லட்சுமி மணிவண்ணன் எழுதிய ‘அனைத்தையும் கட்டுடைக்காதீர்கள்’ என்னும் குறிப்பை நேற்று பிரியம்வதாவின் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன். இன்று நம் அறிவுச்சூழலில் கட்டுடைத்தல் என்னும் சொல் அளவுக்கு பிரபலமாக பிறிதொன்றில்லையென்று தோன்றுகிறது. சென்ற தலைமுறையில் புரட்சி என்ற சொல் எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்திற்கு இந்தச் சொல் வந்து சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் பிரபலமடைந்து ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பியதை எழுதுவதற்கான ஒரு களம் அமையும்போது, வம்புகள் அனைத்துமே எழுத்துவடிவம் பெற வாய்ப்பிருக்கும்போது, ஒவ்வொரு கூற்றும் வைரஸ் போல பெருகும் காற்று நம்மைச் சூழ்ந்திருக்கும் போது இச்சொல் மேலும் அழுத்தம் பெறுகிறது. சொல்லப்போனால் இன்றைக்கு சதிகளைக் கண்டுபிடிப்பதும் கட்டுடைப்பதும் தான் சிந்தனைச் செயல்பாடென்றே அறியப்படுகிறது.
கட்டுடைப்பதென்பது ஒரு கருத்தை, ஓர் ஆளுமையை ஒரு படைப்பை தன் அறிவுத்திறன் கொண்டும் தர்க்க புத்தி கொண்டும் பல பகுதிகளாக பிரித்து அதிலிருந்து தாங்கள் விரும்பும் ஒர் அர்த்தத்தை எடுத்துக் கொள்வதென்றே இன்றைய நடைமுறையில் உள்ளது. அந்த அர்த்தத்தையே அந்த கருத்து அல்லது ஆளுமை அல்லது படைப்பு உள்ளடக்கமாக கொண்டுள்ளது என எடுத்துக்கொண்டு அதை ஏற்பதோ நிராகரிப்பதோதான் அந்தச்செயல்பாட்டின் நோக்கம். அவ்வாறு கண்டடையப்படும் அர்த்தம் அந்த ஆய்வு நடப்பதற்கு முன்னாலேயே கண்டடைபவரில் இருப்பதென்பதனால் எந்த ஒரு கருத்தையும் எந்த ஒரு படைப்பையும் எந்த ஒரு ஆளுமையையும் தாங்கள் முன்னரே நின்றிருக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதாகவே அது உள்ளது.
கட்டுடைப்பவர்கள் எவரும் கட்டுடைப்பை நிகழ்த்தும் தன் சொந்த ஆளுமையை, அல்லது பின்நவீனத்துவ மொழியில் சொல்லப்போனால் தன்னிலையை, கட்டுடைத்துக் கொள்வதில்லை. பின்நவீனத்துவக் கட்டுடைப்பு என்பது முதலில் தன்னிலையைத்தான் கட்டுடைக்கும் என்பதை இந்த சமூகவலைதளக் கட்டுடைப்பாளர்களிடம் சொல்லிப் புரியவைப்பதென்பது தெரிதாவே நாலுபக்கமும் கண்ணாடியை நிறுத்தி நாலு கோடி முறை தன்னை பெருக்கிக்கொண்டால்கூட நடக்கும் என்று தோன்றவில்லை.
