வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51

51. குருதியமுது

பேற்றுக்குடிலில் ஜெயந்தி நோவுற்று இரு கைகளாலும் மஞ்சத்தைப் பற்றியபடி முனகி தலையை அசைத்துக்கொண்டிருக்கையில் அவள் விரித்த கால்களுக்கு இருபுறமும் நின்று முழங்கால்களையும் பாதங்களையும் மெல்ல வருடியபடி தாழ்ந்த குரலில் “இன்னும் சில கணங்கள்தான், தேவி. எளிது, மிக எளிது. இன்னொருமுறை மூதன்னையரை எண்ணி உடலை உந்துக! மீண்டுமொருமுறை மட்டும்…” என்று சொல்லிக்கொண்டிருந்த வயற்றாட்டிகளில் ஒருத்தி திரும்பி மூக்கை சுளித்து “எரிமணம்” என்றாள். அவள் சொன்னதுமே பிறரும் அதை உணர்ந்தனர். கங்கைக்கரையில் அமைந்த சுக்ரரின் தவச்சாலையில் ஈற்றறை என அமைந்த ஈச்சையோலைக் குடிலுக்கு வெளியே விரிந்துகிடந்த காட்டின்மேல் அப்போது இளமழை பெய்துகொண்டிருந்தது. இலைத்தழைப்புகளும் கூரைகளும் ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

“மரத்தில் மின்னல் விழுந்திருக்கக்கூடும்” என்றாள் ஒருத்தி. “இடியோசை எழவில்லையே?” என்று பிறிதொருத்தி சொன்னாள். “ஆம், மின்னலும் ஒளிரவில்லை” என்ற இளைய வயற்றாட்டி “குடிலேதும் பற்றியிருக்குமோ…?” என்றாள். “ஆம், அனலெரியும் மணம், மிக அருகே” என பிறிதொரு வயற்றாட்டி சொல்லும்போதே “அது இக்குருதியின் மணம்” என ஒருத்தி சொன்னாள். கைகளை கூப்பி நெஞ்சோடணைத்துக்கொண்டு  குனிந்து நோக்கி “ஆம். பாறை பிளந்து வரும் கன்மதம் போலவே மணக்கிறது இக்குருதி” என்றாள். திகிலுடன் அனைவரும் ஜெயந்தியின் உடல் பிளந்து ஊறிவந்த செங்குழம்பை நோக்கினர். “கன்மதம் போலவே…” என்றாள் ஒருத்தி.

“ஆம்” என மூச்சிழுத்தபின் “சுடுமோ…?” என்று  இளையவள் கேட்டாள். “உளறாதே…” என்றபின் சற்று தயங்கிய கையை நீட்டி வைத்து அக்குருதியை தொட்டாள் முதுமகள். பின்னர் “கருக்குருதிதான். நீர்நிறம் கலந்துள்ளது” என்றாள். “வாயில் திறக்கும் நேரம்” என்றபடி ஜெயந்தியின் கால்களை மேலும் சற்று விலக்கினாள் முதுவயற்றாட்டி. விதையுறைக்குள் விதை என ஊன் பை மூடிய குழவியின் தலை பிதுங்கி வெளிவந்தது. நீர்க்குமிழி உந்தி அசைந்த பனிக்குடத்திற்குள் அது தன் சிறு கைகளை அசைத்து அதை கிழிக்க முயன்றது. “எடு!” என்றாள் முதியவள். ஆனால் வயற்றாட்டிகள் சில கணங்கள் தயங்கினர். “எடடி, அறிவிலியே!” என முதியவள் சீற இருவர் பாய்ந்து குழவியை பற்றிக்கொண்டனர்.

கந்தகம் எரியும் மணத்துடன் குருதி பெருகி வழிந்தது. முதியவள் குழவியை உறைகிழித்து வெளியே எடுத்து அதன் எழா சிறுமூக்கை சுட்டுவிரலால் அழுத்திப் பிழிந்து பால்சளி நீக்கி உரிந்த தோலுடன் சிவந்திருந்த குருத்துக்கால்களைப் பற்றி தலைகீழாகத் தூக்கி இருமுறை உலுக்கினாள். குழவி ஒருமுறை மூச்சுக்கு அதிர்ந்து மெல்ல தும்மி பூனைக்குட்டிபோல்  மென்சிணுங்கலொன்றை எழுப்பியது. பின்னர் இரு கைகளையும் உலுக்கியபடி வீறிட்டு அலறத் தொடங்கியது. வயற்றாட்டியரின் முகங்கள் மலர்ந்தன. “பெண்” என்றாள் ஒருத்தி. அருகே வந்து நோக்கி “செந்தாமரை நிறம்” என்றாள் பிறிதொருத்தி. “மென்மயிர் செறிந்த சிறுதலை. பிறக்கும் குழவியில் எப்போதும் இத்தனை மயிர் கண்டதில்லை” என்றாள் இன்னொருத்தி.

