தஞ்சை சந்திப்பு- 2017

vikram

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தங்களுடனான தஞ்சை வாசகர் சந்திப்பு எனக்கு பெரிதும் பயனுடையதாக இருந்தது. மற்றவர்களுக்கும் அவ்வாறே என்று கருதுகிறேன். காலை தஞ்சை ஜங்ஷன் வந்திறங்கி வெளியே ஒரு டீ-க் கடையில் “வல்லம் போக எங்க பஸ் ஏறணும்?” என்று கேட்டபோதே “அதோ எதிர்ல அந்த பஸ் வல்லம் தான் போகுது போங்க” என்று ஓருவர் சொல்ல ஓடிச் சென்று வண்டியைப் பிடித்தேன்.

வண்டியில் அதிகம் கூட்டம் இல்லை. டிக்கெட் வாங்கிய பிறகு எதிர்வரிசையில் தாடியுடன் ஒரு இளைஞர் கண்டக்டரிடம் பேசி சிரித்துக் கொண்டே எதையோ கேட்டு விட்டு அமர்ந்தார். இவர் தான் கடலூர் சீனுவாக இருக்குமோ என்று நினைத்தேன்.

“நீங்க சீனு தான?” சென்று கேட்டு விடலாமா என்று யோசித்தேன். பின்னர் வேண்டாம் ஒருவேளை வேறு யாராகவாவது இருந்து “இல்லை” என்று சொல்லிவிட்டால்? புகைப்படத்தை நினைவில் இறுத்தி முடிவு செய்ய முடியவில்லை. அவர் தன் தாடையை முன் நகர்த்தி தாடியையும் மீசையும் உராயச் செய்து – பல முக பாவனைகள் செய்து தன்னுள் பேசுவது போல் இருந்தது “சலங்கை ஒலி” தாடி கமலை நினைவு படுத்தியது (பி.கு. பின்னர் இதை அவரிடம் சொன்ன போது “இதெல்லாம் சார் எதிர்ல பேசுங்க” என்று சிரித்தார்).

ஒரு புதிய வழி கண்டவனாக சீனுவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டரிடம் சத்தமான குரலில் “அண்ணா விவேகானந்தா காலேஜ் எங்க இருக்கு?” என்று கேட்டேன். அது சீனுவின் காதில் விழுந்து திரும்பி ‘நானும் அங்கதான் போறேன்’ என்று சொன்னால் “நீங்க சீனு தானே?” என்று கேட்டுவிடலாம் என்பது என் எண்ணம். ஆனால் அவரோ நான் கேட்டது காதில் விழவே இல்லாமல் தன்னுள் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார்.

வல்லத்தில் இறங்கிய பிறகு அவரைப் பார்வையால் பின் தொடர்ந்தேன் அந்த பஸ் ஸ்டாண்டின் ஒரு கடையில் டிபன் சாப்பிட்டார். நானும் அவரது அருகே சென்று அமர்ந்து கடைக்காரரிடம் அதே கேள்வி “விவேகானந்தா காலேஜ்…….” இப்பொது சீனு முகம் முழுவதும் சிரிப்புடன் திரும்பி “எழுத்தாளர் ஜெயமோகன் சந்திப்பு போறீங்களா?” என்றார். “ஆமாம்.” “நான் சீனு.” என்றார். “தெரியும் கடலூர் சீனு தானே.”

எனக்கு முன்னால் சாப்பிட்டு முடித்த அவர் எனக்கும் சேர்த்து பணம் கொடுத்து விட்டார். இருவரும் ஷேர் ஆட்டோவில் ஒன்றாக பயணித்தோம். இலக்கியம் பற்றி – இலக்கியம் படிப்பது பற்றி பல விஷயங்கள் – என் சில கேள்விகளுக்கு பதில் – என அவர் கூறி வந்தவற்றை கேட்டுக்கொண்டே வந்தபோதே என் உவகை உயர்ந்து கொண்டு இருந்தது. “உங்கள் கடிதங்கள் படித்து சீரியசான ஆள் என்று நினைத்தேன். நேரில் பார்த்தால் இப்படி இருக்கிறீர்கள்” என்றேன். “சாரும் அப்படித்தான்” என்றார்.

பின்னர் மற்ற நண்பர்கள் சிலர் இணைந்த போது “சார் வந்து விட்டார்” என செய்தி வரவும் “நீங்கல்லாம் முன்னாடி போங்க. நான் முன்னாடி போனா நீ ஏன் முன்னால வர்ற?” என்று கேட்டு விடுவார் என்ற சீனு. “சார் எழுதும் போது எப்படி இருப்பார் தெரியுமா?.” சில சமயம் கோபப்பட்டு விடுவார். யாருடனாவது தோளில் கை போட்டு பேசிக்கொண்டு வந்தார் என்றால் ஜாலியான மூடில் இருக்கிறார் என்று அர்த்தம்” என்று பேசிய சீனு நான் கொஞ்சம் பயப்படுவது தெரிந்தவுடன் அதில் சுவாரசியம் அடைந்து சற்று பயமுறுத்தி வந்தார். சீனுவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. யாருடனும் எளிதில் சுலபமாக இயல்பாக பழகிவிடும் வரம் பெற்றவர் என்று எண்ணினேன்.

