அன்புள்ள ஜெ.,
தஞ்சை சந்திப்பில் நீங்கள் பரிந்துரைத்த Isak Dinesen எழுதிய “The Blue Jar” கதையை, “நீல ஜாடி” மொழிபெயர்ப்புடன் கூடி வாசித்தேன்.
மிக அபூர்வமான கதை. வாசித்தத்திலிருந்து இக்கதை ஒரு தேவதை கதையின் வசீகரத்தோடு, ஒரு மாய யதார்த்தவாத கதையின் பாய்ச்சலோடு, ஒரு சங்கக்கவிதையின் கனிவோடும் கவித்துவத்தோடும் மனதை விட்டு நீங்காமல் நிற்கிறது.
இக்கதை குறைவான சொற்களில் கடல் குறிக்கும், கடல்நீலம் குறிக்கும் விசாலத்தை, தனிமையை, தேடலை மனதினுள் உருவாக்குகிறது. ஹெலெனாவின் அப்பாவும் சரி, ஹெலேனாவும் சரி, இருவரும் நீல ஜாடியை தேடுகிறார்கள். ஹெலெனாவின் அப்பாவுக்கு நீலஜாடி ஒரு ஆடம்பரப்பொருள். ஆனால் ஹெலேனாவுக்கு அது அவள் அந்த மாலுமியுடன் வாழ்ந்த ஒன்பது நாட்களில் பெற்றது, பின் தொலைத்தது, பின் தேடியது, எல்லாமுமே. தந்தையின் மேட்டிமைக்கு குறியான ஜாடியை எடுத்துக்கொண்டு அதில் மாலுமி ஆளுகின்ற கடலின் நீலத்தினை கலக்கிறது, ஒரு வகையில் மீறல். முழுக்கடலை ஹெலெனா தன் அரணாக்குக்கிறாள்; அது அந்த ஜாடி.
கடலை மாலுமியின் நினைவுச்சின்னமாக, அவன் புழங்கி வாழும் இடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆகவே அவள் இருக்க விரும்புவது அவனுடைய உலகில் என்று கூறலாம். அவன் நாடுகடத்தப்பட்டாலும் அவனோடு ஏதோ வகையில் இணைந்து இருக்க விரும்புகிறாள். (“நாங்கள் இருவரும் கடல் நடுவில் சந்திப்போம்” போன்ற வரிகள்). சங்கத் தலைவியைப்போல அவள் வீட்டில் தேனும் பாலும் ஓடினாலும் அவனுடைய தோட்டத்தில் எஞ்சிய கலிழி நீரையே விரும்புகிறாள். இது ஒரு வித வாசிப்பு என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இந்தக்கதை வேறு வடிவிலும் திறந்தது.
“Surely there must be some of it left from the time when all the world was blue.” என்கிறாள். When all the world was blue. உலகமே ஒரு நிறமாக இருந்தால் அந்த உணர்வின் கூர்மைக்கும் ஏகாந்தத்துக்கும் வெளியுலகில் எது ஈடாகும்? “கடல் நம்மை சுற்றி எங்குமே உள்ளது, உலகம் அதில் மிதக்கும் ஒரு நீர்க்குமிழி” என்கிறாள். ஏக்கமும் தனிமையும் கூட நம்மை சுற்றி பேரோலம் எழுப்புகிறது. கடல் போல் தலைகீழாக கவுக்கிறகு. அலை அலையாய் வந்து அறைகிறது. அதுவே எனக்கு வீடு, அரண், இறுதி ஒய்வு, பேரமைதி என்று ஒரு மனம் ஏற்றுக்கொள்ளும் என்றால் அது எதை இழந்துள்ளது? அதோடு முக்கியமாக, எதை பெற்றுள்ளது?
அந்த ஒன்பது நாட்களில் ஹெலெனாவின் அனுபவங்கள் என்னென்ன என்று கதை விவரிக்கவில்லை. விரிக்காமல் போனதால் அவளது துயரமும் ஏக்கமும் காத்திருப்புக்கு சிறு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் மானுட ஏக்கத்தின், தவிப்பின், கொந்தளிப்பின், முடிவின்மையின் பிரதிநிதியாக ஆகிறது. அவள் தேடும் “அந்த” நீலம் யாவரும் அவரவர் மனதினில் அறிந்ததே.