குழவியை எடுத்துச்சென்று அருகிருந்த மரத்தொட்டிக்குள் மஞ்சளும் வேம்பும் கலந்து நிறைத்திருந்த இளவெந்நீரில் தலைமட்டும் வெளியே தெரியும்படி வைத்து நீராட்டினாள் முதியவள். குழவியில் ஈடுபட்டு அவர்கள் அன்னையை நோக்க மறந்திருந்தனர். மெல்லிய முனகலோசை ஒன்று எங்கோ என கேட்டது. எவரோ படியேறுவதென்றே ஒருத்தி அதை எண்ணினாள். இன்னொருத்தி திரும்பிப்பார்த்து அச்சத்தில் மூச்சொலி எழுப்பினாள். பிறர் திடுக்கிட்டு திரும்பிப்பார்க்க  ஜெயந்தி இரு கைகளாலும் மஞ்சத்தின் விளிம்பைப் பற்றியபடி உடலை இறுக்கி பொழியும் அருவிக்குக்கீழ் நிற்பதுபோல தோள்குறுக்கி நடுங்கிக்கொண்டிருந்ததை கண்டனர்.

“வலிப்பு” என்று ஒருத்தி சொல்ல முதுவயற்றாட்டி “என்னாயிற்று? ஏன்?” என்று குழந்தையை பிறர் கைகளில் கொடுத்துவிட்டு வந்து ஜெயந்தியின் கைகளைப்பற்றி அவள் நாடியை பார்த்தாள். பின்னர் “தெய்வங்களே!” என்றாள். “என்னாயிற்று?” என்றாள் இன்னொரு முதியவள். ஒன்றும் சொல்லாமல் தன் கையில் துவண்ட ஜெயந்தியின் கையை சேக்கைமேல் வைத்தாள். இல்லையென்பதுபோல் விரல்விரிய அது மெல்ல மல்லாந்தது. அனைவருக்கும் புரிந்துவிட்டிருந்தது. அவர்கள் மெல்ல குளிர்ந்துகொண்டிருந்த ஜெயந்தியின் உடலைச் சூழ்ந்தபடி சொல்லின்றி நோக்கி நின்றனர். அப்போதும் அவள் முகத்தில் பெருஞ்சினமும் எவர் மேலென்று அறியாத வஞ்சமுமே நிரம்பி இருந்தது. அத்தசைகள் அவ்வண்ணமே வடிக்கப்பட்டவைபோல்.

“செய்தி சொல்லவேண்டும்” என்று ஒருத்தி மெல்ல சொன்னாள். அச்சொல்லில் கலைந்த மற்றவர்கள் என்ன செய்வதென்றறியாமல் அங்குமிங்கும் செல்ல முயல்வதன் முதற்கணத்தில் உடல் ததும்பினர். முதியவள் மெல்லிய நம்பிக்கை ஒன்றை மீண்டும் வரவழைத்தவளாக ஜெயந்தியின் கையைப்பற்றி மீண்டும் நாடி பார்த்தாள். அவள் கழுத்திலும் நெற்றியிலும் கைவைத்தாள். அதைக் கண்டு பிறிதொரு வயற்றாட்டியும் மறுகையையும் எடுத்து நாடி பார்த்தாள். வியப்புடன் விழிதூக்கி “எப்படி இத்தனை எளிதாக…?” என்றாள் அவள். “இதை ஒருபோதும் நாம் வகுத்துவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருமுறையில். ஒன்று பிறிதொன்றென நிகழ்ந்தால் இது என்னவென்று ஏற்கெனவே கண்டடைந்துவிட்டிருப்பார்கள்” என்றாள் முதுமகள்.

“எவர் சென்று சொல்வது?” என்று கையில் குழந்தையுடன் நின்ற வயற்றாட்டி கேட்டாள். “குழவியை கொடு! நான் சென்று சொல்கிறேன்” என்று சொன்ன முதியவள் தன் கைகளைக் கழுவியபின் பதமாக குழவியை வாங்கிக்கொண்டாள். உடல் உலுக்கி அழுதுகொண்டிருந்த குழந்தையின் வாயில் தன் விரலை வைத்தாள். விழியிலாப் புழுபோல குழவி எம்பி அதை கவ்வ முயன்றது. “அனல்நிறை வயிறு” என்றாள் முதுமகள். “அதன் உடலும் அனலென கொதிக்கிறது. காய்ச்சல் கொண்டிருக்கிறது” என்றாள் பிறிதொருத்தி. “ஆம்” என அப்போதுதான் அதை உணர்ந்தாள் முதுமகள். குழவியின் வயிற்றைத் தொட்டு நோக்கி “ஆம்! ஏனிப்படி கொதிக்கிறது? இதுவரை கண்டதில்லை” என்றாள்.

