கருத்துக்கெடுபிடி

reli

 

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என அறிமுகம் செய்துகொண்டதும் இயல்பாகப் பேச்சு ஆரம்பமாகியது.

ஒருவர் பாகிஸ்தான் நாடகாசிரியர். இன்னொருவர் துர்க்மேனிஸ்தான்காரர். ஒருவர் ஈரான். இன்னொருவர் பங்களாதேஷ். அவர்கள் ஒன்றாகவே உள்ளே வந்தனர். அனைவருமே இஸ்லாமியர். ஆனால் வெவ்வேறு உள்மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.

நாடகத்தை சென்ஸார் செய்வதைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது ஒவ்வொருவரும் அவர்களின் நாட்டுச்சூழலைச் சொல்லத் தொடங்கினர். மெல்ல மெல்ல நான் உள்ளூர நடுங்கத் தொடங்கினேன். நம் வாழ்க்கையில் நாம் அதற்கிணையான கருத்தியல் கெடுபிடியை சந்தித்திருக்கவே மாட்டோம். உண்மையில் அச்சூழலை நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. இந்தியாவில் நெருக்கடிநிலைக் காலகட்டத்திலும்கூட அத்தகைய துல்லியமான  கண்காணிப்பு – கருத்து ஒடுக்குமுறை – தண்டனை அமைப்பு இருந்ததில்லை.

அந்த நான்குபேருமே பலமுறை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்தவர் தவிர பிறர் இரண்டுமுறைக்குமேல் சிறைசென்றிருக்கிறார்கள். துர்க்மேனிஸ்தான்காரர் மூன்றுகசையடிகள் பெற்றிருக்கிறார். தழும்பை காட்டினார். ஆனால் அவர்கள் தீவிரமான கருத்துக்கள் கொண்ட போராளிகள் அல்ல.அரசையோ அமைப்பையோ விமர்சிப்பவர்களும் அல்ல. சொல்லப்போனால் அவர்கள் அரசுக்கு ஆதரவாளர். ஆகவேதான் அவர் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அவ்வப்போது சிலகருத்துக்கள் பிசிறு தட்டுவதுண்டு. அல்லது வெறும் சந்தேகம் எழுவதுண்டு. ஏதேனும் ஒரு இஸ்லாமிய மதகுருவுக்கு ஒருவரி இஸ்லாமுக்கு எதிரானது, மதநிந்தை என ‘தோன்றினாலே’ போதும். எது தோன்றும் என்று சொல்லவேமுடியாது. உதாரணமாக ’விண்ணிலும் மண்ணிலும் வேறு எதைவிடவும் நீ எனக்கு முக்கியமானவள்’ என காதலன் காதலியிடம் சொல்லும் வசனம் குர் ஆனுக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. பன்னிரண்டுநாள் சிறைவாசம் ஓரிரு அடிகள். அந்நாடகத்தையே திரும்பப்பெற்றுக்கொண்டபின் சரியாகியது.

சரி என அதை ஓர் அளவுகோலாகக் கொள்ளமுடியாது, ஏனென்றால் அதைவிட கடுமையான வசனங்கள் வேறெங்காவது அனுமதிக்கப்பட்டிருக்கும். இது ஒரு மதகுருவின் கண்ணுக்குப்பட்டு அவருடைய அப்போதைய மனநிலையில் அப்படித் தோன்றியது, அவ்வளவுதான் காரணம்.

அதோடு முக்கியமான பிரச்சினை மற்ற எழுத்தாளர்கள். ஒருவரைக் கவிழ்க்க இன்னொருவர் அவருடைய எழுத்தை மதநிந்தனை என திரித்து போட்டுக்கொடுப்பார். அதனூடாக தான் மேலேறி வரமுயல்வார். பெரும்பாலும் முக்கியமான கலைஞர்களுக்கு எதிராக அரைகுறைகள் இதைச்செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் ஆச்சரியமாக மிகமுக்கியமான படைப்பாளிகளும் பிறருக்கு இதைச் செய்திருக்கிறார்கள். அதை தமிழ்ச் சூழலைவைத்து நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது.

“சோவியத் ருஷ்யாவின் அடக்குமுறையிலிருந்து விடுதலை கிடைத்தது உங்கள் நாட்டுக்கு என்றல்லவா சொல்லப்படுகிறது?” என்றேன். “ருஷ்யாவுக்குத்தான் உண்மையில் விடுதலை கிடைத்தது. ஏனென்றால் அது ஐரோப்பாவின் பகுதி. அங்குள்ள மக்களுக்கும் ஐரோப்பியப் பண்பாடு உண்டு. அங்கே முன்னரே மதத்தை அரசியலில் இருந்து விலக்கிவிட்டிருந்தனர். பிற நாடுகள் எல்லாம் சோவியத் ருஷ்யாவுக்குள் சென்றபோது இருந்ததைவிட மோசமான ஆட்சிக்குள்தான் சென்றனர். பலநாடுகளில் மதத்தலைமையே அரசியலை ஆள்கிறது.

reli

“மதவாதம் எதுவானாலும் மிகமிகக் குறுகியதாகவும், வளர்ந்து விரிவதற்கு எதிரானதுமாகவே இருக்கும்” என்றார் துர்க்மேனிஸ்தான் நாடகாசிரியர்.முரளி மார்க்ஸியர் ஆகையால். மிகுந்த உற்சாகத்துடன் அதை அன்று மேடையில் சொல்லப்போவதாகச் சொன்னார். நால்வருமே பதறிஎழுந்து “அய்யோ’ என கூச்சலிட்டுவிட்டனர். “அதைவிட நீங்கள் எங்களை நேரடியாகவே சிறைக்கு அனுப்பிவிடலாம். எங்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவேண்டாம். இந்த சிறிய பயணத்தில்தான் நாங்கள் பேசிக்கொள்கிறோம். எவரும் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் பேசமுடிகிறது” என்றார்.

இந்தியாவில் நாம் அரசின் ஒடுக்குமுறையை, கருத்தியல் கெடுபிடியைச் சந்தித்ததே இல்லை என்பதே உண்மை. ஆகவே இங்கே நம்மைப் போராளிகளாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு ஒடுக்குமுறை என்றெல்லாம் கூவுகிறோம். இந்தியாவின் மாபெரும் ஜனநாயகம் கருத்துப் பரிமாற்றத்தை ஒப்புகிறது, அதன் அடிப்படை அலகாக உள்ள எளிய இந்தியன் எண்ணங்களின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவன் என்பதே அதற்குக் காரணம்.

முந்தைய கட்டுரைநீலஜாடி -கடிதம்
அடுத்த கட்டுரைதளம் முடக்கம்