இந்த நூல் உண்மையில் இதைச் சொல்கிறது, இந்த ஆளுமை உள்ளூர இதை உத்தேசிக்கிறார், இந்தக்கருத்துக்கு சரியான வகையில் இது பொருள் என்று ஒருவன் கட்டுடைத்து உள்ளிருந்து ஆணியை எடுத்து முன்னால் வைக்கும்போது நாம் கேட்கவேண்டிய முதல்கேள்வி இதுதான். அதைச் செய்யும் அவனுடைய நோக்கமென்ன, அவனுடைய அரசியல் என்ன, அவன் எதை முன் வைக்கிறான் எதை ஒளிக்கிறான்? எதை ஒளிக்கும்பொருட்டு எதை முன்வைக்கிறான்? எதை முன்வைப்பதனூடாக தன்னை எப்படி கட்டமைத்துக் கொள்கிறான்? அவ்வினாக்களே மிக முக்கியமானவை. அவை எழாத போது கட்டுடைப்பது என்பது வெறும் வம்பேதான். அது மனிதனுக்கு வாய்க்குள் நா அமைந்த காலம் முதல் நிகழ்ந்துவருவது. அதற்கு கருத்தியல் தளத்தில் எந்த மதிப்பும் எப்போதும் இருந்ததில்லை. இன்றும் இல்லை, நாளையும் இருக்காது.
கட்டுடைப்பு எனும் சொல் பிரெஞ்சுப்பின் அமைப்பியல்வாதியான தெரிதாவிடமிருந்து பின் நவீனத்துவத்திற்கு வந்தது. Deconstruction என்ற சொல்லுக்கு கட்டுடைப்பு என்று மொழிபெயர்ப்பு செய்து கொண்டுவந்தவர் உண்மையில் இங்கிருந்த ஓர் அரசியல் சூழலுக்கு அச்சொல்லைக் கருத்துப்பெயர்ப்பு செய்து கொண்டு வந்தார். அது சரியான சொல்லாக்கம் அல்ல என்றும் தகர்ப்பமைப்பு என்றே அதைச் சொல்ல வேண்டும் என்றும் க.பூர்ண சந்திரன் போன்றவர்கள் சொன்னார்கள். ஏனெனில் Deconstruction-ல் Construction அடங்கியுள்ளது. ஒரு கருத்தில் ஓர் ஆளுமையில், ஒரு நூலில், உள்ள கருத்தியலமைப்பை உடைத்து மறு ஆக்கம் செய்வதுதான் Deconstruction அல்லது தகர்ப்பமைப்பு. மாறாக நாம் சொல்லும் ‘கட்டுடைப்’பில் அந்த அமைப்பை உடைக்கும் செயல் மட்டுமே உள்ளது. மறு ஆக்கம் இல்லை.
ஆனால் இம்மொழியாக்கம் பிழையாகச் செய்யப்பட்டதல்ல. இங்கு ஏற்கனவே இருந்த ஒரு சிந்தனை வழக்கத்திற்குள் ஒரு புதிய கருத்து சற்று உரசி ஓரங்கள் மழுங்கடிக்கப்பட்டு கொண்டு வந்து பொருத்தப்பட்டது. ஆகவேதான் மேலை நாட்டில் தகர்ப்பமைப்பு ஆக்கபூர்வமான செயல்பாடாக இருக்கும்போது நம் சூழலில் அது வெறும் அழிவுக்கு மட்டும் பயன்படுவதாக இருக்கிறது. எள்ளி நகையாடுவதாக, வசைபாடுவதாக, உடைத்து வீசுவதாக உள்ளது. சொல்லப்போனால் தெரிதாவை ஒரு ஃப்ரெஞ்சுப் பெரியாராக மாற்றும் செயல்தான் இந்தக் கட்டுடைப்பு என்னும் சொல்லாட்சியில் உள்ளது. தெரிதாவை விட பெரியார் மாபெரும் கட்டுடைப்பாளர் என இங்கே பலர் புளகாங்கிதம் அடைந்தது அதனால்தான். Deconstruction ஐ சரியான அர்த்தத்திற்குக் கொண்டு செல்ல பூர்ணசந்திரனோ நோயல் இருதயராஜோ பலமுறை முயன்றும் கூட கட்டுடைப்பு என்னும் சொல்லே இங்கு புழக்கத்தில் நீடித்தது என்பது தற்செயலானதல்ல.