இன்னொருத்தி “அன்னையின் அனலையும் எடுத்துக்கொண்டது போலும்” என்றாள். “இன்னும் சற்று நேரத்தில் இதற்கும் வலிப்பு வந்துவிடக்கூடும்” என்று சொன்னபின் “தேவி இறந்த செய்தியை சொல்வதற்கு முன் இக்குழவியை காட்டவேண்டும். அதுவரை இது உயிருடன் இருக்குமென்றால் நன்று” என்றபடி அதை மெல்லிய துணியில் நன்கு சுற்றி கையில் எடுத்துக்கொண்டு சிற்றடி வைத்து வெளியே சென்றாள். வெளியே சென்று புதுக்காற்றை ஏற்றதும் அச்செயலாலேயே அவள் முந்தைய நிகழ்வுகளிலிருந்து விடுபட்டாள். ஒவ்வாதனவற்றை உதற விழையும் உள்ளம் புதிய தருணத்தை பற்றிக்கொண்டது. அவள் முகம் மலர்ந்து விரைவுநடை கொண்டாள்.

பேற்றுக் குடிலின் வெளியே மகிழமரத்தடியில் தன் நான்கு மாணவர்களுடன் நின்றிருந்த சுக்ரரை அணுகி குழவியை நீட்டி “பெண் குழந்தை, முனிவரே” என்றாள் வயற்றாட்டி. முகம் மலர்ந்த சுக்ரர் இரு கைகளையும் நெஞ்சில் சேர்த்து கூப்பி “நலம் திகழ்க! நீணாள் வாழ்க! வெற்றியும் புகழும் நீளும்குலமும் அமைக!” என்று தனக்குத் தானே என சொன்னார். “நோக்குங்கள்” என்று குழவியை மேலும் அருகே கொண்டு சென்றாள் முதுமகள். அஞ்சியவர்போல “வேண்டாம்” என்று அவர் பின்னடைந்தார். “தயங்கவேண்டாம், முனிவரே. உங்கள் மகள் இவள். கைகளில் வாங்கலாம். நெஞ்சோடணைக்கலாம், முத்தமுமிடலாம், ஒன்றும் ஆகாது” என்று வயற்றாட்டி சிரித்தபடி சொன்னாள்.

“வேண்டாம்” என்று சுக்ரர் தலையசைத்தபோது நாணத்தாலும் பதற்றத்தாலும் அவர் முகம் சிவந்திருந்தது. “வாங்குங்கள்!” என்று முதுமகள் சற்று அதட்ட அவர் தானறியாது கைநீட்டினார். அக்கைகளில் அவள் குழந்தையை வைத்தாள். “மெல்ல… மெல்ல…” என்றபடி அவர் அதை எடைதாளா கிளைகள் என தாழ்ந்த  கைகளில் பெற்றுக்கொண்டார். கைகளும் உடலும் நடுங்க அதை கீழே போட்டுவிடுவோம் என்று அஞ்சி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அத்தருணத்தின் எழுச்சியை நிகர்செய்யும்பொருட்டு “பெண்குழந்தை அல்லவா?” என்று அவளை நோக்கி பொருளிலா வினாவை கேட்டார். “ஆம், பேரழகி. இத்தனை செறிகுழல் கொண்ட குழவியை இதற்கு முன் நான் கண்டதில்லை” என்றாள்.

“அன்னையை போல், அன்னையை விடவும்…” என்றபடி சுக்ரர் குனிந்து குழந்தையை பார்த்தார். பிறகு “முத்தமிடலாமா…?” என்றார். “ஆம், ஆனால் உள்ளங்கால்களில் முத்துவது வழக்கம்” என்றாள் வயற்றாட்டி. “ஆம், உள்ளங்கால்களில்தான்! தேவியின் கால்கள். உலகளந்த கால்கள்” என்றபடி குனிந்து காற்றில் உதைத்து விரல் சுழித்துக்கொண்டிருந்த இரு கால்களில் ஒன்றை மெல்ல தூக்கி தன் நெற்றிமேல் வைத்தார். உதடுகளால் முத்தமிட்டார். “கால்களால் ஆள்க! கால்களால் வெல்க!” என்று நடுங்கும் குரலில் சொன்னார். பனித்துளி உதிருமொரு கணத்தில் நெஞ்சு நெகிழ்ந்து விம்மி அழத்தொடங்கினார். விழிநீர்த்துளிகள் தாடிப்பிசிர்களில் வழிந்து தயங்கின.

