தஞ்சை சந்திப்பு கடிதம், பதில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தஞ்சை சந்திப்பில் இடம்பெற வாய்ப்பளித்ததிற்கு நன்றி.

இந்த சந்திப்பை ஒட்டி எனக்கு சற்று தயக்கம் இருந்தது. எந்தத் துறையிலுமே ஆதர்ஷ ஆளுமைகளைச் சந்திப்பது உற்சாகம் அளிக்கும் அதே சமயம், பதற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த ஆளுமைகளை குறித்து நம் மனபிம்பங்கள் குலைந்துவிடக் கூடாது என்ற கவலை. கனவுகள் கலைவதற்கு ஈடானது அது.

உங்களைத் தினமும் வாசிக்கும் காரணத்தால் ஒரு பக்கம் தெரிந்தவரைச் சந்திப்பது போல உணர்ந்தேன். சில இடங்களில் தாண்ட இயலாத பிளவு நடுவே கிடந்ததும் உண்மை. உங்கள் படைப்பூக்கமும் ஆற்றலும் எல்லோரும் நன்கறிந்தது. புதிதாகக் கண்டறிந்தது உங்கள் பொறுமையை. அடிக்கோடிட்டது தெளிவான, கறாரான நோக்கை. (மீசை மட்டும் இது ஜெயமோகன் தானா என்ற சந்தேகத்தை எழுப்பிக்கொண்டே இருந்தது). சில இடங்களில் he is human after all, என்றும் தோன்றியது

சந்திப்பை பின்னோக்குகையில் இரண்டு நாட்கள் ஒரு பூதக்கண்ணாடியின் கீழே கிடந்தது போல உணர்கிறேன். ஒவ்வொரு வடுவையும் பிரம்மாண்டமாகக் காட்டிய நிகழ்வு.

நான் லெளகீக வாழ்க்கையில் (படிப்பு, வேலை….) வென்று பழகியவள். ஒரு படி கீழே நிற்பதென்பது பழக்கப்படாத அனுபவம். இதை நான் ஆணவத்துடன் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை விட நான் என் மீது சுமந்து செல்லும் எதிர்பார்ப்பு பல மடங்கு. ஆதலால் என்னை நானே கைவிட்டது போலத் தோன்றுகிறது.

.

என் எழுத்து தொடக்கப்படிநிலையில் தான் உள்ளது என்று அறிவேன். அதனால் அதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் திசை என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்யவில்லை. துல்லியமான பின்னூட்டங்கள் மிக பயனுள்ளதாக இருந்தன.

எழுத்தைக் காட்டிலும் என் வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஒரு வாசகியாக இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வு எனக்கு உண்டு என்று நம்புகிறேன். என்னை, என் அகத்தை நான் கண்டுகொள்வது பெரும்பாலும் வாசிப்பின் மூலம் தான். வேறெந்த தளத்திலும் (உ.வணிகமோ இசையோ) மற்றவர்களைச் சாராத, என்னுள்ளிருந்து பிறக்கும் தெளிவான கருத்து நிகழ்வதில்லை. இலக்கிய வாசிப்பில் மட்டுமே இந்த இயல்பூக்கத்தை கண்டுகொண்டுள்ளேன். ஆனால் என் வாசிப்பு நான் நினைத்ததை விடவே இன்னும் பல மடங்கு விரிய வேண்டும் என்பதை இந்தச் சந்திப்பு ஆணித்தரமாக நிறுவியது. எனக்கு மிக முக்கியமான தளத்தில் ஆழமற்றவளாக உணர்ந்தேன்.

அந்த உணர்வு விளைவித்த அழுத்தத்திலிருந்து இன்னும் முழுதாக வெளிவரவில்லை. இதை எழுதுவதும் அதை கடந்து செல்லும் முயற்சி எனலாம்.

இக்குறைபாடுகளுக்கு – வேலை பளு, தமிழ் இலக்கிய வாசிப்பற்ற வட்டம் – என்று பல காரணங்களை முன்வைக்கலாம். ஆனால் வாழ்க்கையின் பெருவெளியில் காரணங்கள் சிறுபுள்ளியென மறைந்து விடும். அப்புள்ளிகளுக்கிடையே சுழலும் வெறுமையைச் செயல் மட்டுமே நிரப்பக்கூடும்.

அதைப் பின்தொடர விழைகிறேன்.

