இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் ‘டொனால்ட் டிரம்புக்கு மனநிலை பாதிப்பா?” என்னும் கட்டுரை ஒர் அதிரடித்தாக்குதல். டாக்டர் எம் எஸ் தம்பிராஜா என்பவர் எழுதியது. தமிழர்களுக்கு உளவியலை அறிமுகம் செய்கிறாராம். உண்மையில் எழுதியவருக்கு மனநிலைப் பாதிப்பு உண்டா என ஆழமான சந்தேகம் எழுந்தது.
பொதுவாகவே தமிழகத்தில் உளமருத்துவர்கள் ஆஸ்பத்திரிக்கு தண்ணீர்கொண்டு செல்லும் பையனைக்கூட மனநோயாளியாகக் கண்டு மருந்து எழுதிவிடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு வரியிலும் அசட்டுத்தனம் மட்டுமே மிளிரும் இக்கட்டுரையை உலகளாவ நோக்கினால்கூட ஒரு தமிழ்நாளிதழ் மட்டுமே வெளியிடமுடியும். ‘அமெரிக்காவில் கோடீஸ்வரர்கள் மட்டுமே அதிபராக முடியும்’ என்பதுபோன்ற ஆழ்ந்த ஞானத்தெறிப்புகள்.
நாளிதழ்கட்டுரைகளை மூன்றுமொழிகளில் வாசித்துக் கொண்டிருக்கிறேன், தமிழில் அதைப்பற்றிய புரிதல் என ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் செய்திநிலையத்தில் நாளிதழ் கட்டுரைகளைப்பற்றிய வகுப்பு ஒன்றை எடுத்தபோது நாளிதழ்கட்டுரைகளைப்பற்றிய சில பொதுவான நெறிகளை தொகுத்துச் சொன்னேன். அவற்றை மீண்டும் சொல்லிவைக்கலாமென நினைக்கிறேன்.
ஒரு நாளிதழின் ஊழியர்கள் அதில் கட்டுரைகள் எழுதுவதென்றால் அக்கட்டுரை செய்திசார்ந்ததாக, தகவல்கள் கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும். அச்செய்திகளும் தகவல்களும் அந்த ஊழியர்களால் தேடி அடையப்பட்டதாகவும், பிற எங்கும் கிடைக்காததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றுக்கு மதிப்பு.
நாளிதழின் ஊழியர்கள் வெறும் இதழாளர்கள், ஊழியர்கள் மட்டுமே. சிந்தனையாளர்களோ அரசியல்கருத்தாளர்களோ, இலக்கியவிமர்சகர்களோ அல்ல. அவர்கள் உண்மையில் அப்படி இருந்தாலும்கூட அந்த இடம் அந்நாளிதழில் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ‘கருத்துக்கள்’ ’ஆலோசனைகள்’ ‘விமர்சனங்கள்’ போன்றவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
பெரும்பாலும் இவ்வகையில் கருத்துக்களும் விமர்சனங்களும் எழுதும் ஊழியர்கள் தங்கள் கடமையை தட்டிக்கழிக்கவே அதைச் செய்கிறார்கள். இதழாளர் என்றால் பயணம்செய்யவேண்டும். மனிதர்களை சந்திக்கவேண்டும். தகவல்களை உழைத்துச்சேகரிக்கவேண்டும். தகவல்களே செய்திக்கட்டுரையின் பலம். வேறெங்குமில்லாத தகவல்களே சிறந்த செய்திக்கட்டுரையை உருவாக்குகின்றன. இணையத்திலேயே தேடி எடுத்த எளிய கருத்துக்களையே கட்டுரைகளாக எழுதுவது ‘மேஜை உழைப்பு’ மட்டுமே.
இன்றைய முகநூல் வாசகன் மேற்கொண்டு இந்நாளிதழ்களை வாசிக்க ஏதேனும் காரணம் இருக்கவேண்டும் . முகநூலில் கிடைக்காத செய்திகளை, தகவல்களை அவன் இங்கு தேடிவந்தாகவேண்டும். . நான் புதியவாசகர்களைச் சந்திக்கையில் அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த நாளிதழ்களை வாசிப்பதில்லை, கட்டுரைகளை கண்டுகொள்வதே இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தேன். அவர்களை வாசிக்க வைக்காமல் இனி இதழியல் இல்லை.