வயற்றாட்டி  குழவியை அவர் கைகளில் இருந்து வாங்கினாள். இரு மாணவர்களும் அவரை சற்று அணுகினர். ஒருவன் அவர் தோளைத்தொட்டு “ஆசிரியரே…” என்று மெல்ல அழைத்தான். கைகளால் நெஞ்சைப்பற்றியபடி தலைகுனிந்து தோள்கள் குலுங்க சுக்ரர் அழுதார். “குழவிக்கு பசிக்கிறது. நான் உள்ளே கொண்டுசெல்கிறேன்” என்று வயற்றாட்டி திரும்புகையில்தான் அவர் தன் துணைவியை உணர்ந்து “அன்னை எப்படி இருக்கிறாள்…?” என்றார். வயற்றாட்டியின் முகம் மாறுபட்டது. அக்கணமே அவ்வுணர்வை பெற்றுக்கொண்ட சுக்ரர் உரத்த குரலில் “சொல்! எப்படி இருக்கிறாள்?” என்றார். “அவர்கள் இல்லை” என்றாள் வயற்றாட்டி. “இல்லையென்றால்…?” என்றபடி பாய்ந்து வயற்றாட்டியின் தோளைப் பற்றினார் சுக்ரர்.

“அறியேன்… ஆயிரம் பேறெடுத்தவள், இது எவ்வண்ணம் நிகழ்கிறதென்று இக்கணம்வரை புரிந்ததில்லை” என்றாள் வயற்றாட்டி. “அதில் நான் செய்வதற்கேதுமில்லை.” சுக்ரர் அவள் தோளைப் பற்றி உலுக்கி “சொல், என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று, இழிமகளே…? நீ என்ன செய்தாய் அங்கு?” என்றார். அத்தருணத்தில் வயற்றாட்டிகள் இயல்பாக தேரும் ஓர் ஒழிதல் சூழ்ச்சியை பின்னால் வந்து நின்ற இன்னொரு வயற்றாட்டி செய்தாள். “குழவி அன்னையை கொன்றுவிட்டு வெளிவந்தது” என்றாள். சுக்ரர் கால்கள் நடுங்க ஈரடி பின்னால் வைத்து தன் மாணவனின் தோளை பற்றிக்கொண்டார். “எங்கே அவள்?” என்றார். “உள்ளே” என்றாள் இளம்வயற்றாட்டி. விழிகளால் செல்வோம் என முதுமகளிடம் சொன்னாள்.

“அவள் எங்கே?” என கூவிய சுக்ரர் “எங்கே? எங்கே அவள்?” என்று அலறியபடி பாய்ந்து குடிலுக்குள் நுழைந்தார்.  உள்ளே நிலம்பரவி வழிந்த கருக்குருதியைத் துடைத்து உலரத்தொடங்கிய கால்களைக் கழுவி ஜெயந்தியின் சடலத்தை ஒருக்கிக்கொண்டிருந்த வயற்றாட்டிகள் சிதறி விலகினர். பெருத்த வயிறு நடுவே எழுந்திருக்க வெண்ணிறத்துணி மூடிய உடலை அவள் என எண்ண அவரால் இயலவில்லை. “எங்கே அவள்?  அவள் எங்கே? எனக்கு தெரியும்! நானறிவேன்! நானறிவேன்…” என்று கூவியபடி அருகணைந்த சுக்ரர் அவள் என உணர்ந்ததும் “ஆ!” என அலறி பின்னடைந்தார். நடுங்கியபடி நின்று நோக்கியபின் மிக மெல்ல முன்னால் சென்று மார்பின்மேல் மடித்து கோத்து வைக்கப்பட்டிருந்த அவள் கைகளை பற்றினார்.

அது தேளெனக் கொட்டியதுபோல் உதறிவிட்டு பின்னால் வந்தார். அவர் கையிலிருந்து விழுந்த அவள் கை மஞ்சத்தின் விளிம்பில்பட்டு சரிந்து தொங்கி ஆடியது. அவள் முகம் பிறிதெங்கோ கேட்கும் சொல்லொன்றுக்கு செவி கூர்ந்ததுபோல் இருந்தது. “இது அல்ல” என்று அவர் சொன்னார். பித்தனின் விழிகளுடன் “எங்கே அவள்?” என்று வயற்றாட்டியரிடம் கேட்டார். அவர்கள் மறுமொழி சொல்லவில்லை. “இது அல்ல” என்றபின் அச்சம் கொண்டவர்போல திரும்பி வாயிலை நோக்கி ஓடி வெளியே பாய்ந்தார். படிகளில் காலிடற விழப்போனவரை அவரது இரு மாணவர்கள் பற்றிக்கொண்டனர். மண்ணில் கால் மடித்து அமர்ந்து கைகளால் தலையில் அறைந்தபடி அவர் கதறி அழத்தொடங்கினார். “என் தேவி! என் தேவி!” என்று கூச்சலிட்டார். “அவள் சினங்கொண்டவள்… பெருஞ்சினமே உருவானவள்… இதை பொறுக்கமாட்டாள்” என்றார்.

