க வேண்டும்” என்று அவன் சொல்ல அம்முனையை அடைந்து குனிந்து நோக்கிய கசன் “இத்தனை செங்குத்தாகவா? ஒரு கொடியின்றி இங்கிருந்து இறங்கமுடியாது” என்றான். “கொடி செய்வோம்” என்று சக்ரன் சொன்னான். அருகிருந்த வள்ளிகளை கையால் பற்றி இழுத்து முறுக்கி இணைத்து வடம் செய்து பாறையில் நின்ற முட்புதர் ஒன்றின் அடித்தூரில் கட்டினான். “இறங்குங்கள்” என அவன் சொல்ல கசன் அதைப் பற்றியபடி மெல்ல இறங்கினான். மூன்றடி ஆழத்திற்கு அவன் இறங்கியதும் சக்ரன் தன் கையிலிருந்த வாளால் கசனின் கழுத்தை ஓங்கி வெட்டினான். வெட்டு ஆழப்பதிந்து குருதி கொப்பளிக்க அவன் உடல் திடுக்கிட்டு துள்ளித்துள்ளி கயிற்றின் பிடிவிடாமலேயே சுழன்றது. மீண்டும் ஒருமுறை வெட்டியபோது தலை தனியாக பிரிந்து தசைநார்களில் தொங்கி ஆடி உருவிக்கொண்டு கீழே சென்று விழுந்தது. தட் என அது விழுந்த ஓசை சக்ரனை விதிர்க்கச் செய்தது. உடல் நீர்த்தோல்கலம் விழும் ஓசையுடன் மண்ணை அறைந்தது. அதன் கைகால்கள் இழுத்துக்கொண்டு துடித்தன.

அசுரர்கள் ஓடிவந்து மேலே நின்று நோக்கினர். சூக்தன் “இத்தனை எளிதாகவா?” என்றான். சக்ரன் அவனை சீற்றத்துடன் திரும்பி நோக்கினான். குருதி மணம் எழுந்ததுமே அப்பால் ஓநாய்க்குரல் கேட்கத் தொடங்கியது. பிரபவன் “அங்கே மலைப்பிளவொன்றில் அவை வாழ்கின்றன” என்றான். அவர்கள் அச்சரடினூடாக பற்றி கீழிறங்கிச் சென்று தங்கள் கையிலிருந்த வாள்களால் கசனின் உடம்பை சிறு துண்டுகளாக வெட்டினர். அவன் உள்ளங்கையை எடுத்துக்கொண்ட பிரபவன் அதன் குருதி துளித்துளியாக சொட்ட மெல்ல நடந்து அருகிலிருந்த ஓநாய்க்குகையை அடைந்தான். முன்னரே மணம் அறிந்து அவை நிலையழிந்து ஊளையிட்டுக்கொண்டிருந்தன. ஒன்று அவனைக் கண்டதும் தலைநீட்டி வாய்சுளிக்க பற்களைக்காட்டி உறுமியபடி அருகணைந்தது. அவன் தன் முன் அக்கையை வீசிவிட்டு திரும்பி ஓடிவந்தான்.

குகைக்குள் பதினெட்டு ஓநாய்கள் இருந்தன. அப்போது அவற்றில் நான்கு ஓநாய்கள் குருளைகளை ஈன்றிருந்தன. முதல் ஓநாய் அந்தக் கையை முகர்ந்துகொண்டிருக்கையிலேயே பசித்து சீற்றம்கொண்டிருந்த அன்னைஓநாய்கள் குகையின் இருளிலிருந்து குரைத்தபடி நிரை நிரையெனப் பாய்ந்து வெளிவந்து அக்கையை கவ்விக் கொண்டன. பிரபவன் ஓடிச்சென்று மரத்தைப்பற்றி மேலேறி கிளைகளில் அமர்ந்து கொண்டான். கீழே சொட்டிய குருதியை முகர்ந்தபடி முதல் ஓநாய் முன்னால் செல்ல அதன் செவியசைவையும் வால்சுழற்றலையும் கண்டு செய்திபெற்று பிற ஓநாய்கள் தொடர்ந்து சென்றன. சற்று நேரத்தில் முதல் ஓநாய் கசனின் உடல் துண்டுகள் சிதறிக்கிடந்த இடத்தை சென்றடைந்தது. சென்ற விரைவிலேயே ஒரு துண்டைக் கவ்வி ஒருமுறை தலைசுழற்றி உதறியபின் கவ்விக் கவ்வி மென்று ஊனை விழுங்கியது. பின்னங்கால் மடித்து அமர்ந்து தலையைத் தூக்கி வானை நோக்கி ஊளையிடத்தொடங்கியது.

அவ்வழைப்பை ஏற்று சற்று நேரத்திலேயே அனைத்து ஓநாய்களும் அங்கே வந்து சேர்ந்தன. தங்கள் குட்டிகளை வழிநடத்தியபடி மெலிந்து உடல் ஒட்டி நா வறண்ட அன்னையரும் அங்கு வந்தனர். மரங்களிலும் பாறை விளிம்புகளிலும் அமர்ந்திருந்த அசுரர்கள் கசனின் உடல் முழுமையாகவே உண்ணப்படுவதை உறுதி செய்துகொண்டனர். செங்குருதியும் தசைத்துணுக்குகளும் படிந்த பெரிய எலும்புகளும் கரியகுழல் ஒட்டியிருந்த தலையும் மட்டுமே அங்கு எஞ்சின. செல்வோம் என்று சக்ரன் பிறரிடம் கைகாட்டினான். அவர்கள் மீண்டும் ஒருங்கு திரண்டனர். காட்டுப்புதர்கள் வழியாக நடக்கத் தொடங்கினர்.

ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவர் அகவிழிக்கு முன்னாலும் வழிமுட்டி நிற்கச்செய்யும் பெருஞ்சுவர் என கசனின் புன்னகைக்கும் முகம் தெரிந்தது. அதை பல்லாயிரம் திரைகளை என மீண்டும் மீண்டும் விலக்கி அவர்கள் முன்னால் சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு சுனையைக் கண்டதும் சக்ரன் அதிலிறங்கி குளிக்கத் தொடங்கினான். பிறரும் நீரில் பாய்ந்து உடல் கழுவினர். கரைவிளிம்பில் படிந்திருந்த மென்மணலை அள்ளி கைகளையும் உடலையும் தேய்த்தனர். மூழ்கி எழுந்து மீண்டும் வந்து அந்த மணலை எடுத்து உடலைக் கழுவினர். உள்ளம் நிலையழிந்ததுபோல அந்த மணலால் தங்கள் உடலை மீண்டும் மீண்டும் கழுவிக்கொண்டிருந்தனர்.

பின்னர் ஒவ்வொருவரும் தனித்து சோர்ந்து மரநிழல்களில் படுத்து உடல் நீட்டினர். கைகளும் கால்களும் தனித்தனியாக கழன்றுவிட்டது போன்ற களைப்பை அடைந்தனர். கொந்தளித்துக்கொண்டே இருந்த உள்ளம் படுத்ததுமே முறுக்கவிழ அனைவருமே மிக எளிதில் துயிலில் ஆழ்ந்தனர். பின்னர் எப்போதோ அந்தியின் ஒலிகள் கேட்கத் தொடங்கிய பிறகு எங்கிருக்கிறோம் என்று உணரத் தொடங்கினர். ஏதோ விந்தையிலென கசன் திரும்பி வருவான் என்று அவர்கள் அனைவருமே எதிர்பார்த்தனர். நிகழ்ந்தது ஒரு கனவென்றும் நிகருலகுக்கு விழித்தெழுந்திருப்பதாகவும் உளம் விழைந்தனர். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து நிகழ்ந்தது கனவென்றே தங்கள் நெஞ்சுக்கு சொல்லி அதை எங்கோ ஆழத்திற்கு தள்ளினர்.

ஒவ்வாத ஒன்றை கடந்து செல்வதற்கு ஒவ்வாத பிறவற்றை எண்ணுவதே உகந்தவழி என்று தங்கள் முன்அறிதல்களால் அவர்கள் உணர்ந்திருந்தனர். இளமையிலேயே சொல்மீதுகொண்ட காதலும், கற்றுத்தேர்ந்து அறிஞனென்றாகி அவை சென்றமர விழைந்து கல்விச்சாலைகள்தோறும் சென்றதும், அங்கு அசுரர் என்பதனாலேயே சிறுமைக்கு ஆளாக்கப்பட்டு துரத்தப்பட்டதும் கசந்து கசந்து நினைவிலெழுந்தன. நல்லாசிரியர், அந்தணர், கவிஞர் என ஒவ்வொருவரும் குலம் கேட்டு முகம்சுளித்து சுட்டுவிரல் காட்டி விலகும்படி ஆணையிட்டனர். அக்கணங்களில் அவர்களில் எழுந்த அந்த கொடியதெய்வத்தை கனவில் மீண்டும் மீண்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தை வஞ்சமென ஆக்கிக் கொண்டனர். வஞ்சம் அவர்களை மீட்டது.

“ஆம், நான் கொன்றேன். நம் குலம் இப்புவிமேல் வாழவேண்டுமென்றால் இன்னும் ஆயிரம் அந்தணரை நாம் கொல்ல வேண்டியிருக்கும். இந்த ஓர் அந்தணன் நம் குடியின் மந்தணச்சொல்லை திருடிச்செல்வான் என்றால் நம் குலத்தின் பல்லாயிரம் பேர் இறந்து மண்ணில் உதிர நேரும். இப்புவி வெல்பவரால் வகுக்கப்பட்டது. வெல்லும்பொருட்டு இயற்றுவதே அறம்.” எவர் அதை தங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் வியந்தனர். ஆழ்ந்த சினம்மிக்க அக்குரல் எவருடையது? அத்தனை பொருத்தமான சொல்தேர்வுடன் அத்தனை உளப்பூர்வமான உணர்வெழுச்சியுடன் அது சொல்லப்பட்ட பின்னரும்கூட உள்ளிருந்து அல்ல அல்ல என்று அதை விலக்குவது யார்? அவனுக்கு ஏன் அத்தனை இளமை? ஏன் அத்தனை அறியாமை?

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் ஒரு குறிப்பு
அடுத்த கட்டுரைமலர் கனியும் வரை- சுசித்ரா