பிரியம்வதா

1

அன்புள்ள பிரியம்வதா

பொதுவாக நான் இணையத்தில் அல்லது எழுத்தில் தோரணையேதும் காட்டவில்லை என்பதனால் நேர்ச்சந்திப்பில் ஏமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. அப்படி எவரும் இதுவரைச் சொன்னதில்லை. அனைவரிடமும் இயல்பாக உரையாட முடிவது அந்த நம்பிக்கையால்தான்

ஆனால் சந்திப்புகளில் என்ன நிகழும் என்றால் நாம் நம்மை மையமாக்கியே சந்திப்புகளைப்பற்றி எண்ணியிருப்போம். அங்கே நம் பங்களிப்பு இருக்குமே ஒழிய நாமே முழுமையாக இருக்கமுடியாது. பலவகையான மனிதர்கள் பலவகையான கேள்விகளுடன் வருவார்கள். அவர்களுடன் இணையவேண்டியிருக்கும். இவ்விரண்டும் ஒரு மெல்லிய நிறைவின்மையை அளிக்கும். ஆனால் ஒரு சந்திப்பில் நாம் என்ன பெற்றுக்கொண்டோம் என்பது மெல்லமெல்லத்தான் நமக்கே தெளிவாகும்

உங்கள் பங்களிப்பு – விமர்சனம், படைப்பு இரு தளத்திலும்- மிகக்கூரியதாக இருந்தது. அதை நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் நீங்கள் உணர்வதற்கும் நீங்கள் வெளிப்படுவதற்கும் இடையே ஓர் இடைவெளி உண்டு. நுண்கலைகளில் ‘பயிற்சி’ என்னும் அம்சம் முக்கியமானது. நீங்கள் நினைப்பதை கலையாக்கும் தேர்ச்சி. அதை இலக்கியத்தில் மொழி, வடிவம் ஆகியவற்றில் உளம்தேர்வதுஎன்று சொல்லலாம். அதற்கு ஒரு காலகட்டம் தேவையாகிறது. உள்ளத்தில் இசை இருக்கும் ஒருவர் அதை வயலினில் வாசித்துக்காட்ட எவ்வளவு காலமாகும் என நினைவுகூர்க. ஒப்புநோக்க இலக்கியம் மிக எளிதான பயிற்சியே

இன்னொன்று. அனுபவம். அது கவின்கலைகளுக்கு இல்லை. இலக்கியத்திற்கு அது அவசியம். அது நிகழ்ந்து தன்னை விலக்கிச் சாரமேயாக மாறி நம்மில் நீடிக்க சிறிது காலம் பிடிக்கும்.

priyam

ஆகவே எடுத்ததுமே மேலான இலக்கியம் என்பது[எழுத்து வாசிப்பு இரண்டிலும்]இயல்வதல்ல. நான் உட்பட அனைவருமே எழுதித்தேர்ந்து வந்தடைந்தவர்கள்தான். நீங்கள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறீர்கள். தொடக்கம் எனப்பார்த்தால் மிகமிக விரைவாக மிகமுன்னால் சென்றுவிட்டிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் இயல்பான திறன் ஒரு காரணம். இந்தத் தலைமுறை தான் யாரென்று உணர்ந்து தன்னை திரட்டிக்கொள்வது எளிதில் நிகழ்கிறது, இது எளிமையாக அனைத்தும் கிடைக்கும் காலம், தொடர்புகளின் காலம் என்பது ஒரு காரணம். நான் உங்களை வியப்புடன்தான் நோக்கிக்கொண்டிருந்தேன். நீங்கள் செல்லும் தொலைவும் சாதிக்கவிருப்பதும் மிக அதிகம்.

ஆனால் நாம் நம்மை நாம் சாதிக்கவிருப்பதைக் கொண்டு மதிப்பிடுகையில் நாம் முன்வைப்பதைக் கொண்டே சூழல் மதிப்பிடுகிறது. அது சற்று சோர்வை உருவாக்கலாம். அதை சீற்றமாக, அறைகூவலாக ஆக்கிக்கொள்வதே முன்னால் செல்லும் வழி. உங்கள் கதைகளை முக்கியமான படைப்புகள் என்றே அங்கே குறிப்பிட்டோம். ஆனால் அங்குள்ள அளவுகோல் என்பது பரவாயில்லை, எழுதுகிறார்களே என்பது அல்ல. எங்கள் மதிப்பீடுகளில் தல்ஸ்தோய்க்கும் புதுமைப்பித்தனுக்கும் என்ன அளவுகோலோ அதுவே அனைவருக்கும். அவர்களை கடந்துசெல்லும் அறைகூவலை எடுத்துக்கொண்டு எழுதவேண்டும் என்னும் விருப்பமே அங்கே மதிப்பீடுகளை உருவாக்கியது.

உங்கள் கடிதத்திலுள்ள அறைகூவல் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்

ஜெ

***

 

பிரியம்வதா -விமர்சனங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
அடுத்த கட்டுரை‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 3 – இளையராஜா