இறப்பின் தருணத்தில் பொருளுள்ள ஒரு சொல்லையேனும் எவரும் சொல்லிக்கேட்டிராத முதிய வயற்றாட்டி உறைந்த நோக்குடன் நின்றாள். “அவளது சினம் இதற்காகத்தானா? இதற்காகத்தானா? இதற்காகவா சினந்தாள்? அவளது சினம்… அவளது ஆறாப்பெருஞ்சினம்…” என்று சுக்ரர் கூவிக்கொண்டே இருந்தார். முதிய சீடர் ஒருவர் பிறரிடம் உதடசைவால் ‘அவரை அழைத்துக்கொண்டு செல்லலாம்’ என்றார். இருவர் அவர் கைகளைப்பற்றி மெல்ல தூக்கி அகற்றி கொண்டுசென்றனர். தன் ஆணவமும் நிமிர்வும் அகல குழவியைப்போல் நோயாளன்போல் அவர்களின் கைகளில் தொங்கிய அவர் சிற்றடி வைத்து சென்றார். பிறர் அமைதிகொண்டிருந்தமையால் அவருடைய புலம்பும் குரலே மரக்கூட்டங்களுக்கு அப்பால் ஒலித்தது.

வயற்றாட்டி குனிந்து குழவியை பார்த்தாள். அழுது களைத்து குளிர்கொண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளைச் சுற்றி நரம்புகள் நீலம் கொண்டு புடைத்திருந்தன. கழுத்திலும் மார்பிலும் நீல நரம்புகள் எழத்தொடங்கின. “முலையூட்ட வேண்டுமடி” என்றாள் முதுமகள். “இது காடு, இங்கு ஊற்றுமுலை கொண்ட எவள் இருக்கிறாள்?” என்றாள் இன்னொரு வயற்றாட்டி.  “முடியாது என்று சொல்ல நீங்கள் எதற்கு? அருகே அமைந்த முனிவரில்லங்களில் சென்று பாருங்கள், முலையூட்டும் பெண் எவளேனும் இருக்கிறாளா என்று!” என முதுமகள் கூவினாள். “இல்லை, அன்னையே. முலையூட்டும் பெண் எவளும் இங்கில்லை” என்றாள் இன்னொருத்தி. “என்ன செய்வது?” என்றாள் ஒருத்தி. “இங்கிருக்கும் பாலை கொடுத்துப்பார்ப்போம். இக்குழவி வாழவேண்டும் என்று ஊழிருந்தால் பால் அதற்கு ஒத்துப்போகும்” என்றாள் முதுமகள்.

பசியில் வெறிகொண்டு கைகள் அதிர்ந்து நடுங்க கால்கள் குழைய வீறிட்டலறிய குழவிக்கு அவர்கள் முதலில் நீர் கலந்த தேனை நாவில் விட்டனர். சிறுநா சுழற்றி உதடு பிதுக்கி அதை துப்பியது. “பால் கொண்டுவாருங்கள்” என்று வயற்றாட்டி கூவ பசும்பாலில் நீர் விட்டு தேன் கலந்து அதன் நாவில் விட்டனர். அதையும் துப்பிவிட்டு தலையைச் சுழற்றி ஆங்காரத்துடன் அலறி அழுதது. “அத்தனை பசுக்களின் பாலையும் கொண்டுவாருங்கள், ஏதோ ஒன்றின் சுவை உவப்பக்கூடும்” என்றாள் வயற்றாட்டி. தரையில் அமர்ந்து தன் மடியில் மகவை படுக்கவைத்து “என் அரசியல்லவா? என் தேவியல்லவா? என் குலதெய்வமல்லவா? இந்தப் பாலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் காலடிகளை சென்னி சூடி வேண்டுகிறோம், அன்னையே! இந்த உலகை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று மன்றாடினாள்.

அக்குருநிலையில் வளரும் பன்னிரு பசுக்களின் பாலையும் அதன் நாவில் விட்டனர். எதையும் குழந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் மேலும் அழுது உடல் கறுத்து விழிகள் இமைகளுக்கு அப்பால் செருகிக்கொள்ள குரலெழுப்பியது. பின்னர் அதன் குரல் தாழத் தொடங்கியது. முறுகப்பற்றிய விரல்கள் மெல்ல விடுபட, பெருவிரல் விலகி தளர, உடல் நனைந்த சிறுதுணியென்று மாற அதன் உயிர் அணைந்தபடியே வந்தது. “இங்கிருப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டது போலும்” என்றாள் ஒருத்தி. “வாயை மூடு! இழிமகளே, .நம்மால் முடிந்தது இங்குள அனைத்தையும் கொண்டு இவ்வனலை எழுப்புவது மட்டுமே. எந்நிலையிலும் இதுவே எல்லையென்று முடிவெடுக்காமல் இருப்பதே மருத்துவனின் கடமை” என்றாள் வயற்றாட்டி.

