சொல்தளிர்க்கும் பாதை

maharajapuram

மகாபாரதத்தின் வனபர்வம் அனேகமாக முழுமையாகவே பிற்சேர்க்கை என்பது ஆய்வாளர் கூற்று. அதில் பாரதத்தின் கதைச்சரடு இல்லை. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றார்கள் என்னும் கதையை ஒரு களமாகக் கொண்டு இந்தியமரபில் புழங்கிய அத்தனை கதைகளையும் அதில் தொகுக்க முயன்றிருக்கிறார்கள். யக்ஷனின் கேள்விபதில் போல பல்வேறு நெறிநூல்களை உள்ளே பொருத்தியிருக்கிறார்கள்.

அவற்றில் பெரும்பகுதி வெறும் தகவல்கள். தீர்த்தங்கள் மற்றும் முனிவர்களின் புகழ்கள். அவற்றை எவ்வகையில் வெண்முரசுக்குள் கொண்டுவருவது என்னும் எண்ணம் என்னை சிலநாள் அலைக்கழித்தது. அப்போது தோன்றியது அச்செய்திகளை பயன்படுத்த வேண்டியதில்லை என்று. மாறாக எந்த நோக்கத்துக்காக அப்பகுதி மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ அதற்காகப் பயன்படுத்தலாம் என்று

இந்தியமெய்ஞான மரபின் தோற்றம் முதலே இருந்துவரும் தொல்கதைகள் சில உண்டு. பலகதைகள் பின்னர் உபநிடதங்களில் நீட்சிகொண்டன. ஞானத்தேடலின், குருமரபின் கதைகள். ஞானத்தை விளக்கும் கதைகள். அக்கதைகளை பாண்டவர்களின் கானேகலின் கதைக்கட்டமைப்புக்குள் கொண்டு வரலாமென எண்ணினேன். அவ்வகையில் உருவானதே இந்நாவல்.

வேதங்கள் உருவானபின்னர் பிராமணங்களும் ஆரண்யகங்களும் உருவாயின. பொதுவாக பிராமணங்கள் நெறிகளை விளக்குபவை. ஆரண்யகங்கள் உட்பொருளை விளக்குபவை. ஆரண்யகம் என்றால் காட்டில் சொல்லப்பட்டவை என்றே பொருள். வேதம்மருவிய காலகட்டத்தில் பாரதத்தின் காடுகள் அறிவுத்தேடலால் கொந்தளித்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான குருமரபுகள் ஞானநெறிகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விவாதித்தும் முயங்கி மெய்கண்டும் வளர்ந்திருக்கின்றன. அக்கதையையே சொல்வளர்காடு பேசுகிறது

மெய்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றை கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதை சொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளை தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் நிரப்பிக்கொள்ளவேண்டும் வாசகன் எனக் கோருகிறது இந்நாவல்.

ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞானமரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் இலக்கியம் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

*

இந்நாவலை என் நினைவில் என்றும் அழியாது வாழும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். இன்றிரவிலும் அவருடைய ஆழ்ந்த குரலால் சூழப்பட்டிருக்கிறேன். ’வெள்ளக்கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தணியாதோ’ என ஏங்குகிறது உள்ளம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 3 – இளையராஜா
அடுத்த கட்டுரைஅஞ்சலி : அசோகமித்திரன்