காட்டிருளின் சொல்

Beeran Auliya Uppapa(ra)

இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன்

பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் மகத்தான ரகசிய விவேகங்களில் ஒன்று அது. எங்கெல்லாம் அக்காட்டாளன் இறுதியில் முக்கண்ணும் நாகமும் உடுக்கும் சூலமும் புலியுரியும் நீறுமாக எழுந்தருள்கிறானோ அங்கே ஞானம் முழுமைகொள்கிறது. யோகமரபின் எந்தத் துளியிலாயினும் தொட்டு முன்னகரும் எவரும் உணர்ந்தறியும் ஒன்று.

அந்தத் தருணம்நோக்கிச் செல்லும் ஒருநாவலாக இதை உருவகித்தேன். திசைவென்ற அர்ஜுனன் நாககண்டனின் கால்களில் சென்றமர்ந்து அதுவரை கற்று வென்றதை கடந்து முழுமைசெய்துகொள்கிறான். வேதங்கள் ஒன்றல்ல பல என்னும் செய்தி அத்தனை மறுதொகுப்புகளுக்குப் பின்னரும் மகாபாரதத்தில் உள்ளது. வேதங்களினூடாகச் சென்று வேதம்கடந்து வேதப்பொருளென நின்றிருப்பதை அறியும் அர்ஜுனன் யோகி. மாவீரர்கள் மாபெரும் ஞானப்பயணிகள் என்பது எல்லா தொன்ம மரபுகளிலும் உள்ளதுதான்

காவியங்களின் தொகைவடிவம் இயல்பாகவே வரலாற்றில் உருவாகிவந்தது யுலிஸஸின் பயணமாயினும் சீவகனின் செலவாயினும். ஒரு வீரனின் பயணமென்பது அவன் தன்னைக் கடந்து தன்னுள் என ஆழ்ந்து செல்வதென்றே காவியங்கள் சொல்கின்றன. திசைவெல்லும்பொருட்டு அர்ஜுனன் சென்ற பயணங்கள் வழியாக கதைகளினூடாக தொன்மங்களினூடாக படிமங்களினூடாக இந்நாவல் கிராத மெய்மையை நோக்கிச் செல்கிறது.

2016 அக்டோபர் 7 அன்று கேதார்நாத் சென்றேன். கிராதம் திகழ்ந்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வந்து இதை எழுதுகையில் மெல்ல நிலைபெயர்ந்து பித்தனென்று ஆனேன். பித்துபோல பெருநிலை பிறிதில்லை

இந்நாவலை அலைதலின் காலங்களில் என் கொதித்துக்கொண்டிருந்த புன்தலை பணியும் வாய்ப்பு பெற்ற ஓச்சிற உப்பூப்பா பீரான் அவுலியா [ரலி] அவர்களுக்குப் படைக்கிறேன். மூன்றுமுறை அவரைச் சென்று வணங்கி உடன் இருந்திருக்கிறேன். மெய்மையென்றாகி அமர்ந்த அவர் முகத்தின் பெருங்களிப்பை நினைவுகூர்கையில் இவ்விரவில் மீண்டும் அனைத்திலிருந்தும் மேலெழுகிறேன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபறக்கை – கடிதம்
அடுத்த கட்டுரைஇந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?