தெரிதாவின் தகர்ப்பமைப்பு என்பது ஒரு கருத்தை, ஒரு நூலை அல்லது ஒர் ஆளுமையை அதன் கட்டமைப்பை உடைத்து பிறிதொன்றை கட்டமைப்பதல்ல. அக்கட்டமைவை அவிழ்ப்பதுடன் மீண்டும் கட்டமைவை உருவாக்குவதற்கான முடிவற்ற சாத்தியக்கூறுகளை கண்டடைவது தான் அது. அல்லது மீண்டும் கட்டமைப்பதை முடிவின்றி ஒத்திப்போடுவது அது. சொல்லப்பட்ட அர்த்தத்திலிருந்து பிறிதொரு அர்த்தத்தை எடுப்பதல்ல. அர்த்தங்களின் சாத்தியங்களைக் கண்டெடுப்பது. அர்த்தங்களின் முடிவின்மையைத் தொடுவது. அது புனைவுகளை வாசிப்பதற்கும், தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கும், அரசியல் கூற்றுகளின் உள்ளடக்கத்தை நோக்கிச் செல்வதற்குமான அறிவுபூர்வமான பாதை. உலகிலிருக்கும் அனைத்திலிருந்தும் தன் சொந்த அரசியலுக்கு உதவும் ஒரு அர்த்தத்தை நோண்டி எடுப்பது என்றே இங்கு அது புரிந்து கொள்ளப்பட்டது. அதை இனி எவரும் எளிதில் மாற்றிவிட முடியாது.
உண்மையில் இந்தக் தகர்ப்பமைப்பு, கட்டுடைப்பு எனும் செயல்கள் மேலைச் சிந்தனைக்கு புதியவையல்ல. 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி தொடங்குவதே மரபை கட்டுடைக்கும் முயற்சிகளில் இருந்துதான். அது வெறும் உடைப்பாக இல்லாமல் ஆக்கமாக இருந்ததனால் தான் ஐரோப்பிய மறுமலர்ச்சி அத்தனை படைப்பூக்கத்தைப் பெற்றது. மத நம்பிக்கைகளை பண்பாட்டுநெறிகளை தத்துவக்கூற்றுகளை முழுமையாகவே தகர்ப்பமைப்பு செய்த காலகட்டமே நவீனஉலகத்தின் மிகப்படைப்பூக்கம் கொண்ட ஒரு வரலாற்றுத் தருணம். அன்றிலிருந்து மேலைதத்துவமும் சரி, கலைவிசாரங்களும் சரி தொடர்ச்சியான தகர்ப்பமைப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக நிகாஸ் கசன்சாகிஸின் ‘லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறைஸ்ட்’ கிறித்தவ மதத்தின் மீதான் ஒரு தகர்ப்பமைப்பு. கத்தோலிக்க மதம் உருவாக்கிய ஒரு கருத்துக்கட்டமைவை தகர்த்து மேலும் படைப்பூக்கம் கொண்ட நவீனமான ஒன்றை அது கட்டமைத்துக் காட்டுகிறது. அதைக் கட்டவிழ்க்கவும் பிறிதொன்றை வாசகன் கட்டமைத்துக் கொள்ளவும் வாசகனுக்கு வாய்ப்பை அளிக்கிறது. சற்று காலத்தால் முன்னால் சென்று எமிலி ஸோலாவின் பரபாஸை பார்த்தால் பிறிதொரு வகையில் அதையே அந்நாவல் செய்வதைக் காணலாம். மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியனை நோக்கிச் சென்றால் அதுவும் அதையே செய்வதைக் காணலாம்.