tigerமருத்துவநூல் கற்ற முனிவராகிய சத்வர் வந்து குழவியை பார்த்தார். அதன் வாயை நோக்கி விரல் கொண்டுசென்றபோதே அதன் உடலில் சிறு அசைவு எழுவதை கண்டார். “என்ன முடிவெடுத்திருக்கிறாள், மருத்துவரே?” என்றாள் வயற்றாட்டி. “முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம். இச்சிற்றுடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருக்கிறது, அது இங்கே பற்றிப்படர்ந்தேறவே விழைகிறது” என்று சொன்னபடி குழவியின் கால்களையும் கைகளையும் தொட்டு நோக்கி “பிறந்து இத்தனை நேரமாகிறது, ஒருதுளி உணவும் ஏற்காதபோதும் இவ்வளவு வெம்மை இச்சிற்றுடலில் எழுவது வியப்பளிக்கிறது. பிறிதொன்று இதைப்போல் நான் கண்டதில்லை” என்றார். “எங்கிருந்து எழும் அனல் இது?” என்று வயற்றாட்டி கேட்டாள். “இம்மடியில் இக்குழவியை வைத்திருக்கவே இயலவில்லை. ஆடைக்கும் நான் அணிந்த மரவுரிக்கும் அடியில் என் தொடைகள் வெந்துகொண்டிருக்கின்றன.”

“இவள் எதுவும் அருந்தாதது இவ்வெம்மையினால்தான்” என்றார் சத்வர். “பசும்பால் குளிர்ந்தது. அது இவளுக்கு உகக்கவில்லை. எரி நீரையல்ல, நெய்யையே விரும்பும்.” முதுமகள் புரியாமல் “என்ன செய்வது?” என்று கேட்டாள். “அறியேன். ஆனால் எங்கிருந்தேனும் ஒரு சொல் எழுமென்று எண்ணுகின்றேன். மருத்துவம் கற்பவர் தன் அறிவை சூழ்ந்துள்ள பொருட்களனைத்திலும் படியவைத்து தான் வெறுமைகொண்டு காத்திருக்க வேண்டுமென்பார் என் ஆசிரியர். உரிய தருணத்தில் உரிய பொருள் விழியும் நாவும் கொண்டு நம் முன் வந்து நின்றிருக்கும். பார்ப்போம்” என்றபின் மாணவர்களுடன் சத்வர் திரும்பிச்சென்றார்.

காலடிகள் ஒலிக்க காட்டுவழியே நடக்கையில் நெடுநேரம் கழித்து அவருடன் வந்த மாணவர்களில் ஒருவன் “அக்குழவியின் மணமே வேறுவகையில் உள்ளது” என்றான். “ஆம், எரிமணம். அதன் அன்னையின் உடலிலிருந்து வழிந்த குருதியும் கன்மதம்போல் கந்தகம் மணத்தது என்கிறார்கள்” என்றார் சத்வர். மாணவர்களில் இளையவனாகிய ஒருவன் “அங்கு குகையில் இந்த அனல்மணத்தை அறிந்தேன்” என்றான். நின்று திரும்பிநோக்கிய சத்வர் “எக்குகையில்?” என்றார். “சதமமலைக் குகையில். மலைத்தேனெடுக்க நாங்கள் செல்லும்போது காற்றில் இந்த மணம் எழுந்தது. அங்கு புலியொன்று குருளைகளை ஈன்றிருப்பதாக சொன்னார்கள்.”

அக்கணத்தில் தன் உளம் மின்ன “ஒருவேளை…” என்றார் சத்வர். தலையை ஆட்டி எண்ணத்தை ஓட்டியபடி நடந்து சுக்ரரின் குடிலை அடைந்தார். அங்கு மரவுரியில் மல்லாந்து படுத்து கண்ணீர் வழிய அணைமணையில் தலையை உருட்டியபடி முனகிக்கொண்டிருந்த சுக்ரரின் காலடியில் அவரது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். முதல் மாணவராகிய சபரர் எழுந்து வெளியே வந்தார். விழிகளால் என்ன என வினவிய அவரிடம் “குழவி எந்தப் பாலையும் உண்ண மறுக்கிறது. ஒருவேளை அது விரும்பும் பால் தாய்ப்புலியின் பாலாக இருக்கலாம்” என்றார் சத்வர். “தாய்ப்புலியா?” என்று சபரர் தயங்க அவருக்குப் பின்னால் வந்து நின்ற இளைய மாணவனாகிய கிருதன் “இங்கு மலைக்குகையொன்றில் தாய்ப்புலி குட்டி போட்டிருக்கிறது. அப்புலியையும் குழவிகளையும் இங்கு கொண்டுவருகிறேன். புலிப்பாலை கொடுத்துப்பார்ப்போம்” என்றான்.