உதாரணமாக இன்றைய அசோகமித்திரன் சிறப்புப் பதிப்பில் இருந்தாகவேண்டியது அவரைப்பற்றிய ஒரு முழுமையான செய்திக்கட்டுரைதான். இந்த இருபக்கங்களும் மலையாள மனோரமாவால் தயாரிக்கப்பட்டிருந்தால் அதுவே மையமாக இருந்திருக்கும். [அது முன்னரே தயாரிக்கப்பட்டு காத்திருக்கும்] இன்றைய தமிழ் ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரைகளில் இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரை மட்டுமே நாளிதழுக்குரியது. மற்றவை சிற்றிதழ்களில் வெளிவரவேண்டியவை.
அசோகமித்திரனின் பிறப்பு வளர்ப்புச்சூழல், அவர் செய்தவேலைகள், அவர் வாழ்ந்த விதம். அவருடைய குடும்பம், அவருடைய எழுத்துவாழ்க்கை, அவர் சென்ற பயணங்கள், அவர் எழுதிய நூல்கள், அவர் அடைந்த விருதுகள் போன்ற தகவல்கள் அவருடைய அடுத்த தலைமுறைக்காக ஒரு கட்டுரை வடிவில் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். இன்று தொலைபேசியில் விசாரித்தே அதை எழுதிவிடமுடியும். அத்துடன் அரிய புகைப்படங்களும் இருந்திருந்தால் அதுதான் உண்மையான இதழியல்பணி. ஒரு செய்தித்தாளில் வாசகன் எதிர்பார்ப்பது அதுவே.
மலையாள மனோரமா என்றால் உறுதியாகச் செய்திருக்கக்கூடிய செயல் ஒரு நிருபரை அசோகமித்திரன் இல்லத்திற்கு அனுப்பி அங்கே அவருடைய இறுதிப்பயணம் நிகழ்ந்ததைச் சித்தரித்து எழுதுவது.ஏதோ ஒருவகையில் அது வரலாற்றுத்தருணம். பல ஆண்டுகளுக்கு பின்னரும்கூட அதற்கு அபாரமான ஆவணமதிப்பு உண்டு. உதாரணமாக புதுமைப்பித்தன் அல்லது தி.ஜானகிராமனின் இறுதிப்பயணத்தின் ஒரு சித்தரிப்பு இன்று எப்படி வாசிக்கப்படும் என எண்ணிப்பாருங்கள். [அங்கு சென்ற நண்பர்கள் எவராவது எழுதியனுப்பினால் நம் இணையதளத்திலாவது பதிவுசெய்து வைக்கலாம்]
அசோகமித்திரனின் இறுதிப்பயணத்திற்கு எவரெல்லாம் வந்தனர், என்ன நிகழ்ந்தது என்பது தமிழ்ப்பண்பாட்டுவரலாற்றுக்கு முக்கியமானது .’டெஸ்கில்’ அமர்ந்து அபிப்பிராயங்களை எழுதுவதற்குப்பதில் தி ஹிந்துவின் ஒருநிருபராவது அங்கே சென்றிருக்கலாம்.
வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே ஒரு கட்டுரை இருக்கலாம் என்றால் அக்கட்டுரையை எழுதியவரின் ஆளுமைக்கு தனிமதிப்பு இருக்கவேண்டும். உதாரணமாக திருமாவளவன் அல்லது ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதுவாரென்றால் அதில் வெறும் அபிப்பிராயம் மட்டும் இருந்தால்போதும். இதழாளர்கள் கருத்து உதிர்க்கக்கூடாது, அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது செய்திக்கட்டுரை. அதில் செய்தி இருந்தாகவேண்டும். எந்தக் கருத்தும் அதைச்சொல்பவனின் தனிப்பட்ட தகுதியாலேயே பெறுமானம் கொள்கிறது.
கணிசமான தமிழ் ஹிந்து கட்டுரைகள் எந்தவகையிலும் சுவாரசியமற்றவையாக உள்ளன. நாம் மறுநாளே அவற்றை நினைவுகூர முடிவதில்லை. முக்கியமான விதிவிலக்கு டி.எல்.சஞ்சீவ்குமாரின் கட்டுரைகள்.
செய்திக்கட்டுரைகளுகு ஒரு வடிவஇலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளலாம். நான் கீழ்க்கண்ட விதிகளைச் சொல்வேன். இவ்விதிகள் எல்லாமே சிறுகதை என்னும் வடிவை ஒட்டியவை. ஏனென்றால் இன்றையகாலகட்டத்தின் இலட்சிய இலக்கியவடிவம் சிறுகதை. இன்று நவீனக்கவிதைகூட அவ்வடிவிலேயே உள்ளது. அது இன்றைய கார்போல, அதன் வடிவம் சோதனைசெய்து மேம்படுத்தி அடையப்பட்டது.