நாம் இன்று சிந்திக்கும் முறைக்கு சிந்தனை என்பதை மொழியின் ஒரு தோற்றமே என்றும் ஒவ்வொரு கருத்தும் மொழிக்கட்டுமானமே என்றும் அதன் மீதான ஒவ்வொரு புரிதலும் பிறிதொரு மொழிக்கட்டுமானமே என்றும் நமக்குக் கற்பித்த ரஸ்ஸல், விட்கென்ஸ்டீன், பார்த், தெரிதா போன்றவர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். சென்ற இருபதாண்டுகளில் நமது சிந்தனை இத்திசையில் பெருமளவுக்கு மாற்றம் அடைந்திருக்கிறது. பல புதிய வெளிச்சங்களை நாம் அடைந்திருக்கிறோம். பல புதிய நகர்வுகளை சாதித்தும் இருக்கிறோம். சமூகமென்பது அதிகாரத்தால் கட்டப்பட்டது என்று இன்று நாம் அறிவோம். அரசோ மதமோ மட்டுமல்ல, நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியே நுண்ணதிகாரங்களால் ஆனது. ஒவ்வொரு கருத்தும் அதிகார உள்ளடக்கம் கொண்டது. விழிப்பு நிலையில் அவ்வதிகாரத்தை எதிர்கொள்வது நம்மை விடுதலை செய்யும்
இவை அனைத்தும் உண்மையே ஆனால் இதற்கிணையான் உண்மை ஒன்றுண்டு. இக்கட்டுடைத்தல் அல்லது தகர்ப்பமைப்பு அதிகாரத்தை எதிர்கொள்வதற்கு மட்டுமே உதவும் கனவுகளை எதிர்கொள்வதற்கல்ல. சமூகம் கருத்துகளால் மட்டுமல்ல அதை விடப் பன்மடங்கு பெரிதான கனவுகளாலும் அமைக்கப்பட்டுள்ளது. கனவுகள் அமைப்புகள் அல்ல. அவை தீபோன்றவை, காணும் கணத்தில் அவற்றுக்கு வடிவம் உண்டு, கண்டபின் வடிவம் இல்லை. இலக்கியமும் கலைகளும் கனவுவெளிகளே ஒழிய கருத்துக்கட்டுமானங்கள் அல்ல. கனவுகளை எதிர்கொள்வதற்கு நமது விழிப்புநிலை நமது தர்க்கபூர்வ அணுகுமுறை எவ்வகையிலும் உதவாது என்பதோடு அவை கனவுகளை முழுமையாக சிறுத்துப்போகவும் வைத்துவிடும்.
தகப்பமைவை கட்டுடைப்பையோ முழுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வையில் மிக எளிமையான பலசமயம் கேலிக்குரிய சிந்தனையாளர்களாக்த் தோன்றுவதற்கு காரணம் இதுவே. ஏனெனில் படைப்பிலக்கியவாதிக்குக் கனவுகள் தெரியும். கனவுகளூடாக காலமற்ற ஒருவெளியில் அவன் பண்பாட்டைக் கோர்த்து வைத்திருக்கிறான். அப்பேரமைப்பின் முன் அதைப் பார்க்கும் விழியில்லாமல் சின்னப்பிள்ளைகள் கொட்டாங்குச்சி வைத்து விளையாடுவது போல் எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள் கட்டுடைப்பாளர்கள் அல்லது தகர்ப்பமைப்பாளர்கள். இன்றுவரை இலக்கியவாதி சொல்லாத எதையும் இவர்கள் சொன்னதில்லை. இலக்கியவாதி சொன்னதை திட்டவட்டமாக தங்கள் மொழியில் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இலக்கியவாதி புனைவுக்குள் கணந்தோறும் உருமாறும் சொற்களிலேயே அதைச் சொல்வான். வாசகனின் கனவை நோக்கியே அதை எய்வான். இவர்கள் அனலை சிற்பமாகக் கல்லில் பொறிக்க முயல்கிறார்கள், அவ்வளவுதான். நான் உள்ளூர் கட்டுடைப்பாளர்களைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. தெரிதாவையே அப்படித்தான் உணர்கிறேன். ஒரு நல்ல கவிஞனுடன் அவரை ஒப்பிடுகையில் ‘தம்பி கைகால் முட்டப்போகுது அப்பால போய் விளையாடு’ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