“புலிப்பாலா? எங்ஙனம்?” என்று சபரர் திரும்ப “நாம் சுக்ரரின் மாணவர். எதுவும் இங்கு இயல்வதே” என்றபடி “இதோ, ஒரு நாழிகைக்குள் புலியுடன் திரும்பி வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் குடில்களை நோக்கி ஓடினான். அவனும் ஏழு மாணவர்களும் உடனே கிளம்பி காட்டிற்குள் சென்றனர். சதமமலைக் குகைக்குள் அவர்கள் ஏறியபோது அவர்கள் அணுகுவதை மணம் வழியாக அறிந்த புலி முழங்கத் தொடங்கியது. அரையிருளில் தூசியும் வௌவால்எச்சமும் மட்கிய விலங்குமயிரும் கலந்து மணத்த குகைக்குள் அவர்கள் வெறுங்கைகளுடன் நுழைந்தனர். பொன்னீக்களின் ரீங்காரம் ஒலித்தது. அவர்களின் முகத்தை மணிவண்டு ஒன்று முட்டிச்சென்றது. குகைக்குள் மென்புழுதியில் தன் நான்கு குட்டிகளில் ஒன்றைக் கொன்று கிழித்து உண்டு இளைப்பாறி பிற மூன்று குட்டிகளுக்கும் முலையூட்டிக் கொண்டிருந்த தாய்ப்புலியை கண்டனர்.

குழவியின் எஞ்சிய எலும்பை நாவால் நக்கி சுவைத்துக்கொண்டிருந்த புலி முன்னங்கால்களை ஊன்றி எழுந்து குகை எதிரொலிக்கும்படி முழங்கியது. “அஞ்சவேண்டாம், அது எளிய விலங்கு. அஞ்சாத விழிகளை அது அறியாது” என்றபடி கிருதன் அதை நேர்விழிகளால் நோக்கியபடி சீராக நடந்து அணுகினான். முன்னங்காலால் ஓங்கி நிலத்தை அறைந்து உரக்க குரலெழுப்பியது புலி. அவன் அதனருகே சென்று அதன் நெற்றியில் கைவைத்தான். இருமுறை முனகியபின் புலி தலை தாழ்த்தியது.  காதுகளை மெல்ல சொடுக்கி நுண்ணிய ஈக்களை விரட்டியபடி எடைமிக்க தலையை தரையில் வைத்தது.

“குட்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கிருதன் பிற மாணவர்களை நோக்கித்திரும்பி சொன்னான். அவர்கள் ஓடிவந்து புலிக்குருளைகளை எடுத்துக்கொள்ள புலி முன்னங்கால்களில் எழுந்து திகைப்புடன் அவர்களை பார்த்தது. “வருக!” என்று அதற்கு கைகாட்டிவிட்டு அவன் குகையைவிட்டு வெளியே சென்றான். அவர்கள் புலிக்குருளைகளுடன் மலையிறங்கி காடுகடந்து சுக்ரரின் குடில் வளாகத்தை அடைந்தனர். புலிக்குருளைகள் உடல்சூட்டை உணர்ந்து விழிசொக்கி செந்தளிர் நாநீட்டி சப்புக்கொட்டியபின் சருகில் நீர்ச்சரடு விழும் ஒலியுடன் மெல்ல துயில்கொள்ளலாயின. புலி கால்களை நீட்டிவைத்து முகத்தை நீட்டி அவர்களுக்குப் பின்னால் ஓசையில்லாமல் வந்தது. ஓர் இடத்தில் அது நின்று உறுமியபோது அவன் திரும்பி “வருக!” என்று அதனிடம் சொன்னான். நாவால் முகத்தை நக்கியபின் அது தொடர்ந்து வந்தது.