முதலில் செய்திக்கட்டுரைகளை இரண்டாகப்பிரிக்கலாம். ஒன்று ஆயுவுக்கட்டுரைகள் [Articles] அவற்றின் இலக்கணம் வேறு. மிக அரிதாக வெளியிடப்படும் நீண்ட கட்டுரைகள் இவை. இவற்றை மிகமுக்கியமானவர்கள், அத்துறையில் தங்களை நிரூபித்தவர்களே எழுதவேண்டும். பொருளியல்பற்றி ரகுராம் ராஜன் ஒரு கட்டுரை எழுதினால் அது அவருடைய முக்கியத்துவத்தினாலேயே கவனிக்கப்படும். அதற்கு கல்வித்துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரையின் வடிவம் இருக்கலாம்
மற்ற செய்திக்கட்டுரைகளை குறுங்கட்டுரை [Essay] என்றே சொல்லவேண்டும். அவற்றின் இலக்கணங்கள் இவை:
1.அதன் தொடக்கம் கவனத்தைக் கவர்வதாக இருக்கவேண்டும்.
“நாம் தினந்தோறும் உட்கொள்ளும் மீன் எங்கிருந்து வருகிறது? யார் இந்த மீன்களைப்பிடிக்கிறார்கள்? எந்தவகையான நிபந்தனைகளுடன் மீன் உற்பத்தி நடக்கிறது?” [ராகுல் முரளிதரன்,தி ஹிந்து மார்ச் 25 2017 ] என்பது ஒரு பாடப்புத்தகக் கட்டுரைக்குரிய தொடக்கம். எவ்வகையிலும் வாசிப்புக்கு ஈர்க்காது
’நவீனத்தமிழ் உரைநடை இலக்கியத்தின் மிகமுக்கியமான பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் இயங்கியவர். தொடர்ச்சியான செயல்பாட்டில் மிக விரிவாகவே தமது எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார் என்பதே அவரை முக்கியமான படைப்பாளியாக நிலைநிறுத்துகிறது’ [சுகுமாரன், தி ஹிந்து மார்ச் 25 2017]
மிகச்சம்பிரதாயமான தொடக்கம். இந்த வரிகளில் குறிப்பாகச் சொல்லப்பட்ட கருத்து என்ன? இந்த பத்தியே இல்லை என்றாலும் கட்டுரையில் குறைவது என்ன? சிற்றிதழ்சார்ந்த சோர்வூட்டும் பாணி இது.
ஒருசெய்திக்கட்டுரையின் தொடக்கம் உடனடியாக கவனத்தைக் கவரும் ஒரு ஒன்றாக இருக்கவேண்டும். அக்கட்டுரையின் மையத்துடன் அது இணைந்திருக்கவேண்டும் உதாரணமாக கூவம் ஆறு மாசுபட்டிருப்பது குறித்த ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது என்று கொள்வோம்.
“கூவம் சென்னையின் வழியாக ஓடுகிறது. உலக அளவில் மாசுபட்டிருக்கும் ஆறுகளின் பட்டியலில் இதற்கு ஐம்பதாவது இடம்’ இதுதான் சம்பிரதாயமான தொடக்கம். கல்விநிலையங்களில் இவ்வகை கட்டுரைகளைப் படித்துச் சலித்துப்போயிருக்கிறோம்.
கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது என்று கொள்வோம் “சென்னை ராயப்பேட்டையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞரான திரு.வி.கல்யாணசுந்தரனார் கூவம் ஆற்றில் தினமும் குளித்து சிவபூசை செய்வது வழக்கம்” – இது இதழியலுக்குரிய ஈர்ப்புள்ள தொடக்கம்.
செய்திக்கட்டுரைக்கு மிகச்சிறந்த தொடக்கம் ஒரு நிகழ்வுத்துணுக்கு [anecdote] தான். ஒரு வேடிக்கையான கூற்று, ஒரு சுவாரசியமான தகவல் அடுத்தபடியாக. ஒருபோதும் வெறும் முன்னுரை, வெற்றுவரிகள் அமையக்கூடாது.