உண்மையில் நாம் எந்த அளவுக்கு விழிப்பாக இருக்க முடியும்? நம்மைச் சூழ்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தையும் நம்மால் கட்டுடைக்கத்தான் முடியுமா? ஒருவன் விழித்திருக்கும் நேரமெல்லாம் விழித்திருப்பது சாத்தியமாகுமா? இந்த தகர்ப்பமைவையோ கட்டமைவையோ பேசுபவர்கள் ஒன்றை உடைக்கும் பொருட்டு பிறிதொன்றில் காலூன்றி நிற்பவர்கள். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு சர்வாதிகாரத்தை கட்டுடைக்கலாம். மதச்சார்பின்மை எனும் பெருமொழிபில் [பெருங்கதையாடலில்] நின்று கொண்டு மதஅரசியலை கட்டுடைக்கலாம். இந்தச் சார்புநிலையை எந்த வகையிலும் அறிவார்ந்த விவாதமின்றியே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என அவர் தன்னை நோக்கினால் புரிந்துகொள்ளமுடியும். அவை அவருக்கு உணர்ச்சிகளாகவும் படிமங்களாகவும் தொன்மங்களாகவுமே வந்து சேர்ந்திருக்கும். பெரும்பாலும் உள்ளுணர்வால் தன்னிச்சையாக அப்பெருங்கதையாடலுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறார்கள்.
ஆகவேதான் கட்டுடைப்பவன் தன்னை முதலில் கட்டுடைத்தாகவேண்டும். எந்த வகையில் தான் ஒரு நம்பிக்கையை ஏற்றுகொண்டிருக்கிறோம். ஒரு கொள்கையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவன் தான் முதலில் உணரவேண்டும் அப்படி உணர்ந்தான் என்றால் எந்த கட்டமைப்புக்கும் தன்னை ஆட்படுத்தாமல் தூய தர்க்கத்தில் நின்றிருப்பான். அப்படி நின்றிருந்தால் ’சோறிடும் நாடு, துணிதரும் குப்பை, யாதுமொரு குறையில்லையே’ என்றிருக்கும் சித்தராக அல்லவா அவனிருப்பான்? அப்படி உண்மையிலேயே தூய தர்க்கநிலையில் நிற்கும் எவரையேனும் நாம் கண்டிருக்கிறோமா என்ன?
இந்த எளிய அரசியல் விளையாட்டிற்காக நாம் இழப்பது மிகப்பிரம்மாண்டமான ஒன்றை எவ்வகையிலும் நுண்ணுணர்வற்ற, ஒருபோதும் கனவுகளுக்குள் வரமுடியாத ஒருபெருங்கூட்டம் உள்ளது. அவர்கள் அரசியலில் திளைத்து, சதிகள் செய்து, கட்டுடைத்து கல்லெறிந்து விளையாடட்டும். ஆனால் அதுதான் நவீனச் செயல்பாடென்று நம்பி சென்று விடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். கனவு காணும் திறனுடையவர்கள் கவிதைக்கும் இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் வந்தாக வேண்டும். ஒரு தொன்மையான குறியீடு நாம் அதை நம் மூளையால் தொடும்போது தன்னை சுருக்கி மூடிக் கொள்கிறது. நம் கனவுகளுக்குள் அதை அனுமதித்தால் விதையென மாறி பெருங்காடாக விரிகிறது. கனவுகள் காலமற்ற வெளியில் நின்றிருக்கின்றன. காலமற்ற வெளியில் அதைச் சென்றடைய நாமும் அங்கு நம்மை ஆளுமையாக கருத்து நிலையாக தன்னிலையாகத் தொகுத்துக் கொண்டு நிற்கவேண்டும். அக்கனவுகளுடன் உருகி இணையும் ஒரு பெரும்பரப்பாகவே நமது அகம் அப்போது இருக்கிறது. கட்டுடைக்கலாம். ஆனால் அதன் எல்லையை அறிந்திருக்க வேண்டும். அதற்கப்பால்தான் நாமறிய வேண்டிய அனைத்தும் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்