கையில் அனல்வண்ணத் துணிச்சுருள்போல புலிக்குருளைகளுடன் வந்த அவர்களைக் காண மாணவர்கள் ஓடிவந்து கூடினர். மருத்துவச்சிகள் திகைப்புடன் நெஞ்சைப்பற்றி நோக்கிநின்றனர். அவர்களுக்குப் பின்னால் ஐயத்துடன் காலெடுத்து வைத்து மீசை விடைத்த முகத்தை நீட்டி மெல்ல புதர்களை ஊடுருவியபடி வந்தது அன்னைப்புலி. அவர்கள் குழவிகளை முற்றத்தில் விட்டதும் முட்புதர் ஒன்றை பாய்ந்து தாவிக்கடந்து குழவிகளை அணுகி வாயால் கவ்வி புரட்டி அடிவயிற்றை நாவால் நக்கியது. ஒரு குருளை அதன் கால்களை நோக்கி செல்ல அருகே படுத்து கால்களை அகற்றி முலைக்கணுக்களை அவற்றுக்களித்தது. கண் திறக்காத குட்டிகள் மூக்கால் தேடி முலை அறிந்து பூநகம் எழுந்த இரு சிறுகைகளையும் தூக்கி அன்னையின் வயிற்றில் ஊன்றி முலை உண்ணத்தொடங்கின. “குழவியை கொண்டு வாருங்கள்!” என்று மருத்துவர் சொன்னார். வயற்றாட்டி நடுங்கியபடி குழவியுடன் வந்தாள். “மருத்துவரே… இது…” என்று அவள் சொல்லத் தொடங்க “அஞ்ச வேண்டியதில்லை” என்றபடி அக்குழவியை வாங்கி மெல்ல கொண்டுசென்று புலிக்குருளைகளின் அருகே வைத்தார். புலி திடுக்கிட்டு முன்னங்கால்களில் எழுந்து திரும்பியது. முகவாய்மயிர் விடைக்க மூக்கை சுளித்து கோரைவெண்பல் காட்டி மெல்ல சீறியது. கிருதன் குனிந்து அக்குழவியை எடுத்து குருளைகளுடன் சேர்த்து அதன்முன் நீட்டினான். புலி குனிந்து குழவிகளைப் பார்த்து முழவுத்தோலில் கோல்உரசும் ஒலியுடன் உறுமியது. அதன் தணிந்த வயிறு இருமுறை அதிர்ந்து அழுந்தியது. புழுதியில் இடப்பட்டிருந்த வால் சுழன்றெழுந்து தணிந்தது. மூக்கை நீட்டி குருளைகளையும் குழவியையும் மோப்பம் கொண்டபின் திரும்பி நா நீட்டி மூக்கை நக்கிக்கொண்டது.

சத்வர் குழவியின் வாயை புலியின் முலைக்கண்ணின் அருகே கொண்டுசென்றார். புலியின் காம்புகளில் இருந்து மெல்லிய வெண்நூலாக பால் சீறிக்கொண்டிருந்தது. அதன் மணத்தை அறிந்ததும் அது தலைதூக்கி தாவிப்பற்றி உறிஞ்சி குடிக்கலாயிற்று. முலையுறிஞ்சிக் கொண்டிருந்த புலிக்குருளைகளில் ஒன்று கால் தள்ளாடி அதன் மேல் விழுந்தது. எழுந்து திரும்பி குழவியை முகர்ந்துபார்த்தபின் மெல்லிய சிணுங்கல் ஒலியுடன் மீண்டும் அன்னையின் முலையை கவ்விக்கொண்டது. “அவள் வாழ்வாள்” என்றார் மருத்துவர். “நாம் அறியாத ஊழ் கொண்டவள். யுகங்களுக்கொருமுறை தெய்வங்கள் தேர்ந்தெடுத்து மண்ணுக்கு அனுப்புபவர்களில் ஒருத்தி. அவள் வாழ்க!”

அன்னைப்புலி மெல்ல சோர்ந்து தணிந்து தலையை தரையில் தாழ்த்தியது. “குருதி கொடுங்கள் அதற்கு” என்றான் கிருதன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க ஒருவன் காட்டுக்குள் புகுந்து மானொன்றை அம்பெய்து வீழ்த்தி கொடிகளால் இரு கால்களையும் கட்டித் தூக்கி தோளிலேற்றிக்கொண்டு வந்தான். புலியின் வாயருகே கொண்டுவந்து மானை வைத்து அதன் காதுகளைப்பற்றி தலையைத் திருப்பி புடைத்து வளைந்த கழுத்தின் குருதிக் குழாயை சிறு கத்தியால் அறுத்தான். நான்கு கால்களும் காற்றில் உதைக்க மான் துள்ளித் துள்ளி அடங்கியது. சீறித் தெறித்த குருதியை புலியின் வாயருகே காட்ட மெல்ல உடல் நீட்டி நாவெடுத்து நக்கி அருந்தியது அன்னை.

கனிந்த பழமொன்றின் செஞ்சாறை அருந்துவதுபோல் அந்த மானின் குருதியை உண்டு இளைப்பாறியது புலி. அதன் விழிகள் மெல்ல மேலே ஏற காதுகள் சொடுக்கிச் சொடுக்கி சிறு பூச்சிகளை விரட்ட ஓரிருமுறை நா நீட்டி முகமயிரையும் தாடையையும் நக்கி சப்புக்கொட்டியபடி சிப்பி விழிகள்மேல் இமைப்பாலாடைகள் படிய  மெல்ல அது துயிலலாயிற்று. நான்கு குழவிகளும் அதன் அடிவயிற்றில் ஒட்டி இறுகி அக்குருதியை அமுதென உண்டுகொண்டிருந்தன.

முந்தைய கட்டுரைதஞ்சை சந்திப்பு- 2017
அடுத்த கட்டுரைதஞ்சை சந்திப்பு கடிதம், பதில்