ஏற்கனவே சீனுவுடன் அமர்ந்து கடையில் ஐந்து இட்டலிகள் சாப்பிட்டுவிட்டிருந்த நிலையில் கல்லூரியில் காலை உணவு பரிமாறப்பட்ட போது சீனு குறும்புடன் சிரித்து “போங்க சாப்பிடுங்க” என்றார். அவரும் வந்தார். இரண்டு இட்டலிகளுடன் முடித்து விடலாம் என்று எழுந்த போது, பரிமாறியவர் நான் ஏதோ கோபம் கொண்டேன் என்று எண்ணி “கோவிச்சுக்காதீங்க சார் சாப்பிடுங்க” என்று பொங்கல் சாப்பிட வைத்துவிட்டார். சீனு சாமர்த்தியமாக பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு தப்பிவிட்டார்.

இந்த சந்திப்புக்கு புறப்படும் முன்னர் வாயே திறக்கக் கூடாது. காது கொடுத்து எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதற்குத் தான் இது என்று முடிவு செய்திருந்தேன் என்றாலும் நடுநடுவே கொஞ்சம் பேசினேன். ஒரு பதினைந்து நூல்கள் படித்ததை போன்று அத்தனை விஷயங்கள் இந்த ஒன்றரை நாட்களில்.

சிறுகதையின் வரையறை, கேள்வி எப்படி கேட்பது – எது விவாதம் என்பதில் இருந்து மேல்சபையில் அம்பேத்கார் எப்படி அமர்ந்திருந்தார் – வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறு – மகாத்மா காந்தியின் வழிமுறைகளை கோழைத்தனமானது என்று கூறி தங்களை மாவீரர்களாக பாவனை செய்பவர்களின் உண்மையை தாங்கள் வெளிச்சமிட்டு காட்டியது – திரு. கமல்ஹாசன், திரு. ஜகதி ஸ்ரீகுமார் மற்றும் கொச்சின் ஹனிபா உள்ளிட்ட பல அற்புத கலைஞர்கள் பற்றி தகவல்கள்- நகைச்சுவைகள் -திரு. சுந்தர ராமசாமி அவர்கள் சந்தித்த நகைச்சுவைத் தருணங்கள். புதுமைப்பித்தன் – வைக்கம் முகமது பஷீர், சுஜாதா ஆகியோரின் வரிகளில் தெறித்த கிண்டலும்-நகைச்சுவையும் – சினிமா ஸ்க்ரிப்ட் அமைக்கப்படும் விதம் – என எவ்வளவு விஷயங்கள்.

யமுனைச் செல்வன், சுசித்ரா, பிரியம்வதா உள்ளிட்ட சிலரும் பல நூல்கள் படித்திருக்கிறார்கள். ஆங்கில நூல்கள் – இலக்கியம் சார்ந்து – எனக்கு ஒன்றும் தெரியவில்லை – கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நவீனத்துவம் – பின் நவீனத்துவம் பற்றி நீங்கள் விளக்கியது மனதில் நன்றாக நின்று கொண்டது. தீவீரமாக தோன்றிய போதும் தங்கள் பேச்சு எங்கும் அலுப்பூட்டவில்லை – ஏகப்பட்ட நகைச்சுவைகளுடன் சூழ்நிலை முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் சரியான திசையில் சுழன்று சென்றது. ஒரே ஒரு என் உடல் சார்ந்த தடை – தொடர்ந்து நைட் ஷிப்ட் வேலை என்பதால் பகலில் உறங்கி பழகி விட்டதால் – உடல் சோர்வடைந்து நடுவே கொஞ்சம் தொல்லை.

கோவை குறள் உரையின் போது மீசை இல்லாத போது உங்கள் தோற்றம் இப்போது மீசையுடன் அதற்கு நேர் எதிராக தோன்றியது. நீண்ட நேரம் பேசியபோதும் நீங்கள் அதிகம் தண்ணீர் அருந்தியாக தோன்றவில்லை. பேசும்போது உடல் பெரிதும் பொருட்டாக இல்லாமல் ஆகி கைக்கொண்ட விஷயத்தில் ஒன்றிக் கலந்து செல்வதைக் கண்டபின் – எழுத்து உங்களுக்கு தியானம் என்ற கருத்து உண்மை என்ற எண்ணம் ஏற்பட்டது.

tanjore1

உணவு – தேநீர் – உறங்குமுன் பால்-பழம் என்று ஒவ்வொன்றும் துவக்கம் முதல் கவனமுடன் செய்த – வரவேற்று உபசரித்த அவரிடம் புறப்படும் முன் விடைபெற்றேன். நிகழ்த்திய – துணை நின்ற – சூழநின்ற – கற்றுச் சென்ற அனைவருக்கும் என் நன்றி.

கேள்விகள் ஆர்வமுடன் கேட்ட அனைவருக்கும் (குறிப்பாக அன்புடன் -ராமச்சந்திரன் – ராமநாதபுரம்) நன்றி.  கிருஷ்ணன் – சக்தி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. ஸ்ரீலஸ்ரீ ரிஷிகேசமுடையான் அன்பிற்குரிய சீனுவுக்கும் நன்றி. பிழைகள்-விடுபடல்கள்-குறைபடல்கள்-மிகைபடல்கள் என இங்கு எதுவெனும் இருப்பின் அது என்னுடையது மட்டுமே என்று கோரி – பிறிதொரு நிகழ்வின் வாய்ப்பையும் எதிர்நோக்கி தீவிரமுடன்

தங்களுக்கு நன்றியுடன்,

அன்புடன்

விக்ரம்

கோவை

***

முந்தைய கட்டுரை‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 2 – இளையராஜா
அடுத்த கட்டுரைவெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51