2.சம்பிரதாயமான வரிகளை களைதல்
கட்டுரையில் ஒரு செய்தியை சொல்லாமல் வெறுமே வரும் வரிகளை எடுத்துவிடலாம். மேலே சொன்ன சுகுமாரனின் கட்டுரையின் வரிகளே உதாரணம். ஒருவரி ஒரு செய்தியை, தகவலை, முக்கியமான கருத்தை, சுவாரசியமான எதையாவது சொல்லியாகவேண்டும். பொத்தாம்பொதுவான எண்ணங்கள், சம்பிரதாயமான முகமன்கள் போன்றவற்றை முழுமையாகவே தவிர்க்கவேண்டும்.
3.நீளமான வரிகளை தவிர்த்தாகவேண்டும்
செய்திக்கட்டுரை அவசரமாக வாசிக்கப்படுவது என்னும் அடிப்படை நிபந்தனை அதற்கு உண்டு. ஆகவே வரையறை செய்து சொல்லும் இடங்களைத்தவிர பிற அனைத்து இடங்களிலும் அதிகபட்சம் 12 வார்த்தைகளுக்குள் அமையும் வரிகள் போதும். ஒரு சொற்றொடரில் ஒற்றைக் கருத்து அமையவேண்டும். இணைப்புச் சொற்றொடர்கள் அமையக்கூடாது.
4.ஒரு கருத்து போதும்
ஒரு குறுங்கட்டுரை ஒரு கருத்தை, ஒரு கோணத்தை மட்டும் முன்வைத்தால் போதும். சுருக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையாக அது இருக்கவேண்டியதில்லை. அதை வாசித்தபின் வாசகனிடம் அது சொல்வதென்ன என்று கேட்டால் அவன் ஒற்றைச் சொற்றொடரில் அதன் மையக்கருத்தைச் சொல்லமுடியவேண்டும். அந்த ஒற்றைவரியே அன்றுமாலைவரை அவனிடம் இருக்கும். செய்திக்கட்டுரைக்குள் முரண்பட்ட விவாதங்களோ படிப்படியாக வளர்ந்துசெல்லும் கருத்துக்களோ இருக்கவேண்டியதில்லை
5.முக்கியமானவை வேண்டும்
ஒரு செய்திக்கட்டுரையில் கண்டிப்பாக பிற எங்கும் இல்லாத ஏதேனும் செய்தி தேவை. இரட்டை இலை முடக்கம் பற்றி எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களையே சொல்லிவிட்டு ‘டிடிவி தினகரன் ஜெயிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி’ என முடிக்கும் கட்டுரைகளையே நம் இதழாளர் இன்று எழுதுகிறார்கள். அதைப்போல அபத்தம் வேறில்லை. இறங்கிச்சென்று செய்தி சேகரியுங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுங்கள். புதிய ஒன்று சொல்வதற்கு இல்லை என்றால் எழுதாதீர்கள்
6.முடிப்பு அல்லது முத்தாய்ப்பு
அதுவரை சொன்னவற்றை தொகுத்துச்சொல்லி முடிக்கும் சம்பிரதாயமான முடிப்பு செய்திக்கட்டுரைகளை சோர்வுதரும் வாசிப்புக்குரியவையாக ஆக்கிவிடும். சிறுகதைக்குரிய முடிப்பே உகந்தது. மீண்டும் ஒரு நிகழ்வுக்குறிப்பு அல்லது சுவாரசியமான செய்தி. அது கட்டுரையின் தொடக்கத்துடன் இணைந்திருந்தால் ஒரு வடிவ ஒருமை உருவாகும். வடிவ ஒருமைகொண்ட எழுத்துக்களே நினைவில் நீடிக்கும். வடிவ ஒருமை என்பதே நினைவில் நீடிப்பதற்காகத்தான் உருவாகிறது
உதாரணமாக, மேலே சொன்ன கூவம் கட்டுரை இப்படி முடிகிறது என்று கொள்வோம். திரு.வி.க கூவத்தில் குளித்த காலகட்டத்தில் லண்டன் தேம்ஸ் நதி இன்றுள்ள கூவம்போலத்தான் இருந்தது. இன்று நாம் தேம்ஸில் குளிக்க முடியும்’ – இது சிறுகதைக்குரிய முடிப்பு
தாங்கள் எழுதும்கட்டுரையை மட்டும் அல்ல பிறர் எழுதும் கட்டுரைகளைக்கூட அவற்றை திருத்தாமல் இப்படி மாற்றியமைக்கலாம் .அக்கட்டுரையிலேயே தலைப்புவரியாக ஆகும் தகுதிகொண்ட ஏதோ ஒன்று இருக்கக்கூடும். உண்மையில் இதழாளர்களின் வேலையே அதுதான்- எதையும் சுவாரசியமாக ஆக்குவது.