இக்கதையை வாசிக்கையில் ஏனோ பல சங்கக்கவிதை வரிகளாக என் மனதில் ஓடியது. “அலமரல அசை வளி அலைப்ப என் நெஞ்சம்” என்றும், “கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே” என்றும். கதையின் இறுதியில் அவள் அந்த நீலத்தை – அந்த ஜாடியை – கண்டடையும் போது, கொஞ்சம் காத்திருந்தால் நம்மிடம் இருந்ததெல்லாம் நிச்சயம் திரும்பி வந்து விடும், என்று வியக்கிறாள். காத்திருப்பு தான் – ஒரு வாழ்க்கை முழுவதும் காத்திருந்துவிட்டாள். எவ்வளவு பெரிய காத்திருப்பை எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டாள். காத்திருப்பு – கடல் – நீலம். இதன் விஸ்தாரம் மனதில் விரிந்து விரிந்து செல்கிறது.
இக்கதையை பரிந்துரைத்ததற்கு மிகமிக நன்றி. நான் ஐசக் டினேசன் எழுதிய பிற கதைகள் அடங்கிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இப்படி ஒரு கதையாவது எழுதிவிட்டால் என்னை ஒரு எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
“குடை” கதையில் வரும் அந்த பீங்கான் ஜாடி படிமத்தை கொண்டு நீங்கள் சொன்னது போல் ஒரு தனிக்கதை அமைத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அனுப்புகிறேன்.
ஆனால் இக்கதையை, இதுபோல் சிறந்த கதைகளை, வாசித்தப்பிறகு, நான் எழுதுபவை இதைப்போல் இல்லை என்றால் அதை கதை என்றே மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பயிற்சியின் மூலம் இப்படிப்பட்ட கற்பனைப் பாய்ச்சல்களை அடையமுடியுமா? அதற்கு சொல் அமையுமா? என்று ஏக்கமாக உள்ளது. எழுத நினைக்கும் கதைக்கும் எழுத்தில் விழுகின்ற கதைக்குமான இடைவெளி அவ்வப்போது சோர்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் வேறு வழி இல்லை என்று தெரியும். தொடர்ந்து எழுதுகிறேன்.
நன்றி,
சுசித்ரா
***
அன்புள்ள சுசித்ரா
நீண்டநாட்களுக்குப்பின் அருண்மொழி பெயரை அச்சில்பார்க்கிறேன். மிகுந்த ஆர்வத்துடன் மொழியாக்கங்களில் ஈடுபட்டு பின்னர் ஏனோ அவளே நிறுத்திக்கொண்டாள். மீண்டும் தொடங்க அவளுக்கு இது ஊக்கமளிக்கலாம்.
நீலஜாடி அருண்மொழியின் மானசீகமான இலட்சியக்கதை. பின்னர் டைட்டானிக் படம் வந்தபோதும் அந்தக்கதையை நினைத்து ஒரு கண்கலங்கல்.
ஆம், அது தேவதைக்கதைகளின் சாயல்கொண்டதுதான். உலகியலின் தளத்திலேயே உள்ளம் உலவுகையில் எளிதில் அத்தகைய ஒருகதை நம் உள்ளத்தில் தோன்றிவிடாது என்பதும் உண்மைதான்.
ஆனால் இத்தகைய கதைகளுக்கு ஒரு என ஓர் உலகம் உள்ளது. உருவகங்கள், கட்டற்ற கற்பனைகள், உணர்வுகளின் அழகியல்மாற்றுக்கள் அடங்கியது அது. அதற்குள் சென்றுவிட்டால் நாமும் அவற்றைப்போல எழுதமுடியும்
உங்கள் கதையிலேயே அந்த ஜாடி உடைவதைப்பற்றி எழுதியபோது அதிலிருந்து நிகழ்காலத்துக்கு வருகிறீர்கள். அப்படியே பின்னால்சென்று தொன்மத்திற்குச் சென்றிருந்தால் அது நீலஜாடி போன்ற ஒரு கதையாக ஆகியிருக்கும்
தஞ்சையில் நிகழ்ந்ததுபோன்ற நேர்ச்சந்திப்புக்கள் உண்மையில் நம்முள் கல்மூடி இருக்கும் ஊற்றுக்களை திறக்கவேண்டும். அதன்பின் அதுவே நம்மை எழுதச்செய்யும்
ஜெ
***